மே தினம் - வரலாறும், வெட்கக்கேடும்.மே தினம். உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!(workers of all lands unite!) என்ற மார்க்ஸிய எழுச்சிக் குரலின் புரட்சி வடிவம். தொழிலாளர்களின் நலனை கருதாது உழைப்பை மட்டும் முடிந்தளவு உறிஞ்சும் 19ஆம் நூற்றாண்டின் தொழில் புரட்சியின் மோசமான பக்கவிளைவை எதிர்த்து உண்மையிலேயே உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபட்ட, உரிமை தரப்படாதவிடத்து, தாமாகவே எடுத்துக்கொள்ளும் புரட்சியின் செயல்வடிவத்தின் நினைவுநாள்.

19ஆம் நூற்றாண்டு தொழிற்புரட்சி நடந்த, உலகளவில் தொழில்துறை விருத்தியடைந்த நூற்றாண்டு. படிப்படியாக அல்லாது, ஒரு பாய்ச்சலாக இந்த தொழில்துறை விருத்தி நடப்பதற்காக பலியானது உலகெங்கிலும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள்தான். பெண்கள், சிறுவர்கள் உட்பட, தொழிற்சாலைகளில் வேலை செய்யும் சகல தொழிலாளர்களும் ஓய்வற்ற வேலைக்கு திணிக்கப்பட்டார்கள். தினமும் 18,20 மணிநேர வேலை, விடுமுறைகளே கிடையாது என்பதாக மனித உழைப்பு பிழிந்தெடுக்கப்பட்டது. இதற்கு எதிராக தொழில்புரட்சி நடந்த ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்கள் ஒன்றுகூடி பலதரப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தினர். சகலருக்கும் பொதுவான கோரிக்கை ஒன்று இருந்தது. அது நாளொன்றுக்கு வேலை செய்யும் நேரத்தில் கட்டுப்பாடு. தினமும் 15 முதல் 20 மணிநேரம் வேலை செய்தவர்கள் 8 முதல் 10 மணிநேரமே வேலை செய்ய முடியும் என்று அறிவித்தனர். இங்கிலாந்தில் சாசன இயக்கம் (chartists) 10 மணிநேர வேலை உட்பட்ட 6 கோரிக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தது. ஃபிரான்ஸ் தொழிலாளர்கள் – முக்கியமாக நெசவாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். (புரட்சியின் பிறப்பிடமான ஃபிரான்ஸின் அந்தப் புரட்சி தோல்வியில் முடிந்தது. நிலப்பிரபுத்துவ முறைமை நிலவிவந்த அந்தக் காலத்தில் அரசாங்கங்கள் நிலப்பிரபுகளினதும், முதலாளிகளினதும் கட்டுப்பாட்டிலுமேயே இயங்கிவந்தது. அதுவே இப்புரட்சிகளின் தோல்விக்கு காரணமானது.) உலகிலேயே முதன் முதலாக 8 மணிநேர வேலை கோரிக்கையை முன்வைத்து அதில் வெற்றி பெற்றவர்கள்  அவுஸ்திரேலியா கட்டிடத் தொழிலாளர்கள். 1856ஆம் ஆண்டு அந்த நிகழ்வு நடந்தது. 


அமெரிக்காவில் 1830களிலிருந்தே இவ்வாறான கலகங்கள் தொழிலாளர்களால் நடத்தப்பட்டன. வரலாற்றில் பெரிதும் அறியப்பட்ட பொஸ்டன் தேநீர் விருந்து (கப்பலில் பணியாற்றிய தொழிலாளர்கள் கப்பலில் ஏற்றவேண்டிய தேயிலை பெட்டிகளை கடலில் போட்டது) நடந்ததும் இதையொட்டித்தான். அமெரிக்க விடுதலைப் போராட்டத்தின் காலகட்டத்தில் (1860களில்) பல தொழிலாளர் இயக்கங்கள் அங்கு உருவாகின. 1866 ஓகஸ்ட் 20 இல், அந்த இயக்கங்கள் எல்லாம் இணைந்து, தேசிய தொழிலாளர் சம்மேளனத்தை (National Labour Union NLU) உருவாக்கின.  அந்த NLO பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தியது. 1886 மே 1ஆம் திகதி அது நாடு முழுவதுக்கமான தொழிலாளர் வேலை நிறுத்தத்தை அறிவித்தது. தொடர்ந்து, சிக்காகோவில் மே 3 அன்று தொழிலாளர்கள் ஒன்றுகூடி கூட்டம் நடத்தியபோது பொலிஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நால்வர் பலியாயினர். இதையடுத்து மே 4ஆம் திகதி வரலாற்று முக்கிய்த்துவம் கொண்ட ஹெய்மார்கெட் சதுக்கக் கூட்டம் நடந்தது. அமைதியாக நடத்தப்பட்ட அக்கூட்டத்தில் திடீரென்று வீசப்பட்ட டைனமைட் ஒன்று வெடித்து ஒரு பொலிஸ் அதிகாரி உயிரிழக்க, போலீசார் தொழிலாளரை தாக்கினர். அதையடுத்து நடந்த வழக்கில் தொழிற்சங்க தலைவர்கள் எழுவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் தொழிலாளருக்கு 8மணிநேர உழைப்பை வாய்ப்பாக்கிய இந்த சம்பவம்தான் பின்னர் மே முதல் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாட சாட்டுத்தினமானது.

