யாழ்ப்பாணத் தமிழ் - என் தந்தை மொழி!தமிழ் உலகளவில் ஏறத்தாழ 70 மில்லியன் மக்களால் 70 மில்லியன் முறைகளில் பேசப்படுகிறது. மொழி தமிழ் என்பது எழுத்த வழக்கில் ஒன்றே எனினும், அது ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் ஒவ்வொரு கலாசாரத்துக்கும், ஒவ்வொரு மதத்துக்கும், சாதிக்கும் தனித்தனி வடிவம் பெறுகிறது. மனிதர்களுக்குமே. சிலகாலத்தில் பிராந்திய வழக்குகளே தாய்மொழியிலிருந்து பிரிந்து கிளைமொழியாகிவிடுகின்றன.

அவ்வாறாக மொழி எடுக்கும் வடிவங்கள்தான் வட்டார வழக்கு என்று வழங்கப்படுகிறது. dialect. காலம், புவியியல், மதம், அருகிலுள்ள மொழி என்று பல காரணிகளால் ஒவ்வொரு பிராந்தியத்திலும் உருமாற்றப்படுவதே, சிலவேலைகளில் சிதைக்கப்படுவதே பிராந்திய வழக்கு. ஆனால் சிலவேளைகளில் சிதைக்கப்படாது தப்பித்து பிழைக்கும் மொழியும் பிராந்திய வழக்காக இருப்பதுண்டு. அவ்வாறான வளமான வட்டார வழக்கே யாழ்ப்பாணத் தமிழ்மொழி. உண்மையில் யாழ்ப்பாணத்தமிழை வட்டார வழக்கு என்று கொள்ளமுடியாது. ஏனெனில் அதனிலேயே உள்ளுக்குள் பல வட்டார வழக்குகள் இருக்கின்றன. மேலும், இது தாய்த்தமிழிலிருந்து பிரியவில்லை என்பதுவும் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

யாழ்ப்பாணத் தமிழ் எப்போது தோற்றம் பெற்றது, அல்லது தமிழிலிருந்து எப்போது பிரிந்தது, அல்லது இதிலிருந்து தமிழ் எப்போது பிரிந்தது... (இது கொஞ்சம் அதிகம்தான்.) யாழ்ப்பாணத்துக்கு தமிழ் எப்போது வந்தது.. எல்லாமே அறியப்படாத விடயங்கள். யாழ் இசைக்கும் பாணன் ஒருவனது பாடலுக்கு மயங்கி மன்னன் ஒருவன் பரிசாக வழங்கிய மணற்றிட்டே யாழ்ப்பாணமானது என்ற கதை ஒன்று காற்றோடு உள்ளது. அத்தோடு பாணர்கள் யாழ் இசைத்து வாழ்ந்த காலம் சங்ககாலம்.  மற்றபடி இம்மண்ணில் தமிழ் எப்போதுமுதல் காதுகளில் பாயத் தொடங்கியது என்பதற்கு வரலாற்றாதாரங்கள் இல்லை. ஆனால் மொழியியலாளர்களது கருத்துப்படி யாழ்பாணத்தில் தமிழானது தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே வழங்கப்ப்டட்டு வந்திருக்கலாம் என்று கருதி மகிழ இடமுண்டு. (இதுதான் சாட்டென்று கல்தோன்றி மண்தோன்றி கடல்தோன்று முன்தோன்றி தான்தோன்றி வளர்ந்த செழுந்தமிழ்’, குமரிக்கண்டம்,மனிதன் தோன்றமுதல் குரங்குகள் பேசியது யாழ்பாணத்தமிழ்தான், அது, இது என்று தொடங்கிவிடாதீர்கள். )
+    +    +
தமிழின் முறைமைமாராத வட்டார வழக்கான யாழ்ப்பாணத்தமிழை பேசுபவன் என்கிற் முறையில் எனக்கு சிறிது கர்வம்தான். தனித்தமிழ் தாய்மொழி என்றாள் யாழ்ப்பாணத்தமிழ் எனக்கு தந்தைமொழி. மண்ணின்மொழி. மனதின்மொழி. உணர்ச்சிவசப்படாது நடுநிலையாக பார்த்தாலே பெருமைகள் நிறைந்த மொழி. தமிழின் தாய்மொழி.+    +    +   
யாழ்பாணம் என்கிற சொல்லே தமிழின் கம்பீரம்தான். தமிழ் என்கிற மொழியின் சிறப்பெழுத்து ழகரம். வேறு எந்த மொழியிலும் இருப்பதாக சொல்லப்படாத தனித்துவ ஓசை. அந்த அரிதான ஓசை மொழியின் பெயரிலேயே இருப்பது ஒரு கர்வம். அதே கர்வம்தான் யாழ்ப்பாணத்துக்கும், ஈழத்துக்கும் இருக்கிறது. ழகரம். யாழ்ப்பாண வட்டார வழக்கில் இது பலதடவைகள் வரும். வாழ்த்துவதுமுதல் வசைச்சொல்வரை. அத்தோடு யகரம் மொழிக்கு முதலில் வரும் ஒரே வாய்ப்பு யாகாரம். (ஆவோடு அல்லது யகரம் முதலாது - தொல்காப்பியம்.) மொழியின் அடுத்த சிறப்பெழுத்து ணகரம். இவை எல்லாமே யாழ்ப்பாணத்தில் வருகிறது.

