காலில் விழுந்து கெஞ்சுகிறேன், காலில் விழவேண்டாம்!காலில் விழுவது என்றதும் தமிழ்கூறும் நல்லுலகிற்கு நினைவுவரும் காட்சி...


தமிழக பத்திரிகை உலகுக்கே இது ஒரு கஷ்டகாலம் போலும். முக்கியமான இரண்டு பத்திரிகையின் முக்கியமான இரண்டு பேர் தத்தமது பத்திரிகையுடன் முரண்பட்டிருக்கிறார்கள். அதிலும் ஆனந்த விகடனுடனான தனது 30வருட உறவை முறிக்கவேண்டிய நிர்பந்தம் மதனுக்கு ஏற்பட்டிருக்கிறது. காரணம் காலில் விழுவது சம்பந்தமான அவரது பத்தாம் பசளித்தனமான பதிலுக்கு விகடன் போட்டிருந்த நெத்தியடி புகைப்படம். இந்தப்பதிவு அந்தப் பிரச்சனையைப்பற்றியது அல்ல. (அந்தப் பதிவு இங்கே உள்ளது.) காலில் விழுவது பற்றியது. அது எத்தனை கீழ்த்தரமானது என்பது பற்றியது.

ஒருவரின் காலில் விழுந்து வணங்குவது என்பது, நமது ஒட்டுமொத்த சுயமரியாதையையும், நாம் அவருக்கு விட்டுத்தருகிறோம் என அறிவிக்கும் ஒரு செயல். எந்த விதத்திலும் அது நாம் ஒருவர்மேல் வைத்திருக்கும் மரியாதையை காட்டாது. தமிழினத்தின் தொடர்ந்த முட்டாள்தனங்களில் இதுவும் ஒன்று என்பதைத்தவிர வேறில்லை. இந்த பதவித்தலைவர்கள் எல்லோரையும்விட எத்தனை பெரிய தலைவர் பெரியார். தன்னை மரியாதை செய்வதற்காக, தனது கொள்கைகளை நினைவுபடுத்துவதற்காக மக்கள் தான் வாழும்காலத்திலேயே சிலைகளை வைக்க ஒத்துக்கொண்டவர். அந்தப் பெரிய பெரியாரே, தான் காலில் யாரும் விழுவதை அனுமதிக்கவில்லை. அது மனித சுயமரியாதைக்கு ஒவ்வாத செயல் எனச் சொன்னார். அந்தத் தலைவன் வாழ்ந்த மண்ணின் மக்களின் பிரதிநிதிகள் ஒரு அம்மையாரின் காலில் விழுவது எத்தனை ஈனத்தனமான செயல்?

முற்காலத்தில் ஒரு நாட்டை ஒரு மன்னன் வீழ்த்துவானானால், தோற்ற நாட்டு மன்னனை, தனது கிரீடத்தோடு தான் காலில் விழச்செய்வது அவனை முற்றுமுழுதாக அவமானப்படுத்திவிடுவதற்காசெய்யப்படும் செயல். தோற்ற மன்னர்களின் கிரீடம் தேய்த்துத் தேய்த்து மன்னனின் கால் சிவந்துவிட்டது எனப் பாடிப் பாடி, புலவர்கள் காசுபார்த்தார்கள். எக்காலத்திலுமே அது அவமானத்தின் சின்னமாகத்தானே இருந்து வருகிறது, பின்னர் எப்படி அது மரியாதையின் சின்னமானது?
 
ஒருமுறை ஜோர்ஜ் புஷ் அமெரிக்க அதிபராகவிருந்தபோது வத்திக்கான் அதிபர் என்ற முறையில் போப்பாண்டவரை சந்தித்தார். அப்போது ஏனைய கிறிஸ்தவர்கள் செய்வதுபோல அவர் போப்பாண்டவர்முன் மண்டியிட்டு வனங்கவில்லை. கேட்டதற்கு, “நான் ஒரு சாதாரண மனிதனாகவிருந்து போப்பாண்டவர்முன் மண்டியிடுவது வேறு. ஒரு நாட்டின் ஜனாதிபதியாகவிருக்கும்போது மண்டியிட்டால், எனது நாடே மண்டியிடுவதாகிறது. என்றார். இப்படியாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அமைச்சர், அம்மையார் ஒருவரின் காலை விழுந்து, தன்னை தேர்ந்தெடுத்த மக்கள் அனைவரையுமே கேவலப்படுத்துகிறார். எனது சந்தேகம் என்னவென்றால், இவ்வாறு காலில் விழும் ஒரு அமைச்சரை அவரது மகள் தகப்பனாக, குறைந்தது ஒரு ஆணாக மதிப்பாளா?

