சோழர்களும் அவர்களின் வரலாறும்-05


போன பகுதியில் சோழர்களில் கரிகால சோழன் பற்றிய குழப்பம் பற்றி இந்தப்பகுதியில் பார்க்கலாம் எனக் கூறியிருந்தேன் ஆனால் அப்பகுதிக்கும் இப்பகுதிக்குமான கால இடைவெளி சற்று நீண்டுவிட்டது அதற்காக மன்னிக்கவும். மேலும் இதுவரை இதன் முன்னைய பாகங்களை படிக்காதவர்கள் தயவு செய்து வாசித்து விட்டு தொடரவும். [இதன் முதற் பதிவுக்கு செல்ல சோழர்களும் அவர்களின் வரலாறும்-04 ]

கரிகாலச்சோழன் 

இவன் ஒருவனே எனவும் இல்லை இருவர் உள்ளனர் எனவும் வெவ்வேறு கருத்துக்கள் இன்றளவும் உள்ளன. ஆனால் கி.மு முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த கரிகாலன் ஒருவனும் கி.பி முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கரிகாலன் ஒருவனும் என மொத்தம் இரண்டு கரிகாலச் சோழர்கள் வாழ்ந்திருக்கலாம் என காவியங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டிருப்பதாக ஒரு சில அறிஞர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஆனால் என்னால் முடிந்த வரை தேடியதில் இவ்விரு கரிகாலச் சோழர்கள் பற்றியும் வேறுபடுத்தி அறியுமாறு வேறு ஒரு தகவல்களும் கிடைக்கவில்லை [அறிந்தவர்கள் அறியத்தரவும்]. பொதுவாக கரிகாலச் சோழன் எனும் பெயரால் அறியப்படும் இவனது தந்தை இளம்சேட்சென்னி என்றறியவருகிறது. கரிகாலச் சோழன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே அவனது தந்தை இறந்து விட அச்சமயத்தில் நிகழ்ந்த அரசாட்சி சார்பான பிரச்சனைகளால் உண்மைஉரிமைவாரிசான கரிகாலச்சோழனை சிறுவயது முதல் கொண்டே விசமிகள் சிலர் சிறையில் அடைத்துவிட்டனர். அச்சிறையில் இருந்து பெரும் கலகத்தை விளைவித்து தப்பித்த இவனது கால்கள் நெருப்பினால் கருகிப்போனது என்றும் அதனாலேயே இவன் கரிகாலன் எனும் பெயரைப் பெற்றான் என்றும் கூறப்படுகிறது. இவன் சிறையிலிருந்து தப்பித்த இந்த சம்பவத்தை காவியங்களும் புராணங்களும் தாராளமாக புகழ்ந்துள்ளன. மேலும் “கரி” என்றால் “யானை”, “காலன்” என்றால் “எமன்”  ஆதலால் இவன் போர்களங்களில் நடந்து கொண்ட வீரதீரத்தை புகழ்ந்து எதிரிகளின் யானைகளுக்கு எமன் எனும் வகைப்பட கரிகாலன் என அழைக்கப்பட்டதாக வாதிடுவோரும் உள்ளனர். இவன் கரிகாற்பெருவளத்தான், பெருவளவன் எனவும் சிறப்புற அழைக்கப்படுகிறான்.  “வெண்ணிப்பெருவெளி” எனும் இடத்தில் நடந்த போரில் பாண்டியர், சேரர் எனும் இரு சாராரின் படையையும் இவன் தோற்கடித்ததாகவும் சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இலங்கையிலிருந்து கொண்டுவந்த சிறைக்கைதிகளைக் கொண்டு காவிரியின் இருமருங்கிலும் பெரும் அணையை எடுப்பித்ததாகவும், காவிரிப்பூம்பட்டினத்தை புகழ்பூத்த ஊறணித்துறைமுகமாக மாற்றியமைத்ததாயும், இமயம் வரை படைஎடுத்துச்சென்று வென்று புகழ் கொண்டதுடன் எங்கும் புலிக்கொடி பறக்க வைத்த பெருமையும் இவனையே சாரும் என இலக்கியங்கள் இவனைப்புகழ்வதுடன் வரலாற்று அறிஞர்களும் இவன் இருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

