வெங்காயம்.

வெங்காயம்...

நம் தாய்மாரகளின் கண்ணீருக்கு இரண்டாவது முக்கியமான காரணியாக இருந்துவரும் இதுதான்...(என்னது? முதலாவது எதுவா? அது கட்டுரையின் கடைசியில்.) காய்கறிவகையின் உலகப்பிரதிநிதி. உலகளவில் அதிகமாக உற்பத்தியாகும் காய்கறி.

வெங்காயம் (onion - allium cepa) சமையலுக்கு மட்டுமல்லாது மருத்துவத்துறையிலும் மன்மதத்துறையிலும் இது அதிகளவில் பயன்படுகிறது. மொத்தமாக 24 வகையான கனிப்பொருட்களைக் கொண்டிருந்தாலும், குளவிக்கடி தொடக்கம் ஒஸ்ட்ரியோபொரைஸிஸ் வரை பல உபாதைகளை இது தீர்த்துவைத்தாலும் இது அதிகம் அறியப்பட்டதென்னமோ அழவைப்பதற்காகத்தான். (நாம் வெங்காயத்தை வெட்டும்போது அதன் கலங்கள் சிதைவடைகின்றன. அல்லியனஸிஸ் என்ற நொதியம் வெளிப்படுகிறது. அது அமினோ அமில ஸல்ஃபொக்ஸைட்டுகளை உடைத்து ஸல்ஃபேனிக் அமிலங்களை உருவாக்குகிறது.  அவற்றில் 1-புறொப்பீன் ஸல்பேனிக் அமிலம்..... ஸ்...  என்னவோ நடக்குது, கண்ணீர் வருகுது. அவ்வளவுதான். இதைத் தெரிந்துகொண்டால் மட்டும் கண்ணீர்வராமலா விடப்போகிறது? என்று நீங்கள் முணுமுணுப்பது காதில் விழுகிறது. தண்ணீருக்குள் வைத்து உரித்தால் அல்லது மின்விசிறிக்குக் கீழே வைத்து உரித்தால் கொஞ்சம் தப்பலாம்.)


இந்த வெங்காயத்தை யார் கண்டறிந்தார்கள் என்பதுபற்றித் தகவல் இல்லை. ஆனால் 7000 ஆண்டுகளுக்கு முன்னால் வெண்கல யுகத்திலேயே யாரோ உரித்துப்போட்ட வெங்காயத் தோல்களை போனமாதம் கண்டுபிடித்திருக்கிறார்கள். 5000 ஆண்டுகளுக்குமுன் எகிப்தியர்கள் இதை தெய்வமாகவே வழிபட்டிருக்கிறார்கள். இறப்புக்குப் பின்னான வாழ்க்கையைத் தரக்கூடியது என்று கண்ணீரைத் துடைத்துக்கொண்டே தின்று தீர்த்தார்கள். மன்னன் ராம்ஸெஸ் (iv) உடைய மம்மியைத் திறந்து பார்த்தால், அவனுடைய கண்கள் இருக்கவேண்டிய இடத்தில் இரண்டு வெங்காயத்தை வைத்து சுற்றிக் கட்டியிருக்கிறார்கள். வெங்காயம் அதிகளவு பலத்தையும், உற்சாகத்தையும் அளிக்கும் என்று நம்பிய அவர்கள், பகலில் அதை (பிரமிட்கள் கட்டும் வேலை செய்த) ஆண் அடிமைகளுக்கும், இரவில் பெண் அடிமைகளுக்கும் கொடுத்தார்கள். (பிற்காலத்தில் இதன் மறுதலைத் தேவைக்காகவும் வெங்காயம் பயன்படும் என்று நம்பப்பட்டது. "one apple a day, keep the doctor away. one onion a day, keep the women away." என்று ஒரு joke உண்டு. // என்னது? புரியவில்லையா? போப்பா, போ... அண்ணன் உனக்கு பொம்ம காரு, பொம்ம பிளேனு.. எல்லாம் வாங்கி வச்சிருக்கேன்...)