கார்ல் மார்க்ஸ் (1818-1883)
25 ஆண்டுகளுக்கு முன்னரே கார்ல் மார்க்ஸ் உருவாக்க வேண்டுமென முயன்ற சர்வதேச தொழிலாளர் மாநாடு 1889 ஜூலை 14 அன்று பரிசில் (ஃபிரான்ஸ்) நடைபெற்றது. பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உள்ளிட்ட பல தொழிலாளர் பிரதிநிதிகள் கலந்துகொண்ட அந்த மாநாட்டில் கார்ல் மார்க்ஸ் சொன்ன எந்த தொழிலாளர் ஆகினும் 8 மணிநேர உழைப்பு என்ற கொள்கையை உலகமயமாக்குவதாக தீர்மானிக்கப்பட்டது.(மார்க்ஸ் தனது das capital நூலில், அத்தியாயம் 10இல், தொழிலாளர்களை வேலைவாங்கக்கூடிய சகல நேரமுறைகளைப்பற்றியும் விரிவாக எழுதுகிறார்.) அதே கூட்டத்தில் மே முதல் திகதியை உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள் தத்தமது இயக்கங்களை நடத்திட, கொண்டாட ஒரு தினமாக தெரிவு செய்தார்கள்.
அன்றிலிருந்து, மே முதல் திகதி, சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதில் கால வருத்தம் என்னவென்றால், அது கொண்டாடுவதற்குரிய தினமல்ல, போராட்டத்துக்கான தினம் என்பதை காலம் நமக்கு மறக்கடித்ததுதான்.


சரி, அப்படியானால் கார்ல் மார்க்ஸ் கண்ட கனவு பலித்த நாள் அதுவேதானா? இல்லை. அது செயல்முறைப்படுத்தப்பட்டது ரஷ்யாவில், பல வருடங்களுக்குப் பிறகு. கொம்மியுனிசம் என்ற கொள்கையின் சிந்திக்கும் சக்தி கார்ல் மார்க்ஸ் என்றால், அதை செயற்படுத்திய சக்தி லெனின். இந்த 8 மணி உழைப்புப் போராட்டங்களே ரஷ்யப் புரட்சியாக வெடித்தது. மார்க்ஸிசம் மண்ணுக்கு வந்தது. அது பின்னர் மண்ணோடு மண்ணானது வேறுகதை.
சரி, நமது கதை எப்படி? 18ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் மேல்நாட்டவருக்கு உழைப்பின் மகத்துவம் புரிந்தது. புரிந்தது என்பதைவிட, வாழ்வதற்கு கட்டாயமானது. மேலைத்தேச நாகரீகம் உழைப்பையே சாபமாகக் கருதுகிறது. (தாகவே சகலதும் கிடைக்கும் ஏடன் தோட்டத்திலிருந்து இறைவனின் சாபத்தால் மனிதன் விரட்டப்பட்டு, உழைத்து உண்ணும் அவலநிலை அவனுக்கு ஏற்பட்டது.) அந்தக் கதையின்படி, குழந்தை பெற்றுக்கொள்வதே சாபமானது. அது அவ்வாறாக இருக்கும்போது, உழைத்து வாழ்ந்தால் மட்டுமே மதிக்கப்படுவதாக நாம் நம்பிக்கொண்டிருக்கும், நமது தேசத்தில் என் அதுவரை உழைப்பாளர் தினம் கொண்டாடப்படவில்லை? உழைப்பின் மகிமை நமக்குத் தெரியாதா?

