அலெக்ஸ் மேனன் கடத்தலும் பின்னணியும்        கடந்த 21 ம் திகதி(ஏப்ரல்) சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் பட்டப் பகலில் 15 நக்சலைட்டுகளால் ஒரு கிராமத்தில் வைத்துக் கடத்தப்பட்டார்தற்போது சில மணி நேரங்களுக்கு முன் அவர் விடுவிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அது குறித்த ஒரு பார்வையாக இக் கட்டுரை அமைகின்றது. இக் கட்டுரை அவர் கடத்தப்பட்ட விதம் , காரணம் குறித்து ஆராய்கின்றது.


   அனைவருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும் .அலெக்ஸ் மேனனை எல்லோரும் தமிழர் ,தமிழர் என்று சொல்கிறார்களே, அப்படியானால் ஏன் அவரின் பெயரின் பின்னால் 'மேனன்' ஒட்டிக் கொண்டிருக்கிறதென்று. இவருக்கு பெயர் சூட்டியபோது, வி.கே.கிருஷ்ணமேனன் ஞாபகார்த்தமாக இவரது பெயரின் பின்னால் 'மேனன்' சேர்க்கப்பட்டது. வி.கே.கிருஷ்ணமேனன் சுதந்திர இந்தியாவின் பிரிட்டனுக்கான முதலாவது இந்திய ஹைகமிஷனர். ஐ.நா.வில் இந்தியாவின் சார்பில் இவர் ஆற்றிய உரைகள் மிகப் பிரபலமானவை. ஆகவே அலெக்ஸ் பிறந்தது முதலே அவர் IAS/IPS அதிகாரியாக ஆக வேண்டும் என்ற இலக்குடனேயே வளர்க்கப்பட்டார் என்பது தெளிவாகின்றது. அவருக்கும் அதில் விருப்பம் இருந்திருக்க வேண்டும்.

       இவரது கல்லூரிக் காலத்திலேயே, இவரது துணிவும் அநீதிக்கெதிரான  போராட்டக் குணமும் வெளிப்பட்டிருக்கின்றது. இவரது கல்லூரி நண்பரும், சக பதிவாளருமான சுடுதண்ணி அவர்கள்; இவரது கல்லூரி நாட்களைப் பற்றி எழுதியுள்ளார். செயல்ப்படாமல் இருந்த கல்லூரித் தமிழ்ச்சங்கத்தினை மீண்டும் செயல்பட வைக்கப் போராடியமை, நிதிப் பற்றாக்குறையால் கைக்காசைச் செலவுசெய்து கல்லூரிக்கான மாத இதழ் தயாரித்தமை, பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகளில் கலந்து கொள்ள மதுரையில் உள்ள பிரபலக் கல்லூரிக்குச் சென்ற போது அங்கு நடந்த சிலவிதிமுறை மீறல்களை அனைவரின் முன் ஆக்ரோஷத்துடன் எதிர்த்து அக்கல்லூரி முதல்வரிடம் வாதிட்டமை கல்லூரி மாத இதழ்களின் மூலம் திரட்டிய நிதியை முதலாமாண்டு ஏழை மாணவனின் சக்கர நாற்காலிவாங்க வழங்கியமை என்று கல்லூரியில் தனித்துவமாகச் செயற்பட்டிருக்கிறார் அலெக்ஸ்.

