கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் - 02

  
        உலகை பெரும் வியப்பில் ஆழ்த்திய தமிழ்நாட்டு கணிதமேதை ராமானுஜன் சென்னைத் துறைமுக நிறுவனத்தில் 1912 இல் 'கிளார்க்' வேலையில் சேர்ந்த பின் தான் அவர் வாழ்வில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது என்று சென்ற பதிவில் கூறியிருந்தேன் . அதைப் படிக்காதவர்கள் தயவு செய்து இங்கே கிளிக் செய்து படித்துவிட்டுத் தொடரவும் .


    ஆம்; ராமானுஜன் 'கிளார்க்' வேலையில் இருந்தபோதும் அவரது கணித ஆராய்ச்சிகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே இருந்தன . இதன் விளைவாக; துறைமுக அலுவலகத்தில் ஒரு 'கிளார்க்' கணிதத்தில் சாதனைகள் புரிந்து வருகிறார் என்ற செய்தி பரவலாக சென்னை கல்விக்கூடங்களில் பேசப்படத் தொடங்கியிருந்தது . இதன் தொடர்ச்சியாக இந்திய கணிதக் கழகத்தின் நிறுவுனரான பேராசிரியர் வி. ராமஸ்வாமி ஐயரும் , அவரால் ராமானுஜனுக்கு அறிமுகமான பேராசிரியர் சேஷு ஐயரும் , சென்னைத் துறைமுக அலுவலகத்தின் தலைவரான ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங் அவர்களும் ராமானுஜனின் கணித ஆற்றலைப் பாராட்டி அவரது கணிதப் படைப்புக்களை இங்கிலாந்தில் இருந்த மூன்று முக்கிய பிரிட்டிஷ் கணித வல்லுனர்களுக்கு அனுப்பித் தொடர்புகொள்ள ஊக்கம் அளித்தார்கள் . அவர்களில் இருவர் பதில் போடவில்லை . ஒருவர் மட்டும் பதில் அனுப்பினார் ! அவர் தான் அக்காலத்தில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் கணித நிபுணர் ; G.H. ஹார்டி !!  { மற்றைய இருவர் E.W.Hobson , H.F.Baker }

                                                            கணித நிபுணர்  G.H. ஹார்டி

    ராமானுஜனின் கத்தையான கடிதக்கட்டு ஹார்டியின் கையில் கிடைத்தது 1913 ஜனவரி 16 ம் திகதி ! முதலில் மேலோட்டமாகப் பார்வையிட்டு விட்டு ஏதோவொரு பைத்தியம் எழுதியதாக எண்ணிக் கடிதக்கட்டை ஒதுக்கி வைத்தார் ஹார்டி. ஏனெனில் ராமானுஜன் அனுப்பிய தேற்றங்கள் எவைக்கும் நிறுவல்கள் அனுப்பப்படவில்லை ! இரவு உணவின் பின்னர் அவரும் , அவரது நெருங்கிய கணித ஞானியான ஜான் லிட்டில்வுட்டும் இணைந்து புதிர்களைப்போல் இருந்த ராமானுஜனின் நூதனமான 120 கணித இணைப்பாடுகளையும் கணித தேற்றங்களையும் மெதுவாகப் புரட்டிப் பார்த்து பொறுமையாக ஆழ்ந்து படித்தார்கள் .
                                     
                                                       ராமானுஜனின் note book இன் ஒரு பகுதி 


       அதில் பல தேற்றங்கள் அவர்களுக்குப் புதிராகவே இருந்தன . ஓரிரண்டு தவறான தேற்றங்களும் இருந்தன . புதிதாக இருந்தவற்றுக்கு நிறுவல்கள் கொடுக்கப்படாமல் இருந்ததால் அவர்களே அவைகளை நிறுவப்பார்த்தார்கள் . சிலவற்றை அவர்களால் நிறுவ முடிந்தது . சிலவற்றிற்கு நிறுவலுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களால் ஊகிக்க முடிந்தது . ஆனால் பல தேற்றங்களை அவர்களால் அணுகவே முடியவில்லை ! ஆனாலும் அதற்காக அவைகளை ஏதோ பிதற்றல் என்று ஒதுக்கவும் முடியவில்லை . உலகத்திலேயே எண் கோட்பாட்டில் பிரமாணமாக எடுத்துக் கொள்ளப்படுபவர்களான அவர்களாலேயே அத் தேற்றங்களின் உண்மையைப்பற்றி ஒன்றுமே சொல்ல முடியாத நிலையில் ; பிரமித்துப்போன இரு வல்லுனர்களும் ஒரு முடிவிற்கு வந்தனர் . தாம் காண்பது ஒரு மகா மேதையின் உன்னத கணிதப்படைப்புகள் !; அவை ஒரு பைத்தியக்காரனின் கிறுக்கல்கள் அல்ல என்று !! இருவரும் அன்றே தீர்மானித்து விட்டனர் ; ராமானுஜனை கேம்பிரிட்ஜுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ! அத் தீர்மானம் கணிதத்தில் வரலாறு படைத்த தீர்மானம் !!
      ஹார்டி உடனே ராமானுஜனைக் கேம்பிரிட்ஜுக்கு வரும்படி கடிதம் எழுதிய போதும் ; சென்னைப் பல்கலைக்கழகமும் [ University of Madras ] இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் , Trinity கல்லூரியும் அவருக்கு உதவி நிதி வழங்க முன்வந்த போதும் ; ராமானுஜனால் உடனே நாடு விட்டு நாடுபோக முடியவில்லை !!       .

{ அது ஏன் என்பதை அடுத்த பதிவில் எதிர்பாருங்கள்.... }

கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் - 03 ஐ படிக்க  இங்கே கிளிக் செய்யவும்

{ தொடரில் எதாவது பிழைகள் இருந்ததால் தயவு செய்து குறிப்பிடவும் }

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}