வீரப்பன் @ 01: ராஜ்குமார் கடத்தப்படுகிறார்


வீரப்பனின் வாழ்க்கையையும், ராஜ்குமார் கடத்தலையும் பற்றிய இத் தொடர், திரு.தினகரால் எழுதப்பட்ட வீரப்பனின் நட்சத்திரக் கடத்தல் என்ற நூலினதும், திரு.சொக்கனால் எழுதப்பட்ட வீரப்பன்:வாழ்வும் வதமும் என்ற நூலினதும் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.

ஜூலை 30 - 2000                                            தொட்ட காஜனூர்- தமிழக எல்லை
    இன்றைய தினம் சந்திரன் பூமிக்குப் பின்னால் சென்று ஒளிந்து கொண்டிருக்கிறான். இதைத்தான் அமாவாசை என்றும் அழைக்கிறார்கள். பழமை போற்றும் இந்துக்கள் விசேஷ பூஜைகளிலும் சடங்குகளிலும் ஈடுபடுகின்ற நாள். மாமிச உணவு புசிக்கின்ற பழக்கமுடைய இந்துக்கள் கூட இன்றைய நாளில் சைவ உணவு தான் உண்பார்கள். இப்படியான நிலையிலேயே ஒரு வீட்டில்-பழைய வீட்டில் பின்புறமுள்ள சமையல் அறையில் ஒரு முக்கிய உணவாக வெள்ளாட்டு மூளைக்கறி தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்தப் பழைய வீட்டின் முன்பாக 75 லட்ச ரூபா செலவில் கட்டப்பட்ட புதிய பங்களா கம்பீரமாக நின்றுகொண்டிருக்கின்றது. அந்த பங்களாவுக்கு இன்னும் குடிபுகு விழா நடத்தப்படவில்லை. இரவு 7 .00 மணியிலிருந்து மழை பொழிந்து தள்ளிக் கொண்டிருக்கிறது. கூடவே கடுமையான இடி முழக்கமும்.
7 மணியிலிருந்தே அந்தப் பழைய வீட்டுக்குள் மழையின் காரணமாக அடைபட்டிருந்த ஏறத்தாள 11 பேருக்கும் 9 மணியளவில் இரவு உணவு பரிமாறப்படுகின்றது. அங்கிருந்தவர்களில் முக்கியமானவர் ராஜ்குமார். சுமார் 72 வயதைத் தொட்டுவிட்ட முதியவர். சினிமாவில் இன்னமும் காலேஜ் ஸ்ரூடென்ட்டாகவே  பிரித்து மேய்ந்து கொண்டிருக்கும் கன்னட சினிமாவின் மிக முக்கிய தூண்.அவருக்கு வெள்ளாட்டு மூளைக் கறி என்றால் கொள்ளைப் பிரியம். அவருக்காத்தான் அதை ஸ்பெசலாக தயார் செய்திருக்கிறார்கள்.
அவர்கள் இரவு உணவை முடிக்க மழையும் பொழிவதை நிறுத்தி லேசாகத் தூறத் தொடங்குகின்றது. 9.30 மணியளவில்ராஜ்குமார் உள்ளிட்ட சிலர் T.V முன் அமர, மற்றும் சிலர் (கோவிந்தராஜு, நாகேஷ், நாகப்பா மரடாகி, வட்டா நாகராஜ்,ரவி) அந்தப் பழைய வீட்டில் தூங்குவதற்கு இடம் போதாததால் புதிய பங்களாவை நோக்கி நடக்கத் துவங்குகின்றனர்.
திடீரென்று வட்டா நாகராஜின் சட்டைக் காலரை இரும்புப் பிடி ஒன்று பிடித்து ழுக்கின்றது. "நான் வீரப்பன் " - கரகரப்பான ஒரு குரல் ஒலித்தது.
அந்த இருட்டிலும் அவனது பெரிய மீசை கம்பீரமாகத் தெரிகின்றது. அவனுடன் கூடவே சுமார் 10 அல்லது11 பேர் இருப்பதும் நன்றாகவே தெரிகின்றது. சிலர் ஆலிவ் பச்சை நிற உடை அணிந்திருந்தார்கள். இன்னும் சிலர் காக்கி உடையில் இருந்தார்கள்.