     கல்லூரிக் காலம் முடிந்ததும் தன் சக நண்பர்களெல்லாம் கை நிறையச் சம்பளத்துடன் வெளிநாட்டு வேலை பெற்றுச் செல்கையிலே, தான் பிறந்ததே கலக்ராகி இந்த மக்களுக்குச் சேவை செய்வதற்குத்தான் என்று எந்தச் சலனமும் இல்லாமல்  தவம் செய்வது போல் படித்து 2006 ம் ஆண்டிலே IAS தேர்விலே சித்திபெற்று தன் 32 வயதிலே கலக்ரானார் அலெக்ஸ். சத்தீஸ்கர் மாநிலத்தின் கூடுதல் கலெக்டராக பணி புரிந்து வந்த அலெக்ஸ், தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட முதலாவது கலெக்டராஜனவரி 6 2011முதல் நியமிக்கப்பட்டார். { பல ஊடகங்கள் 2012 என்று தவறாகக் குறிப்பிடுகின்றன. ஆனால் அலெக்ஸ்ஸே தனது facebook இல் 2011 என்று குறிப்பிட்டுள்ளார் } இது நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ள ஏரியா. இருந்தாலும் அந்தப் பகுதி மக்களின் தேவையுணர்ந்து, துணிந்து அங்கு பணியாற்றச் சென்றார். 


         தனது கலெக்டர் பணிக்கு நடுவே 2008 முதல் குறைகுடம் என்ற ஒரு வலைப்பதிவைத் தொடங்கி அதில் தனது கலெக்டர் அனுபவங்கள் முதல் நித்தியானந்தா விவகாரம் வரை எழுதி வருகின்றார். என்னதான் தவமிருந்து கலெக்டரானாலும், meeting என்ற பெயரில் தனது மேலதிகாரிகள் தன்னை வதைப்பதையும், தான்; தனக்கு கீழே பணிபுரிவோரை வதைப்பதையும் நகைச்சுவையாக "பொழுதன்னிக்கும் யாராவது எடுக்கற மீட்டிங்க்ல பங்கு எடுக்கறதும் இல்லன்னா நாமளே மீட்டிங் எடுத்து அடுத்தவன் நுங்க எடுக்கறதும் .... என்ன பொழப்புடா இது... சரி நாய் வேஷம் போட்டாச்சு குரைச்சுத் தொலையலாம்னா குரைக்கரத வச்சித் தான்யா மார்க்கே போடுறாய்ங்க ....."  என்று அலுத்துக் கொள்கிறார். நித்தியானந்த லீலைகள் வெளியான சமயம் " வாய்ப்புக் கிடைத்தவன் அர்ச்சுனன் கிடைக்காதவன் தர்மன் என்பதான இந்தப் பூவுலகில் மாட்டிக்காதவன் ....... ...... பாபா; மாட்டிக்கிட்டவன் நித்தியானந்தா, பிரேமானந்தா ... அவ்வளவுதான். எல்லா சாமிகளுக்கும் காலம் வைத்த கெடு எவ்வளவோ தெரியவில்லை. அந்தக் கெடுவரையிலும் வாழ்ந்து பின் கெட்டழிய வேண்டியதுதான் அவர்களின் விதி......" என்று தனது சாமியார்கள் குறித்த பார்வையை ஆணித்தரமாக முன்வைக்கிறார். 

       நக்சலைட்டுகள் பற்றி ஒரு பார்வை {அடுத்த நான்கு பந்திகளில் நக்சலைட்டுகள் பற்றி நான் கூறும் விடயங்களோடு உங்களால் சிலவேளை ஒத்துப் போக முடியாமல் இருக்கலாம். அதற்காக அவசரப்பட்டு close பண்ணி விட்டுச் சென்று விடாமல் 5 வது பந்தியிலிருந்து அலெக்ஸ் கடத்தப்பட்டது குறித்துப் பாருங்கள் }

      நக்சலைட்டுகள் என்றவுடன் பலருக்கு அவர்கள் எதோ வில்லன்களாகவே தெரிவார்கள். பலர்; நக்சலைட்டுகள் இந்தியாவைப் பிரித்து தனிநாடு அமைப்பதற்கே போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய மத்திய அரசும் அவ்வாறான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவே விரும்புகின்றது. ஏனென்றால் நக்சலைட்டுகள்
 அழிக்கப்பட்டால் தான் மத்திய அரசால் குறித்த பிரதேசங்களை பன்னாட்டுக் கம்பனிகளுக்கு குத்தகைக்கு விடமுடியும். அங்கிருக்கும் அரிய தாதுப் பொருட்களையெல்லாம் கொள்ளையடிக்க முடியும். நக்சலைட்டுகள்; பன்னாட்டுக் கம்பனிகளிடமிருந்து தமது நிலத்தைக் காப்பாற்றுவதற்காகவே போராடிக் கொண்டிருக்கிறார்கள். நக்சலைட்டுகளை அழிக்கவென களமிறக்கப்பட்ட அதிரடிப்படைகள் கிராம மக்களைத் தாக்கி மனித உரிமை மீறல்களில் ஈடுபட, மக்களும் பெருமளவில் நக்சலைட்டுகளுக்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினார்கள். 