·         சுட்டெழுத்துக்கள் மூன்று. அ,,உ. (அவன், இவன், உவன்.) இருவர் பேசும்போது இருவருக்கும் தொலைவிலுள்ளவன் அவன், பேசுபவனுக்கு அருகிலுள்ளவன் இவன், கேட்பவனுக்கு அருகிலுள்ளவன் உவன். (இவ்வாறே ஏனையவையும்.) இதில், தொல்காப்பியத்தில் சொல்லப்பட்ட இம்மூன்றில் உகரச் சுட்டு வழக்கிலுள்ளது யாழ்ப்பாணத் தமிழில் மட்டுமே. எழுத்து வழக்கில்கூட இல்லை. (உவங்கள், உதுகள், உந்தக்கதை... இவ்வாறாக.) சங்க இலக்கியங்களில் உது, உவள், உவன், ஊங்கு, உம்பல் போன்ற சுட்டுப்பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

·         வினாவெழுத்துக்கள் ஐந்து. அவற்றில் ஓகாரம் வினாவின் இறுதியில் வருவதான வினாவும், ஏகாரம் இறுதியில் வருவதான வினாவும் யாழிலேயே உள்ளன. (, யா முதலும், ,ஓ ஈறும், இருவழியும் வினாவாகும். - தொல்காப்பியம்) (இருக்குமோ? வருமோ? (இருக்குமா? வருமா?) மற்றும் வந்துட்டியே? நான் போகட்டே?(வந்துவிட்டாயா? நான் போகலாமா?))

·         யாகாரம் இப்போது வழங்கப்படுவதுபோல், ஆகாரம் பெரிதாக வழங்கப்படுவதில்லை. ஆனால் யாழில் உண்டு. (ஆரப்பா அது? (யாரப்பா அது?) )


·         முன்னிலைச் சொற்களில் நீ, நீங்கள் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட நீர் என்கிற முன்னிலைச் சொல்லும், அதனுடன் இணைந்த வினைச்சொற்களும் தமிழில் வழக்கொழிந்துவிட்டன, ஆனால் இன்றளவும் அது யாழ்ப்பாணத்தில் செலாவணியில் ள்ளது. உண்மையில், முன்னிலையில் உள்ள ஒருவருக்கு மரியாதை கொடுக்கும்போது நீங்கள் என்பது இலக்கானப்பிழை ஆகும், ஆனால், நீர் என்கிற மரியாதைச்சுட்டு பிழையாகாது. அத்துடன் தமக்கு கீழானவரை நீ என்றும், தனக்கு மேலானவரை நீங்கள் என்றும் அழைப்பதுபோல, தமக்கு நிகரானவரை அழைக்கும் சுட்டாக நீர் உள்ளது. பெரும்பாலும் யாழ்ப்பாண ஆண்களால், அவரவர் மனைவிகளும், சிறுவர்களால், அவர்களது தோழியரும் நீர் என விளிக்கப்படுவார். இது வெறுமனே ஒரு வட்டார வழக்காக மட்டுமல்லாது, பெண்களை சமமாக மதிக்கும் யாழ்ப்பாண பாரம்பரியத்தையும் காட்டுகிறது. இந்த வழக்கம் தமிழகத்தில் இல்லை.