"ராஜ்குமார் எங்கே?" -வீரப்பன் கேட்கிறான். அவர் பழைய வீட்டில் இருப்பதாக கோவிந்தராஜு சொல்கிறார். தன்னுடன் வந்தவர்களில் 5 பேரை அவர்களுக்குக் காவலாக நிறுத்திவிட்டு எஞ்சிய சகாக்களுடன் பழைய வீட்டை நோக்கி நடக்கிறான். வீட்டின் பிரதான கதவு தாழிடப்பட்டிருக்கவில்லை.
வீட்டினுள் ராஜ்குமார் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியில் கன்னடச் செய்தி அறிக்கையைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். அருகில் பர்வதம்மா (ராஜ்குமாரின் மனைவி) கோரைப் பாயில் படுத்திருந்தார். அவர்களுக்கு எதிரில் தீப்தி, பல்லவி, காந்தராஜ்(உறவினர்கள்) ஆகியோரும் சன்னம்மாவும்(வேலைகாரி) இருந்தனர்.
வீரப்பன் பிரதான வாயில் வழியாக நுழைந்து ஹாலின் மையத்தில் வந்து நிற்கிறான். இரண்டு பேர் உள்ளே நுழைந்து வீரப்பனின் பக்கத்தில் வந்து நிற்கிறார்கள்(பாதுகாப்பாம்...) இன்னொருவன் பிரதான வாயிலில் காவலுக்கு நிற்கிறான். எஞ்சியோர் வீட்டைச் சுற்றி நின்றனர்.
"ராஜ்குமார் எங்கே?"-அதே கரகரப்பான குரலுடன் வீரப்பன். வீரப்பன் ராஜ்குமார் பற்றிக் கேள்விப்பட்டிருக்கக் கூடும், தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே இந்தக் கேள்வி அவசியமானது தான்.
[ராஜ்குமார் எழுந்திருக்கிறார்]
வீரப்பன் துப்பாக்கியை ராஜ்குமாரின் முன் நீட்டி;"நான் வீரப்பன். என்னோடு வா!"

உடனே பர்வதம்மா வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து "என்னப்பா,உனக்கு எவ்வளவு பணம் வேண்டும் ? அவரை விட்டு விடப்பா" என்று தமிழில் வீரப்பனைப் பார்த்துச் சொல்கிறார். அவருக்கு ஓரளவு நன்றாகத் தமிழ் கதைக்கத் தெரியும். ராஜ்குமாருக்கு கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும்.
இப்போது வீரப்பனுக்குப் பக்கத்தில் நின்றிருந்த இரண்டு பேரும் ராஜ்குமாருக்குப் பக்கத்தில் வந்து நிற்கிறார்கள்.அவர்களில் ஒருவன் நைலான் கயிற்றால் ராஜ்குமாரின் கைகளைக் கட்டுகிறான்.
வீரப்பன் உரத்த குரலில் சொல்கிறான்-"யாரும் சத்தம் போடக் கூடாது. நான் அவரை அழைத்துச் செல்லப் போகிறேன்".
"நாங்கள் உனக்கு என்ன தீங்கு செய்தோம்? எதற்காக இப்படிச் செய்கிறாய்?"பர்வதம்மா வீரப்பனைப் பார்த்துக் கேட்கிறார்.
"அதையெல்லாம் இப்போது என்னிடம் கேட்காதே!" ராஜ்குமாரை நோக்கி விரலை நீட்டியபடி..."சார் எனக்கு வேண்டும்!"வீரப்பன்.
ராஜ்குமார் இடைமறிக்கிறார்...."பார்வதி, நீ பயப்படாதே. நான் அவரோடு போகிறேன்.எதுவும் நடந்து விடாது."
வீரப்பன் பையிலிருந்து ஓர் ஒலிநாடாவை எடுத்து பர்வதம்மாவிடம் கொடுக்கிறான். -"நான் அவருக்கு ஒரு தீங்கும் செய்ய மாட்டேன். என்னிடம் அவர் பத்திரமாக இருப்பார். இந்த ஒலிநாடாவை கர்நாடக முதலமைச்சரிடம் கொடுத்து விடுங்கள்"
ராஜ்குமாரின் மூக்குக் கண்ணாடி கீழே விழுகின்றது. பர்வதம்மா அதைக் குனிந்து எடுப்பதற்குள் வீரப்பன் அதைக் கையில் எடுத்துக் கொள்கிறான்.
"காவல் துறைக்குச் சொல்லாதீர்கள், சொன்னால் அவரை சுட்டு விடுவேன்" என எச்சரித்து விட்டு; வீரப்பன், அவரது முதுகில் தட்டி வலது கையால் தன்னுடன் வரும்படி சைகை காட்டுகின்றான்.
