விஜயனின் முடிசூடல் அடக்கு முறையின் தொடக்கம்

யாழ்ப்பா இராஜ்ஜியம்-03

விஜயன் எவ்வாறு ஆட்சியை கைப்பற்றினான் என அடுத்த பதிவில் பார்க்கலாமென சொல்லியிருந்தேன். ஆனால் இப்பதிவிற்க்கு நீண்ட நாட்கள் டுத்துவிட்டது அதற்காக மன்னிக்கவும். 
[இதன் முன்னைய பதிப்பிற்கு]

விஜயனின் முடிசூடல் அடக்குமுறையின் தொடக்கம் 

"விஜயனின் வருகையின் பின்னர் குவேனியை விஜயன் மணந்ததன் மூலம் ஆட்சி உரிமையை பெற்று கொண்டான்" இதுதான் நம்மில் பலர் அறிந்திருக்கின்ற ஒரே வரலாறு. நம் பாடசாலை வரலாற்றுப் புத்தகங்களும் நமக்கு கற்றுதந்தவை அதுதான். ஆனால் முடிசூடலுக்கு முன்னர் நடந்த ஒரு ஆதி இனத் துரோகத்தையும் அதனால் அந்த இனம் பிளவுற்றதையும் மகாவம்சமே கூறுகின்ற பொழுதிலும் அந்த விடயங்கள் நமக்கு கற்பிக்கப்படவில்லை அல்லது தேவையில்லை என ஒதுக்கப்பட்டது. 
விஜயனின் பின்னணி 
அந்த வகையில் விஜயனை பற்றி பார்க்கமுதல் அவன் பூர்வீகத்தையும் இலங்கைக்கு வந்த பின்னணியையும் சிறிது பார்க்கலாம்.
 ".....வங்க தேசத்து இளவரசி ஒருத்தி அரண்மனையை விட்டு வெளியேறி மகதநாடு நோக்கி புறப்பட்ட வாணிபக்குழுவுடன் காட்டு வழியில் செல்லும் போது எதிர்பட்ட சிங்கம் ஒன்று வணிகர்களை கொன்றுவிட்டு இளவரசியுடன் புணர்ந்தது அதனால் அச்சிங்கதிற்கும் அவ்விளவரசிக்கும் சிங்கபாகு ,சீகசிவிலி என இரட்டையர்கள் பிறந்தனர். சிங்கபாகு இளைஞனான போது தன் தகப்பனான சிங்கத்தை கொன்று தன்னுரிமைநாட்டின் மன்னனாகிவிட்டதுடன்  தன்சகோதரியையே மணந்து கொண்டான். இவர்களுக்கு 16 தடவையில் இரட்டையர்களாக 32 பிள்ளைகள் பிறந்தனர். இதில் மூத்த பிள்ளையாய் பிறந்தவனே விஜயன் . விஜயனும் அவனது 700 தோழர்களும் செய்த அட்டூழியங்களும் கொடுமைகளும் தாங்க முடியாத மக்களின் வேண்டுகோளிற்க்கு இணங்க அவர்களைபிடித்து தலையில் அரைவாசி மயிரையும் வழித்து கப்பலேற்றி விட்டனர் ......" 

