வியட்னாம் விடுதலைப்போர் - 1 The History of Vietnam War #1 - French Indochina

பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் எல்லாமே போட்டி போட்டுக்கொண்டு உலக நாடுகளை கைப்பற்றின. கடல்பாதை கண்டுபிடிப்பதுமுதல் கடுகு தாளிப்பதுவரை அதற்கு பல காரணங்களும் வைத்திருந்தார்கள். அதிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டனுக்கும், பிரான்சுக்குமிடையில் அது ஒரு கௌரவப் போட்டியாகவே ஆகிப்போனது. அதனால், தேவையில்லாத நாடுகளைக்கூட கைப்பற்றத்தொடங்கினார்கள். அவ்வாறான அதிகார வெறியில் அகப்பட்டதுதான் வியட்நாம்.

கி.பி.938 இல் சீனா ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதிலிருந்து வியட்நாம் சுதந்திர நாடாகவே இருந்துவந்தது. அதை ஆண்ட அரசர்களின் வீரத்துக்கேற்ப எல்லைகள் மட்டும் அடிக்கடி மாறிவந்தாலும் இந்தோசீனக் குடாநாட்டின் முக்கியமான தனியரசாக இருந்துவந்தது, அது. 1850களில் இந்தோசீனாவை கொஞ்சம் கொஞ்சமாக ஃபிரான்ஸ் கைப்பற்றத்தொடங்கியதிலிருந்து வியட்நாம் அடிமைப்படத் தொடங்கியது. நாடுகள் வேறாக இருந்தாலும், அடிமைப்பட்ட வரலாறு எல்லோருக்கும் பொதுவானதுதான். அதே மதபோதகர்கள், அதே தேயிலைப் பயிர்ச்செய்கை, அதே மன்னர்களின் ஒற்றுமையின்மை... இலங்கையோ, வியட்நாம், வரலாறு ஒன்றுதான் அமைச்சரே!
பிரெஞ்ச் இந்தோசீனா. 1900

1850களில் தொடங்கிய அபகரிப்பில், அன்னம், டொங்கின், கொச்சிஞ்சினா ஆகிய மூன்று பிரதேசங்களும் 1887 இல் விழுந்தன. (இவை மூன்றும் சேர்ந்த்துதான் இன்றைய வியட்நாம்.) பின்னர் பிரங்கோ-சியாமீஸ் போரில் தோற்ற கொலம்பியா, லாவோஸ் அரசுகளும் இணைக்கப்பட, , 1893இல் வியட்நாம் உட்பட இந்தோசீன குடாநாடு முழுதாக பிரான்சின் ஆதிக்கத்துக்குள் விழுந்தது, பிரெஞ்ச் இந்தோசீனா ஆனது.

கைப்பற்றப்பட்ட வியட்நாமில் ரோமன் கத்தோலிக்க மதம் பரப்பப்பட்டது. புகையிலை, தேயிலை, மற்றும் கோப்பி பயிர்செய்யப்பட்டது. விடுதலைக்காக எழுந்த குரல்கள் அடக்கப்பட்டன. அரசர் ஹம் ஙி தொடக்கம் அரசாட்சிக்காகப் போராடிய கன் வூஓங்க், (பத்து வருடங்கள் தொடர்ந்து போராடிய இவர் 1890களில் கொல்லப்பட்டார்.) பான் போயி சௌ, பான் சி திரிஹ்ன் என்று பல தலைவர்கள் புறப்பட்டனர். சகலரதும் புரட்சிகள் ஒடுக்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட கடைசி புரட்சி யென் பாய் மியூட்டினி தலைமையிலான வியட் நாம் குஓக் டன் டங் என்கிற இயக்கத்தின் புரட்சிதான்.
ஃபிரான்ஸ் ஆதிக்கத்திலிருந்த வியட்நாம்.

கோலனி ஆதிக்கமும் வெறுத்துப்போய், புரட்சிகளும் தோற்றுப்போய் மக்கள் நொந்துபோய் இருந்தபோதுதான் தொடங்கியது இரண்டாம் உலகப்போர். 1940 இல் பிரான்ஸை ஜெர்மன் தோற்கடித்தது. ஆகவே, பிரான்சின் கோலனி நாடுகளும் ஜெர்மன் தலைமையிலான அச்சு நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. அப்போது இந்தோசீனாவை கைப்பற்ற வந்த ஜப்பான் இராணுவத்துக்கு வியட்நாம் மக்கள் செங்கம்பளம் விரித்து வரவேற்றனர். பிரான்ஸ் ஆதிக்கத்திலிருந்து விடுதலை என்று சந்தோஷப்பட்டனர், வரப்போகும் விபரீதம் தெரியாமல். வில்லு படம் போகிறதே என்று சனலை மாற்றினால் அங்கே சுறா படம் போனதுபோல, முதுகிலேறிய மூட்டைப்பூச்சிபோல மூட்டைத்துன்பம் வந்துசேர்ந்தது, வியட்நாம் மக்களுக்கு. (இரண்டு : இரட்டை, மூன்று : மூட்டைதானே?) கட்டுப்பாடு கையிலிருந்ததால் ஃபிரான்சின் இந்தோசீன நிர்வாகம் ஒருபுறம், உலகப்போரில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஜப்பான் இராணுவம் ஒருபுறம் என்று ஆதிக்கம் இரண்டுபக்கத்தால் வாட்ட, 1944-45 காலப்பகுதியில் வந்துசேர்ந்தது பஞ்சம். மில்லியன்கணக்கான மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டார்கள். 1,000,000 பேர் இறந்துபோனார்கள். அதிகாரத்திலிருந்தவர்கள் மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை. விடுதலையை வேண்டி மக்கள் இறைவன் இருக்கும் திசையை நோக்கி கதறினர்.

அப்போதுதான் வந்தார், தனது ஒன்பதாவது வயதிலிருந்தே புரட்சிப்படைகளுக்கு உதவிசெய்து, அவை தோற்கடிக்கப்படுவதை கண்டுகண்டு வெறுத்துப்போய், புரட்சியில் வெல்லுவது எப்படி என்பதை, எந்த நாடு உலகத்தில் முதன்முதலில் புரட்சியை நடத்திக்காட்டியதோ, எந்த நாடு தனது நாட்டை அடிமைப்படுத்தியதோ, அந்த நாட்டுக்கே – பிரான்சுக்கே - போய், கற்றுக்கொண்டு வந்த தலைவர் நிகுயென் சிங்க் கங் – மக்களின் மனதில்  ஹோ சி மின்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}