ராஜ்குமார் வாசலை நோக்கி நடக்கிறார். அவர் வேட்டியும் சட்டையும் அணிந்திருக்கிறார். பர்வதம்மா என்ன செய்வது,ஏது செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் வாசலைப் பார்த்தவண்ணம் இருக்கிறார். ராஜ்குமார் செருப்பைக் காலில் மாட்டிக் கொண்டு பண்ணை வீட்டிலிருந்து வெளியே நடக்கின்றார். ரத்தக் கொதிப்புக்கும் மூட்டு வலிக்கும் தேவையான மருந்துகளை அவரால் எடுத்துச் செல்ல முடியவில்லை. பின்புறம் கொட்டகையில் இருக்கும் வேலைக்காரர்களுக்கு நடப்பது எதுவுமே தெரியவில்லை.

வீரப்பன் ராஜ்குமாரை வட்டா நாகராஜும், மற்றவர்களும் அமர்ந்திருந்த இடத்துக்கு அழைத்து வருகின்றான். நாகராஜ் காவல் துறை அதிகாரிக்குரிய ஆஜானுபாகுவான தோற்றம் உடையவர்.(நிச்சயமாக இந்தியக் காவல்துறை இல்லை) அவர் யாரென்று கேட்ட வீரப்பன், கையால் அவரைத் தட்டிக் கொண்டே இருக்கிறான். நாகராஜ் ஆசிரியர் என்றும், சர்க்கரை வியாதி உள்ளவர் என்றும் ராஜ்குமார்;வீரப்பனிடம் கூறுகிறார். அதன் பின் வீரப்பன் நாகராஜைத் தொடக் கூட இல்லை.
கோவிந்தராஜு(ராஜ்குமாரின் மருமகன்), நாகேஷ்(உறவினர்) ,நாகப்பா (உதவியாளர்) ஆகிய மூவரும் ராஜ்குமாருடன் வர வேண்டுமென வீரப்பன் முடிவெடுக்கிறான். "காவல் துறையிடம் சொன்னால் அவரை சுட்டுவிடுவேன்" என நாகராஜைப் பார்த்துக் கூறிக் கொண்டே நகர ஆரம்பிக்கிறான் வீரப்பன்.
சில அடி எடுத்து வைத்த பின் உரத்த குரலில் "அம்மாவிடம் ஒரு ஒலி நாடா கொடுத்திருக்கிறேன், கர்நாடக முதலமைச்சரிடம் அது உடனே போய்ச் சேர வேண்டும்" பிடிபட்டவர்களையும் அழைத்துக் கொண்டு விறுவிறுவென நடந்து, இருட்டில் அவர்களின் கண்ணில் இருந்து மறைகிறான் வீரப்பன்.
**********************
ஜனவரி 18 1952 அன்று காவிரிக்கரையிலே, அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒதுக்குப்புறமான, தமிழ்நாடு--கர்நாடக எல்லைக் கிராமமான கோபிநந்தம் என்கிற கிராமத்தில் தான் முனுசாமிக்கவுண்டர் , புலித்தாயம்மா ஆகியோருக்கு மகனாக வீரப்பன் பிறந்தான். கு.சி.முனுசாமி வீரப்பக்கவுண்டர் என்பதுதான் அவனுடைய முழுப்பெயர். சனங்கள் அவனை 'மோலக்கண்' அல்லது 'வீரப்பன்' என்று அழைத்து வந்தார்கள்.
அவனுடைய ஊரில் மழைக்கு ஒதுங்குவதற்குக் கூட பள்ளிக்கூடம் இல்லை. அவனுடைய ஊரில் மட்டுமல்ல, பக்கத்து ஊர்களிலும் கூட இல்லை.  படிப்பின் வாசனையையே என்னவென்று அறியாத அவன், சிறுவனாக இருந்தபோது, மந்தையிலுள்ள மாடு ஒன்றின் மீது உட்கார்ந்து கொண்டு, கால்நடைகளை மேய்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.
**********************
பர்வதம்மா என்னசெய்வது, ஏது செய்வது என்று புரியாமல் தன் மகன் ராகவேந்திராவைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்.தொடர்பு கிடைக்கவில்லை. உடனடியாகக் காரில் ஏறி பெங்களூருக்குக் கிளம்புகிறார்.
வேட்டை தொரும்.....
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}