பட்டிமன்ற ராஜாஎளிய சிறிய உருவம். பேசுவதிலும் பழகுவதிலும் தோரணையற்ற பாங்கு. மேடை ஏறிப் பேசினால், சிரிப்பு வெடிகளும், சிந்தனை முத்துக்களும் சரளமாக வெளிப்படுத்தும் திறமை. பேராசிரியர் சாலமன் பாப்பையாவைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் மனமார்ந்த மரியாதை. வங்கிப் பணி, பட்டிமன்றம், மேடைப்பேச்சு, தொலைக்காட்சி, எழுத்துப்பணி, அவ்வப்போது திரைப்படங்களில் நடிப்பு என்று தன்னைப் பிணைத்துக் கொண்டாலும், அந்த அடையாளங்கள் எதையும் வெளிப்படுத்தாமல், ஒரு நீண்ட கால நண்பரைப் போல எல்லோரிடமும் மனம் விட்டுப் பேசும் குணம் - இவற்றின் கலவைதான் பட்டிமன்றம் ராஜா. அவருடனான நேர்காணலில் இருந்து...

கே: பட்டிமன்றம் என்ற துறையைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?

ப: பட்டிமன்றப் பேச்சாளர் ஆனது எதிர்பாராமல் நடந்ததுதான். சிறு வயதில் நான் மிகவும் நோஞ்சானாக இருப்பேன். இதனால் நண்பர்கள் என்னை விளையாட்டுக்களில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். ஆகவே அந்த நேரத்தைப் புத்தகம் வாசிப்பதில் செலவிட்டேன். எனது பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள் என்பதால் பள்ளி நூலகப் புத்தகங்கள் அனைத்தையும் கொண்டுவந்து படிப்பேன். நூலகத்தில் ஏதேனும் புத்தகங்கள் தொலைந்திருந்தாலோ, கிழிந்திருந்தாலோ அதற்கு நான்தான் பொறுப்பு. ஏனென்றால் என்னைத் தவிர வேறு யாரும் அந்தக் கிராமத்தில் புத்தகங்களை எடுத்துப் படிக்க மாட்டார்கள். இதைத் தவிர பத்திரிகைகள், கதைப் புத்தகங்கள் என பலவற்றையும் படித்தேன். படிக்கப் படிக்க எனக்குள் இலக்கிய ஆர்வம் பூக்கத் தொடங்கியது.கே: பேச்சுக் கலையில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
'பாலசந்தரின் புதுப்புது அர்த்தங்கள் - பழைய பல்லவியா, புதிய ராகமா?' என ஒரு தலைப்பைச் சொன்னேன். அய்யாவும் அது சரியாக இருப்பதாகக் கூறினார். பாலசந்தருக்கும் அது தெரிவிக்கப்பட, அவரும் 'இதுதான் சரியான தலைப்பு' என்று சொல்லி ஒப்புக்கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உட்பட அனைவருக்கும் மகிழ்ச்சி. எனக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம் இதுதான்.
ப: நான் கிராமத்து ஆள். எனக்குச் சரியாக நிற்கவே தெரியாது. அப்புறம் எப்படிப் பேசுவது? ஆனால் சிறுவயது முதலே எனக்குப் பேச்சுக்கலையின் மீது விருப்பம் உண்டு. அதாவது நான் பேசுவதற்கு அல்ல. மற்றவர்கள் பேசுவதைக் கேட்பதற்கு. பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஹென்றி என்ற ஆசிரியர் எனக்குப் பள்ளி இலக்கிய மன்றச் செயலாளர் பொறுப்பைத் தந்தார். ஒவ்வொரு இலக்கியமன்றக் கூட்டத்திலும் கடந்த கூட்டத்தின் செய்தி அறிக்கையைப் படிப்பதும், நடக்க இருக்கும் நிகழ்ச்சி நிரலைப் படிப்பதும், நன்றி உரை ஆற்றுவதும் மன்றச் செயலாளரின் வேலை. நான் பொறுப்பேற்றதும் நடந்த கூட்டத்தின் தலைமைப் பேச்சாளர் சாலமன் பாப்பையா அவர்கள். நிகழ்ச்சி நிரல்படி, அவரது பெயரை அறிவித்து விட்டு, நான் கீழே ஓரமாக உட்கார்ந்து கொண்டேன். அற்புதமாக அவர் பேசப்பேச எப்படி இவரால் சரளமாக ஒருமணி நேரம், அனைவரும் தம் பேச்சையே கவனிக்கும் படியாகப் பேச முடிகிறது என நினைத்து ஆச்சரியம் கொண்டேன். அன்றுமுதல் அவர் ரசிகனாகி விட்டேன். பின் பள்ளி இறுதித் தேர்வில் முதல் மாணவனாக வந்தேன். அய்யா அவர்களின் உதவியுடன், அவர் பணியாற்றிய அமெரிக்கன் கல்லூரியில் எனக்குப் படிக்க இடம் கிடைத்தது. அப்பொழுது முதல் அவருடனே இருக்க ஆரம்பித்தேன். அய்யா பேசுகின்ற எல்லா கூட்டங்களுக்கும் எடுபிடியாகச் செல்வேன். இது 1976ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தொடர்கிறது.


