கமல்ஹாசன் கவிதைகள்


"கமலின் நடிப்பு எவளவு தனித்துவம் வாய்ந்ததோ அதே போல் அவரது கவிதைகளும் தனித்துவம் வாய்ந்தவை ..ஒவ்வொரு கவிஞனிடமும் அவனைப்பாதித்த கவிஞனின் பாதிப்பு ,சாயல் அவன் கவிதைகளில் இருக்கும் அனால் கமல்ஹாசனின் கவிதைகளில் யாருடைய பாதிப்பும் தழுவலும் இருக்காது இது எந்த கவிஞனிடமும் காணாத ஒரு தனிச்சிறப்பாகவே நான் கருதுகிறேன் " இது எனது வார்த்தைகள் அல்ல கமலைப் பற்றிய கவிபேரரசின் வார்த்தைகள் ....
அவர் மேலும் கமலைப்பற்றி....
ஒருகவிதையில் மழைக்குமிடில் என்று எழுதியிருந்தார் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது
தளிர் தளிர்க்குமிடில்
கிளை கிளைக்குமிடில்
மழை மழைக்குமிடில் என்று ஏன் ஆகாது?
இதைக் கேட்டு நான் வியந்து போனேன் இதை சராசரிக் கவிஞர்கள்  யாரும் பயன்படுத்துவதில்லை..அழகான சொல்லாட்சி அது...

கவிஞர் வாலி -"விரலில்லாமல் வீணை வசிக்க வந்தவரல்ல கமல் எல்லாவற்றிலும் பயின்று தேறித்தான் இன்று உலகமகா கவிஞராக கலைஞராக விளங்குகிறார் "

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் 
தமிழில் வெண்பா படுவது கடினம் ஈற்றடி முச்சீர் ஏனையடிகள் நாற்சீர் மாமுன்னறியும் விளமுன்நேரும் கொண்டு வேற்றுத்தளை விலகாமல் வருவது ...வெண்பாவிற்கு இப்படி ஒரு இலக்கணக்கட்டுப்பாடு கடைசி வரி மூன்று சீர் இருக்கவேண்டும் ஏனைய வரிகள் நான்கு நான்கு சீர் இருக்கவேண்டும் ௧௫ சொல்லுக்குள் இது முடிய வேண்டும் ..இவ்வாறன காரணங்களால் கம்பன் கூட விருத்தப்பாவில் தான் கம்ப ராமாயணம் எழுதினார் ....ஆனால் கமல் வெண்பாவில் பாட்டெழுத சொன்னால் அழகாக எழுதிவிடுவார் ..மௌனத்தின் வலி’ – கமல் கவிதை

காக்க ஒரு கனக (AK) 47
நோக்கவும் தாக்கவும் ஒரு நொடி நேரம்
தோற்கவும் அதே கண நேரம்தான்
ஈயம் துளைத்துக் கசிந்து சிவந்த
காயம் தொட்டுக் கையை நனைத்து
விண்ணே தெரிய மண்ணில் சாய்ந்தேன்
முன் காக்க மறந்த அமைதியைக் காத்து.
மாட்டுத் தோலில் தாய்மண் அறைபட
பூட்ஸுக் கால்களால் கடந்தனர் பகைவர்.
விட்ட இடத்தில் கதையைத் துவங்கச்
சட்டென இன்னொரு குழந்தை பிறக்கும்
அதுவரை பொறுத்திரு தாயே, தமிழே
உதிரம் வடியும் கவிதை படித்து…
-கமல்ஹாஸன்

கமலின் மன்மதம் அம்பு கவிதை


கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா
ஒழுங்கங் கெட்டவள் எச்சரிக்கை
ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்த பின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை

உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய்ச் சிக்கல் எச்சரிக்கை
அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக் கொள்
கூட்டல் ஒன்றே குறியென்றான பின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்
உன்னை மங்கையர் என்னைக் கொள்வர்

யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்
காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்.


கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போலக்
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்
காமக் கழிவுகள் கழுவும் வேளையில்
கூட நின்றவன் உதவிட வேண்டும்

வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்
இப்படிக் கணவன் வரவேண்டும் என
ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்
வரந்தருவாள் என் வரலட்சுமியென
கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன் பீச்சுக்கு

தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்
மூத்த அக்காள் கணவனுக்கு
முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காளில்லா வேளையில் அவன்
(சக்)களத்தி வேண்டும் என்றான்

வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு
வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
உறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன்
அரங்கநாதன் ஆள் எப்படி?
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் 
வாஸ்தவமாக நடப்பது உண்டோ?

