விடுதலை வீரர் சுபாஷ் சந்திரபோஸ்-01

தமக்கென்று தேர்ந்தெடுத்த பாதைகளில் பயணிக்கும்  மனிதர்களில் ஒரு சிலரே என்றென்றும் நீங்காதவாறு தம் பெயரை வரலாற்றில் அழுத்திப் பதிந்து விட்டு செல்கின்றனர். அவ்வாறு அழியாத பெயர் கொண்ட சாதனையாளர்களில் நேதாஜியும் ஒருவர். இந்திய சுதந்திர விடுதலைப் போராட்டத்தில் வீர வரலாறு படைத்தவர். இந்திய சுதந்திரத்தில் பங்காற்றியோரை பற்றி கதைக்கும் பலரும் இவரை நினைவு கூற மறுப்பது வருந்தத்தக்க விடயம்.எது எவ்வாறு ஆகட்டும் இந்திய விடுதலை போராட்டத்தில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பங்கு அளப்பரியது மட்டுமல்ல சிறப்புடையதும் ஆகும். என்னால் முடிந்தவரை நேதாஜியைப் பற்றி   புத்தகங்களிலிருந்து  கற்றறிந்தவற்றையும்  தெரிந்தவற்றையும் கொண்டு இத்தொடர் கட்டுரையை வரைகின்றேன். 
பிறப்பும் பாடசாலை பருவமும் 
இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் கட்டாக் எனும் இடத்தில் 1897 ஆம் ஆண்டு தை மாதம் 23 ஆம் திகதி பிரபாவதிதேவிக்கும், ஜானகிநாத் போஸ் அவர்களுக்கும் ஒன்பதாவது குழந்தையாக பிறந்தார் சுபாஸ் சந்திரபோஸ். இவரது குடும்ப பின்னணி  குறித்து பார்ப்போமானால் இவரது தந்தையார் ஜானகிநாத்போஸ் 27 தலைமுறையாக வங்க மன்னர்களின் படைதலைவர்களாகவும் நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமைமிக்க வம்சாவழியிலிருந்து  வந்தவர். இவரது தாயார் பிரபாவதிதேவி "தத்" எனும் பிரபுக்குலத்திலிருந்து வந்தவர். இப்படி பெருமைசார்ந்த 8 ஆண் பிள்ளைகளையும் 6 பெண் பிள்ளைகளையும் கொண்ட  குடும்பத்தில் ஒன்பதாவது பிள்ளையாக பிறந்தவரே நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்.  சிறு வயது முதல் கொண்டே பல பிள்ளைகளுடன் வளர்ந்த படியால் சந்திரபோஸ் தன் சிறு வயதில் தாய் தந்தையரை விட தன்னை கவனித்து வந்த ஆயாவான சாரதா என்பவருடனேயே பெரிதும் இருப்பாராம். 
 ஐந்து வயதான போது கட்டாக்கிலுள்ள பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில் இணைந்த நேதாஜி ஏழு ஆண்டுகள் அங்கு கல்வி கற்றார். 

சுபாஷ் சிறுவயதில் 

                                                            சுபாஷ் இளவயதில்  
பின்னர் தன் உயர் கல்வியை கல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் தொடங்கிய சந்திர போஸ் மெட்றிகுலேஷன் கல்வியை தொடர்ந்ததுடன் 1913 ஆம் ஆண்டு   மெட்றிகுலேஷன் தேர்வில் கல்கத்தா பல்கலைகழக எல்லைக்குள் 2 ஆவது மாணவராக தேறினார். அது மட்டுமல்லாது இவரது தாயார் மிகுந்த தெய்வ பக்தி மிக்கவர் அதனால் சிறு வயது முதலே விவேகானந்தர் போன்ற ஆன்மிக பெரியார்களின் பால் ஈடுபாடுடையவராயும் அவர்களின் போதனைகளை படித்து வருபவராயும் இருந்தார். இதனால் ஞான மார்க்கத்தின் பால் ஈடுபாடு கொண்டவர் துறவறத்திலும்    தன்னை ஈடுபடுத்தி கொள்ள விரும்பினார்.  எதிலுமே பற்றற்று இருந்ததுடன் தனது 16 ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சுபாஸ் சந்திரபோஸ் தன் ஞான மார்க்கத்திற்கான குருவை தேடி இரண்டு மாதங்கள் அலைந்தார். ஆனால் வெளித்தோற்றதிட்கு  ஞானி போல் தோற்றமளித்தவர்கள் எல்லாம் பொய்யும் பிரளியும் கூறும் பித்தலாட்டக்காரர்கள் என்று அறிந்த நேதாஜி தன் மானசீக குருவாக விவேகானந்தரையே ஏற்று வீடு திரும்பினார்

