இவ்வார ராசிபலன்


இவ்வார ராசிபலன்

மலர்ந்துள்ள நந்தன வருடத்தில் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் சனிப்பெயர்ச்சியால் என்னென்ன நடக்கப்போகிறது என்று பார்ப்போம். இதனை நம் வாசக அன்பர்களுக்காக தொகுத்துத் தந்தவர் ஸ்ரீலஸ்ரீ ஜோதிட மணி நித்தியானந்த சுவாமிகள். (அவரது ஆன்மீக வீடியோக்களை பார்க்க இங்கே கிளிக்கவும்.)

மேஷம் :  ஆட்டு ராசிக்காரரான உங்களுக்கு பாலியாடு ஆகும் அபாயம் இந்த வாரம் உள்ளது. சனி ஆறிலும், குரு எட்டிலும் நிற்பதால் நீங்கள் வீட்டிலேயே நிற்பது நல்லது. (திருமணமானவருக்கு : உங்களுக்கு சனி வீட்டிலே நிற்கும். நீங்கள் வெளியே நிற்பது நல்லது.) சூரியனும் சந்திரனும் ஒரே லக்கினத்தில் வருவதால் சில நன்மைகள் நடக்க வைப்புண்டு. அது பிடிக்காவிடில் செய்யவேண்டிய பரிகாரம்: Sunday களில் நிலா நிலா போகுது...”, “சந்திரனை தொட்டதுயார்..” போன்ற சந்திரன் வகை பாடுகளை விரும்பி கேட்பதன்மூலம் சூரியனை கடுப்பாக்கினால் இருவரும் பிரிய வாய்ப்புண்டு. மாணவர்களுக்கு எவ்வளவு படித்தாலும் மண்டையில் ஏறும் வாய்ப்பு இல்லை. வீணாக கஷ்டப்படவேண்டாம்.

ரிஷபம் : எருமை மாட்டின் ராசிக்காரரான உங்களுக்கு போனவருடம் செய்யச் சொன்ன பரிகாரத்தை எல்லாம் எருமை மாட்டில் மழை பெய்ததுபோல் கேட்டுக்கொண்டு சும்மா இருந்ததால் இந்த வருடம் ஒரு மண்ணும் சொல்லப் போவதில்லை நான். (வாசகர்களுக்கு : நமது சோதிடர் சொன்னபடி அவரிடம் போய் ரூபாய் 5000 ஐ கட்டி அந்த நாசமாய்ப் போன பரிகாரத்தை செய்து தொலைத்திருந்தால் அவர் மனைவி விரும்பிய வைர அட்டிகையும் நீங்கள் விரும்பிய ராசிபலனும் கிடைத்துத் தொலைத்திருக்குமல்லவா? : ஆதங்கத்துடன் ஆசிரியர்.)

மிதுனம் : உங்கள் ராசிக்கு குரு ஏழாமிடத்திலிருந்த குறுகுறுவென்று பார்ப்பதால் சற்றுத் தள்ளி நிற்பது நல்லது. சந்நிதிக்குக் காவடி, கீரிமலையில் மண்சோறு என்று ஏதாவது ட்ரை பண்ணிப் பார்க்கவும். பெண்களுக்குத் திருமண அபாயம் உள்ளது. புதன்தோறும் நள்ளிரவில் நாய்கள் கூவும் நேரத்தில் வைரவப் பெருமானுக்கு வடைமாலை போட்டால் வெளிநாட்டு யோகமும், வேலைவாய்ப்பும் ஒருங்கே கூடி, ஒபாமா அலுவலகத்தில்கூட தாசில்தார் உத்தியோகம் கிடைக்க வாய்ப்புண்டு.

கடகம் : அம்மன் அருள் அள்ளுகொள்ளையாக உள்ள கடகராசி நேயர்களுக்கு இந்தவருடம் நீரில் கண்டம். (இந்தோனேஷியா ஜனாதிபதியும் கடகராசிதான். நீரில் கண்டத்துக்கு அவர் பரிகாரம் செய்யாமல்விட, ஆசியாக் கண்டத்துக்கே நீரில் கண்டம் வந்துவிட்டது. அதுதான் தொடர் சுனாமி.) சுனாமி போன்ற நீர்க்கண்ட ஆபத்துக்கள் உங்களை அண்டாதிருக்க தினமும் பத்திரகாளிக்கு அபிஷேகம் செய்யவும். பத்திரகாளி உங்களை (அபிஷேகம் பண்ணியவர்களை மட்டும்) பத்திரமாகப் பார்ப்பாள்.  பத்திரகாளிக்கு பச்சைத்தண்ணீரில் கண்டம் இருப்பதால் பாலாலேயே அபிஷேகம் பண்ணவும்.