        "மண்ணை குடைந்து வெட்டி எடுக்கும் தங்கம் யாருக்கு? 
மலையை குடைந்து வெட்டி எடுக்கும் தாது யாருக்கு?
இந்த மண்ணோடு வாழ்வோம்! மண் இல்லை என்றால் சாவோம்!"

--மத்திய அரசின் "ஆபரேசன் பச்சைவேட்டை" க்கு எதிரான நக்சல்களின்  பாடல்.

  நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு; அரசின் நடவடிக்கைகளில் வெறுப்புற்ற கிராம மக்கள் நக்சல் இயக்கத்தில் சேருவதையும், நக்சல்களுக்கு ஆதரவு தருவதையும் தடுப்பதற்கு சமீபத்தில் 'கிராம் சுராஜ் அபியான்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கிராம மக்களின் குறைகள் கேட்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதனால் இந்தத் திட்டத்துக்கு மக்களிடையே ஆதரவும் பெருகி வந்தது. இது நக்சலைட்டுகளுக்கு நிச்சயமாக  கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

                அவர்களின் இந்தக் கோபம் நியாயமானதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்களின் போராட்டத்துக்கான காரணம் நியாயமானதாக இருந்த போதிலும் போராட்ட வழிமுறை நியாயமானதல்ல என்று கூறுபவர்களுடன் என்னால் உடன்பட முடியவில்லைபல லட்சம் மக்களும் எழுச்சியோடு கலந்துகொண்ட அன்னா ஹசாரேயின் போராட்டத்தையே தனது சூழ்ச்சி மூலம் அடக்கிய காந்தீய  தேசத்து மத்திய 
அரசுக்கு எதிராக ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து போராடுமாறு நக்சல்களுக்கு அழைப்பு விடுப்பதென்பது சாத்தான் வேதம் ஓதுவது போலத்தான் இருக்கும். ஆக அவர்களின் ஆயுதப் போராட்டம் நியாயமானது தான்.
ஆயுதத்தின் துணையுடன் தான் அவர்களால் தம் உயிர் வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாக்க முடியும். "நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டுமென்பதை நம் எதிரிகளே தீர்மானிக்கின்றார்கள்" என்கிற மாவோவின் சித்தாந்தத்தை வரித்துக் கொண்ட போராளிகள் அல்லவா அவர்கள்?
     இரண்டு தரப்பிலும், பொதுமக்கள் தரப்பிலுமாக ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலைமைக்கு  நக்சலைட்டுகளை விடவும் மத்திய அரசைக் குற்றஞ் சாட்டுவதே பொருத்தமாக இருக்கும். மன்மோகனினதும்,சோனியாவினதும் பன்னாட்டுக் கம்பனிகள் மீதான காதலால் அப்பாவி பொலிசாரும்,பொதுமக்களும்,  அரசு அதிகாரிகளும் சாக வேண்டி இருக்கின்றது. 

