அரசியை நம்பி விகடனை கைவிட்ட - விகடன் கைவிட்ட மதன்.


 ஆனந்த விகடனில் இணை ஆசிரியராகப் பணிபுரிந்த, அதன் வளர்ச்சியின்போது பக்கத்திலிருந்த மதனுக்கும், விகடன் நிர்வாகத்துக்கும் பெரிய சண்டை ஒன்று வந்திருக்கிறது இப்போது. மதனின் ஹாய் மதன் பகுதியில் ஒரு கேள்விக்கு ஜெயலலிதாவை கடிப்பதுபோன்ற ஒரு படத்தை விகடன் பிரசுரிக்க, அதற்கு ஜெயலலிதவே சும்மா இருக்க, அமளிப்பட்டு, இப்போது நொந்துபோயிருக்கிறார் மதன். இதுவரை மக்களால் அறிவுஜீவியாக நம்பப்பட்டு வந்த இவர், தான் ஒரு போலி அறிவுஜீவி (Pseudo-Intellectual) என்பதை தன் வாயாலேயே உலகுக்கு அறிவித்துள்ளார்.

விகடனின் வளர்ச்சியில் மதனுக்கும் பங்களிப்பு உண்டு என்பதையோ, அதனை 30 விருடங்களாக இளமையாக வைத்திருந்தது இவர்தான் என்பதையோ, ஹாய் மதன் பகுதி விகடன் விற்பனையில் ஒரு முக்கிய காரணி என்பதையோ, மறுப்பதற்கல்ல. இக்கட்டுரையை எழுதியவர் உட்பட பலரை அவர் கவர்ந்திருக்கிறார் என்பதுவும், மிகப்பெரிய வரலாற்றறிஞர் அவர் என்பதுவும் உண்மைகளே. ஆனால், விகடன் என்பது ஒரு பத்திரிகை அல்ல, முடியாட்சி முறையிலான ஒரு அரசாங்கம் என்பது அவையனைத்தையும்விடப் பெரிய உண்மை.

அப்படி என்னதான் பிரச்சனை?
ஒரு வாசகர் காலில் விழுவது பற்றிக் கேட்ட கேள்விக்கு எழுந்தமானமான பதிலொன்றை அளித்துள்ளார் இவர். ஆனால் கேட்ட வாசகர் எதை நினைத்துக் கேட்டார் என்பதுவும், அந்தக் கேள்வியை பார்த்ததுமே ஒருவருக்கு மனதில் என்ன தோன்றும் என்பதுவும் அனைவரும் அறிந்ததே. ஒரு மனிதரின் காலில் இன்னொருவர் விழுவது என்பது ஈனத்தனமான ஒரு செயல். பெற்றோர் காலில் விழுவதே அடிமுட்டாள்தனம். சுயமரியாதை உள்ளவர்கள் செய்யும் செயலல்ல அது என்பது பொதுவான, மற்றும் பெரியாரின் நிலைப்பாடு. இவ்வாறிருக்க, அதை குலத்தொழிலாகவே செய்யும் அ.தி.மு.க. வினரை நக்கல் பண்ணி விகடன் வெளியிட்ட ஒரு படம் மதனுக்கு எங்கோ குத்தியுள்ளது.
பின்வரும் அந்த சர்ச்சைக்குரிய கேள்வி பதிலை பாருங்கள் :

கேள்வி: உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கி வைத்தது யார்?

பதில்: ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல் தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக் கொண்டான். பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்புஎனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதேஎன்பதை விளக்க, குப்புறப் படுத்தான். பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் (பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன.நான் உனக்கு அடங்கிப்போகிறேன்!என்கிற ஓர் அர்த்தம்தான் அதற்கு உண்டு!

இந்த கேள்விக்கு, ஜெயலலிதாவின்காலில் அமைச்சர் ஒருவர் விழுவதைப்போன்ற பின்வரும் படத்தை பிரசுரித்திருந்தது விகடன். 

இதுதான் அந்தப்படம். அம்மையாரின் காலில் அமைச்சர்.


