இன்று சோனியாவின் டப்பா டான்ஸ்சாடுகிறது....


இன்று சோனியாவின் டப்பா டான்ஸ்சாடுகிறது, கூடவே தமிழக அமைச்சர்களின் பதவிகளும்....

இன்று இந்திய அரசியலில் முக்கியமான ஒரு நாள்..... தமிழகத்தில் புதுக்கோட்டை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை கணக்கெடுப்பு, ஆந்திராவில் 18 இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை கணக்கெடுப்பு, டில்லியில் காங்கிரசின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு... இவை எல்லாவற்றையும் பற்றிய ஒரு பார்வையாக இப்பதிவு அமைகிறது.
முதலில் தமிழகம்
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பெற்ற அபாரவெற்றியின் சூடு ஆறுவதற்கு முன், மீண்டும் அமைச்சர்களை புதுக்கோட்டைக்கு அனுப்பி தெருத்தெருவாகப் (வாக்குப்)பிச்சை எடுக்க வைத்தார் ஜெயலலிதா. முன்னர் சங்கரன் கோயிலில் 32 அமைச்சர்களும் தீயாய் வேலை செய்ததன் பயனாக அதிமுக 68,757 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தது. ஆனாலும் தான் செய்த சாதனைகளுக்காக(?) புதுக்கோட்டையில் ஒரு லட்சம் மேலதிக வாக்குகளைப் பெற வேண்டும் என்று உத்தரவு போட்டார்.
  அவரது உத்தரவைச் சிரமேற்கொண்ட அமைச்சர்கள் தலைமைச்செயலகத்தையே மறந்து புதுக்கோட்டையைப் பம்பரமாகச் சுற்றிவந்தார்கள். தமது சொந்தத் தொகுதியில் கூட இப்படிப் பிரச்சாரம் செய்திருக்க மாட்டார்கள். இவர்களின் கடின உழைப்புக்குப் பலன் இன்று தெரிந்துவிடும். ஒரு லட்சம் மேலதிக வாக்குகளைப் பெற முடியாது போனாலும் குறைந்தபட்சம் தே.மு.தி.க. வேட்பாளர்   ஜாகீர் உசேன் தனது டெப்பாசிட்டைத் தக்க வைத்துக்கொண்டாலே, பல அமைச்சர்கள் தமது பதவிகளைத் தக்க வைத்துக்கொள்ள முடியாமல்ப் போகலாம். எனவே இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஜாலியாக வெற்றிக் கனவில் இருக்க, அமைச்சர்களோ பேயறைந்தது போல சுற்றி வருகிறார்கள். எது எப்படியோ இன்று மதியத்துக்குள் நிலவரம் தெரிந்துவிடும். பல அமைச்சர்கள் திக்...திக்...
தமிழக மக்களுக்கு ஒரு அறிவுரை.... உங்கள் தொகுதி எம்.எல்.ஏ, உங்கள் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லையா? கவலைப்படாதீர்கள்.. அவர் சீக்கிரமே மண்டயைப் போட வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள், அல்லது நீங்களே போட்டுத் தள்ளுங்கள்... சில நாட்களிலேயே 32 அமைச்சர்கள், ஆடு, மாடு, கோழி சகிதம் உங்கள் தொகுதிக்கு வந்து உங்கள் தொகுதியை வளப்படுத்துவார்கள். உங்கள் தொகுதியும் பாதிச் சிங்கப்பூராகும். அப்போ மீதிச் சிங்கப்பூராகுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிறீர்களா? மறுபடியும் இந்தப் பந்தியை வாசித்து அதனைச் செயற்படுத்துங்கள்.
ஆந்திராவில்....
ஆந்திராவிலும் கடந்த 12 ம் திகதி 18 சட்டசபைத் தொகுதிகளுக்கும், ஒரு லோக்சபா தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது. ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவாகச் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பதவி பறிக்கப்பட்ட 16 எம்.எல்.ஏ க்களின் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டியிருந்ததன் காரணமாகவே இத் தேர்தல் நடைபெற்றது. 