அதுவும் இதுவும் எதுவும் செய்யும் 
இனிய கணவர் யார்க்குமுண்டோ? 
உனக்கே அது அமையப் பெற்றால் 
உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான் 
நீ அதுபோல எனக்கும் அமையச் செய்யேன் 
ஸ்ரீ வரலட்சுமி நமோஸ்துதே!
மனித வணக்கம் - கமல்ஹாசன் கவிதைகள்தாயே... என் தாயே!
நான் மீட்ட சோலே!
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே
என் மனையாளின்
மானசீகச் சக்கரவர்த்திசரண்
தகப்பா – ஓ – தகப்பா
நீ என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதையாய் இன்று
புரியா வரி இருப்பின் கேள்...
பொழிப்புரை நான் சொல்கிறேன்
தமையா – ஓ – தமையா
என் தகப்பனின்
சாயல் நீர்
அச்சகம் தான் ஒன்றிங்கே –
அர்த்தங்கள் வெவ்வேறு
தமக்காய் – ஓ – தமக்காய்
தோழி... தொலைந்தே போனாயே –
துணை தேடிப் போனாயோ...
மனைவி – ஓ – காதலி
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக் குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சுமங்கள்
புரியும்வரை.
மகனே – ஓ – மகனே
என் விந்திட்ட விதையே...
செடியே... மரமே... காடே...
மறுபிறப்பே
மரண சௌகர்யமே... வாழ்...
மகளே – ஓ – மகளே...
நீயும் என் காதலியே...
எனதம்மை போல்
எனைப் பிரிந்தும் நீ
இன்பம் காண்பாயோ...
காதலித்த கணவனுக்குள்
எனைத் தேடுவாயோ...
நண்பா – ஓ – நண்பா...
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடம் அவ்விதமே.
பகைவா – ஓ – பகைவா...
உன் ஆடையெனும் அகந்தையுடன்
என் அம்மணத்தைக் கேலி செய்வாய்
நீ உடுத்து நிற்கும்
ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்
மதமென்றும் குலமென்றும்
நீ வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகிவிடும்
நிர்வாணமே தங்கும்
வாசகா – ஓ – வாசகா...
என் சமகால சகவாசி
வாசி...
புரிந்தால் புன்னகை செய்
புதிர் என்றால் புருவம் உயர்த்து
பிதற்றல் எனத் தோன்றின்
பிழையும் திருத்து...
எனது கவி உனதும்தான்
ஆம்...
நாளை உன்வரியின்
நான் தெரிவேன்.
உன்னை யாம் தலைமைக்கு - கமல்ஹாசன் கவிதைகள்


உன்னை யாம் தலைமைக்கு உயர்த்தியதால்
நீ எம்மிற் சிறந்தவன் எனப் பொருள் கொள்ளாதே
அப்பொருளை ஏற்கும் பணிவு எமக்கில்லை என உணர்.
எம் மொழி எம் நிறம் என்ற விசாலமற்ற அன்பு காரணமாக,எவ்வழி எனத் தெரியாமலே எமை
நடத்திச் செல்லப் பணிந்தோம் உன்னை.
இக்கடிவாளங்களும், சேணங்களும், எமக்குப் பொருந்தச் செய்யப்பட்டவை அல்ல.அவை எமது நாட்டுத் தயாரிப்பல்ல. எமது அளவல்ல. வேறுமட்டக் குதிரைகளின் அளவு. எமது வாய் சிறிதுஇவ்வமைப்பில், யாம் எக்கணம் நினைப்பினும் தலையை உருவிக் கொண்டோடுவோம்பிழையாகப் பூட்டப்பட்ட எமது கடிவாளத்தில் இருந்து மீண்டு.
வலது வார்பட்டையை இழுத்தால் இன்று இடதுபுறம் திரும்புவோம்ஓர் சிலிர்ப்பில் அகலும் கண்மறைப்பான்கள்.அப்போது தென்படுமே
வெவ்வேறு பாதைகள்!அவற்றில்,
எவற்றிற்கு யாம் பாதசாரிகள்?எமக்கும் தெரியாது
உனக்கும் தெரியாது.
நீ அமர்ந்திருக்கும் பீடத்தின் அசௌகரியம்,
விபத்தல்ல.யாமதை அமைத்ததே அப்படி.
நீ உறங்கிவிடாதிருக்க, ஓரிடம் அமர்ந்து விடாதிருக்க,
யாம் வடித்த பீடமது.
உன்னை அதில் ஏற்றுவதில் யாம் காட்டிய ஆர்வத்தை மிகும்,உன்னை வீழ்த்துவதில் யாம் காட்டப்போவது.
தனித்திருத்தல் விழித்திருத்தல், ஒரு புறமிருக்கட்டும்.
எம்மைப் போல் பசித்தும் இருக்கக் கல்.
நாயகம் எமதா? உனதா?என்ற சந்தேகத்திற்கிடமின்றி,
இது எமது நாயகம்.
இடது வாரை இழுத்துப்பார், வலது புறம் திருப்புவோம்;
இந்த அமைப்பும், எமக்கும் உனக்கும், சாஸ்வதமில்லை;மாறும், ஏதேனும் ஒரு விபத்தின் மூலம்.

