ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியவுடன் எஸ்.எம்.கிருஸ்ணா....

வீரப்பன் @ 02


சென்ற பதிவில்.....
 பர்வதம்மா வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து,"என்னப்பா,உனக்கு எவ்வளவு பணம் வேண்டும் ? அவரை விட்டு விடப்பா" என்று தமிழில் வீரப்பனைப் பார்த்துச் சொல்கிறார். அவருக்கு ஓரளவு நன்றாகத் தமிழ் கதைக்கத் தெரியும். ராஜ்குமாருக்கு கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும்.
இப்போது வீரப்பனுக்குப் பக்கத்தில் நின்றிருந்த இரண்டு பேரும் ராஜ்குமாருக்குப் பக்கத்தில் வந்து நிற்கிறார்கள்.... சென்ற பதிவைப்படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ஜூலை 30 2000        இரவு 11 .20                                     பெங்களூர்- கர்நாடகா
 கர்நாடக மாநில காவல்துறை தலைமை அதிகாரி/இயக்குனர் சி.தினகர் கொழுத்த பல்லியொன்று சுவரில் திருட்டுத்தனமாக நகர்ந்து ஒரு பூச்சியின் மீது தாவி, அதை விழுங்குவதை வாய்பார்த்தபடி, தனது வீட்டில்-அலுவலக அறையில் இருக்கின்றார்.
இந்தியப் பொலீஸ் துறையிலேயே தான் தான் ஒரு கண்ணியமான, நேர்மையான அதிகாரி எனப் பீற்றிக் கொள்ளும் பேர்வழி இவர். தனக்குக் கர்நாடக பொலிஸ் தலைமை அதிகாரி பதவி வேண்டுமென்பதற்காக சகல நீதிமன்றப் படிகளிலும் ஏறி இறங்கியவர். இறுதியாக இவரது அலப்பறை பொறுக்க முடியாமல் கர்நாடக முதலமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா {அடிக்கடி நம்ம இலங்கைக்கு வந்து கிழிந்த ரீலை வைத்தே மறுபடி,மறுபடி படம் காட்டும் அதே எஸ்.எம்.கிருஸ்ணா தான்!!} இவருக்குப் பதவி சூட்டும் போது; "சர்வதேச நீதிமன்றத்தைத் தவிர மீதி எல்லா நீதிமன்றங்களிலும் ஏறி எறங்கி விட்டீர்கள் போல் உள்ளதே, தினகர்! " என்று இவரிடமே (ஜோக் ?) அடித்தார்.
இப்பேர்ப்பட்ட தினகர், பல்லி விழுங்குவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தொலைபேசி ஒலிக்கின்றது.
தினகர் தொலைபேசியை எடுக்கின்றார். மறுமுனையில் எஸ்.எம்.கிருஸ்ணா....
"உங்களுக்குச் செய்தி தெரியுமா?" :- எஸ்.எம்.கிருஸ்ணா
"என்ன செய்தி சார் ?" :- தினகர்
"டாக்டர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப் பட்டிருக்கிறார். ராகவேந்திரா ராஜ்குமார் இங்கே என்னுடன் இருக்கிறார். உள்துறை அமைச்சருடன் உடனே புறப்பட்டு வாருங்கள்" :- எஸ்.எம்.கிருஸ்ணா

சற்று நேரத்திலெல்லாம் முதலமைச்சரின் இல்லமான 'அனுக்ரஹா' வில் பலரும் கூடிவிடுகிறார்கள். உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே, உள்துறைச் செயலர் எம்.பி.பிரகாஷ், தினகர் அவர்களில்ச் சிலர்.
"தொட்ட காஜனூரில் தொலைபேசிகள் வேலை செய்யவில்லை. அதனால் எனது தாயார் நஞ்சன் கூடு என்கிற இடத்தில் இறங்கி தொலைபேசி மூலம் எனக்குத் தகவல் கொடுத்தார். காஜனூரில் புதிதாகத் தோண்டிய கிணற்றில் நீர் ஊற்றெடுத்துப் பெருகுவதாக அம்மா சொன்னவுடன், அப்பாஜி திடீரென்று வெள்ளிக்கிழமை (ஜூலை 28) காஜனூருக்குப் புறப்பட்டுச் சென்றார்...." என்று தொடங்கி நடந்தது அனைத்தையும் விளக்கினார் ராகவேந்திரா.