ஆளும் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்கள் போடியிடுகின்றனர்.  சும்மாவே ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆந்திராவில் ஆதரவு அதிகம். ராஜசேகரரெட்டியின் நல்லாட்சியால் பலனடைந்த பெருமளவு மக்களின் ஆதரவு ஜெகனுக்கு உள்ளது. இது போதாதென்று தேர்தல் சமயத்தில் ஜெகனை முடக்கவென காங்கிரஸ் அவரை கைதுசெய்தது, ஜெகனுக்கான அனுதாப அலையையும் ஆந்திராவில் ஏற்படுத்தியுள்ளது. 18 தொகுதிகளில் 14-15 தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டியின் வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. ஆந்திராவில் ஆட்சி நடத்துவதற்கு 148 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் 151 உறுப்பினர்களே தற்போது அங்கு காங்கிரசுக்கு உள்ளனர். இந்தத் தேர்தலில் ஜெகனின் கட்சி பெரு வெற்றி பெற்றால் அது ஆந்திராவில் காங்கிரசின் ஆட்சியை நிலையற்றதாக்கிவிடும். ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி வெற்றி பெற்றால் மேலும் பலர் காங்கிரசிலிருந்து அக்கட்சிக்குத் தாவுவார்கள் என்று கருதப்படுகிறது. இதனால் அங்கு ஆட்சி கவிழுமா என்ற பரபரப்பான சூழ்நிலையும் நிலவி வருகின்றது. இதன் நிலவரமும் இன்று மதியத்திற்குள் தெரிந்துவிடும்.
புதுடில்லியில்...
ஜனாதிபதி தேர்தலில் யாரை வேட்பாளராக்குவது என்று முடிவெடுக்க முடியாமல்த் திணறிக்கொண்டிருக்கிறார் சோனியா காந்தி. பிரணாப்முகர்ஜி, ஹமீத் அன்சாரி ஆகிய இருவருமே ஜனாதிபதி வேட்பாளர்களாக காங்கிரஸ் தலைமையால் பரிசீலிக்கப்பட்டு வந்தனர். பிரணாப்முகர்ஜியை மம்தாபானர்ஜி தவிர்ந்த ஏனைய அனைத்துக் கூட்டணிக்கட்சித் தலைவர்களும் ஏற்றுக்கொண்டபோதும், மம்தா, அவரை ஏற்றுக்கொள்வதாக இல்லை. மம்தாவும் பிரணாப்பும் மேற்கு வங்கத்தில் எதிரெதிர் முகாமில் அரசியல் செய்தவர்கள். தமிழகத்தில் ஜெவும் கலைஞரும் போல. எனவே பிரணாப்பை ஜனாதிபதியாக்கி அழகு பார்க்க மம்தா தயாரில்லை. மம்தாவைப் பொறுத்தவரை மன்மோகன்சிங்கை ஜனாதிபதியாக்கி விட்டுத், தான் பிரதமராகக் கனவுகாண்கிறார் போலுள்ளது. அவரது கனவு பகற்கனவு என்பது அநேகமாக இன்று அல்லது நாளை உறுதியாகும். மம்தாவைப் பிரதமராக்க நிச்சயமாகச் சோனியா விரும்பமாட்டார்.

சோனியா காந்தியைப் பொறுத்தவரை பிரணாப்பை ஜனாதிபதியாக்குவது என்பதும் அவரது விருப்பத்திற்குரியது அல்ல. கடந்த முப்பது வருடமாக பிரணாப்பை ஓரம்கட்டி வந்ததற்கு, பிரணாப் ஜனாதிபதியானவுடன் பழிவாங்கி விடுவாரோ என்று சோனியா அச்சப்படுகிறார் போலுள்ளது. இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி கிடைத்தவுடன் “அப்படியானால் ஜனாதிபதி என்னைத் தற்காலிகமாக பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளச் சொல்வார். நான் உடனே பதவியேற்கத் தயாராக வேண்டும்” என்று தன்னை மறந்து பிரணாப்முகர்ஜி உதிர்த்த வார்த்தைகள், ராஜிவ்காந்தி அவரை ஒதுக்குவதற்குக் காரணமாக இருந்தது. இன்றுவரை அவர் பிரதமர் ஆவது நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் தடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. இப்போது கிடைத்துள்ள சான்சை வைத்து பிரணாப் ஜனாதிபதியானால், காங்கிரசின் பட்டத்து இளவரசனான 

ராகுல்காந்தி பிரதமராக முடிசூடிக்கொள்ளும் நிலை வரும்போது, பிரணாப் அதற்கெதிராக ஏதாவது நடவடிக்கை எடுத்து, பழிவாங்கி விடுவாரா என்று சோனியா அச்சப்படுகின்றார் போலுள்ளது. ஆனாலும் தற்போது வேறு வழியில்லாமலே கூட்டணிக் கட்சிகளைச் சமாளிப்பதற்காக பிரணாப்பின் பெயரும் பட்டியலில் வந்துள்ளது. அநேகமாக பிரணாப்பே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. தனது சொந்த அச்சத்தை ஒதுக்கி வைத்து மத்திய அரசைத் தக்க வைப்பதற்காக பிரணாப்பை ஜனாதிபதி வேட்பாளராக்கி, அவருக்கு பாரதிய ஜனதாவின் ஆதரவை வேண்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் சோனியா.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}