அதைக்கண்டு கொதித்தெழுந்த மதன், பின்வரும் கடிதத்தை விகடனுக்கு எழுதினார் :

...பல ஆண்டுகளாக விகடனில் நான் எழுதி வரும் ஹாய் மதன்பகுதியில் வரும் என் பதில்கள் பொது அறிவு பற்றியது என்பது தங்களுக்குத் தெரியும். ஆயிரக்கணக்கான விகடன் வாசகர்கள் வரலாறு, விஞ்ஞானம், மருத்துவம், மனித இயல், விலங்கியல் சம்பந்தப்பட்ட கேள்விகளைத்தான் எனக்கு எழுதி அனுப்புகிறார்கள். அரசியலையும் சினிமாவையும் நான் அநேகமாகத் தொடுவதில்லை. 2.5.2012 இதழில் காலில் விழுந்து வணங்குவதுபற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன்.
ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது.
ஆதிகாலத்திய சம்பிரதாயம் பற்றிய பொது அறிவுப் பதில் தான் அதுவேயன்றி, குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய பதிலே அல்ல அது! ஜெயா டி.வியில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக் கொள்ள மாட்டார்களா? என்னிடம் ஜெயா டி.வியின் தலைமை அது பற்றி விளக்கம் கேட்டால், ‘அந்த புகைப்படம் வெளிவந்ததற்கு நான் காரணமல்லஎன்று இதன் பின்னணியை விவரமாக விளக்க வேண்டி வராதா? அந்த தர்ம சங்கடம் எனக்குத் தேவைதானா? முப்பதாண்டு காலம் விகடன் நிறுவனத்துக்காக உழைத்த எனக்கு இப்படியொரு பிரச்னையை ஏற்படுத்துவது நேர்மையான, நியாயமான செயல்தானா என்பதை தாங்கள் சிந்திக்க வேண்டும்.
முக்கியமான பிரச்சனைகள் எத்தனையோ சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டு, அவரைச் சந்தித்து, நான் செய்யாத தவறுக்கு விளக்கம் தந்துகொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்துவது முறையா என்று சிந்திக்க வேண்டுகிறேன். வரும் இதழிலேயேபுகைப் படங்கள், லே- அவுட்டுக்கு மதன் பொறுப்பல்லஎன்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்

விகடன் அதற்கு என்ன பதில் சொன்னது?

மதன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் அவர் சமீபகாலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.
ஹாய் மதன்பகுதியில் வாசகர்கள் கேட்ட கேள்வியிலோ, மதன் அளித்த பதிலிலோ நேரடி வார்த்தைகளில் இடம் பெறாத- அதே சமயம், அந்தக் கேள்வி- பதிலுக்கு மேலும் வலிமையும் சுவாரஸ்யமும் சேர்க்கக்கூடிய படங்களை இதற்கு முன் ஏராளமான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் குழு சேர்த்துள்ளது. அப்போதெல்லாம், எந்தக் காரணங்களைக் காட்டியும் ஒரு ப தும் எந்த ஆட்சேபமும் அவர் தெரிவித்ததே இல்லை.
அதேபோல், ‘இது பொது அறிவுப் பகுதி மட்டுமேஎன்று இப்போது மதன் குறிப்பிடும் ஹாய் மதன்பகுதியில் அரசியல் மற்றும் சினிமா பற்றிய நேரடியான, காரசாரமான பதில்களை அவர் தொடர்ந்து இதழ் தவறாமல் அளித்திருப்பதை வாசகர்களும் நன்கு அறிவார்கள். இப்போது திடீரெனத் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்வதற்கான காரணம், அவருடைய கடிதத்திலேயே உள்ளது. நடுநிலை இல்லைஇதையெல்லாம் பார்க்கும்போதுதற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், ‘ஹாய் மதன்பகுதியை மட்டும் அல்லகார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது.
குறிப்பிட்ட ஒரு தரப்பைப்பற்றிய நியாயமான விமர்சனங்களையோ, புகைப்படங்களையோ தவிர்த்துவிட்டுசெய்திகளையும் கருத்துக் களையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்றே விகடன் கருதுகிறது. எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி- பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” 

மதன் தனது கடிதத்தில் சொன்ன பம்மாத்துக்களுக்கு அவரது பகுதியிலேயே ஆதாரங்களை எடுத்து நெத்தியடி கொடுத்த விகடன் வெளியிட்ட படம்.

இதனை பஞ்சாபி மொழியில் நெத்தியடி என்று குறிப்பிடுவார்கள்.

உள்குத்துக்கள் உண்மையில் என்ன?