விஜயனின் பூர்வீகம் குறித்து மகாவம்சம் தெரிவிக்கும் கதை இதுதான். இங்கு கூறப்படும் கதையில் உள்ள நடைமுறை பிரச்னை தெரிந்ததுதான் இது நடந்திருக்க சாத்தியம் இல்லை. இதனால் தான் பலரும் விஜயன் என்ற ஒருவனின் கதையே திரிக்கப்பட்டது எனக் கூறும் அதே வேளை இன்னொரு சாரார் விஜயன் என்ற ஒருவன் இருந்தது  மறுப்பதற்க்கு இல்லை ஆனால் இங்கு கூறும் கதைகள்தான் பௌத்தமத ஜாதக பின்னணியின் சார்பில் தோன்றியுள்ளன என்கின்றனர் இக்கருத்தும் ஏற்புடையதே. 
"விஜயன்- குவேனி"கறுப்பு திருமணம் 
மேற்கூறப்பட்டபடி விஜயனை மறுக்கும் அதே வரலாற்றாசிரியர்கள் குவேனியையும் மறுக்கின்றனர். ஆனால் இவ் வரலாற்றாசிரியர்கள் கூட இக்கால கட்டத்தில் பழங்குடியினரிடையே ஆட்சி முறை இருந்தது என ஏற்று கொண்டிருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் பெரும்பாலானவர்கள் விஜயனின் வருகை உண்மை என கருதுகின்றனர்.எது எப்படியோ இந்த குழப்பங்கள் ஒரு புறமிருக்கட்டும். நாம் கூற வந்த விடயத்தை பார்த்து விடுவோம். இயக்க குலத்தலைவி குவேனிக்கும் வந்தேறியான விஜயனுக்கும் திருமணம் என முடிவாகிவிட்டது. இதன் பொருட்டு தன் திருமண கொண்டாட்டங்களுக்காக தென்னிலங்கையின் பிற பாகங்களிலிருந்த இயக்க குலத்தலைவர்களையும் இயக்க குடி மக்களையும் அழைத்து இருந்தாள் குவேனி. அவர்களும் நட்பின் பேரில் அங்கு சென்றிருந்தனர். ஆனால் அங்கு திருமணக் கொண்டாட்டங்கள் மட்டும் நடைபெறவில்லை நட்பின் பேரில் வந்திருந்தவர்களை குவேனியின் ஒத்தாசையுடன் விஜயனும் அவனது 700 தோழர்களும் கொன்று போட்டு விட்டனர். [மாகவம்சம் விஜயனால் காலசேனன் எனும் இயக்க குலத்தலைவன் குவேனியின் துணையுடன் கொல்லப்பட்டான் என்று கூறும் அதே வேளை மட்டக்களப்பு மான்மியமோ காளிசேனன் எனும் இரகுவம்சத் தலைவனை குவேனியின் துணையுடன் விஜயன் கொன்றான் என்று கூறுகிறது இதில் கவனிக்க வேண்டியது யாதெனில் கொல்லப்பட்ட காலசேனன் அல்லது   காளிசேனன் ஒரு தலைவனாக இனம் காணப்படுவதுதான். இதன் மூலம் விஜயன் முடி சூடுவதை விரும்பாத இயக்கர் குலத்தவரே அல்லது ஆட்சியுரிமை உடையவரே இவ்வாறு துரோகம் மூலம் கொல்லப் பட்டிருக்கலாம் என்பது தெளிவாக தெரிகிறது.] விஜயனோ  குவேனி என்னும் பெண்ணின் காதல் மயக்கத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டான் தான் முடி சூடுவதற்க்கு யார் யாரெல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பார்களோ அவர்களையெல்லாம் கொன்றுபோட்டுவிட்டு தான் அரசனாக முடிசூடிக் கொண்டான். பின்னர் குவேனிக்கும் அவள் குழந்தைகளுக்கும் என்ன ஆனது என முந்தைய அத்தியாயங்களில் பார்த்து விட்டோம். அந்த வகையில் இலங்கையில் சிங்களவர்களின் முதல் குடியேற்றமாக, முடிசூடிய மன்னனாக காட்டப்படும் விஜயனின் வருகை ஒரு துரோகத்திலும் அடக்குமுறையிலுமே ஆரம்பித்தது என்பது தெளிவாகிறது. தென்னிலங்கையிலிருந்த பூர்வீக குடிகள் தான் தமக்குள் ஏற்பட்ட சிறுசிறு தகராறுகளால் இவ்வாறு சிதறி போயினர். அது; வந்தேறிகள் தென்னிலங்கையை கைப்பற்ற உதவியாகப் போயிற்று ஆனால் வட இலங்கையில் நாகர் தொடர்ந்து நிலைத்ததுடன் தென்னிலங்கையில் இயக்கரின் குடியிருப்புகளும் இழக்கப்பட்டன. இதில் சோகமென்னவெனில் இயக்கர் இருந்த குடியிருப்புக்கள் தான் விஜயனின் தோழர்களால் உருவாக்கப்பட்டது என மகாவம்சம் கூறுவதுதான் ஆனால் இக்குடியிருப்புகள் இயக்கரால் ஏற்படுத்தப்பட்ட குடியிருப்புக்கள் என இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

                                                                         .......................தொடரும் .................................
[இப்பதிவிலேயே சேனன் குத்திகன் எல்லாளன் போன்றோர் பற்றி கூறலாம் எனக் குறிப்பிட்டிருந்தேன்  ஆனால் பதிவின் நீளம் காரணமாக அவ்விடயங்கள் வரும் பதிப்புக்களில் தரப்படும்]   
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}