சிம்மம் : உங்களுக்கு ஒன்றுமே சரியில்லை. அட்டமத்தில் வியாழன், ஏழரைச் சனி, மற்றும் ஐந்திலே ராகு. இந்த வருடத்தை நீங்கள் உயிருடன் தாண்டுவதே சந்தேகம்தான். குஷ்டம், சொறி, குறைந்தது வயிற்றுவலியாவது வந்து தொல்லை கொடுக்கும். பற்கள் ஒன்றிரண்டு குறைய வாய்ப்புள்ளதால் வீண் சண்டைகளைத் தவிர்க்கவும். காதல் கைகூட வாய்ப்புண்டு. (நீங்கள் காதலிக்கும் பெண்ணுக்கும், வேறு ஆணுக்கும்.) நீஙகள் தவிர்க்கவேண்டிய திசைகள் வடக்கு, கிழக்கு, தெற்கு, மற்றும் மேற்கு. நயினை நாகபூஷனி கோவிலுக்கு பாதயாத்திரையாகவே சென்று வீதிவீதியாக உருண்டால் விமோசனம் கிடைக்க வாய்ப்புண்டு. (வடக்கு, கிழக்கு, தெற்கு, மற்றும் மேற்கு வீதிகளைத் தவிர்க்கவும்.) மாணவர்களுக்கு  பரீட்சையில் உருப்பட வாய்ப்பில்லை. கன்னிராசிக்காரர்களுடன் நட்பு நன்மை பயக்கும். (கன்னிராசிப் பலனை வாசிக்கவும்.)
கன்னி : பண்ணிமாதிரி சும்மா இருந்தாலும் பணம்பணமாகக் கொட்டும் காலமிது. கன்னிகளுக்கு காதலும், சுகமான வாழ்க்கையும் கிடைக்கும். அதற்கு சிலவற்றை தியாகம் பண்ணப் பழகவேண்டும். உதாரணமாக பழைய காதலனை. மாணவர்களுக்குத்தான்   ஜூலை 10 வரை கல்வி வகைதெகையின்றிக் கொட்டும். பரீட்சைக்கு போகாமலே விட்டாலும் புள்ளிகள் அள்ளி எறியும். சிம்மராசி நண்பர்களுக்கு கருணை காட்டவும். ஜூலை 10 உடன் ஆட்சி மாறுகிறது. பிறகு சிம்மராசிக்குக் கொட்டத் தொடங்கிவிடும். மார்க்ஸூம்சரி, மயிரும்சரி.

துலாம் : தொட்டதெல்லாம் பொன்னாகும். (கண்டபடி தொடவேண்டாம்.) மூன்றாம் வீட்டிலிருந்து சூரியன் உங்களையே உற்று உற்றுப் பார்ப்பதால் யாராவது மினக்கெட்டு வந்து காதலைச் சொல்ல வாய்ப்புண்டு. கடன் கேட்கவும் அதேயளவு வாய்ப்புண்டு. வெளிநாடு செல்லும் யோகம் நிறைய உள்ளது. பாஸ்போட் எல்லாம் தேவையில்லை, வெள்ளிதோறும் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு நெய்விளக்கு ஏற்றினால் போதும். இங்காலபரமேஸ்வரிக்கு குறைந்தது மண்ணெய்விளக்காவது ஏற்றாமல்விட்டால் கோபிக்க வாய்ப்புண்டு.

விருச்சிகம் : வெள்ளி ஏழில் நிற்பதால் நீங்கள் நடுத்தெருவில் நிற்க வாய்ப்புண்டு. பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மரக்கறி உணவு உண்பதைத் தவிர்க்கவும். மாணவர்களுக்கு பரீட்சைகளில் நல்ல பெறுபேறு பெற வாய்ப்புண்டு. படிக்கவே தேவையில்லை. ஒரு வெற்றிலை, நான்கு பாக்கு மற்றும் 4200 ரூபாய் பணத்துடன் என்னை சந்தித்தாலே போதுமானது. தொழில் செய்வேருக்கு தொழில் விருத்தியும், செய்யாதேருக்கு (வீட்டிலேயே நிற்பதால்) வம்சவிருத்தியும் ஏற்படும். உங்களுக்கு காரிய சித்தியும், உங்கள் சித்தப்பாவுக்கு ஒரு கரிய சித்தியும் கிடைக்க வாய்ப்புண்டு. அனுகூலமான நிறம் : கருங்கபிலச் செம்மஞ்சள். (HNO3உடன் KMnO4 ஐக்கலக்க வரும் நிறம்.)


தனுசு : மூன்றாவது இட அதிபதி சுக்கிரனுக்கும், சனிக்கும் சிறு தகறாறு. சனி உங்களை விலக வாய்ப்புண்டு. கூடவே காதலி அல்லது மனைவியும். போனால் போகிறது சனியன் என்று புதியதைத் தேடவும். வயிற்றில் கட்டியோ, காலில் கான்சரோ, வர வாய்ப்புண்டு. குறைந்தது எய்ட்ஸாவது வரும். எல்லாம் வல்ல இறைவனிடம் மன்றாடி, கணபதி ஹோமம் செய்தால் எய்ட்ஸ், கான்சர் விலகும்.

