வியட்நாம் விடுதலைப்போர் # 3
நீண்டகாலமாக புரட்சிகளை செய்துவந்த, 10,000 கெரில்லா வீரர்களைக்கொண்ட வியட் மின் விடுதலை இயக்கத்தை வழிநடத்தும் பொறுப்பு ஹோவுக்கு வந்தது. 1941 இல் நாடு திரும்பிய அவர், அங்கு பிரெஞ்சிடம் இருந்து தப்பி, ஜப்பானியப்படைகளின் கைக்குள் நாடு சிக்குண்டதைக்கண்டார். அதில் மக்களும் திருப்திப் பட்டுக் கொண்டதைக் கண்டார். ஆதிக்கம் செய்தோர் மாறிவிட்டார்கள் என்பதில் அடிமைகளுக்கு நன்மையில்லை என்று கூறி, இரண்டு ஊடுருவல்காரர்களையும் விரட்டி, நாட்டை சுதந்திரமாக்க மக்களை அழைத்தார்.

ஒரு சரியான சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்த ஹோவுக்கு, உலகப்போரில் ஜப்பான் அடிபணிய நேரிட்டது ஒரு வாய்ப்பாகிப்போனது. ஜப்பானும் இல்லாமல், பிரான்சும் இல்லாமல் ஒரு அதிகார வெற்றிடம் ஏற்பட்டது வியட்நாமில். சீனாவின் உள்ளூர் சிறைக்குள் அகப்பட்டது, மலேரியாவால் பாதிக்கப்பட்டது, (ஊருக்குள் ஒரு பெண்ணை கர்ப்பமாக்கியது உட்பட) எல்லாவற்றிலிருந்தும் வெளியேறி, உடனடியாக தனது கெரில்லாப் படையுடனும், அமோகமான மக்கள் ஆதரவோடும், 1945 ஓகஸ்ட்டில் ஒரு பெரும் புரட்சி மூலம் தனது நாட்டை வியட் மின் கைப்பற்ற காரணமானார். அதுதான் ஓகஸ்ட் புரட்சி. (August Revolution)

செப்டெம்பர் 2ஆம் திகதி, நாட்டை சுதந்திர ஜனநாயகக் குடியரசாக அறிவித்தார் ஹோ.
ஆனால், பிரான்சின் நட்பு நாடுகள், வியட்நாம் பிரான்சுக்குத்தான் சொந்தம் என்று அறிவித்தன. பிரிட்டனின் ஆதரவோடு ஃபிரான்ஸ் வியட்நாமை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துகொண்டிருந்தது. உடனடியாக நாட்டுக்குள் ஒரு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் ஹோ தலைமையில் போட்டியிட வியட் மின் வெற்றி பெற்றது.ஹோ நாட்டின் ஜனாதிபதியானார். நாட்டின் வடக்குப்பகுதிகள் வியட் மின்னிடமும், தெற்குப்பகுதிகள் பிரான்சிடமும் இருந்தன. போதாததற்கு வடக்குப்பக்கம் சீனா தேசியவாதப் படையின் ஊடுருவல் வேறு. அப்போது ஹோ பிரான்சுடன் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்தார். அதன்படி, பிரான்ஸ் சீனப் படைகளை அப்புறப்படுத்தவெனவும், பதிலாக ஃபிரான்ஸ், வியட்நாமை தனது ஆட்சிக்குட்பட்ட சுதந்திரக் குடியரசாக அங்கீகரிப்பதுவெனவும் முடிவானது. ஒரு வழியாக, பிரான்சுக்கு ஆதரவு கொடுத்த பிரிட்டன் படைகள், சீனப் படைகள் எல்லாம் போய், ஃபிரான்ஸ் தனியாக வியட்நாமில் இருந்தபோதுதான் வியட் மின் தொடங்கியது பிரான்சுடனான தனது கெரில்லாப் போரை.

தொடங்கியது முதலாவது ந்தோசீனப் போர். (First Indochina War.) லாவோஸ். கம்போடியா உட்பட (அங்கிருந்த புரட்சிப்படைகளின் ஆதரவோடு) இந்தோசீனத் தீபகற்பம் முழுவதும் பிரெஞ்ச் படைகள் கெரில்லாத் தாக்குதலை எதிர்கொண்டன. ஆனாலும், சுடச்சுட உலகப்போரில் வென்றிருந்த பிரெஞ்ச் படைகள் அவற்றையெல்லாம் ஒடுக்கி வந்தன. அப்போதுதான் சாதகமானது சீனா. 1949இல் சீனாவில் கொம்மியுனிஸ்டுகளின் வெற்றியானது, கெரில்லாக்களுக்கு உதவியானது. மலர்ந்த மக்கள் சீனக் குடியரசால், வியட் மின் அரசு, சுதந்திர அரசாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்படியாக கொம்மியுனிச அரசுகள் வட வியட்நாமிலிருந்த ஹோ தலைமையிலான அரசை ஆதரிக்க, அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ் அரசுகள் சைகோனை தலைநகராகக் கொண்ட தென் வியட்நாமில், தமது கைப்பவை அரசை நிறுவின. முன்னாள் மன்னரான பாவோ டாய், அவர்களுக்குக் கட்டுப்பட்டு நாட்டை ஆண்டார்.

சீனக் குடியரசு, கெரில்லாப் படைவீரர்களை பயிற்றுவித்து, ஆயுதங்கள் வழங்கி, ஒரு மரபுவழிப் படையாக்கியது. வரலாற்றில் எப்போதுமே நேர்வழியில் சிந்தித்திராத அமெரிக்கா, வழக்கம்போலவே கோணலாக நடந்துகொண்டது. நியாயப்படி, ஒரு கோலனி ஆதிக்கத்திலிருந்து புரட்சி மூலம் மலர்ந்த அரசானது, கோலனி ஆதிக்கத்தை எதிர்க்கும் படைக்கு உதவியிருக்கவேண்டும், அல்லது சும்மா இருக்கவேண்டும். இதுவோ பிரெஞ்ச் படைக்கு முழு உதவியையும் செய்தது. ஏறத்தாழ படைவீரர்களைத்தவிர எல்லாமே அமெரிக்காதான் கொடுத்தது. காரணம், ஒரு கொம்மியுனிச அரசு மலர்வதை அமெரிக்கா விரும்பவில்லை. ஆனால், அமெரிக்காவின் கஷ்டகாலம், ரஷ்யா வியட் மின்னுக்கு உதவ வந்தது. ரஷ்யாவினதும் சீனாவினதும் உதவியோடு, வியட் மின் ராணுவம் பிரெஞ்ச் படைகளை சின்னாபின்னமாக்கியது. தியன் பியேன் பூவில் நடந்த ஒரு சண்டையில், வியட் மின் படைகள் ஃபிரான்ஸ் படைக்கு ஒரு அதிர்ச்சித் தோல்வியை கொடுத்தன. ஏறத்தாழ 10,000 பிரெஞ்ச் வீரர்கள் கொல்லப்பட்டனர். வேறு வழியின்றி ஃபிரான்ஸ் போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு வந்தது. பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. எங்கே நடந்தன? வேறு எங்கே? பேச்சுவார்த்தை என்றாலே ஜெனீவா என்று புரியவேண்டாமோ?


வட்டமாக இருந்து என்ன பேசினார்கள்,  போர் முடிவுக்கு வந்ததா... என்பதையெல்லாம்...... 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}