கே: கல்லூரிப் படிப்புக்குப் பிறகு மேடை வாய்ப்புக் கிடைத்ததா?

ப: கல்லூரிப் படிப்பு முடித்து, திருமணம் ஆகி, வங்கிப் பணிக்காக 1984-ல் சென்னை செல்ல நேர்ந்தது. அப்பொழுது அய்யா அவர்கள் சென்னையில் பேச வரும்போதெல்லாம் நானும் அவருடன் கூட்டங்களுக்குப் பார்வையாளனாகச் செல்வேன். சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு அவரைக் கூப்பிடுவார்கள். சினிமா சம்பந்தப்பட்டவர்களை அருகே இருந்து பார்க்கும் வாய்ப்புக்காக நானும் அவர் கூடவே எல்லா இடங்களுக்கும் செல்வேன். பின்னர் 1987ல் எனக்கு பணிமாற்றம் கிடைத்து மதுரைக்குத் திரும்பினேன். அதன் பின் அய்யாவுடன் மேலும் நெருக்கமாகி அவர் பங்குபெறும் அனைத்துக் கூட்டங்களுக்கும் செல்ல ஆரம்பித்தேன்.


கே: பார்வையாளராகவே இருந்த உங்களுக்கு முதல் மேடை வாய்ப்பு எப்போது கிடைத்தது?

ப: டைரக்டர் பாலசந்தரின் 'புதுப் புது அர்த்தங்கள்' திரைப்பட வெள்ளிவிழாவை அய்யாவின் பட்டிமன்ற நிகழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்று வெற்றிவேல் பிலிம்ஸ் நிறுவனர் நினைத்தார். பட்டிமன்றத்துக்கான தலைப்பை யோசித்து பாலசந்தரிடம் ஒவ்வொன்றாகப் போனில் சொல்ல, அவருக்கு அதில் திருப்தியில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்த நான், அய்யாவிடம், ‘எனக்கு ஒரு தலைப்பு தோன்றுகிறது சொல்லட்டுமா?'என்று கேட்டேன். அய்யாவும் 'சரி' என்றார். பாலசந்தரின் பல படங்களின் மையக்கரு இரண்டு மனைவிகள் பற்றியதாகவே இருக்கும். அத்துடன் இப்படத்தில் இசையும் சேர்ந்து கொண்டதால் நான், “பாலசந்தரின் புதுப்புது அர்த்தங்கள் - பழைய பல்லவியா, புதிய ராகமா?' என ஒரு தலைப்பைச் சொன்னேன். அய்யாவும் அது சரியாக இருப்பதாகக் கூறினார். பாலசந்தருக்கும் அது தெரிவிக்கப்பட, அவரும் 'இதுதான் சரியான தலைப்பு' என்று சொல்லி ஒப்புக்கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உட்பட அனைவருக்கும் மகிழ்ச்சி. எனக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம் இதுதான்.

கே: சுவையான தலைப்புதான். சரி, மேடை அனுபவம்...

