வியட்நாம் விடுதலைப்போர் # 5

<<<<<வியட்னாம் விடுதலைப்போர் # 4>>>>>>>

ஏற்கெனவே உலகப்போரில் வதைபட்டு நொந்துபோயிருந்த அமெரிக்க வீரர்களுக்கும் சரி, அமெரிக்க மக்களுக்கும் சரி, ஒரு தேவையும் இல்லாமல் இவ்வாறு வியட்நாம் மக்களுடன் சண்டை போடுவதில் துளிகூட ஆர்வமில்லை. இருபத்தொராம் நூற்றாண்டு தெற்காசிய மக்களை போலல்லாது அந்த மக்கள் கொஞ்சம் ஈரமுள்ளவர்களாக இருந்து தொலைத்துவிட, வியட்நாமில் அமெரிக்கப் படைகள் கண்மண் தெரியாமல் குண்டுபோடு மக்களை அழிப்பது அவர்களை மிகவும் வேதனைப்படுத்தியது. 1962 இலிருந்தே இந்த போருக்கு எதிர்ப்புக்குரல்கள் அமெரிக்காவில் ஒலிக்க ஆரம்பித்துவிட்டாலும், தொடர்ந்து களத்திலிருந்த அமெரிக்க, மற்றும் வியட்நாம் பத்திரிகைக்காரர்கள் உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய பல செய்திகள், சில புகைபடங்கள், அமெரிக்க மக்களை தெருவில் இறங்கி போருக்குஎதிராக போரிட வைத்தது. இப்படியாக, அமெரிக்க மக்களின் போராட்டமானது புரட்சிக்காரர்களுக்கு ஒரு ஆதரவாக வந்துசேர்ந்தது.

வியட்நாம் கொடுமையை பகிரங்கப்படுத்தியவற்றில் முக்கியமாக இரண்டு படங்கள் உலகையே உலுக்கின.

கொலனி ஆதிக்கத்திலிருந்த் வியட்நாம் மக்கள், கிறிஸ்தவ மதத்தை பின்பற்ற கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அதனால், காலம் காலமாக அவ்ர்கல் பின்பற்றிய பௌத்த மதத்தை பின்பற்றுவது அங்கே தடை செய்யப்பட்டிருந்தது. ஆட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருந்த வியட்நாம் கைப்பாவை அரசின் உதவியோடு, அங்கே பௌத்த மாதத்துக்கெதிரான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. வெசாக் பண்டிகைக்காலத்தில் பௌத்தக்கொடியை பறக்கவிடுவது முற்றாகத் தடைசெய்யப்பட்டது போன்ற பல ஒடுக்குமுறைகள் பிக்குகளையும் போராட்டத்தில் குதிக்கவைத்தன. அமைதியை மட்டுமே அறிந்திருந்த (மறுபடியும் சொல்கிறேன், இது இருபத்தொராம் நூற்றாண்டின் கதையும் அல்ல, நடந்த இடம் தெற்காசியாவும் அல்ல.)  அமைதியான முறையில் போராட்டத்தில் குதித்தார்கள். தெருக்களில் அமைதியாக அமர்ந்து, தமக்குத்தாமே தீவைத்துக்கொண்டார்கள். எவ்வித கூச்சலும் போடாமல், அசையாமல் அமைதியாக அவர்கள் எரிந்துபோனது உலகத்துக்கு வலித்தது. (தீயில் வெந்துபோவதுதான் உள்ளதிலேயே வலி கூடிய தாக்கம், பிரசவ வலிகூட இரண்டாவதுதான். அப்படியானால் மூன்றாவது? அது வேண்டாம்.) 

மனங்களை உலுக்கிய அமைதி...

அப்பாவி மக்கள் வசிக்கும் கிராமங்களின்மீது குண்டுவீசும் அமெரிக்காவின் வழக்கப்படி, 1972 ஜூன் 8ஆம் திகதி டிராங்க் பாங்க் என்ற கிராமத்தின்மீது நேபாம் (Napalm) குண்டு வீசப்பட்டது. அந்தக் குண்டுவெடிப்பின் இடிபாடுகளிலிருந்து தீக்காயங்களுடன் ஓடிவந்த சிறுமியின் கதறல் பின்வரும் புகைப்படம் மூலம் உலகத்தின் காதுகளை கிழித்தது. இதயங்களையும். 

மனங்களை உலுக்கிய கதறல்...

