விடுதலை வீரர் சுபாஷ் சந்திரபோஸ்-04 
போன பதிப்பில் நேதாஜியின் சிறை நுழைவு பற்றியும் அவருக்கு மக்கள் கொடுத்த கௌரவத்தையும் பார்த்தோம்.  முன்னைய பகுதியை வாசிக்காதவர்கள் வாசித்து விட்டு தொடரவும்.[இதன் முன்னைய பதிப்பிற்கு விடுதலை வீரர் சுபாஷ் சந்திரபோஸ்-03]சிறையிலிருந்து விடுதலையான சந்திரபோஸ் சீர்கெட்டிருந்த உடல்நிலையிலிருந்து 6 மாதங்களில் குணமானதுடன் 1927 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 42 ஆம் காங்கிரஸ் மாசபைக்கூட்டதிற்கு வங்கமாநில காங்கிரஸ் குழுவிற்கு தலமைதாங்கிய நேதாஜி சென்னைக்கு வருகை தந்தார். அந்த மாநாட்டில்தான் இந்தியாவின் ஒரே இலட்சியம் பூரண சுதந்திரம் எனும் தீர்மானம் நிறைவேறியது. ஆனால் பிறகு ஒரு மாநாட்டில் பூரண சுதந்திரக் கொள்கையை மறுத்த காந்திஜியும், மோதிலால் நேருவும் பூரண சுதந்திரக்கொள்கையை ஒதுக்கி இந்தியாவுக்கு பூரண குடியேற்ற நாட்டு அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்று வாதிட்டதுடன் அத்தீர்மானத்தையும் நிறைவேற்றி விட்டனர் .ஆனால் ஏற்கனவே சென்னை மாநாட்டில் நிறைவேற்றபட்டிருந்த பூரண சுதந்திரக் கொள்கையை காந்திஜியும் மோதிலால் நேருவும் மீறியதை நேதாஜியும்,  ஜவகர்லால் நேருவும் வன்மையாக கண்டித்ததுடன் மாநாட்டிலிருந்து வெளியேறி பூரண சுதந்திர இந்தியாவே இலட்சியமாக கொண்ட “விடுதலைச்சங்கம்”  ஒன்றை அமைத்தனர்.
             
                             இதனால் 1928 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் குழப்பங்கள் நேரலாம் என்றஞ்சிய மோதிலால் நேரு காந்திஜியையும் அங்கு அழைத்திருந்தார். இவர்களை சிறப்புற இராணுவ மரியாதையுடன் வரவேற்ற நேதாஜியோ தலைவர்களை வரவேற்பது வேறு கொள்கைகள் வேறு என்பதில் உறுதியாக இருந்தார். மீண்டும் பூரண சுதந்திர இந்தியாக் கொள்கையையே வலியுறுத்திய நேதாஜியின் பேச்சை கருத்தில் கொண்ட காந்திஜியும் அதை பூரணமாக ஏற்காது “1929 மார்கழி 31 இற்குள் குடியேற்ற நாட்டு அந்தஸ்து இந்தியாவுக்கு வழங்கப்படாவிடின் பூரண சுதந்திர இந்தியாவே” எனும் சாயலில் பேச அவ்வாறே தீர்மானமும் நிறைவேறியது.

பகத்சிங்
                           
                      ஆனால் தன் கொள்கையில் உறுதியாக இருந்த சந்திரபோஸ் தொடர்ந்து பூரண சுதந்திர கொள்கையை வலியுறுத்தி “பார்வட்” எனும் பத்திரிகையில் உணர்வுபூர்வமான கட்டுரைகளை எழுத அதனால் குழப்பங்கள் நேரலாம் என்றஞ்சிய பிரிடிஷ் அரசும் அப்பத்திரிகையை முடக்கிவிட்டது. ஆனால் நேதாஜியோ மறுநாளே “நியூ பார்வட்” எனும் பத்திரிகையை ஆரம்பித்து எழுத தொடங்கிவிட்டார். முதல் இதழ் வெளியிட்ட கையோடு “நியூ பார்வட்”  உம் முடக்கப்பட அடுத்தநாளே “லிபர்டி” எனும் பத்திரிகையை ஆரம்பித்துவிட்டார் சந்திரபோஸ். இவ்வாறு ஆங்கிலர்களின் அடக்குமுறைக்கு சிறிதும் அஞ்சாத நேதாஜியோ சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பகத்சிங் போன்ற அரசியல் கைதிகளுக்கும், புரட்சி இயக்கங்களுக்கும் ஆதரவாக பேசினார்.

                 இதனால் இவரை ஒரு சந்தேகக் கண்ணுடனேயே ஆங்கில அரசு பார்த்துவரத்தொடங்கியது. 1929 ஆவணி மாதம் 11 ஆம் நாள் அரசியல் கைதிகள் தினம் என்று அறைகூவல் விடுத்த நேதாஜி பெரும் பேரணியையும் நடத்தினார். இதன் காரணமாக மீண்டும் கைது செய்யப்பட்டு சிலநாட்களின் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 1929 மார்கழியில் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் நேதாஜியால் முன்னரே வலியுறுத்தப்பட்ட பூரண சுதந்திர கொள்கையை காந்திஜி வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியிருந்த போதும் வைசிராய் பயணம் செய்த இரயிலில் வெடிவிபத்தை ஏற்படுத்திய புரட்சிவிடுதலை போராளிகளை கண்டித்தும் பேசியிருந்தார். அது மட்டுமல்லாது ஆங்கிலர்களுக்கு ஆதரவாக பேசிய காந்தி தூக்கு தண்டனைக்காக காத்திருந்த பகத்சிங் போன்றோருக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதை கவனித்த நேதாஜி புரட்சி வழி போராளிகளும் சுதந்திரதுக்காக போராடுவதை சுட்டிக்காட்டியதுடன் “பூரண சுதந்திர இந்தியாக் கொள்கையை கிடப்பில் போடாது சுதந்திர போட்டி இந்திய அரசாங்கத்தையும் அமைக்கவேண்டும் “ என பேசினார். ஆனால் அவரது கொள்கையை ஏற்காத காங்கிரஸ் காந்திஜியின் கொள்கையையே தீர்மானமாக நிறைவேற்றியது.                                                           இதனால் நேதாஜியும் தமிழ் நாட்டு உறுப்பினர்கள் சிலருடன் சபையை விட்டு வெளியேறினார். அதுமட்டுமல்ல அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவுக்கு உறுப்பினர்களை தெரிந்தெடுக்கும் வேலைகள் தைமாதம் 2 ஆம் திகதி நடைபெறும் என்றறிவித்திருந்த ஜவகர்லால் நேருவோ நீதியை மீறி அறிவிக்கப்பட்ட திகதிக்கு ஒரு நாளின் முன்னரே அங்கத்தவர்களை தெரிந்துவிட்டார். இதனால் நேதாஜியும் அவருடன் வெளியேறிய அவரது கொள்கையை பின்பற்றுவோரும் அச்செயற்குழுவில் இடம்பெறவில்லை. இதை அறிந்து கலங்கிய நேதாஜி மிதவாதிகளின் சொல்லை கேட்கும் காங்கிரசை விடுத்து “காங்கிரஸ் ஜனநாயக கட்சி” எனும் புதிய கட்சியை ஆரம்பித்தார். இவ்விரு கட்சிகளும் கொள்கைகளில் சிறிது வேறுபட்டாலும் பூரண சுதந்திர இந்தியாக் கொள்கைக்காக தொடர்ந்து பெரிதும் பாடுபட்டன.

தொடரும்....

இதன் அடுத்த பதிவிற்கு இங்கே 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}