சாகாவரம் பெற்றவர்.


பியர் கிறில்ஸ் - சாகாவரம் பெற்றவர்.

ஒருமுறை பிறேசிலில் Man vs Wild நிகழ்ச்சி படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போது இரவுவேளையைக் கழிப்பதற்காகத் தான் கட்டிய ஊஞ்சலில் பியர் படுத்திருந்தபோது அவரைத் தாக்குவதற்காக மூன்று ஓநாய்கள் வந்தன. இரவு வேளை. தன்னந்தனியாக இப்படி வகையாக மாட்டிக்கொண்டவிட்டோமே என்று திகைக்கக்கூட நேரமில்லை. இருட்டு.. உதவி இல்லை.. கதறக்கூட நேரம் கொடுக்காமல் கழுத்தில் கடித்து குரல்வளையைப் பிய்த்து, தோலை உரித்து, வேகவைத்துத் தின்றுவிட்டார் நம் நாயகர் பியர். ஆள் பார்க்காமல் போய் மாட்டிக்கொண்டாயே என்று அழுதன ஏனைய ஓநாய்கள்.

பியர் கிறில்ஸ் பிறந்தது 7,ஜுன் 1974 வட அயர்லாந்தில். எட்வேட் மிச்சயில் கிறில்ஸ் தான் முழுப்பெயர். அவரது அக்கா வைத்த செல்லப்பொயரையே சொந்தப்பெயராக பிற்பாடு மாற்றிக்கொண்டார். பிரிட்டன் ராணுவத்தில் சேர்ந்து 3வருடங்கள் இந்தியாவில் இராணுவ சேவை செய்தார். 1996 இல், தனது 22 ஆவது வயதில் ஸம்பியாவில் ஒருமுறை 4900 மீற்றர் உயரத்திலிருந்து பரஷுட்டில் குதிக்கும்போது பரஷுட் விரியாததால் ஏற்பட்ட விபத்தில் இவரது முள்ளென்புகளில் மூன்று நொருங்கின. மறுபடி இவர் எழுந்து நடப்பதேகூடச் சந்தேகம்தான் என வைத்திர்கள் கைவிரித்துச் சரியாக 18 மாதங்களில், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, மிகக்குறைந்த வயதில் எவரெஸ்டில் ஏறிய பிரிட்டிஷ்காரர் என்ற கின்னஸ் சாதனையை நிலைநாட்டினார். (16, மே, 1998) பிறகு வட அத்திலாந்திக் சமுத்திரத்தை ஒரு படகில் கடப்பது, ஏஞ்சல்ஸ் நீர்வீழ்சியில் பராமோட்டரிங் செய்வது, 7,600 மீட்டர் உயரத்தில் பலூனில் வைத்து இரவு உணவு கொடுப்பது என்று ஆள் படுமுரட்டுத்தனமான காரியங்களில் இறங்க, இவரது துணிகரச்செயல்களால் ஈர்க்கப்பட்ட சனல் 4 (அ.. ஆம்.. அதே சனல் 4 தான்!) அப்படியே அள்ளிக்கொண்டது. 2006 நொவம்பர் 10 இலிருந்து Born Survivor என்ற பெயரில் இந்த மனிதனுக்கும் காட்டுக்குமான போராட்டம் ஒளிபரப்பப்படுகிறது. பின், டிஸ்கவரி சனலும் அதை Man vs Wild என்ற பெயரில் மறு ஒளிபரப்ப, உலகப் பிரபலமானது நிகழ்ச்சி. இன்றுவரை அவ்வாறாகவே இருந்துவருகிறது.

பியர் கிறில்ஸுக்கு ஏதோ கொஞ்சம் ஓரிரு சாகசக் கலைகள் தெரியும். மலையேற்றம், பராமோட்டரிங், 7 வகையாக நீச்சல், விமானம் ஓட்டுவது தொடக்கம் குதிரை ஓடுவது வரை, ஸ்கைடைவிங், படகோட்டல், யோகா, நின்ஜட்சு மற்றும் கராட்டி (டான் 2), அம்பு விடுதல் தொடக்கம் பூமரங் வீசுவது வரைபோதாததற்கு ஆங்கிலம் ஸ்பனிஷ், பிரெஞ்சு என்று 3 மொழிகள் தெரியும், அத்தோடு உலக இனங்களின் நாகரிகம், வாழ்க்கைமுறைகள் பற்றிய பட்டப்படிப்பும் முடித்துள்ளார். பிரிட்டிஷ் இராணுவத்தில் விமானப்படையிலும், தரைப்படையிலும் இருந்துள்ளார். அத்தோடு உலக சாரணர் சம்மேளனத்தின் தலைமைச் சாரணராகவும் இருக்கிறார்.(இப்பதவிக்கு அமர்த்தப்பட்டவர்களிலேயே மிக இளையவர் இவர்தான் என்பதுவும் ஒரு சாதனை.)