கல்லூரிப்படிப்பும்  ஆங்கில எதிர்ப்பும்

துறவற    பாதையில் செல்ல விரும்பிய சுபாஸ் சந்திரபோஸ் ஞான மார்க்கத்திற்கு ஏற்ற குரு கிடைக்காததால் தந்தையாரின் வேண்டுகோளிட்க்கு இணங்கி 1915 ஆம் ஆண்டு கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார்.    அக்காலத்தில் ஆங்கில இனவெறி மிக்க வரலாற்று ஆசிரியரான சி எப் ஓட்டன் என்ற ஒரு ஆசிரியர் அங்கு கற்பித்தார். அவர் கல்வி  கற்பிக்கும் நேரங்களில் பெரும்பாலும் இந்தியர்களை அவமதித்து வந்தார் . ஒரு முறை சுபாஸ் சந்திரபோஸின் வகுப்பறையில் ஒரு மாணவன் செய்த சிறுகுற்றதிட்காக அவனது கன்னத்தில் அறைந்து விட்டார்  சி. எப் ஓட்டன்.  இதை கண்டதும் கோபமுற்ற சுபாஷ் சந்திர போஸ் "இனவெறி பிடித்த ஓட்டன் மாணவரை அடித்தது தவறு அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்......" என்று முழங்கினார். ஆனால் ஓட்டனோ ஆணவத்துடன் மறுத்துவிட்டார்  .இதனால் கோபமுற்ற நேதாஜி கல்லூரி  தலைவர் வரையில் பிரச்சனையை கொண்டு சென்றார். ஆனால் கல்லூரிதலைவரும் நேதாஜியின் கோரிக்கையை ஏற்கவில்லை.  இதனால் மறுநாள் மாணவர்களை வகுப்பை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார் சுபாஷ். இவரது அழைப்பை அனைத்து மாணவர்களும் ஏற்று கொண்டு மறுநாள் வகுப்புக்களை புறக்கணித்து எதிர்ப்பை வெளிபடுத்தினர்.  எனவே கல்லூரித்தலைவரும் சுபாஸை அழைத்து இனிமேல் இவ்வாறு  நடக்காது ஒட்டனை தாம் கண்டிப்பதாகவும் கூறினார். இது ஆங்கிலேயருக்கு எதிரான சுபாஷ் சந்திரபோஸின் முதல் வெற்றி. இதன் பின்னர் தோற்றம் பெற்ற மாணவர் சங்கத்திலும் நேதாஜி தலைவராக தெரியப்பட்டார். ஆனால் பேராசிரியர் ஓட்டன் தன் இன வெறியை தவறாது வெளிப்படுத்தியவாறே வந்தார். ஒரு சமயம் நேதாஜியின் வகுப்பறையில் கட்பித்தபோது இந்தியர்கள் அடிமைகளாக இருக்கவே பிறந்தவர்கள் என்றும் ஆங்கிலேயர்களே ஆளப்பிறந்தவர்கள் எனும் பொருள் பட இந்தியர்களை கேவலப்படுத்தினார் பேராசிரியர் ஓட்டன் இதனால் கொதித்தெழுந்த சந்திர போஸும் அவரது நண்பர்களும் தங்கள் வகுப்பறையில் கோபத்தை கட்டுபடுத்தி  கொண்டு வகுப்புகள் முடிந்த பின்னர் அன்று மாலை கல்லூரி சூழலிலேயே சுபாஸ் சந்திர போஸும் அவரது நண்பர்களும் பேராசிரியர் ஓட்டனை ஓட ஓட அடித்து சிறப்பாக கவுரவித்தனர். மறுநாள் இந்த செய்தி  கல்லூரியெங்கும்  பரவ போஸும் அவர் நண்பர்களும் கல்லூரியை விட்டு நீக்கப் பட்டதுடன் இரண்டு ஆண்டுகள் வேறெந்த கல்லூரிகளிலும் படிப்பை தொடரமுடியாது செய்யப்பட்டனர்.

                                                           தொடரும் ..........................................
[இதன் அடுத்த பதிவிற்கு   விடுதலை வீரர் சுபாஷ் சந்திரபோஸ்-02]
தொடரில் ஏதாவது தவறுகளிருப்பின் மன்னித்து அறியத்தரவும் 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}