ப: வெற்றிவேல் பிலிம்ஸ் முதலாளிக்கு இந்தத் தலைப்பு மிகவும் பிடித்துவிட்டது. அவர், ‘இந்தத் தம்பி நல்ல தலைப்பு சொல்லியிருக்கு. எப்படியாவது இவரையும் மேடையில் பேச வச்சிருங்க.' என்று அடம் பிடித்தார். அய்யாவும், 'சரி, வாய்யா, மேடையில் பட்டிமன்றத்துக்கு நேரக் கண்காணிப்பாளரா இருய்யா' என்றார். ஒவ்வொரு பேச்சாளரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் கடந்து பேசினால் எச்சரிக்கை மணி அடிக்கும் வேலை அது. மேடை அனுபவம் என்றால் அதுதான் என் முதல். ஆனால் அதுவும் பேசுவதற்கு அல்ல.

அதற்குப் பிறகு குமுதம் இதழைத் தயாரிக்கும் பொறுப்பு அய்யாவுக்குக் கிடைத்தது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நான் அய்யா கூடவே இருந்து அந்த இதழ் தயாரிப்புப் பணியில் உதவி புரிந்தேன். இவ்வாறு நாங்கள் தயாரித்த குமுதம் இதழின் அட்டைப்படத்துக்கு ஒரு மரபுக் கவிதையை எழுதி அய்யாவிடம் காட்டினேன். அவருக்கும் அது மிகவும் பிடித்துப் போய் விட்டது. பின்னர் அது குமுதம் இதழிலும் வெளியானது. அதுதான் எனது எழுத்துக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் எனக்கு மேடை ஏறிப் பேசவேண்டும் என்ற ஆர்வமே இருந்ததில்லை. அதற்கான தகுதி எனக்கு இருந்ததாகவும் நான் நினைக்கவில்லை. மேலும் எனது படிப்பு வங்கி, வணிகவியல் சம்பந்தப்பட்டது. தமிழ் இலக்கியம் நான் படித்ததில்லை. அய்யாவுடனும், அவருடன் கூடிப் பேசவரும் இலக்கியகர்த்தாக்களுடனும் கூட இருந்து, அவர்கள் பேசுவதைக் கேட்டு, அந்த இலக்கியச் சுவையில் திளைப்பதே எனக்கு விருப்பமானதாக இருந்தது.

கே: பின் எப்படி ராஜா, 'பட்டிமன்றம் ராஜா' ஆனார்?

ப: மதுரைக்கு மாற்றலாகி வந்தபின் தொடர்ந்து அய்யாவின் பட்டிமன்றக் கூட்டங்களுக்குப் பார்வையாளனாகச் செல்ல ஆரம்பித்தேன். ஒருமுறை மதுரையில் நடந்த பட்டிமன்றத்திற்குப் பேசவேண்டிய பேச்சாளர் வர முடியவில்லை. அய்யாவும் திடீரென்று என்னிடம், ‘கூட்டத்திற்கு வர்றியா?' என்றார். நானும் வழக்கம் போல்தான் கூப்பிடுகிறார் என நினைத்து, ‘சரி, வருகிறேன்' என்றேன். 'வேடிக்கை பார்க்க இல்லய்யா.. பேசறதுக்கு' என்று அய்யா திரும்பச் சொல்லவும், நானும் யோசிக்காமல் உடனே ‘சரி' என்று சொல்லிவிட்டேன். அந்த விநாடி எது என்னை அவ்வாறு சொல்ல வைத்தது என்பது இன்னமும் எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது. உடனே அய்யா, ‘ ஒரு நல்ல சட்டை போட்டுக் கொண்டுவா' என்று சொன்னார். 'குடும்பத்தின் சிறப்புக்குக் காரணம் கணவனே, மனைவியே' என்ற தலைப்பிலான அந்தப் பட்டிமன்றத்தில் நான் கணவன் அணியின் சார்பாகப் பேசினேன். நிகழ்ச்சியின் மைக்செட் அமைப்பாளர் 'சூப்பர்' என்று சொல்லிக் கைதட்டினார். பின்னர் நிகழ்ச்சியின் இறுதியில், பேச்சாளர் காந்திமதி அம்மையார், அய்யாவிடம் என்னைப் பாராட்டி, 'இந்தப் பையன் நல்லாப் பேசுறான், தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்று கூறினார்.
நன்றி:சிகாகோ தமிழ்ச் சங்கம்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}