    காஞ்சிபுரம் ஏகம்பெரேஸ்வரர் கோவிலிலுள்ள கரிகாலனின் சிலை 


நெடுங்கிள்ளி,நலங்கிள்ளி
கரிகாலச்சோழனுக்குபின்னர் ஆட்சிபீடமேறியவன் நெடுங்கிள்ளி  எனும் சோழனாவான். முற்காலசோழர்களில் ஒருவனான இவன் முடிசூடும் போது சோழநாடு நல்ல நிலையில் இருந்ததாயினும் இவன் காலத்தில் வாழ்ந்த நலங்கிள்ளி எனும் சோழமன்னனுக்கும் இவனுக்கும் இடையில் ஆட்சி பற்றிய போட்டிகள் நிலவின. ஆதலால் நெடுங்கிள்ளி உறையூரிலும் நலங்கிள்ளி புகாரிலும் பிரிந்து ஆட்சிநடத்தினர். இவர்களை பின்பற்றிய மக்களும் அவரவரின் பின்னே அணிதிரண்டனர். நலங்கிள்ளி நெடுங்கிள்ளி வசித்த உறையூர் கோட்டையை முற்றுகையிட்டான். பின்னர் கோவூர் கிழார் எனும் புலவரின் சமாதானத்தின் படி இருவரும் சமரசம் ஆனதாக அறியவருகிறது.

கிள்ளிவளவன் 
வீரதீரங்களில் சிறந்தவனான இவனை காவியங்கள் செருக்குள்ளவனாக காட்டுவதுடன் இவனும் முற்காலச் சோழர்களுடனேயே உள்ளடக்கப்படுகின்றான்.

கோப்பெருஞ்சோழன்
உறையூரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த இவன் நல்ல தமிழ் புலவனாக இனம்காணப்படுவதுடன்  அதிதீர வீரனாகவும் இலக்கியங்களால் காட்டப்படுகின்றான். அதுமட்டுமல்லாது இவனது ஆட்சிக்காலத்தில் இவனது பிள்ளைகள் தீய நட்பின் விளைவால் இவன் உயிருடன் இருக்கும் போதே ஆட்சியைக் கைபற்ற முயன்றபோதும் அதை முறியடித்த இவன் தானே முன்வந்து ஆட்சியை அவர்களிடம் கொடுத்துவிட்டு வனாந்தரம் சென்றுவிட்டான் என அறியவருகிறது.

கோச்செங்கணான் 
முற்காலச் சோழர்களில் உள்ளடங்கும் இவனை தேவாரங்கள் முதல் கொண்டு வரலாற்று சான்றுகள் வரை அனைத்தும் புகழ்ந்துள்ளதுடன் இவனை பற்றி சற்று மிகைப்படுத்தியும் கூறியுள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது. இவன் சிவ பக்தியில் சிறந்தவன் என்றும் சங்ககாலத்துச் சோழரில் கடைசியில் ஆண்டவன் என்றும் கூறப்படுகிறது. சிவனுக்கு 70 அழகிய மாடங்கள் எடுப்பித்ததுடன் வீரதீரத்திலும் சிறந்து விளங்கியவன் .சேரர்களுடன் பெரும் போர் புரிந்து சாதனைகள் பல செய்தவன் என புகழப்படுகின்றான்.


அதுமட்டுமல்ல இவ்வாறு இலக்கியங்களில் புகழப்படும் சோழர்களில் கரிகாற்சோழன், கிள்ளிவளவன், கோப்பெருஞ்சோழன்,கோச்செங்கணான், போன்றோர்கள் முக்கியவானவர்கள் என்பதுடன் இவர்களின் வீரதீரங்களை காவியங்களும் புராணங்களும் சற்று மிகைப்படுத்திக் கூறியிருந்தாலும் இவர்கள் இருந்ததும் சாதித்ததும் உண்மையே என வரலாற்று ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

                     
        இவர்கள் தவிர கன்யாகுமரிக்கல்வெட்டு சகதேவமல்லன் பற்றியும் சாராலச்செப்பேடுகள் வியாழப்பயங்கரன் பற்றியும் குறிப்பிடுகின்றன. மேலும் அன்பில் செப்பேடுகள் குறிப்பிடும் “ஸ்ரீகந்தன்” எனும் சோழனே விசயாலய சோழனின் தந்தையாக கூறப்படும் “குமராங்குசன்” எனவும் வாதிடுவோரும் உள்ளனர். இவர்கள் தவிர ஏராளமான சோழர்களின் வரலாறுகள் ஆங்காங்கே காவியங்களிலும் புராணங்களிலும் கதைகளிலும் கூறப்பட்டாலும் அவர்களின் வரலாறுகளில் தெளிவில்லை.இதுவரை முற்காலச் சோழர்களின் வரலாறுகள் பற்றி முடிந்தவரை விரிவாக பார்த்துள்ளோம். அடுத்த பதிவில் சோழர்களின் இருண்ட காலம் பற்றியும் அதுசம்பந்தமான காரணிகளையும் காணலாம்.
                                       
                                                                             .................தொடரும்.....................


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}