இராணுவத்தை நிராகரித்தவர்கள்


 
“நல்ல போர் என்றும் ஒன்றுமில்லை, கேட்ட அமைதி என்றும் ஒன்றுமில்லை.பெஞ்சமின் பிரங்க்ளின்

மனிதன் கண்டுபிடித்தவற்றிலேயே மிகவும் மோசமானது யுத்தம். சகலதினதும் விலைகள் ஏறுவதற்கும், மனித உயிரின் விலை குறைவதற்கும் அதுதான் காரணம். சாவு என்பதை இயற்கையைத்தவிர வேறு எது ஏற்பாடு செய்தாலும் அது கொலைதான். (கமல்ஹாசன்) அப்படியான மில்லியன் கணக்கான கொலைகள் நடக்கும் சட்டரீதியான நிகழ்வுதான் யுத்தம்.
இருபதாம் நூற்றாண்டு நடந்த யுத்தங்களில் மட்டும் ஏறத்தாழ 140மில்லியன் மனிதர்கள் மாண்டிருக்கிறார்கள். சொத்தழிவு, இயற்கை சேதப்படல், உயிரினங்களுக்கு தொந்தரவு என்று இன்னும் எத்தனை பாதகங்கள். வருடம்தோறும் உலகநாடுகள் யுத்தங்களுக்காக தமது இராணுவங்களுக்கு செலவிடும் தொகை மொத்தமாக என்ன தெரியுமா? 2.2டிரில்லியன் அமெரிக்க டொலர். ($ 2,200,000,000,000)

இராணுவத்துக்காக ஐந்து சதத்தைக்கூட வீணாக்கக் கூடாதென்பதற்காக, மக்களின் உயிரைவிட எதுவுமே முக்கியமாகவிருக்க முடியாது என்று  உலகில் ஐந்து நாடுகள் இராணுவத்தை தவிர்த்துள்ளன, நிராகரித்துள்ளன.
1)       ஹைடி (Haiti)
ஹைடி ஏற்கெனவே வறுமையில் நொந்துபோன நாடு. போதாததற்கு 2010இல் ஒரு நிலநடுக்கம் வேறு (7.0ரிக்டர்) குலுக்கிவிட்டது. இதிலே இராணுவமாவது, போராவது...
1990ஆம் ஆண்டு ஹைடி அரசை இராணுவம் பிடித்தது. 94வரை இருந்த இராணுவ ஆட்சியை தனது இராணுவத்தை வைத்து ஒடுக்கிய ஐ.நா. மறுபடியும் மக்களாட்சியை கொண்டுவந்தது. மறுபடி தமது கதிரைக்கு ஆபத்து வருவதை விரும்பாத, அந்நாட்டுக்கு ஜனாதிபதிப் பதவிக்கு வந்தவர்கள், இனிமேல் ஆணியே புடுங்கவேண்டாம் என்று இராணுவத்தையே ஊரைவிட்டு ஒதுக்கிவிட்டார்கள். பொலிஸ் படையைவைத்துத்தான் எல்லாமே.

2)      கோஸ்டா ரிகா (Costa Rica)
கோஸ்டா ரிகா மக்கள் வாழ்வது சொர்க்க வாழ்க்கை, அங்கே இராணுவம் எதற்கு? மக்கள் அனைவருமே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் அங்கே.
ஏற்கெனவே 1870 காலகட்டத்தில் இதுவும் இராணுவ ஆட்சியை அனுபவித்திருந்தாலும், 1948 இல் நடந்த ஒரு அரசியல் பிணக்கோடுதான் இராணுவம் கலைக்கப்பட்டது. பதிலாக இந்நாடு பொலிசை வருடத்துக்கு 300 மில்லியன் டொலர் செலவு செய்து ஆயத்தமாக வைத்திருக்கிறது.

3)      மொரிஷியஸ் (Mauritius)
மக்கள் தேனிலவு கொண்டாவென்றே அரசாங்கம் நடத்தும் நாடு இது. சுற்றுலாவால் செல்வம் கொழிக்கும் ஆபிரிக்க நாடு. மிகப்பெரிய சண்டைகளின்போது இடையில் அகப்பட்டு துன்பப்பட்டதால், இது இராணுவம் வைத்துக்கொள்ளவேன்றே யோசிக்கவில்லை. 1968இல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் கிடைக்கும்முன் பிரிட்டன் – ஃபிரான்ஸ் பிரச்சனையில் இழுபட்டது. பின்னர் 2ஆம் உலகப்போரில் பிரிட்டனின் கப்பல்தளமாக துன்பப்பட்டது. அப்போதே இது தும்டா சாமி! சொல்லிவிட்டது. இதன் பாதுகாப்புக்கு அமெரிக்கா உதவுகிறது. (ஏனென்றால் இங்கு சுற்றுலா வரும் தனது நாட்டு மக்களுக்காக.) கடலோரப் பாதுகாப்பை இந்தியா செய்கிறது. மொரிஷியசுக்கு வாய்த்த அடிமைகளை பாருங்கள்!
4)      பனாமா (Panama)
1903இல் பனாமா கால்வாய் கட்டுமானங்களின்போது அந்தப் பிரதேசத்தின் முழு நிர்வாக அதிகாரங்களும் அமெரிக்காவின் கைக்கு போனது. அத்தோடு, பிற்காலத்தில் எல்லைகளூடாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கவும் அமெரிக்கப்படைகள் வந்தன. ஆனால், பனாமாவின் இராணுவத்தால் உள்நாட்டு அரசியலை குழப்பம் வந்தபோது, உள்நாட்டு இராணுவமே இப்படி என்றால்.. என்று யோசித்த அரசு, அமெரிக்க ராணுவத்துக்கு bye காட்டிவிட்டது. அப்படியே தனது இராணுவத்துக்கும்.
5)      மிக்ரோனேசியா (Micronasia)
இரண்டாம் உலகப்போர் வரை ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது பசுபிக் பிராந்தியத்தின் மிக அபாயமான பகுதியாக அது இருந்தது. உலகப்போரின்போது அது ஒரு வாகனத் தளமாக பயன்பட்டது. பொரின்பின் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்தது. ஆகவே நாட்டுக்கென்று தனியாக இராணுவம் தேவைப்படவில்லை. இப்படியே 1979 வரை சமாளித்துவிட்டது. அப்போதுதான் அமெரிக்க அதற்கு சுதந்திரம் கொடுத்தது. உட்கார்ந்து யோசித்த மக்கள், ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன்படி, மிக்ரோனேசிய மக்கள் இன்றுவரை அமெரிக்க இராணுவத்தில் வேலை செய்து வருகிறார்கள். சொல்லப்போனால் ஈராக் ஆப்கானிஸ்தான் யுத்தங்களில்கூட விகிதாசாரப்படி அமெரிக்கர்களை விட இவர்களின் சாவுதான் அதிகம். இவர்களுக்கு இராணுவம் தேவைப்படும்போது அமெரிக்கா உதவும். அந்த டீல் அமெரிக்காவுக்கு ரொம்பவே பிடித்திருந்தது.


இராணுவம் தேவைப்படாத நாடுகள்தான் சொர்க்கம். மக்கள் முக்கியம் என்று நினைக்கும் எந்த அரசும் யுத்தத்தை விரும்பாது, யுத்தத்தை விரும்பாத எந்த நாட்டுக்கும் இராணுவம் தேவையில்லை. சில நாடுகளில் வாழ்வதே போராட்டம்தான், போர் எதற்கு தனியாக?

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}