இந்தச் சந்தர்ப்பத்தில் உளவுத்துறைக் கூடுதல் இயக்குனர் பி.எஸ்.ராமானுஜம் வருகின்றார். இவருக்கும் தினகருக்கும் ஆகாது.

ஜூலை 31 2000                        அதிகாலை 2 .30
பர்வதம்மா அனுக்ரஹாவை வந்தடைகிறார். கூடவே ஒலி நாடாவையும் கொண்டுவந்திருந்தார். அவர் எல்லாவற்றையுமே இழந்துவிட்டதைப் போல பரிதாபமாகத் தோற்றமளிக்கிறார். அங்கே நடந்தவற்றை மூச்சு விடாமல் சொல்லி முடிக்கிறார்.
"அங்கே காவலர்கள் எவருமில்லையா ?"எஸ்.எம்.கிருஸ்ணா கேட்கிறார்.
"எவருமில்லை"பர்வதம்மா பதிலளிக்கிறார்.
"அது தான் நிலைமை என்று எனக்குத் தெரியும். அருகிலுள்ள காவல் நிலையத்திலுள்ள காவலர்கள் அவ்வப்போது கொசுவை அடித்தபடியே குறட்டை விட்டுத் தூங்கியிருப்பார்கள். எப்படியிருந்தாலும் ராஜ்குமாரின் பண்ணை வீட்டுக்கு அருகாமையில் அவர்கள் இல்லை...." எஸ்.எம்.கிருஸ்ணா சொல்கிறார்.
எதுவும் சொல்லாமல் தினகர் மௌனம் காக்கிறார்.('அது தமிழ் நாட்டு எல்லைக்குள் உள்ள பகுதி; அது கூட தெரியாமல் இவர் என்ன முதலமைச்சர்?' என்று மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார்)
ஒலி நாடா போடப்படுகின்றது. வீரப்பனின் தடித்த உறுதியான குரல் ஒலிக்கின்றது.
"இதற்கு முன்பு நான் தனி மனிதனாக இருந்தேன். அப்போது உங்களுடைய அனுதாபமும் பரிவும் எனக்குத் தேவையாக இருந்தது. சரணடைய விரும்பினேன். ஆனால், இப்போது நான் ஓர் இயக்கத்தின் அங்கமாக இருக்கிறேன். உங்களுடைய அனுதாபத்தை நான் தேடவில்லை. ராஜ்குமாரை விடுவிக்க காவல் துறையினரை அனுப்புவது பற்றி நீங்கள் சிந்திக்கக் கூடாது. நீங்கள் காவல் துறையினரை அனுப்பினால் ராஜ்குமாரின் உடல் கூறுகூறாகத் துண்டு போடப்பட்டு விடும். சில நிபந்தனைகளின் பேரில் நான் ராஜ்குமாரை விடுவிப்பேன். அதற்காக ஒரு தூதரை என்னிடம் அனுப்புங்கள், விடுவிப்பது பற்றிய நிபந்தனைகளை அவரிடம் நான் விவாதிப்பேன்"
எப்பாடுபட்டாவது தன் கணவரை விடுவிக்க வேண்டுமென்று பர்வதம்மா எஸ்.எம்.கிருஸ்ணாவை வேண்டுகின்றார்.
எல்லோரும் என்ன செய்வதென்று தெரியாமல் பதற்றமாக இருக்கின்றார்கள், ஒரேயொருவரைத்தவிர !! - அந்த ஒரேயொருவர் உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே !!. இவரைப் பின்னுக்குத் தள்ளி விட்டுத்தான், எஸ்.எம்.கிருஸ்ணா முதலமைச்சர் பதவியை எட்டிப் பிடித்திருந்தார். ஆகவே 'மல்லிகார்ஜுன் கார்கே இந்த நெருக்கடியைப் பார்த்து சந்தோசப்படுகிறாரோ?' என்று தினகர் தனக்குள் சந்தேகப்படுகிறார்.