கிரேக்கர்கள் இது இரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்தும் என்று நம்பினார்கள். ஒலிம்பிக் ஓட்டவீரர்கள் இதை வகைதொகையில்லாமல் தின்றுவிட்டுஇ முதலில் குலுங்கக் குலுங்க அழுதுவிட்டு, பிறகு குலுங்கக் குலுங்க ஓடினார்கள். பிற்பாடு 16ஆம் நூற்றாண்டில் இது கருத்தடை செய்யும் என்று நம்பி, பெண்களுக்கும், பன்றிகளுக்கும் இதைக் கொடுத்தார்கள். (குட்டியைப் போடாத பன்றிகள், மண்டையைப் போட்டன. பன்றி, நாய் போன்ற விலங்குகளுக்கு இது உணவை நஞ்சாக்கும் என்பது பின்னர் கன்டறியப்படும் வரை தொடர்ந்து இவை கொடுக்கப்பட்டன.)

இன்றளவில் ஆண்டுதோறும் 8பில்லியன் கிலோகிராம் வெங்காயங்கள் உரித்து மேயப்படுகின்றன. நாம் உரித்து மேயும் பெரிய,சின்ன வெங்காயங்களைவிட, நிலத்திலிருந்து தண்டு வந்து,  பின்னர் அதன்மேலே வெங்காயக்குமிழ்கள் முகிழ்த்து வளரும் மர வெங்காயம் உட்பட நூற்றுக்கணக்கான வெங்காய வகைகள் உள்ளன. திரௌபதிபோல உரிக்க உரிக்க உரிந்துகொண்டே இருப்பதால், வெங்காயம்பற்றி எழுதினால் அது மகாபாரதம்போல வளர்ந்துகொண்டே போகும்.

அதெல்லாம் சரிதான், இந்த வலைப்பூவுக்கு ஏன் வெங்காயம் என்று பெயர்? வெங்காயங்கள் எழுதுவதாலா, அல்லது ஏன்டா திறந்து தொலைத்தோம் என்று அழவைப்பதாலா? உள்ளே அத்தனை ஆச்சரியங்களைப் பொதித்துவைத்திருந்தாலும் உள்ளே ஒன்றுமில்லாதவர்களைக் குறிக்கும் ஒரு வசைச்சொல்லாகவே இது பயன்பட்டு வருகிறது. கடவுளை, அல்லது கடவுள் சார்ந்தவற்றை, அல்லது வர்களைக் குறிக்கப் பயன்படுத்தி இதைப் பிரபலப்படுத்தியவர் பெரியார். எத்தனையோ விஷயங்களுக்கு முன்னோடியான இவர்தான் நாகரிகமான வசைச்சொல்லுக்கும் முன்னோடி. இனிமேல் ஒன்றுமில்லை என்று ஆகும்வரை உரித்து உரித்துப் பார்க்கும் தேடலின் அறிகுறியாகவும் நாம் வெங்காயத்தைக் கொள்ளலாம். (விஞ்ஞானத்தைக் குறிக்கும் தீயின் வடிவத்தில்தானே வெங்காயமும் இருக்கிறது?) அல்லது தம்மை தோலுரிப்பவரையெல்லாம் அழவைக்கும் இறைமையின் அறிகுறியாகவும் இதைக் கொள்ளலாம். இப்படி ஆயிரம் காரணம் தேடலாம் என்றாலும் நம் காரணம் மிக எளியதுதான்.

அது வெங்காயம்.

உலகின் முக்கியமான நாகரிகத்துக்குக் கடவுளாக இருந்திருக்கிறது, உலகின் முக்கியமான இறைமறுப்பாளருக்கு ஆயுதமாக இருந்திருக்கிறது. பிள்ளை பிறக்கும் முயற்சிக்கும் தின்றிருக்கிறார்கள், பிள்ளை தவிரக்கும் முயற்சிக்கும் தின்றிருக்கிறார்கள்.  வெங்காயம்- பெரியார்சொல். பெரியோர்செல்.... எல்லாவற்றுக்கும் மேலாக... பொரியல்ச்சொல்.(இவ்வளவு அவசரப்பட்டு sroll பண்ணி கடைசிக்கு வந்திருக்கத் தேவையில்லை. ”விறுவிறுப்பான மெகாத்தொடர்... காணத் தவறாதீர்கள்... ” தான் அந்த முதலாவது காரணி.)
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}