ஆம். நமக்குத் தெரியாது. உழைப்பின் பெருமை நமக்குத் தெரியாது. நமது மதம் அதை கேவலப்படுத்துகிறது. ஒரு மனிதன், உலகத் தொழிலாளர்களை ஒன்றுகூட அழைக்க, நமது மதம், அவர்களை 4 பிரிவுகளாகப் பிரிக்கிறது. போதாததற்கு, நமது கலாச்சாரம் அதை 18பிரிவாகப் பிரிக்கிறது. வெட்கக்கேடு. தொழில் செய்து, உழைத்து உண்பது, அது எந்தத் தொழிலாக இருந்தாலும் பெருமைதான் என்கிற நிலைமை நம்மிடம் இல்லை. ஒரு தொழிலை செய்பவன் அடிமையாகவும், மற்றுமொரு தொழிலை செய்பவன் அவனை ஆளுபவனாகவும் – இவ்வாறாக உழைப்பாளர்களுக்கிடையிலேயே ஏற்றத்தாழ்வு உள்ள ஒரே நாகரிகம் நம்முடையதுதான். எல்லாவற்றுக்கும் பெருமைப்பட்டுக்கொள்ளும் தமிழர்களே! இதற்கும் பெருமைப்பட்டுக்கொள்ளுங்கள். செய்யும் தொழிலை வைத்து சாதி பிரித்திருக்கும் எளிய நாகரிகம் நம்முடையது. இதை நமக்கு போதித்தது மனு தர்மத்தை கொண்டிருக்கும் நமது இந்துசமயம்தான். ஒரு கூட்டம் உடனே கொதித்தெழும் என்பது எனக்குத் தெரிந்ததுதான். ஆயுத பூசையை நாம் கொண்டாடி தொழிலாளர்களை பெருமைப்படுத்தவில்லையா? என்று. கிழித்தீர்கள். ஆயுதங்களை பூசித்தீர்கள். மனிதர்களை எங்கே மதித்தீர்கள்?

நமது நாயகர்கள் ஒரு படத்தில் கதாநாயகியுடன் புரள வாங்கும் சம்பளம் சராசரியாக 100 மில்லியன் ரூபாய். (அவரும் கஷ்டப்பட்டுத்தானே உழைக்கிறார் என்கிறீர்களா? கஷ்டப்படுவதற்கு டூப் நடிகர்கள் உள்ளனர்.) நாளுக்கு 500 ரூபாய் வாங்கும் ஒரு சாதாரண உழைப்பாளி அந்த தொகையை சம்பாதிக்க 770 வருடங்கள் உழைக்கவேண்டும். உங்கள் முட்டாள்தனத்தையும், மாய உலகத்தில் உங்களுக்குள்ள ஆசையையும் காசாக்கும், உங்கள் மீதோ, தான் மக்கள் மீதோ, அக்கறை இல்லாத, லட்சக்கணக்கான மக்கள்- தன்னை நாயகனாக கொண்டாடிய மக்கள் -  குண்டுபோட்டு அழிக்கப்பட்டபோது ஓய்விற்காக லண்டன் போயிருந்த நாயகன் உழைக்கும் பணத்தை (அதாவது நீங்கள் கொடுக்கும் பணம்தான்.) உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஒரு ஆசிரியர் உழைக்க 30,800 வருடங்கள் தேவை. இருவருக்கும் காசு போவது உங்களிடமிருந்துதான். ஆசிரியரையோ, உங்கள் தகப்பனையோ, நீங்களே கேவலமாகத் திட்டுவீர்கள். ஆனால், உங்கள் நாயகனை திட்டினால் கடுப்பாவீர்கள். வாருங்கள், இப்போதே திருந்திவிடலாம். மனிதர்களை மதிக்கலாம். உழைத்து உண்பவர்கள், அவர்க எந்தத் தொழிலை செய்தாலும் , மதிக்கலாம்.

ஒருவன் செய்யும் தொழில் ரீதியாக அவனை, அவனது குடும்பத்தை, அவனது வம்ஸத்தையே தரம்தாழ்த்தும் கேவலமான பழக்கம் எப்போது நம்மை விட்டுப் போகிறதோ, அன்றே நாம் உழைப்பாளர்களுக்கு விழா எடுக்க அனுமதிக்கப்பட்டவர்களாகிறோம். அஃதல்லாது, வெறுமனே மே தினத்துக்கு அரசியல் தலைவர்கள் அறிக்கை விடுவதும், மே தினக் கொண்டாடங்கள் அனைத்தையும் பாருங்கள்! என்று TV இல் காட்டும் நடிகைகளின் அங்கங்களை பார்ப்பதுவும், பேஸ்புக்கில் தகுதியே இல்லாத நாம் மே தின வாழ்த்துப் போடுவதுவும், வெட்கக்கேடானவை.------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}