சாகசக்காரராக மட்டுமல்லாது எழுத்தாளராகவும், தொலைக்காட்சி ஊக்குவிப்புப் பேச்சாளராகவும் இவர் ஒரு பிரபலம்தான். இவர் மொத்தமாக 10 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார். 2008 ஆம் ஆண்டில் உலகளவில் அதிகம் விற்பனையான 10 எழுத்தாளர்களில் ஒருவராக இவர் TIMES பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சென்ற வருடம் (2011) இலர் தனது சுயசரிதையை Mud, Sweat and Tears என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார். இவர் சிறுவர்களுக்கான சாகசப் புத்தகங்களும் எழுதியுள்ளார். வர்னர் பிரதர்ஸ் தயாரிக்கும் Clash of the Titans திரைப்படத்தில் நடிக்கிறார். Man vs Wild என்ற பெயரிலேயே ஒரு 3D திரைப்படமும் பிரிட்டனில் தயாரிப்பில் உள்ளது. துஷ்பிரயோகம் செய்யப்பட்ட, கைவிடப்பட்ட மற்றும் மாற்றுத்திறனுள்ளவர்களுக்காக இவர் ஒரு அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். மேலும் 8 வேறு சேவை நிறுவனங்களுக்காகவும் வேலை செய்கிறார். 2 மலையேற்ற உபகரணங்கள் செய்யும் நிறுவனங்களுக்கு வடிவமைப்பாளராக இருக்கிறார், தான் ஒரு வியாபார சேவைகள் நிறுவனம் நடத்தி வருகிறார். இத்தனைக்கும் பிறகு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தன் குடும்பத்தோடு மலையேற்றம் போகிறார்.
 நம்மாள் சாப்பிடுவது ஒட்டக இதயத்தை. பச்சையாகத்தான்.
ஒரு சாதாரண மனிதன்.. இளம் வயதிலேயே முள்ளென்புகள் நொருங்கிப்போனவர்.. பின்னர் படப்பிடிப்புக்களின்போது தொடையென்பு, தோள்பட்டை, கால் ஆகிய இடங்களில் எலும்புமுறிந்துபோனவர்.. உலகளவில் முதல்தர சாகசக்காரராக உள்ளார். விபத்துக்களில் ஊனமானவர்கள் எழுந்து சாதிக்கும் பல கதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இவாது கதை சாதாரண மனிதர்களுக்கு அசாத்தியம். ஒருவருக்கு சாத்தியமாகுமென்றால், அவர் சாதாரண மனிதர் இல்லை. எந்த அளவுக்கு இந்த மனிதர் சாகசக்காரர் என்றால், தனது மனைவிக்கு மூன்றாவது பிரசவத்தை, ஒரு படகு வீட்டில் வைத்து, எந்தவித உதவியும், உபகரணமும் இல்லாமல், தனியாகப் பார்த்திருக்கிறார். (ஹக்பெர்ரி கிறில்ஸ் என்ற அந்த ஆண் குழந்தை, 15, ஜனவரி 2009 இல் பிறந்தான்.) ஒருநாளைக்கு 24 மணிநேரம் சாகச விளையாட்டுக்களில் கழிக்கிறார். மீதி நேரத்தில் (அது எங்கிருந்துதான் இவருக்குக் கிடைக்கிறதோ..) அந்த அனுபவங்களை தொலைக்காட்சியிலும், புத்தகங்களிலும் சொல்லுகிறார். இவரைப்பற்றிய விம்பத்தை நீங்களும் உருவாக்கிக்கொள்ள விரும்பினால், Man vs Wild நிகழ்ச்சியைப் பாருங்கள். (தவளையை உயிரோடு தின்பது, ஒட்டக இதயத்தை பச்சையாகத் தின்பது, தனது சிறுநீரையே குடிப்பது.. என்று கொஞ்சம் அசைவ நிகழ்ச்சிதான். முகம்சுழிக்காதீர்கள். நாளைக்கு நாம் ஒரு காட்டில் தனியாக அகப்பட்டாலும் அதேதான்.)
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}