எல்லோரும்; எஸ்.எம்.கிருஸ்ணா உடனடியாகச் சென்னைக்குச் சென்று முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்து அவருடைய உதவியை நாட வேண்டுமென்று கூறுகின்றனர்.
தினகர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்.
"சார், நீங்கள் போகக் கூடாது. நீங்கள் போனால் முழுப் பொறுப்பையும் நீங்களே சுமக்க வேண்டியதாகிவிடும். குற்றம் தமிழ்நாட்டு எல்லைக்குள் நடந்திருக்கிறது. கடத்தியவர்களும், கடத்தப்பட்டவர்களும் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் தமிழக காவல் துறையினரோ அல்லது தமிழக முதலமைச்சரோ தான் !" கடத்தப்பட்டவர் கர்நாடக சினிமாவின் மிக முக்கிய நடிகர் என்பதை மறந்து நீட்டி முழக்குகிறார் தினகர். பொறுப்பைத் தட்டிக் கழிப்பது எப்படி என்று இவரிடம் தான் நாம் பாடம் கற்க வேண்டும்.
இவரது கருத்தைக் கேட்டு ராஜ்குமார் குடும்பத்தினர் அதிருப்தி அடைகிறார்கள்.
தினகரின் கருத்து நிராகரிக்கப்படுகிறது.
உடனடியாகவே கருணாநிதியுடன் தொடர்பு கொள்ளப்படுகின்றது. கருணாநிதி; எஸ்.எம்.கிருஸ்ணாவுடன் தமிழில் பேசுகின்றார். உடனே சென்னைக்கு வருமாறு அழைக்கிறார்; கருணாநிதி. சென்னை வியம் உறுதியாகிறது. அழைப்பைத் துண்டித்த பின் எஸ்.எம்.கிருஸ்ணா; கருணாநிதி பேசிய தமிழை 'பெங்களூர் கிளப் தமிழ்' என்று கிண்டலடிக்கிறார் !!
**********************
படிப்பின் வாசனையையே அறியாமல், மாடுகளை மேய்த்துவந்த, சிறுவனாக இருந்த வீரப்பனை மிகவும் கவர்ந்தவர் 'சால்வை கவுண்டர் என அழைக்கப்படும் காட்டு கடத்தல்காரர் ஆவார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக அவர், காட்டுப்பகுதியில் கடத்தல் தொழிலைச் செய்துவந்தார். அவரிடம் வேலைக்குச் சேர்ந்தான் வீரப்பன். மந்தையிலுள்ள மாடு ஒன்றின் மீது உட்கார்ந்து கொண்டுகால்நடைகளை மேய்ப்பதை விட கடத்தல் தொழிலில் ஈடுபடுவது மிகவும் சிரமமானது. ஆனாலும்அந்தத் தொழில் அதிக வருவாயை ஈட்டித் தரக் கூடியது என்பதை வீரப்பன் உணர்ந்தான்.
**********************
அதிகாலை 4 .30
தினகர் தன் வீட்டுக்குச் சென்று; தொட்ட காஜனூர் அடங்கியுள்ள சாம்ராஜ் நகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை(அன்னே கவுடா) தொடர்பு கொள்கிறார்.
"எப்படி இருக்கிறீர்கள் ? செய்தி ஏதாவது உண்டா ?" -தினகர்
"நான் நன்றாக இருக்கிறேன் சார், மாவட்டம் நன்றாக இருக்கிறது, எல்லாம் அமைதியாக இருக்கின்றது, உங்கள் ஆசீர்வாதத்தில் சிறப்பாக(?) நிர்வகித்துக் கொண்டிருக்கிறேன் சார்."-அன்னே கவுடா
"ராஜ்குமார் கடத்தப்பட்ட விஷயம் உங்களுக்குத் தெரியுமா?" -தினகர்
"கடத்தப்பட்டாரா சார்? எப்போது சார்?"-ஏதுமறியாத அப்பாவியாகக் கேட்கிறார் கவுடா
"நீங்கள் தூங்கிக் கொண்டிருந்த போதுஉடனே போய் தகவல் சேகரித்து அனுப்புங்கள்!!"
வேட்டை தொரும்....
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}