மிச்சசொச்சமாகவுள்ள 4 ராசிக்காரருக்கும்  இந்தவாரம் ராசிபலன் பார்க்கும் ராசியே இல்லை. தனுசுராசிக்காரர் போனவார சிம்மராசிப் பலனையும், மகர, மற்றும் கும்பராசிக்காரர் முறையே போனவருட தனுசுராசி மற்றும் அடுத்தவருட இடபராசிப் பலனையும் படிக்கவும்.

ராசிபலனில் நம்பிக்கை இல்லாதவரா நீங்கள்? stock இருக்கும் நம்பிக்கையையெல்லாம் நீங்கள் உங்கள் மீதுதான் வைத்திருக்கிறீர்களா? நல்லது. உங்களுக்குத் தொட்டதெல்லாம் பொன்னாகும். முட்டாள்கள் சகுனத்துக்குக் காத்திருக்கிறார்கள். மனிதர்கள் சந்தர்ப்பத்துக்குக் காத்திருக்கிறார்கள். சாதனையாளர்கள் சந்தர்ப்பங்களை உருவாக்குகிறார்கள்.
நீங்கள் இறைவனை நம்புபவராயின் ராசிபலனை நம்புவது இறைவனுக்கு அவமானம். திருஞானசம்பந்தர்  என்ற கவிஞர் வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்…” என்ற பாடலில் என்ன சொல்கிறார்? சரி, அதைவிடுங்கள். பட்டினத்தார் என்ன சொல்கிறார்

உடைகோவணம் உண்டு, உறங்கப் புறந்திண்ணையுண்டு,உணவிங்கு
அடைக்காய் இலையுண்டு, அருந்தத் தண்ணீருண்டு, அருந்துணைக்கே
விடையேறும் ஈசர்திருநாமம் உண்டு, இந்தமேதினியில்
வடகோடு உயர்ந்தென்ன, தென்கேகாடு சாய்ந்தென்ன வளர்பிறைக்கே.

முடிவாக அவர் சொல்லவருவது எனக்குத் தேவையானதெல்லாமே இவ்வுலகத்தில் உள்ளது. போதாததற்குத் துணையாக ஈசனுடைய திருநாமம் இருக்கிறது. பிறகு சந்திரனோ, சாத்திரமோ, எக்கேடு கெட்டால் எனக்கென்ன?” வாம்.

இந்த சோதிடம் எல்லாம் ரொம்பவே விஞ்ஞானரீதியானது, அதைல்லாம் கோள்களின் அதிர்வுகள்.. அலைவரிசை.. அது, இது என்று பம்மாத்தும் ஒரு கூட்டமும் இருக்கிறது. அவர்களெல்லாம் பின்வரும் இந்தப் பாமரனின் சந்தேகங்களுக்கு விளக்கம் தருவார்களென நம்புகிறேன்.

  • ஒன்பது கிரகங்களும் நம்மை இப்படி வாட்டுகிறதே, இதையெல்லாம்விட நமக்கு மிக மிக அருகிலிருக்கும் கிரகம் நமது பூமி. அது ஏன் நமது நாளாந்த நன்மைதீமையில் செல்வாக்குவதில்லை?
  • மொத்தம் 12 ராசிகள். ஆக, உலகத்திலே 12 வகையான வாழ்க்கைதான் நடக்கிறதா?
  • ராகு, கேது என்பவை உண்மையில் இல்லாத கிரகங்கள். யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என்பவை உள்ள கிரகங்கள். கணக்கு உதைக்கிறதே?
  • அவ்வளவு பெரிய கிரகத்தால் ஆபத்து வருமாம், பிறகு அதற்கு அறுகம்புல்லோ, ஆட்டுப்பாலோ வைத்து பரிகாரம் செய்தால் அது பொய்விடுமாம்.  அப்ப சூரியன், வியாழன் எல்லாம் என்ன, அக்கா துக்காவா?
இதையெல்லாம் பார்த்து நீங்கள் திருந்தப் போவதில்லை அது உங்களுக்கும் எனக்கும் நன்கே தெரியும். உங்கள்பாட்டில் ராசிபாருங்கள் நீங்கள், என்பாட்டில் கத்திக்கொண்டிருக்கிறேன் நான், கடைசியில் இருசாராரும் செத்தே போவோம். நாம் பயந்து, பரிகாரம் செய்யும், தினம்தோறும் எங்கே நின்று நம்மைப் பார்க்கிறார்கள் என்று பயந்து சாகும் சூரியன், குரு, ராகு.. அத்தனை தேவர்களும் எமதர்மராஜன் என்ற தேவன் வரும்போது  பொத்திவிலகத்தான் வேண்டும்.

(சுவாமிகளின் ஆன்மீக விடியோக்களை பார்க்க அந்த ஹைப்பர்லிங்க் ஐ கிளிக்கினீர்களா? ஹி.. ஹி... அரஸ்சியல்ல இதெல்லாம் சாதாரணமாப்பா...)

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}