(நூற்றாண்டின் சிறந்த 10 புகைப்படங்களில் ஒன்றாக இடம்பிடித்த இப்படம், இதை படம்பிடித்த நிக் அட் (Nick Ut) என்ற வியட்நாம் பத்திரிகைக்காரருக்கு புலிட்சர் விருதை வாங்கிக் கொடுத்தது. ) இப்புகைப்படத்திலிருந்த சிறுமி பான் தி கிம் பக் (Phan Thi Kim Phuc) காப்பாற்றப்பட்டு போரின் கொடுமைகளுக்கு எதிரான செயற்பாட்டாளராக, பேச்சாளராக பின்னர் பிரபலமானார். இது அமெரிக்க மக்களிடையே பெரிய கொந்தளிப்பை உருவாக்க, அதிபர் நிக்சன் இது ஒரு போலி புகைப்படம் என மக்களுக்குக் கூறினார், அமெரிக்க இராணுவத்தினர், அந்தக் குண்டு புரட்சிக்காரர் போட்டது என்றனர். ஆனால், போரை நிறுத்தச்சொல்லி மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யுமளவுக்கு இந்தப் புகைப்படம் பெரும் பாதிப்பை அமெரிக்காவில் ஏற்படுத்தியது. 

இந்த இரண்டு புகைபடங்கள் உள்ளிட்ட பல செய்திகள் அமெரிக்க மக்களை உருக்கின. பொருக்கெதிராக போராடவைத்தன.

இவ்வாறாக தொடர்ந்த போராட்டங்களுக்கிடையில் வந்த ஜனாதிபதித் தேர்தலில், வியட்நாமிலிருந்து அமெரிக்க வீரர்களை திரும்பப் பெறுவேன் என்று வாக்களித்து, நிக்சன் இரண்டாம் முறையாக ஜனாதிபதியானார்.
(1972) இவ்வாறாக
, துருப்புக்களை மீளப்பெறுவது அவருக்குக் கட்டாயமானது. அத்தோடு, 1973ஆம் ஆண்டு மசகெண்ணை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டதால் வியட்நாம் அரசாலும் போரை வீறாக நடத்த முடியவில்லை. (வியட்நாமின் முக்கிய வருமானங்களில் பெற்றோலியமும் ஒன்று. அமெரிக்கா மூக்கை நுழைக்கிறது என்றவுடனேயே இந்த உண்மை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.)

அமெரிக்கர்களால் கடைசியாக நடத்தப்பட்ட தாக்குதல் Operation Lam Son. 1975 மார்ச்சில் நடந்த இத்தாக்குதலில் புரட்சிக்காரர்களின் பதில் தாக்குதல் கட்டுப்படுத்த முடியாதளவு போனது. தாக்குதலை முறியடித்த வேகத்திலேயே அவர்கள் டக் லக் மாகாணத்தை கைக்குள் கொண்டுவந்தார்கள். அத்துடன் மத்திய, வட வியட்நாம் முழுவதுமே புரட்சிக்காரர்களுடையதாகியது. தெற்குப் பகுதியில் ஒரு சிறு பகுதி மட்டுமே எஞ்சியிருந்தது. அதையும் கைப்பற்றுவதற்கு ஹோ சி மின் முகாம் என்று ஒரு திட்டம் தீட்டப்பட்டது. மே முதல் திகதிக்குள் தென் வியட்நாம் தலைநகர் சைகோனை (Saigon) விழுத்துவது அத்திட்டத்தின் இலக்கு.

ஏற்கெனவே பெற்ற பல வெற்றிகளால் வேகத்துடனிருந்த புரட்சிக்காரர்கள் மும்முரமாக முன்னேறினார்கள். ஏப்ரல் 7 ஆம் திகதி தொடங்கிய தாக்குதலில் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் சைகோனை நெருங்கிக்கொண்டிருந்தனர். (அப்போது தென் வியட்நாம் அதிபராகவிருந்த தியூ உடனடியாக பதவியை டிரான் வங் ஹுஓங்க் இடம் ஒப்படைத்துவிட்டு தைவானுக்கு தப்பியோடினார்.) ஏப்ரல் முடிவிலேயே தென் வியட்நாம் படைகள் தமது சகல தளங்களையும் இழந்தன. 100,000 புரட்சிக்காரர்கள் சைகோனை நோக்கி திரண்டனர். அமெரிக்கப் படைகள் தப்பியோடாதிருக்க, விமானதளங்கள் சகலதும் முன்னதாகவே ஆக்கிரமிக்கப்பட்டன. 