                                    அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்படுகிறார்

     ‘கிராம் சுராஜ் அபியான்’ என்கிற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது முதலே சத்தீஸ்கரில் கலெக்டர்களுக்குப் போதாத காலம் தொடங்கியிருந்தது. அலெக்ஸ்மேனன் கடத்தப்படுவதற்கு முதல்நாள் (20-04-2012) தான் இதே
 சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாபூர் மாவட்ட கலெக்டர் சென்ற வாகனத் தொடர், லேன்ட்மைன் குண்டுத் தாக்குதலில் சிக்கியது. அந்த கலெக்டர் தப்பிவிட்டார் என்ற போதிலும், அவருடன் சென்ற மூன்றுபேர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டிருந்தனர். குண்டுவெடிப்பு நடைபெற்ற மறுதினம் பிஜாபூர் மாவட்டத்துக்கு அருகிலுள்ள சுக்மா மாவட்டத்தில் உள்ள குக்கிராமமொன்றில் ‘கிராம் சுராஜ் அபியான்’ திட்டத்தின் கீழ் கிராம மக்களின் குறைகளைக் கேட்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்டார். 

       21 ந் தேதி மாலை இந்த திட்டத்துக்கான கூட்டம் ஒன்றுக்காக மாஞ்ஜிபாரா என்ற கிராமத்தில் இருந்தார் கலெக்டர். கூட்டத்தில் சுமார் 150 கிராமவாசிகளும், 40 அரசு அதிகாரிகளும் இருந்தனர். பொதுமக்கள் ஒரு புளிய மரத்தின் கீழ் அமர்ந்திருந்தனர். மாலை 4.30 மணிக்கு பொதுமக்கள் இருந்த பகுதியில் திடீரென தோன்றிய 15 நக்சலைட்டுகள், தமது கைகளில் இருந்த துப்பாக்கிகளால் வானத்தை நோக்கி சுட்டனர். {நக்சலைட்டுகள் ஏற்கனவே மக்களோடு மக்களாக கலந்து அமர்ந்து இருந்தனர் என்று அங்கிருந்த அநேகர் கூறுகின்றனர்.} 

கடத்தப் படுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு...........
கடத்தப்படுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு...........
   கலெக்டருக்கும், 40 அதிகாரிகளுக்கும் பாதுகாப்பாக இரண்டே இரண்டு பாதுகாவலர்கள்தான் இருந்தனர். அம்ஜத் கான் என்ற பெயருடைய பாதுகாவலர் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டார். மற்றொரு பாதுகாவலரான கிஷான் குஜார், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். “கலெக்டர் கௌன் ஹை” என்று கேட்டு கலெக்டரை அடையாளம் தெரியாமல் தடுமாறிய நக்சலைட்டுகளிடம் 'நான் தான் அலெக்ஸ்' என்று நெஞ்சுரத்துடன் சென்ற நெல்லைச் சீமையின் மைந்தன் அலெக்ஸ்!!