·         நீர் என்பதை இதுவரை நீ என அழைத்தவருக்கு பயன்படுத்தும்போது, அவரை விலக்கியதை காட்டுகிறது. அவ்வாறே, இதுவரை நீங்கள் என அழைத்தவருக்கு பயன்படுத்தும்போது, பேசுபவரின் தரத்தை குறைக்காது, கேட்பவரை அவமதிக்கும் உத்தியாகிறது.

·         நீர் என்கிற சொல்லுடன் இணைந்ததாக பல சொற்கள் யாழ்ப்பாணத்துக்கு மட்டும் உள்ளதுபோல, (வந்தீர், போம் (வந்தாய், போ.)) நீங்கள் என்கிற சொல்லை எழுவாயாகக் கொண்ட வாக்கியங்களுக்கென்று பிரத்தியேக வினைச்சொற்களும் இங்கே உள்ளன. எழுத்து வழக்கில் நீங்கள் வந்தீர்கள் என்பதாக வரும் வாக்கியம் யாழில் நீங்கள் வந்தநீங்கள் என்பதாக வரும். வந்தீர்கள் என்பது வந்தீர் என்கிற சொல்லை வலுக்கட்டாயமாக பன்மையாக்கியது. வந்தநீங்கள் என்பது நேரடிச்சொல். எழுத்து மொழியைவிட யாழின்மொழி தரமுயரும் உதரணங்களுள் இஃதொன்று.


·         வந்தேன் என்கிற பதம் யாழில் வந்தனான் என வழங்கும். (அல்லது வந்தன்) இது சங்கத்தமிழுக்கு முற்பட்ட வழக்கென்று அறிஞர்கள் முடிவெடுத்துள்ளனர். (போனான், சொன்னான்... என்றவாறாக) இது நான் வந்தனான், நீ வந்தனீ, நீர் வந்தனீர், நீங்கள் வந்தநீங்கள் என்பதாக அமையும். இது மொழியியல் ரீதியாக சற்று சீர்படாத அமைப்பாக இருப்பதால், இது காலத்தால் முற்பட்டதாக கருதப்படுகிறது.

·         யாழ்ப்பாணத்தின் சில இலக்கண மரபுகள் தொல்காப்பியத்திலே கூறப்படாதவையாக உள்ளன. இதனால், இது தொல்காப்பியத்தால் வரம்புக்குள் கொண்டுவரப்படாததாக, அல்லது, தொல்காப்பியருக்கு முற்பட்டு, அவரது கவனத்துக்கு வராது போனதாக, காலத்தால் முற்பட்டதாக இருக்கவேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அவற்றில் பலர்பால் படர்க்கை வினைமுற்று விகுதியும் ஒன்றாகும்.
அவையள் வருவினம்' (அவர்கள் வருவார்கள்.) இவ்வாறாக வருவினம், போவினம், பார்த்திச்சினம் (வருவார்கள், போவார்கள், பார்த்தார்கள்) என்று இலக்கணத்துக்குள் வராத ஒரு வழக்கு இங்கே உள்ளது. இது உண்மையில் தாம் வருவினம் என்பதாக வழங்கப்பட்டிருக்கவேண்டும். அப்படியாயின், முன்னர் கூறப்பட்ட நீ வந்தனீ... என்பதான யாழ்ப்பாண மரபுடன் ஒட்டுகிறது.

·         இதேபோல் பன்மையில் பாலை குறிப்பிடும் வழக்கம் எழுத்தில் இல்லை. ஆனால் யாழ்பாணத்தில் அது காணப்படுகிறது. (வந்தாங்கள்(வந்தான்+கள்), போனாளவை(போனாள்+அவை) என்பதாக. இது ஒரு விசேட அம்சமாகும்.)