# ஏற்கெனவே விகடனில் இணை ஆசிரியராக இருந்த இவர், இதைவிட லொள்ளான எத்தனையோ வேலைகளை செய்திருக்கிறார். ஹாய் மதன் பகுதியில்கூட, ஜெயலலிதாவையும் சரி, கருணாநிதியையும் சரி, பிரித்து மேய்ந்திருக்கிறார். தனது கார்ட்டூன்களில் தமிழக, இந்தியா, உலக அரசியல் தலைவர்களையெல்லாம் சந்திசிரிக்க வைத்திருக்கிறார். ஒருமுறை அரசியல்வாதிகளுக்கு பயமா என்று தொனித்த ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும்போது, அவர்களை நையாண்டி செய்து கார்ட்டூன் போடுவதுதான் தனக்கு தொழில் என்பதுபோலக் கூறியுள்ளார். இப்போது மட்டும் என் இப்படி?

# இப்போது ஜெயா TV இல் நிகழ்ச்சி செய்துவரும் இவர், அந்த வாய்ப்பு போய்விடும் என்று பயப்பிடுகிறாரா? அப்படி சொல்லமுடியாது. அது போனால் இது என்று இவரை வரவேற்க சனல்கள் தயாராக உள்ளன. ஏற்கெனவே Sunnews, Vijay TV எல்லாம் கண்டவர்தானே? (அடுத்த ரபி பெர்னார்ட் ஆகத்தான் இத்தனை சேட்டைகளும் என்பதுதான் எனது கருத்து.)

# அந்தப் படம் இவரது பகுதியில் போடப்பட்டதற்கும், இவருக்கும் சம்பந்தமில்லை என்பதுகூடவா ஜெயா TV க்கு தெரியாது? அதெல்லாம் lay out செய்பவர்களின் வேலை, அத்தோடு உலகத்திலுள்ள அனைவருக்கும் தெரியும் கேள்வி ஜெயலலிதாவைக் குறிவைத்து எழுதப்பட்டது என்று. இவ்வளவு முக்குபவர், இப்படித்தான் ஒரு படம் போடுவார்கள் என்பதை உணர்ந்து, முதலே அந்தக் கேள்வியை தவிர்த்திருக்கலாம்.
# ஆனானப்பட்ட சுஜாதாவே, எழுத்தாளர்களின் ஆக்கங்களை எப்பாடு படுத்தவும் பத்திரிகை ஆசிரியருக்கு உரிமை உண்டு என்று ஒத்துக்கொள்ள, இணை ஆசிரியராக 20 வருடங்கள் இருந்த இவருக்கு அது தெரியாதா?

# இதே விகடன், கருத்துக் கணிப்பு ஒன்றை வெளியிட்டு, அது அ.தி.மு.க. வுக்கு சாதகமானதால் தி.மு.க. வினர் பிரதிகளை கொழுத்தியது, ஒரே சாதியினர் என்பதால் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயற்படுகிறார்கள் என்று அவதூறு பட்டது, ஒரு ஜோக் வெளியிட்டு அதனால் ஆசிரிய்ர் எஸ்.பாலசுப்பிரமணியன் சிறை சென்றது, பின் வாதாடி ஜெயித்தது, என்று எத்தனை சவால்களை சந்தித்தது? அப்போதெல்லாம் விகடனில் இவர் பணியாற்றிக்கொண்டிருந்தார் என்பதுதான் நகைச்சுவையே. கே. பாலசந்தர் பிரச்சனையிலேயே விகடன் பக்கம் நின்ற மக்கள் இப்போது என்ன செய்வார்கள் என்பது இவருக்கு தெரியாதா?

#  ஜெயலலிதாவை காயப்படுத்தும் என்று இனி அவரை விமர்சிக்கும் எந்த கார்ட்டூனையும் இவர் வரையமாட்டார் என்பதால் இவரை நீக்கியது விகடன் எடுத்த சரியான முடிவே.
# விகடனில் ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால், இதே ஆண்மையோடு எழுத்தாளர் ஞாநி பிரச்சனையை அது அணுகவில்லை என்பதுதான். (ஜல்லிக்கட்டு என்கிற காட்டுமிராண்டித்தனத்தை விமர்சித்து ஞாநி எழுதிய கட்டுரை கருணாநிதிக்கு பிடிக்காதுபோக, விகடன் ஞாநியின் கட்டுரைப்பகுதியான “ஓ பக்கங்களை நீக்கியது. பத்திரிகை சுதந்திரம் ஆளும் வர்க்கத்துக்கும், காட்டுமிராண்டித்தனமான பிற்போக்குத்தனத்துக்கும் சோரம் போனது, ஒரு கறுப்புப் புள்ளியானது.)

