கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் - 04 (இறுதி)

கடந்த பதிவுகளில் உலகமே கொண்டாடிய இந்தியக் கணிதமேதை ராமானுஜனின் ஆரம்பகால வாழ்க்கை பற்றியும், ஹார்டி ராமானுஜனை இங்கிலாந்துக்கு அழைத்தமை பற்றியும், ராமானுஜன் எவ்வாறு தன் தாயின் எதிர்ப்பைப் புறந்தள்ளி இங்கிலாந்துக்குக் கப்பலேறினார் என்பது பற்றியும், கேம்பிரிட்ஜில் அவர் ஹார்டியுடன் இணைந்து பணியாற்றியமை பற்றியும், ராமானுஜனுக்கு எண்களில் இருந்த காதல் மற்றும் பரிச்சயம் பற்றியும் பார்த்திருந்தோம்.....முன்னைய பாகங்கள் படிக்காதவர்கள் தயவுசெய்து இங்கே கிளிக் செய்து படித்துவிட்டுத் தொடரவும்....

இனி.........
உண்மையில் ராமானுஜனின் படைப்பாற்றல் அபரிமிதமான வேகத்தைக் கொண்டிருந்தது. இது பற்றி பின்னாட்களில் ராமானுஜனின் திடீர் மறைவுக்குப் பின்னர் ஹார்டி குறிப்பிடும் போது; 'இங்கு வருவதற்கு முன்னால் அவர் என்ன புத்தகம் படித்திருந்தார், இன்னென்ன புத்தகங்களைப் படித்திருந்தாரா,இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. நான் கேட்டிருந்தால் ஒரு வேளை சொல்லியிருப்பாரோ,என்னமோ. ஆனால், ஒவ்வொரு நாளும் நான் அவருக்குக் காலை வணக்கம் சொல்லும் போதும் அவர் எனக்கு ஐந்தாறு புதுத் தேற்றங்களைக் காட்ட ஆயத்தமாயிருந்ததால், எனக்கு வேறு எதையுமே பேச வாய்ப்புமில்லை. அத்துடன் ராமானுஜனைப் பார்த்து அதைப் படித்திருக்கிறாயா,இதைப் படித்திருக்கிறாயா? என்று கேட்பதும் பொருத்தமில்லாததாக இருந்தது.' என்கிறார்.
ஹார்டி கூறியது உண்மை தான்.... எந்தக் கணித வல்லுனருடன் ஒப்பிட்டாலும் ராமானுஜனைப் 'படிக்காதவர்' என்று தான் கூற வேண்டும். தன்னால்; தனக்குத்தானே கற்பித்துக் கொண்ட மேதை அவர். அவரது கணித அறிவுமுறைசாராததாக இருந்தது. 18 ,19 வது நூற்றாண்டுகளில் அடுக்கு,அடுக்காக உலகை மேவிய கணிதம் யாவும் அவர் வழியில் தட்டுப்படாமலே/அவற்றைக் கற்காமலே அவரால் உலகிலுள்ள அத்தனை கணிதவியலாளர்களுக்கும் புதிதாகச் சொல்வதற்கு எவ்வளவோ இருந்தது.
20 ம் நூற்றாண்டில் ஒரு விண்மீன் போல அவர் திடீரென்று தோன்றியதும், உலகில் அப்பொழுது மேன்மையானதென்று புகழ் பெற்றிருந்த பல பல்கலைக் கழகங்களில் முறைப்படி அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள், கருத்துக்கள் அரங்கேறியதும் ஒரு சுவையான பரபரப்புக் கணித வரலாறு.
பின்னாட்களில் ஒருமுறை ராமானுஜனின் கணித மேன்மையை இலக்க ரீதியில் ஒப்பிட்டு ஹார்டி கூறுகையில்; ராமானுஜனின் திறனுக்கு மதிப்பு 100 அளித்தால், அப்போதைய ஜெர்மன் மகா கணித மேதை David Hilber இற்கு 80, லிட்டில்வுட்டுக்கு 30, தனக்கு 25 மட்டுமே.

ராமானுஜனின் கணித தேற்றங்கள், அவற்றின் விளைவுகள், அவரது கணிதக் கூட்டுழைப்பு, யாவும் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓரினிய கவர்ச்சிச் சம்பவமாக எண்ணி ஹார்டி களிப்படைக்கின்றார்.
ராமானுஜனுக்கு Cauchy தேற்றம், Doubly Periodic Functions போன்ற மற்ற கணிதத் துறை அறிவில் எந்தவித ஞானமும் இல்லை!! “இவற்றை எப்படி அவருக்குக் கற்றுக் கொடுப்பது” என்று மலைப்படைந்தார் ஹார்டி! ஆனாலும் அவற்றில் சிலவற்றை தன்னால் முடிந்தவரை ஹார்டி கற்றுக் கொடுத்தார்.
இது பற்றி ஹார்டி குறிப்பிடும் போது “நான் அவருக்குத் தெரியவேண்டியவை என்று சொல்லிக் கற்றுக் கொடுத்தது சரி தானா என்று தெரியவில்லை. ஏனென்றால் நான் சொல்லிக் கொடுத்ததால் அவருடைய மேதை பரிமளிப்பதைத் தடை செய்திருக்கவும் கூடுமல்லவா? ஒருவேளை நான் அவருக்குச் சொல்லிக் கொடுத்தது தான் சரி என்று வைத்துக் கொண்டாலும், ஒன்று மாத்திரம் உண்மை. அவர் என்னிடமிருந்து கற்றதைவிட நான் அவரிடமிருந்து கற்றது தான் அதிகம்” என்கிறார்.

