வியட்னாம் விடுதலைப்போர்# 2
Vietnam War # 2  - Ho Chi Mihn
பிற்காலத்தில் தனது நாட்டையே அன்னியர் ஆட்சியிலிருந்து காப்பாற்றி, அதை ஆளப்போகும் தலைவன், ஒரு கெரில்லாப் படையை வைத்துக்கொண்டு ஃபிரான்ஸ், அமெரிக்கா என்று இரண்டு வல்லரசுகளுக்கு தண்ணீர் காட்டப்போகும் மனிதன், 1890 ஆம் ஆண்டு தனது தாயின் ஊரான ஹோங்க் ட்ரூ வில் பிறந்தான். நிகுயென் சின் கங் (Nguyen Sinh Cung) என தனது பெற்றோரால் பெயரிடப்பட்ட இவர், பின்னர் தனது தந்தையின் ஊரில் கொன்ஃபூசனிசம், சீன எழுத்துமுறை என்பவற்றை கற்றார். பின் இய்கீ என்ற பாடசாலையில் பிரெஞ்ச் கல்வி கற்றார். அதெல்லாம் கணக்கில்லை. தனது ஒன்பதாவது வயதிலிருந்து புரட்சிப்படைகளுக்கு தகவல் பரிமாறுபவனாக இருந்தார்.

1912இல், அமெரிக்கா செல்லும் ஒரு கப்பலில் சமையல் உதவியாளராக சேர்ந்து அமெரிக்கா சென்றார். அப்போதிலிருந்து 1917 வரை இவர் முதலில் அமெரிக்காவிலும், பின்னர் இங்கிலாந்திலுமாக சமையல் வேலைகள் செய்தார். 1917 – 23 காலப்பகுதியில் இவர் பிரான்ஸில் வாழ்ந்தார். ஃபிரான்ஸ் மக்கள் எவ்வாறு புரட்சியை முன்னெடுத்து, எவ்வாறு அதில் வெற்றி பெற்றனர் என்பதை கற்பதே அவருடைய முக்கிய நோக்கமாகவிருந்தது. சோசலிச, கொம்மியுனிச கருத்துக்கள் இவரை கவரத்தொடங்கின. முதலாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்தபோது, வியட்நாமின் அடிமைத்தனத்தை ஒழிக்க உதவுமாறு பல அமைப்புகளுக்கும், தலைவர்களுக்கும், இவர் விண்ணப்பங்கள் அனுப்பிப் பார்த்தார். ஒன்றும் சரிவரவில்லை. அவருக்கு ஒன்று தெளிவானது. புரட்சி ஒன்றுதான் விடிவைத் தரும்.

அதிலிருந்து அவர் பிரான்ஸிலிருந்த கொம்மியுனிச கட்சிகளுடன் தனது தொடர்புகளைப் பேணினார். 1920இல் பிரான்சில் ஃபிரான்ஸ் கொம்மியுனிசக் கழகம் (France Communist Party) உருவானபோது இவர் அதில் பெரும்பங்கு வகித்தார். பிரான்சில் இவர் இருந்த காலத்தில், ஓரிரு காதல்களையும், சில கலகங்களையுன்ம் செய்தார், ஆனால் புரட்சியைப்பற்றி அதன் நாட்டிலேயே கற்றார். தனது ஆட்சிக்கெதிரான ஒரு புரட்சிக்கு தானே பாடம் எடுத்து அனுப்பியது ஃபிரான்ஸ். 1923இல் இவர் அடுத்த புரட்சியின் தேசத்துக்கு சென்றார். ரஷ்யா. அங்கு மொஸ்கோவில் கோமிண்டெர்னில் (cominterncommunist international – கொம்மியுனிசத்துக்கான சர்வதேச அமைப்பு.) இணைந்தார். அங்கிருந்த Communist University யில் பொதுவுடைமை படித்தார். 1924 இல் நடைபெற்ற கோமிண்டெர்ன் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு இவர் சீனாவுக்கு பயணமானார். (அப்போது ஷாங்காயில் வைத்து பான் போய் சௌ என்ற புரட்சிக்காரரை பிரெஞ்ச் போலீசுக்கு இவர் பணத்துக்காக காட்டிக்கொடுத்ததாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. பின்னர் ஹோ சி மின் ஒத்துக்கொண்ட இந்த விடயத்துக்கு ஒவ்வொருவராலும் ஒவ்வொரு விளக்கம் கொடுக்கப்படுகிறது.)