       அலெக்ஸ் மேனனை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்று கொண்டிருந்த போது தான் எதேச்சையாக அவரது அண்ணனின் மனைவி தொலைபேசி அழைப்பை எடுத்து மேனனின் தந்தை வரதாஸ் இருதய சிகிச்சை செய்து கொண்டது குறித்துக் கூறினார். உடனே மேனன் பதற்றத்தோடு, ‘அப்பா நலமாக இருக்கின்றாரா?' என்று கேட்டுக்கொண்டு இருந்தபோதே, மாவோயிஸ்டுகள் தொலைபேசியைப் பறித்துத் தொடர்பைத் துண்டித்தனர். 
தன் மனைவியுடன் அலெக்ஸ்......
அதன் பிறகு சில நிமிடங்களின் பின்னரேயே அலெக்ஸ் கடத்தப்பட்டது குறித்து அவரது மனைவி ஆஷா அவரது குடும்பத்தினருக்குத் தெரிவித்திருந்தார்.  இதிலுள்ள மற்றொரு சோகமான விஷயம், அவரது மனைவி ஆஷா தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்த அதிர்ச்சியை அவர் எவ்வாறு தாங்கிக் கொண்டாரோ தெரியவில்லை....
     கலெக்டர் அலெக்ஸ்மேனன் நக்சலைட்டுகளால் குறி வைக்கப்பட்டுள்ளார் என்று உளவுத்துறை முன்பே தெரிவித்திருந்தது. அப்படியிருந்தும் அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகரிக்கப்படவில்லை. மற்றொரு விஷயம், இந்தக் கடத்தல் நடைபெற்ற இடத்தில் இருந்து வெறும் 4 கி.மீ. தொலைவிலேயே CRPF கேம்ப் (The Central Reserve Police Force) அமைந்திருந்தது. கலெக்டரைக் கோட்டை விட்ட அதிரடிப்படை, பொது மக்களிடம் தன் வீரத்தைக் காட்டியிருக்கும் என்று எதிர் பார்க்கலாம். 
        அலெக்ஸ் மேனன் நக்சலைட்டுகளால் கடத்தப்பட்டு 24 மணி நேரம் ஆகியிருந்த நிலையில் அவரைக் கடத்திய மாவோயிஸ்ட் அமைப்பு தமது கோரிக்கைகளை  சத்தீஸ்கர் மாநிலத்தின் பி.பி.சி. செய்தியாளரின் மொபைல் போனுக்கு அனுப்பி வைத்திருந்தனர். கலெக்டரை விடுவிப்பதற்கு; மாவோயிஸ்ட் அமைப்பு முக்கிய இரு நிபந்தனைகளை விடுத் திருந்தனர் . முதலாவது, சிறையில் உள்ள தமது சகாக்களை விடுவிக்க வேண்டும். இரண்டாவது, மாவோயிஸ்ட் அமைப்புகள் மீது மாநில அரசால் மேற்கொள்ளப்படும் அதிரடி நடவடிக்கைகள், நிறுத்தப்பட வேண்டும்.
        இந்தக் கோரிக்கை கிடைக்கப் பெற்ற உடனேயே  ‘ஆபரேஷன் கிரீன் ஹன்ட்’ என்ற பெயரில் நடந்த நக்சலைட் வேட்டை முழுமையாக நிறுத்தப்பட்டது. இது வீரப்பன் காலத்திலிருந்து நடைபெறுவதுதான். யாராவது கடத்தப்பட்டால் ஆபரேஷன் நிறுத்தப்படுவதும், அவர்கள் விடுவிக்கப்பட்டபின் ஆபரேஷன் தொடர்வதும் சகஜம். 
      ஆகவே முதலாவது கோரிக்கை சம்பந்தமாகவே பேச்சுவார்த்தை நடத்தப்படவேண்டி இருந்தது. ஆரம்பத்தில் 8 பேரை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்த மாவோயிஸ்ட் அமைப்பு, அதன்பின் 2 வது சுற்றுப் பேச்சு வார்த்தையின் பின் 9 பேரை மேலும் அதிகமாக தமது பட்டியலில் இணைத்து மொத்தமாக 17 பேரை விடுவிக்கவேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள். 
தன் நண்பர்களுடன் அலெக்ஸ்......
                  சத்தீஸ்கர் மாநில அரசும் நக்சல்கள் கேட்டபடி 17 பேரையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில் திடீரென தமது கைதிகளை விடுவிப்பது தொடர்பான கோரிக்கையை கைவிட்டு தாம் கலெக்டர் அலெக்ஸ் மேனனை விடுவிக்க சம்மதித்தார்கள். இதற்குப் பதிலாகக் கைது செய்யப்பட்டு சிறையில் விசாரணையை எதிர்நோக்கி உள்ளவர்களது கேஸ்களை உயர்மட்டக் குழு ஒன்று விசாரித்து முடிவு எடுக்கும் என்ற அரசின் உறுதிமொழியை அவர்கள் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்கள். இந்த உயர்மட்டக் குழு விசாரிக்கப் போவது, தற்போது சிறையில் விசாரணையை எதிர்நோக்கியுள்ள கேஸ்களை மட்டுமே. ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் கைதிகளின் கேஸ்களை அல்ல. இது முன்னர் கேட்டதுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த பட்ச கோரிக்கையே ஆகும்.
குதிரைகளும்....நண்பர்களும்....அலெக்ஸ்ஸும்.......
     நக்சல் விவகாரங்களைக் கவனித்து வருபவர்களுக்கு இது ஆச்சரித்தை ஏற்படுத்தியிருக்கக் கூடிய விஷயம். சமீபத்தில் ஒரிசாவில் நக்சலைட்கள் ஒரு M.L.A. ஐக் கடத்தியிருந்தனர். எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவை விடுவிப்பதற்காக 8 மாவோயிஸ்டுகள் உட்பட சிறையில் இருக்கும் 25 பேரை விடுதலை செய்ய ஒரிசா அரசு முடிவு செய்ததையடுத்தே 33 நாட்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ. ஐ கடந்த ஏப்ரல் 26 ந் தேதி நக்சல்கள் விடுவித்திருந்தனர். மேலும் இத்தாலியப் பிரஜை ஒருவரையும் ஏறத்தாழ ஒரு மாதத்துக்கு மேலாகக் கடத்தி வைத்திருந்த நக்சல்கள்; அரசு பல கைதிகளை விடுவித்த பின்னரே, இத்தாலியப் பிரஜையை விடுவித்தார்கள்.