·         ஏராளமான பழந்தமிழ் சொற்கள் யாழ்பாணத்தில் பயன்பாட்டில் உள்ளன. அண்ண (அண்ணை) – இவ்வாறான வழங்கல் கலித்தொகையில் வருகிறது. கொடுத்தி (கொடுத்தல்) என்பது குறுந்தொகை. கொடுத்தியோ? என்பது யாழ். அருமந்த என்கிற சொல் அரிதான என்கிற கருத்தில் பயன்டுகிறது. (அருமந்த காசு) இது அருமருந்து அன்ன என்கிற செந்தமிழ் தொடரின் திரிபாகும். மினக்கெட்டு (வினை கெட்டு), கொடுவாக்கத்தி (கொடுவாள் கத்தி), ஆய்க்கினை (ஆக்ஞை)

·         யாழ்ப்பாணத் தமிழுக்கேன்றே பிரத்தியேகமாகவும் சொற்கள் உள்ளன. அவை பெரும்பாலும் தற்போது வழக்கொழிந்து போயுள்ளன. விண்ணன், தேட்டம், இளந்தாரி, குமர், பறை, வியளம்... இவ்வாறாக.


·         யாழ்ப்பாணத்தின் உயர்வுப்பெயர்கள் தனித்துவமானவை. உறவுகளுக்கு பொதுவாகப் பெயர் வைத்து அன்னியப்படுத்தாது, விசேட உறவுமுறைமூலம் அன்னியோன்னியப்படுத்தும் முறை எங்களுடையது. அப்பாவின் பெற்றோர் அப்பப்பா, அப்பம்மா எனவும், அம்மாவின் பெற்றோர் அம்மாப்பா, அம்மம்மா எனவும் வழங்கப்படுவர். முற்காலத்தில் அப்பாவை அப்பு, ஐயா எனவும், அம்மாவை ஆய்ச்சி எனவும் அழைக்கும் வழக்கம் இருந்தது. அதுபோலவே, தாயோடு கூடப்பிறந்த ஆணை அம்மான் எனவும், தந்தையோடு கூடப்பிறந்த பெண்ணை அத்தை என்றும் அழைத்தனர். அவர்களின் துணைகளை முறையே மாமி, மாமா என அழைத்தனர். இப்போது போதாவாக மாமா, மாமி மட்டுமே எஞ்சியுள்ளது.  குறித்த உறவுகள் ஒன்றுக்கு மேற்பட்டு இருக்கும்போது சீனி, குஞ்சு, ஆசை போன்ற பெயர்கள் பயன்படுகின்றன. (சீனியாச்சி, குஞ்சம்மா, ஆசையண்ணா...)
·         உங்கள் அம்மா என்பது சொல்லுபவரின் நெருக்கத்தைப்பொறுத்து கொம்மா ஆகிறது. இவ்வாறே கொப்பா, கொண்ணை, கொக்கா, கொத்தான். (உங்க + அம்மா => கொம்மா.). இவ்வாறே உங்கள் ஆத்தை என்பது மருவி காத்தை அல்லது கோத்தை ஆனது. ஆனால் தற்போது இவை அனைத்தும் வசைச்சொற்களில் மட்டுமே பயன்பட்டு வருகின்றன.
·         ரகர, றகர மற்றும் நகர, னகர, ணகர வேறுபாடுகளை தெள்ளென உச்சரிக்கும் வழக்கம் தற்போது வேறு எந்த வட்டார வழக்கிலும் இல்லை. ஆனால் அது இங்கே அவ்வாறே உள்ளது.
இப்பிடி இன்னும் கனக்க சொல்லலாம் யாழ்ப்பாணத் தமிழப்பற்றி. அந்தளவுக்கு எனக்கே தெரியாது எந்ததுதான் உண்ம. நல்ல வடியாய் ஆராய்ச்சி செய்துபோட்டு திருப்பி இந்தக் கட்டுரைய எழுதுறன் என்ன?வணக்கம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}