நிலைமை கையை விட்டு வெகுதூரம் போய்விட்டதை உணர்ந்த அமெரிக்கப் படைகளும், அதிகாரிகளும் தப்பியோட முடிவெடுத்தபோது வெளியேற வழியில்லாது போயிருந்தது. உடனடியாக ஒரு திட்டம் போடப்பட்டது. தப்பி ஓடுவதற்கு திட்டமிடப்பட்ட வரலாற்றின் ஒரே Operation - Operation Frequent Wind. செயலாடுத்தப்பட்டது. 29 ஏப்ரல் 1975 - வியட்நாமிலிருந்த கடைசி அமெரிக்கர்வரை தப்பியோட ஆரம்பித்த நாள். தம்மை நம்பியிருந்த தென் வியட்நாம் படையினரை, தம்கீழ் வேலைசெய்த வியட்நாமியரை என்று சகலரையும் தவிக்கவிட்டு தூதரகங்களின் மேல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹெலிகளில் ஏறி, அவர்கள் தப்பியோடினர்.

ஏறத்தாழ எதிர்ப்புக்களே இல்லாமல் சைகோனை பிடித்தனர் புரட்சிக்காரர்கள். Independence Palace எனப்படுகிற ஜனாதிபதி மாளிகைக்குள் ஒரு டாங்க்கில் வேலிகளை உடைத்து புகுந்து, தமது கொடியை அவர்கள் பறக்கவிட்டாபோது, 116 வருட விடுதலைப்போராட்டத்துக்கு ஒரு முடிவு வந்தது. சொல்லியபடி சிறியாக மே முதல் திகதியின் விடியல் புரட்சிக்காரர்களுக்காக விடிந்தது. எவருக்கும் அடிமையாகவல்லாது சுதந்திர அரசானது வியட்நாம். கொம்மியுனிச ஆட்சி மலர்ந்தது. ஆனால் இதற்கெல்லாம் காரணமான ஹோ, இதையெல்லாம் காணாமலேயே, 6வருடங்களுக்கு முன்பே மலேரியாவால் தாக்கப்பட்டு இறந்துவிட்டார். ஆனால், தாம் கைப்பற்றிய தலைநகருக்கு, அந்தத் தலைவனின் பெயரை வைத்து அவரைக் கொண்டாடினர் மக்கள். (இதைத் தொடர்ந்து கம்போடியாவிலும் கொம்மியுனிச ஆட்சி மலர்ந்தது.)

வேலிகளை உடைத்துக்கொண்டு....


இப்படியாக, உலகத்தின் போலீஸ்காரனான அமெரிக்காவின் இராணுவத்தை தப்பியோடும்படி விரட்டி, இன்றுவரை எவருக்கும் அடிமைப்படாத, அடங்கிப்போகாத ஒரு அரசில், தலைநிமிர்ந்து வாழ்ந்துவருகிறார்கள் வியட்நாம் மக்கள்.


                                                          #  #  #

# வியட்நாமில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் அதனால் ஒரு புரட்சிப்படைத் தலைவரைக்கூட கொல்லவோ, பிடிக்கவோ, முடியவில்லை. தான் ஹோவை கொன்றதாக 5முறை அறிவித்தது, ஆனால் அவரை கொன்றதென்னமோ நுளம்புகள்தான்.

#  வியட்நாம் போராட்டத்துக்கு மக்கள் கொடுத்துவந்த ஆதரவால் கொதித்த அமெரிக்கா, மக்களை அழிக்க இரசாயன ஆயுதங்களை பாவித்தது. dioxin என்னும் இரசாயனப் பதார்த்தம் சேர்த்த குண்டுகளை அது கிராமங்களின்மேல் வீசியது, அதன் இரசாயனப் பாதிப்பு 30 வருடங்கல்வரைகூட நீடிக்கக்கூடியது. இதுவரை அதனால் 500,000 விவசாயிகள் இறந்துள்ளார்கள், 700,000 பேர்வரை பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மொத்தமாக 4000,000 பேருக்கு இதன் தாக்கம் உள்ளதாக வியட்நாம் அரசு சொல்கிறது.  இதுபற்றிய தகவல்களை அமெரிக்க அரசு தனது கைப்பாவை அரசுக்குக்கூட சொல்லாமல் இந்த வேலைகளை செய்தது. பின்னர் உலகுக்கு இந்த விஷயம் தெரியவந்தது அந்த இரசாயனக் குண்டுகளைக் கையாண்ட அமெரிக்க வீரர்களும் அதனால் பாதிக்கப்பட்டபோதுதான்.


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}