     அப்படியாயின் அலெக்ஸ் பால் மேனன் விவகாரத்தில் மட்டும் ஏன் இந்த மாற்றம் ?
         
            ஏனென்றால் அலெக்ஸ் மேனன் கிராம மக்களுடன் சகஜமாகப் பழகி அவர்களின் குறையைக் கேட்டறிந்து நிவர்த்திசெய்து மக்களுக்காகவே 
மக்களோடு மக்களாக..........
வாழ்ந்து வந்துள்ளார். இதனால் அலெக்ஸ் மேனன் கடத்தப்பட்டதும், பொதுவாக நக்சல்களுக்கு ஆதரவாக இருக்கும் மக்களே கூட அவரை விடுவிக்க வலியுறுத்தி சத்தீஸ்கரில் ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினார்கள். மேலும் அவர் கடத்தப்பட்டவுடன் வெளியே தெரியவந்த அவரைப் பற்றிய நல்ல விசயங்கள் அவரை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நக்சல்களுக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும். சிலவேளை நக்சல் தலைவர்கள்; மேனனுடன் உரையாடிய போது, அவரின் சேவை மனப்பான்மையையும், துணிவையும் கண்டு கூட அவரை விடுவிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருக்கக்கூடும்.{மேனனின் துணிவு, மற்றும் நேர்மை குறித்து அறிய விரும்புபவர்கள் இங்கே கிளிக் செய்து அவர் எழுதிய கட்டுரையைப் படிக்கவும்}

       எது எப்படியோ தற்போது அவர் பத்திரமாக விடுவிக்கப்பட்டுள்ளார் என்று கிடைத்த செய்தி நிம்மதி அளிக்கின்றது. இதற்குமுன் இப்படியான சூழ்நிலையில் சிக்கிக் கொண்ட {பிப்ரவரி 14 ந்தேதி கடத்தப்பட்ட} மால்கன்கிரி கலெக்டர் வினீல் கிருஷ்ணா இடமாற்றம் செய்யப்பட்டது போல, அலெக்ஸ் மேனனும் வேறு பாதுகாப்பான இடத்துக்கு இடமாற்றம் செய்யப்படுவாரா? என்பதே இன்று தொக்கி நிற்கும் ஒரு வினா. அலெக்ஸ் மேனன் சவால்களுக்கு அஞ்சாமல் தொடர்ந்து அப் பகுதி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே என் போன்றவர்களின் அவா.
{ஒரு பிந்திக் கிடைத்த செய்தி.....அலெக்ஸ் தொடர்ந்து அப் பகுதி மக்களுக்குச் சேவை  செய்வதே ன் விருப்பம் என்று தெரிவித்துள்ளார் }
ஒரு இணைப்பு.... அலெக்ஸ் மேனனின் facebook , மேலதிக போட்டோக்கள் 
thanks to:
இந்தக் கட்டுரையில் ஏதாவது தவறிருந்தால் தயவுசெய்து சுட்டிக் காட்டவும்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}