# எந்த ஜெயலலிதாவின் அப்பிப்பிராயத்துக்காக மதன் இவ்வளவு கவலைப்படுகிறாரோ, அவர் நாளையேகூட, எந்தக் காரணமும் இல்லாமலேயேகூட மதனை தூக்குவார் என்பது இவருக்குத் தெரியாதா? சசிகலாவுக்கு என்ன நடந்தது?

# ஏற்கெனவே தொடக்கத்தில் வாசகர்களின் ஆதரவை பெறுவதற்காக தனது பதில்களை பார்த்து ஒரு பெண் தன்னை காதலிப்பதாக சொன்னார், தானே கேள்வி கேட்டு, தானே பதில் எழுதுகிறார், கமலை நம்பி தன்னை வளர்த்த விகடனை விட்டு வெளியே வந்தார் என்று இவர்மேல் பல புகார்கள். அவையெல்லாம் நிரூபிக்கப்படாதவை. ஆனால் இப்போது இவர் வாக்குமூலமல்லவா கொடுத்துள்ளார்?

# என்னதான் மதன் பக்கம் தவறு இருந்தாலும், மதனுக்கென்று ஒரு வாசகர், ஏன், ரசிகர் கூட்டமே உண்டு. ஹாய் மதனுக்காகவே விகடனை வாங்கும் லட்சக்கணக்கான வாசகர்களை அது இனி எவ்வாறு திருப்திப்படுத்தப் போகிறது என்பது அடுத்த பிரச்சனை. காலம்தான் பதில்சொல்லவேண்டும். குறுகிய காலத்துக்குள் இன்னொரு மதனை உருவாக்க முடியுமா விகடனால்? மதன்போல நகைச்சுவையாக, சாமர்த்தியமாக, ஆதாரத்தோடு, அறிவுபூர்வமாக பதில் எழுத இன்னொருவரால் முடியுமா, சுஜாதா, ஏ.எஸ்.பி. (குமுதம்) எல்லோரையும்விட அழகாகப் பதில் கொடுக்கக்கூடிய மதனை நிகர்க்கமுடியுமா யாராலும்? அத்தனை இளமையாக ஐடியாக்கள் உதிக்குமா யாருக்காவது? (விகடன் குறும்பு டீம் என்று ஒன்றை உருவாக்கி அவர் பண்ணியவை அத்தனை புதுமையானவை.). அவர்போல கார்ட்டூன் விரைய முடியுமா வேறு யாராவது?

எது எவ்வாறாயினும், பல்லாயிரம் வாசகர்களின் அபிமானத்தை மதன் இழந்துவிட்டார் என்பதுதான் உண்மை. இனி என்ன நடக்கப்போகிது? மறுபடியும் மதன் பதில்கள் வேறு பத்திரிகையில் வருமா? அமைச்சர்களையே அடிக்கடி தூக்கும் ஜெயலலிதா மதனுக்கு எப்போது கல்தா கொடுக்கப்போகிறார், மதனுக்கு இணையான ஒரு கார்ட்டூனிஸ்டை விகடன் கண்டுபிடிக்குமா, விகடனின் அடுத்த பதிலாளர் யார், இதில் எஸ்.பாலசுப்பிரமணியனின், குடும்பத்தின் நிலைப்பாடு என்ன... எல்லாவற்றுக்கும் என்ன பதில்?

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமாப்பா! என்பதுதான் பதிலா?

(தனிப்பட்ட முறையில் ஹாய் மதனின், மதனின் கார்ட்டூனின் வெறித்தனமான வாசகன் நான். (மதன் பற்றி அறிய) அத்தோடு விகடனை வாசித்தே வளர்ந்தவன். முற்காலத்தில் அவர் புகுத்திய பல விறுவிறுப்பான பகுதிகளால் கவரப்பட்டவன். அந்த வகையில் இது எனக்கு வருத்தம் தரும் செய்திதான். என்போலப் பலர் இருப்பார்கள். சுஜாதாவும் இல்லை, மதனும் இல்லை.. ஏற்கெனவே மொக்கை ஒருபக்கக் கதைகள், தரம்குறைந்த ஜோக்குகள் என்று போகிறதே, விகடனுக்கு இன்னொரு வாசன் தேவைப்படுகிறாரா? மறுபடியும் முதலிலிருந்தா?)

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}