அனாதைகள்

அனாதைகள் கடவுளின்
குழந்தைகள் என்றல்
அந்த கடவுளுக்கும்
அவசியம் வேண்டும்
குடும்பக்கட்டுப்பாடு...!


பெருஞ்சிங்கம்

ஞானமெனும் பெருஞ்சிங்கம்
எறும்புகளை உண்பதில்லை,
இறந்தபின் சிங்கத்தை
எறும்புகள் உண்பதுண்டு.

மகளே

பிரதிபிம்பம் பழங்கனவு
மறந்த என் மழலையின் மறுகுழைவு
மகளே
உனக்கு என் மூக்கு என் நாக்கு!

என் தாய் பாடித் தூங்கவைத்த தாலாட்டு
தினம் உனக்காய் நான் படிப்பேன் என் குரலில்
பாசத்தில் எனைப் பெற்றோர் செய்த தவறெல்லாம்
தவறாமல் நான் செய்வேன்
என் ரத்தம் எனது சதை எனக் கூவி
உன் சித்தம் உன் போக்கை இகழ்ந்திடுவேன்
உன் போக்கு இதுதான் என நீ மறுக்க
உடைந்த மனதுடனே மூப்பெய்வேன்
என் அப்பனைப் போல்!

அன்று - சாய் நாற்காலியில் வரப்போகும்
கவிதைகளை இன்றே நான் எழுதிவிட்டால்
அன்று - நான் பேசலாம் உன்னோடு

எழுதிவிட்டேன்
வா - பேச!

நச்சு

நாகத்தின் நச்சதனைத்
தூற்றுவார் தூற்றிடினும்
நச்சதற்குக் கேடயம்போல்
தற்காப்பு ஆயுதமே
பறவைக்கு அலகினைப்போல்
பசுமாட்டுக்குக் கொம்பைப்போல்
நமக்கெல்லாம் பொய்யைப்போல்
தப்பிக்கும் ஓர்வழிதான்
நாகத்தின் நச்சென்பேன்

காதலி - கமல்ஹாசன் கவிதைகள்

சரியாகச் சொன்னால்
20 வருடங்களுக்குப் பிறகு
மீண்டும் உனக்கொரு காதல் கடிதம்.

உன் விலாசம் எப்படியும் மாறும் என்ற
காரணத்தினாலோ என்னவோ
உனது விலாசத்தை காதலி என்பதோடு
அன்று விஸ்தீரணம் செய்யாது விட்டுவிட்டேன்.

காதலி... மீண்டும் உனக்கொரு கடிதம்.
நான் முன்பு எழுதிய கடிதம்உனக்கல்ல
எனினும் இத்துடன்அதையும் இணைத்துள்ளேன்.

காதல் ரிஷிகளின் மூலம் பார்ப்பதுஅனாசாரமாகாது.
பார்த்துப் புரிந்துகொள்.பழைய கடிதத்தின் சொந்தக்காரியிடம்
இந்தக் கடிதத்தைக் காண்பிக்க வேண்டியஅவசியமில்லை.
அவளுக்கு ஆர்வமும் இருக்க வாய்ப்பில்லை.

காதல் மாறாதது என்பது உண்மை.
ஆள் மாறினாலும்
இல்லாள் மாறினாலும்
காதல்மாறுவதில்லை.

கூடி வாழ்வதும் காதலில் கூடுவதும்
இருவேறு நிலைகள்.அவள் என்னவள்
அவன் என்னவன் எனஅறம் என்ற பெயரால்
அடையாளச்சூடு வைக்கும் மிருகத்தனம்
மனிதனுக்கே உரித்தானது.

நமது ஆறாவது உணர்வைபோற்று.
பண்டிதர்கள் மெதுவாகஉறுதியான மற்ற
ஐந்து உணர்வுகளின்உத்வேகம் குறைந்து
வருவதை உணர மறுக்கிறார்கள்.