யாழ்ப்பாணத்தில் 2011 செப்டெம்பர் மாதம் நடந்த ஒரு சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டது. நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள். புலைமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற முல்லைத்தீவு மாவட்ட மாணவன் ஒருவனுக்கு கல்வி அமைச்சர் பரிசு வழங்கியபோது அவரது காலில் விழ அவன் மறுத்துவிட்டான். அருகிலிருந்தவர்கள் வற்புறுத்தியும் அவன் கடைசிவரை விழவே இல்லை. காலில் விழுந்து வணங்குவது அவமானகரமானது என்று அந்தப் பத்துவயதுச் சிறுவனுக்கே தெரிகிறதே, வளர்ந்த நமக்கு அது  ஏன் உறைக்கவில்லை? தன்மான சிங்கமே வருக! என்று தொண்டர்கள் அலங்கார வளைவு வைத்து வணங்கும் ஒரு தலைவன், காலில் விழுவதா? அசிங்கமல்லவா?


இடி, மின்னல்களின்போது தரையில் விழுவதற்கும், பதவிக்காகவோ, உதவிக்காகவோ காலில் விழுவதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. சகல மனிதரும் சமமாக வாழ்ந்த ஆதிகால மனிதனை இதற்கு சாட்டாக்குவதுவும் பொருத்தமற்றது. இது இடையில் வந்த இழிவு. 

சிலர் பெற்றோரின் காலில் விழுவதை நியாயப்படுத்துகிறார்கள். காலில் விழுவதே பிழை என்கிறபோது பெற்றோருக்கு மட்டும் என்ன விதிவிலக்கு? அல்லது ஒருவரின் பெற்றோர் என்கிற தகுதி எவ்வாறு போதுமானதாக்கிறது ஒருவர் காலில் விழுவதற்கு? முதலில் காலில் விழுவது எவ்வாறு மரியாதையாகிது???

கால் என்பது ஒருவரின் முக்கியமான உறுப்பு என்பதை மறுப்பதற்கல்ல. ஒருமுறை வெறிநாய் துரத்தினால் ஒவ்வொருவருக்கும் அதன் முக்கியத்துவம் புரியும். ஆனால், இன்னொரு மனிதன் தொட்டு வணங்குமளவுக்கு அது மதிக்கத்தக்க்து என்றால், காலின் மேல் கால் போடுவது, தெய்வ உருவங்களை காலால் மிதிப்பது எல்லாம் எவ்வாறு தவறாகிறது? கடதாசியைக்கூட காலால் மிதிக்கக்கூடாது என்கிறீர்கள், பின்னர் தலையை கொடுக்கிறீர்கள். அப்படி என்னதானப்பா இருக்கிறது காலில்? கையை வணங்கலாம், முதுகை வணங்கலாம், ஏன், கு...னிந்துதான் வணங்கவேண்டும் என்றால் ஜப்பானிய முறையில் வணங்கித் தொலையவேண்டியதுதானே?

வேறு விளக்கங்கள் இல்லை. நான் உனக்கு அடிமை, உன் காலை விட என் தலை இழிந்தது என்பதை ஒத்துக்கொள்வதுதான் காலில் விழும் சம்பிரதாயம். பெரியார்தான் திராவிடக் கட்சிகள் அனைத்துக்கும் தந்தை. அந்தத் தலைவனின் வழிக்குள் இருந்துகொண்டு இவ்வாறாக நடந்துகொள்வது ஈனத்தனம். அந்த அமைச்சர்கள் மட்டுமல்ல, எந்தவொரு மனிதனும், எந்தவொரு மனிதனுக்கும் அடிமை இல்லை. மக்களே! உங்களின் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்கிறேன், இனி யாரின் காலிலும் விழாதீர்கள்! அப்படியொரு நிலைமை வந்தால் பேசாமல் செத்துப்போங்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}