வெள்ளை மாளிகையின் கறுப்பு அடிமைகள்-02


முதல்பதிவை வாசிக்காதவர்கள் இங்கே கிளிக் செய்து வாசித்து விட்டு தொடரவும்.   போன பதிப்பில் ஆபிரிக்காவிலிருந்து அடிமைகள் இறக்குமதி செய்யப்பட்டது பற்றியும் அவர்களின் மீது அடக்குமுறைகளை திணிப்பதற்க்காகவே உருவாக்கப்பட்ட சட்டங்களின் சாராம்சத்தையும் பார்த்தோம். 


                          
  எதையாவது ஒன்றை பெறுவதற்காக ஏதோ ஒன்றை கொடுப்பது காலம் காலமாக இந்த உலகில் நடந்து வருவதுதான். ஆனால் வெறும் இரண்டு வேளை உணவுக்காகவும், உடை எனும் பெயரில் வழங்கப்படும் ஏதோ ஒன்றிற்காகவும் கருப்பின அடிமைகள் இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல. மானம் ,உடம்பு ,உயிர் ,உறவுகள் என வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம். இவை கூடப் பரவாயில்லை இழைக்கப்பட்ட கொடுமைகளும் சித்திரவதைகளும் கூறிமாளாது. ஆடு ,மாடு, பன்றி போன்ற விலங்குகள் கூட கறுப்பர்களை விட ஒரு படி உயர்ந்ததாகவே கருதப்பட்டது அன்றைய அமெரிக்க சரித்திரத்தில். கறுப்பர்களை கொடுமைப்படுத்துவது தவறாகக்கூட அன்றைய அமெரிக்கர்களுக்கு தெரியவில்லை மாறாக அதை ஒரு கடமையாக கருதிக்கொண்டதுடன் மதரீதியிலும் அதை நியாயப்படுத்த காரணங்கள் தேடிக்கொண்டனர்.

   

வேலைகளும் நடைமுறையும்............

அமெரிக்காவின் பருத்தி உற்பத்தி தொடங்கி, குதிரைலாயப்பராமரிப்பு ,பண்ணை வீட்டு வேலை வரை அனைத்தையும் குறைந்த செலவில் செய்வதற்காக கொண்டுவரப்பட்டவர்களே ஆபிரிக்க அடிமைகள்.   இவ்வாறு இவர்கள் இறக்குமதி செய்யப்பட்டதும் முதல்வேலையாக அடிமைகளை வரிசையாக நிற்கவைத்து மொட்டை அடித்து உடம்பின் குறிப்பிட்ட தெரியக்கூடிய பாகத்தில் தெளிவாக இவர்கள் இந்த ஏஜெண்டுக்கு உரியவர்கள் என பச்சை குத்திவிடுவார்கள். இவர்கள் எங்காவது பண்ணையிலிருந்து தப்பியோடிவிட்டால் பார்த்த மாத்திரத்திலேயே இவன் இன்னாருடைய அடிமை என இனம்காண இந்த பச்சை குத்தும் படலம் பெரிதும் உதவியது. இங்கனம் கொண்டுவரப்பட்ட அடிமைகள் பச்சை குத்தலின் பின்னர் பொதுவாக,
                        பண்ணை வேலையாட்கள்
                        வீட்டு வேலையாட்கள்
                        தனிப்பட்ட உதவியாளர்கள்
என மூன்று வகையாக பிரிக்கப்பட்டார்கள். ஏதோ அடிமைகளை பிரித்து வேலை வாங்குவதற்கு இந்த பிரிவு ஏற்பட்டதே தவிர வேலை என்று பார்த்தால் எங்குமே ஈவிரக்கம் கிடையாது. அடிமைகளோ விழி பிதுங்கும் வரை உயிரை கொடுத்து உழைக்கவேண்டியதுடன் இடையிடையே கிடைக்கும் சவுக்கு அடிகளையும் பெற்று கொள்ள வேண்டியிருந்தது.
                       
                                                               
                                                          பண்ணையில் வேலை பார்ப்பவர்கள் பகல் முழுதும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அதற்காக இரவில் ஓய்வெடுப்பார்கள் என்று அர்த்தமில்லை இரவிலோ வீட்டிலுள்ள குதிரைகள் மாடுகள் போன்ற விலங்குகளை பராமரிக்க வேண்டும். காலை 7 மணிக்கும் ராத்திரி 9.30 மணிக்கும் இவர்களுக்கு ஆறுகவளம் சாப்பாடு கிடைக்கும். அப்போதெல்லாம் அடிமைகளுக்கு அரிசிச்சோறு அல்லது அரிசிப்பொரி தான் உணவாக வழங்கப்பட்டது.

வீட்டு வேலை பார்ப்பவர்களை பொருத்தவரை எஜமானர்களின் கட்டளைக்கு கீழ் படிந்து தரும் வேலைகளை செய்ய வேண்டியதுடன் பண்ணை வீடு முழுவதையும் ஒருநாளில் எட்டுமுறை கூட்டியள்ளுவதுதான் இவர்களின் மிகப்பெரும் வேலையாக அமைந்தது. ஒரு பண்ணை வீடு சாதாரண சுற்றுப்பரப்புகளை கொண்டதல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இவர்களுக்கு பொறியும், கொள்ளும் தான் நாளுக்கு இருமுறை இருபிடி உணவாகத்தரப்படும்.
               
                                                   தனிப்பட்ட உதவியாளர்களைப் பொறுத்த அளவில் இவர்கள் கட்டாயம் பெண்களாகவே இருந்தார்கள். பண்ணையார் சொல்லும் அனைத்து வேலைகளையும் செய்யவேண்டியதுதான். இவர்கள் பாலியல் தொல்லைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் இலக்கானதுடன் இலவச அடிமைகளை உற்பத்தி செய்யப் பயன்பட்டார்கள் என்பதே தகும்.

                                                                         


                   அடிமைகள் சரித்திர ஆய்வாளர்களும் சரி, அடிமை விடுதலையின் பின்னர் கருத்து தெரிவித்த அடிமைகளும் சரி கூறிய விடயங்களை கொண்டு பார்க்கும் போது சராசரியாக வாரத்திற்கு ஒவ்வொரு அடிமையும் 85 மணிநேரம் முதல் 120 மணிநேரம் வரை உழைத்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல ஒரு நாளில் கடுமையான உழைப்பின் பின்னர் அவர்கள் ஓய்வு எடுத்துக்கொண்ட நேரம் வெறும் நாலு மணிநேரம்தான் என்பதுதான் கவலை.
                                                            இது வரை அடிமைகளின் வேலைகளையும் அதன் நடைமுறைகளையும் பார்த்தோம். அடுத்த பதிவில் இவர்களுக்கு இழைக்கப்பட்ட இரக்கமில்லா கொடுமைகளையும் அதன் விளைவுகளையும் பார்க்கலாம்.
                                                        ..............தொடரும்................
இதன் அடுத்த பதிவிற்கு
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}