அந்த மறுப்பில்என் (நம்) காதலும் சிக்குண்டுதவிக்கிறது.
மௌன விரதம் பூண்டவர்கள் சமிக்ஞை செய்து
கவிதையை வைக்கிறார்கள்.

நான் காதலன் கவிஞன் ஆதலால்
காதலால் மீண்டும்உனக்கொரு கடிதம்.
இதில் மறுபடியும் விலாசமில்லாமல்
விட்டிருப்பதுவிபத்தல்ல நீ
விலாசத்தை மாற்றிக்கொண்டே
யிருக்கிறாய் நான் என்ன செய்ய?
அதே நான்தான்,
நீ மட்டும் வேறு!

நாபிக்கொடி - கமல்ஹாசன் கவிதைகள்

அமலை அன்னை அவள் ஆரணாகாரி
அந்திப் போதனை யானுட னாடுவள்
உமையாள் உடையாள் உயிர்கிழத்தி
உரிமையுடன் தவங்கலைக்கும்
ஆட்டணத்தி மனங்கொணும் நேர்முலையாள்
தினங்காணக் கல்லாக வீற்றிருப்பள்
கனந்தாங்கும் களத்தியாய் கலவிசெய்கையிலென்
தடந்தோளைக் கடித்துச் சந்தோஷம்
சொல்லிடுவள் நாபிக்கொடி நறுக்கியெனை
நர மேட்டிலொரு லோபத்தெருவினிலே
மறுபடி எறிந்திடுவள் சப்பிடும்
வாய்கதற முலைபிடுங்கி யகற்றி
செப்பிடும் வார்த்தைகள் மெல்லத் தந்திடுவள்
நித்தமு மாறிடும் ஜீவ தாளத்தில்
என்னுடன் ஆடிடும் ஆசைநாயகி
காமுகி க்ராதகி
மாதவி கண்ணகி ஸ்நேகிதி
சோதரி பல்முகி பாதகி
கிரகணாதி கிரகணங்கட் கப்பாலுமே ஒரு அசகாய சக்தி உண்டாம் ஆளுக்கு ஆளொரு பொழிப்புரை கிறுக்கியும் ஆருக்கும் விளங்காத தாம் அதைப் பயந்ததை யுணர்ந்ததைத் துதிப்பதுவன்றி பெரிதேதும் வழியில்லை யாம் நாம் செய்த வினையெலாம் முன்செய்ததென்றது விதியொன்று செய்வித்த தாம் அதை வெல்ல முனைவோரைச் சதிகூடச் செய்தது அன்போடு ஊழ் சேர்க்குமாம் குருடாகச் செவிடாக மலடாக முடமாகக் கரு சேர்க்கும் திருமூலமாம் குஷ்டகுஹ்யம் புற்று சூலைமூலம் எனும் குரூரங்கள் அதன் சித்தமாம் புண்ணில் வாழும் புழுபுண்ணியம் செய்திடின் புதுஜென்மம் தந்தருளு மாம் கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல் சோதித்து கதி சேர்க்குமாம் ஏழைக்கு வருதுயரை வேடிக்கை பார்ப்பததன் வாடிக்கை விளையாட லாம் நேர்கின்ற நேர்வலாம் நேர்விக்கும் நாயகம் போர்கூட அதன்நின் செயலாம் பரணிகள் போற்றிடும் உயிர் கொல்லி மன்னர்க்கு தரணிதந்தது காக்குமாம் நானூறு லட்சத்தில் ஒருவிந்தை உயிர்தேற்றி அல்குலின் சினை சேர்க்குமாம் அசுரரை பிளந்தபோல் அணுவையும் பிளந்தது அணுகுண்டு செய்வித்த தும் பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை பலகாரம் செய்துண்ட தும் பிள்ளையின் கறியுண்டு நம்பினார் கருளிடும் பரிவான பர பிரம்மமே உற்றாரும் உறவினரும் கற்று கற்பித்தவரும் உளமார தொழு சக்தியை மற்றவர் வையுபயங் கொண்டுநீ போற்றிடு அற்றதை உண்டென்று கொள் ஆகமக் குளமூழ்கி மும்மலம் கழி அறிவை ஆதிகச்சலவையும் செய் கொட்டடித்து போற்று மணியடித்து போற்று கற்பூர ஆரத்தி யை தையடா ஊசியிர் தையனத் தந்தபின் தக்கதை தையா திரு உய்திடும் மெய்வழி ஊதாசினித்த பின் நைவதே நன்றெனின் நை 


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}