1918 ம் ஆண்டில் ராமானுஜன் லண்டன் F.R.S விருதையும் டிரினிட்டி கல்லூரியின் Fellow of Trinity College விருதையும் ஒன்றாகப் பெற்றுப் புகழடைந்தார். அரும் பெரும் இவ் இரு கௌரவப் பட்டங்களையும் முதன்முதல் முப்பது வயதில் வாங்கிய முதல் இந்தியர் ராமானுஜன் தான்!
அவரது சீரும் சிறப்பும் உன்னதம் அடைந்து மேல்நோக்கிப் போகையில் அவரது உடல் ஆரோக்கியம் அவரைக் கீழ் நோக்கித் தள்ளியது! வேனிற் காலநிலைப் பூமியில் வாழ்ந்த ராமானுஜனுக்கு, ஈரம் நிரம்பிய குளிர்ச்சித் தனமான இங்கிலாந்துக் காலநிலை உடற்கேட்டைத் தந்தது. முதலாம் உலக யுத்தத்தின் நடுவே இங்கிலாந்து கடுமையான நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருந்த சூழலில் காய்கறிகளுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவி வந்த பின்னணியில் காய்கறி உணவை மட்டுமே நம்பி அதையும் கட்டுப்பாட்டோடு உண்டு வந்ததால் அதுவும் அவரது உடல்ப் பலவீனத்தை அதிகமாக்கியது.
ராமானுஜனைப் பயங்கரக் காச நோய் பீடித்து வீரியத்தோடு தாக்கியது. அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் கூட காச நோயிற்குப் போதிய மருந்தில்லை. இங்கிலாந்துக்குச் சென்ற சிறிது காலத்திலிருந்தே அவர் இப் பிரச்சனையால் துன்பப்பட்டு வந்தார். அவரது பெரும்பாலான நாட்கள் மருத்துவ விடுதியிலேயே கழிந்தன. ஆனாலும் அவருடைய மனதில் ஓடிக் கொண்டிருந்த கணிதப் பிரச்சினைகளின் ஓட்டம் நிற்கவே இல்லை. அவரது கணிதப் படைப்புகள் பெருகிக் கொண்டேதான் இருந்தன.
1919 இல் போர் நின்று அமைதி நிலவிய போது நோய் முற்றி; இங்கிலாந்தில் வாழ முடியாதென முடிவுசெய்து இந்தியாவுக்குத் திரும்பினார். நோயின் உக்கிரம் கூட அவரது கணிதப் பணியை எள்ளளவும் குறைக்கவில்லை. உண்மையில் அவர் தனது நோயின் வலி நீக்கியாகவே கணிதத்தைப் பயன்படுத்தி வந்தார். அவர் கணித உலகில் சஞ்சரிக்கையில் அவரது வலிகள் யாவும் மறைந்து போவதாக ராமானுஜன் குறிப்பிடுகின்றார்.
இறுதியாக 1920 ஏப்ரல் 26ம் திகதி தனது 32 ம் வயதில்; கணிதமேதை ராமானுஜன் அவர்கள் இவ்வுலகை விட்டு விண்ணுலகு ஏகினார்!!
உயிர் நழுவிச் செல்லும் கடைசிவேளை வரை அவர் கணிதத் துறைக்குப் புத்துயிர் அளித்ததை அவரது குறிப்பு நூல்கள் காட்டுகின்றன. நோய் முற்றியிருந்த காலகட்டத்தில் மட்டும் சுமார் 600 புதிய தேற்றங்களைக் கண்டுபிடித்துள்ளார் ராமானுஜன்.
தற்காலத்தில் இவரது குறிப்பு நூல்களின் நகல்கள் சென்னைப் பல்கலைக்கழகம் உட்பட மூன்று அமைப்புகளின் ஒத்துழைப்பினால் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கணித இதழ்களில் இவரது 32 ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. மேலும் அமெரிக்காவின் Illiniois பல்கலைக்கழகத்தின் கணித வல்லுநர் Bruce.C.Berndt இனால் ராமானுஜனின் குறிப்பு நூல்கள் தொகுக்கப்பட்டு விரிவான விளக்கங்களுடன் 1985 இலிருந்து 2005 வரையில் ஐந்து புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. அவற்றில் 3542 தேற்றங்கள் இருக்கின்றனவென்றும் ஏறக்குறைய 2000 இற்கும் மேற்பட்ட தேற்றங்கள் அவர் வாழ்ந்த காலத்துக்கு முன்னால் கணித உலகுக்குத் தெரியாத தேற்றங்கள் தான் என்றும் கூறுகின்றார் Bruce.C.Berndt.
நிச்சயமாக ராமானுஜன் கற்றது கடுகளவு, கணித்தது உலகளவு என்று சொன்னால் அது அவருக்குச் சற்றும் மிகையாகாது!!!
முற்றும்....

இத் தொடருக்கு உதவிய தளங்கள்:
1>>http://jayabarathan.wordpress.com/ramanujan/
2>>http://en.wikipedia.org/wiki/Srinivasa_Ramanujan
3>>http://www.math.uiuc.edu/~berndt/articles/aachen.pdf
4>>http://www-history.mcs.st-and.ac.uk/Biographies/Ramanujan.html
தொடரில் ஏதாவது பிழை இருந்தால் தயவுசெய்து சுட்டிக்காட்டவும்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}