சீனாவுக்குச் சென்ற இவர் இந்தோசீனாவின் புரட்சியைப்பற்றி கருத்துக்களை பரப்ப இளைஞர்களுக்கு வகுப்பெடுத்தார். முதல் வேலையாக தனக்கு மொழி கற்றுத்தரவும், வீட்டை பராமரிக்கவும் (அவரே சொன்னது.) தன்னைவிட 15வயது குறைந்த ஒரு பெண்ணை மணந்தார். அது அவரை பின்பற்றிவந்த தோழர்களுக்கு பிடிக்கவில்லை. அத்தோடு கொம்மியுனிசத்துக்கு எதிரான சிலரின் சதிகளாலும், மீண்டும் இவர் ரஷ்யா சென்றார். (இக்காலப்பகுதியில்தான் இவருக்கு தொண்டைக்கரப்பன் நோய் தொந்தரவு கொடுக்கத் தொடங்கியது.) பிறகு மறுபடி ஃபிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி என்று சுற்றி, பின்னர் தாய்லாந்து, இந்தியா எல்லாம் போய், எல்லா இடங்களிலும் ஃபிரெஞ்சு கொலனி ஆதிக்கத்தையும், தனது விடுதலைப்போரையும் பற்றி பேசி, தனக்கு ஆதரவு சேர்த்துவந்தார். இவ்வாறாக ஷாங்காய் திரும்பிய இவரை, ஹொங்கொங்கில் வைத்து 1931இல் ஃபிரெஞ்சு பொலிசார் கைது செய்தனர். சூட்டோடு சூடாக, இவர் இறந்துவிட்டார் என்றும் அறிவித்தனர். (அப்போதிலிருந்து பலதடவைகள் போலீசார் இவரை இறந்துவிட்டார் என்று அறிவிப்பதும், இவர் வேறு ஒரு இடத்திலிருந்து உயிர்த்தெழுந்து வருவதுவும், அடிக்கடி நடந்தது.) தப்பித்த இவர், இத்தாலியில் சிலகாலம் மறுபடி சமையல் வேலைகளை செய்தார். பின்னர் சீனாவில் கொம்மியுனிச ஆயுதப்படைக்கு ஆலோசகராக கடமையாற்றினார். அக்காலப்பகுதியில்தான் இவர் தன்னை வெளிச்சத்தை வழங்குபவன் என்ற பொருள்படும் வியட்நாமியப் பெயரான “ஹோ சி மின்”(Ho Chi Mihn) என அழைக்கத் தொடங்கினார்.  மக்களுக்கும், நண்பர்களுக்கும் ஹோ. பிற்காலத்தில் அங்கிள் ஹோ என்பது இவரது தேசியப்பெயர் ஆனது. (தந்தை செல்வா என்போமே, அதுபோலத்தான்.)

நாடோடி வாழ்க்கையை முடித்து, முற்றுமுழுதாக களத்தில் இறங்கி வேலை செய்வோம் என எண்ணி, 10,000 கெரில்லாப் படையுடன் வட வியட்நாம் காடுகளில் இயங்கிவந்த வியட் மின் விடுதலை இயக்கத்துடன் இணைய இவர் வியட்நாம் வந்தபோதுதான் காத்திருந்தது இவருக்கு அதிர்ச்சியும், ஏமாற்றமும்.

அது என்னவென்பதை...                                         ........பார்ப்போம்.


அதற்குமுன்...
ஹோ சி மின் பற்றி கொஞ்சம் :
பிறப்புப் பெயர் : நிகுயென் சிங்க் கங்.
பிறந்த திகதி : 19 மே 1890
பிறந்த இடம் : கிம் லியன், வியட்நாம்.
இறந்த திகதி : செப்டெம்பர் 2, 1969
இறந்த இடம் : ஹனோய், வியட்நாம்.
இறப்பின் காரணம் : இயற்கை. (புகைப்பழக்கம், தொண்டைக்காரப்பன், மலேரியா வால் பாதிக்கப்பட்டவர்.)
(பதனம் செய்யப்பட்ட இவரது உடல், ஹோ சி மின் கல்லறை, ஹனோய், வியட்நாமில் இன்றும் உள்ளது.)

(வியட்நாம் விடுதலைப்போர் # 3)

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}