சங்ககாலத்திற்கு முந்திய பாண்டியர்களும் ஆட்சிமுறையும்


பாண்டியர்களும் அவர்களின் வரலாறும் - 02

போன பதிப்பில் பாண்டியர்களின் தொன்மை பற்றியும் அது குறித்து மகாபாரதம் முதல் கொண்டு சங்ககால இலக்கியங்கள் வரை கூறப்படுள்ளதையும் பார்த்தோம்.  [முதல் பதிப்பை வாசிக்காதவர்கள் அதை வாசித்து விட்டு தொடரவும் அதற்க்கு இங்கே கிளிக்கவும் ]  இவ்வாறு காலத்தால் முற்பட்ட பாண்டியர்களின் தோற்றத்தை அறியமுடியவில்லை என்ற போதிலும் காவியங்களிலும் வரலாற்று ஆதாரங்களில் இருந்தும் உறுதியாக அறிய முடிந்த பாண்டியர்களின் பெயர்களையும் அவர்களின் ஆட்சிக்காலத்தையும் கொண்டு வரலாற்றாய்வாளர்கள் “கடைச் சங்ககாலத்திற்கு முந்திய பாண்டியர்கள், கடைச்சங்க காலப் பாண்டியர்கள், இடைக்காலப் பாண்டியர்கள், பிற்காலப்பாண்டியர்கள்” எனப்பலவாராக பிரிக்கின்றனர். இவர்களை அவர்களின் காலத்துடன் பார்க்க முதல் பாண்டியர்களின் ஆட்சி முறை அரசியல் பற்றி சிறிது பார்த்துவிடலாம்.

பாண்டியர்களின் நிலப்பகுப்பு 

அக்காலத்தில் ஒரு மிகப்பெரும் நிலப்பரப்பை ஒரு அரச குலத்தவர் தனிக்கட்டுப்பாட்டில் ஆட்சி செய்தால் அவ்நிலப்பரப்பு முழுதும் ஒரு தனி நாடாகவே கருதப்பட்டதுடன் ஆட்சி நிர்வாகத்தை சீர் பேணும் நோக்குடன் அந்த நிலப்பரப்பு உள்ளே பல பிரிவுகளை கொண்டிருந்தது. அவ்வாறே பாண்டியர்கள் தொண்டு தொட்டு ஆட்சி புரிந்து வந்த பாண்டி மண்டலம் என்பது மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகிய மூன்று பெரும் பிரதேசங்களையும் உள்வாங்கியிருந்ததுடன் அழிந்துவிட்டதாக கருதப்படும் குமரிக்கண்டத்திலும் பெரும் பகுதியை உள்வாங்கியிருந்தது. அதைவிட மன்னர்களின் பலம் ஓங்கும் போது இவ்நாட்டின் எல்லைகள்  விரிவடைந்து மாறியமைந்ததுடன் சில சமயங்களில் எதிரிகளின் ஆட்சிகளின் கீழும் இருந்துள்ளது. இவ்வாறு எல்லைகள் பரப்பி நின்ற பாண்டியநாடு தன்னுள்ளே இரணியமுட்டநாடு, புறப்பறளை நாடு, பாகனூர்க்கூற்றம், களக்குடிநாடு, வெண்புலநாடு, பருத்திக்குடிநாடு,..............................இவ்வாராக பல உள்நாடுகளை கொண்டிருந்தது. சில நாடுகளையும் ,கூற்றங்களையும் தன்னுள்ளே கொண்டமைந்த நாடுகள் வளநாடு எனப்பட்டன. இத்தகைய வளநாடுகள் கிபி.9 ஆம் 10 ஆம் நூற்றாண்டுகளிலும் பிற்காலங்களிலும் பாண்டியநாட்டில் இருந்தன என்பது தெளிவாகும். அவை மதுரோதயவளநாடு, வரகுணவளநாடு, கேரள சிங்கவளநாடு, திருவழுதிவளநாடு, சீவல்லப வளநாடு, பாராந்தக வளநாடு, அமிதகுண வளநாடு, எனும் பெயர்களால்  அறியப்பட்டன. நாடுகளையும் கூற்றங்களையும் போலல்லாது பாண்டியர்களின் பெயர்களையும் சிறப்புபெயர்களையும் கொண்டே வளநாடுகளுக்கு பெயரிடப்பட்டது. 

பாண்டியர்களின் ஆட்சிமுறை மற்றும் அரசுரிமை 

இவ்வாறு பல பிரிவுகளாக வகுக்கப்பட்டிருந்த பாண்டி மண்டலத்தில் சகல முடிவுகளும் அதிகாரமும் மன்னனின் தலைமையின் கீழேயே அமைந்திருந்தது. அவனின் தலைமையின் கீழ் அமைந்த உள்நாடுகளுக்கு சிற்றரசர்களும் உள்நாட்டின் பிரிவுகளுக்கு அமைச்சர், படைத்தலைவர், அரையர், நாடுவகை செய்வோர், வரியிலார், திருமுகம் எழுதுபவர் போன்றோர் தம் அதிகாரங்களின் அடிப்படையில் தலைமை தாங்கினர். இங்கனம் ஆட்சியிலமைந்த மன்னனின் மூத்த மகனுக்கே அடுத்து முடிசூட்டப்பட்டது. சிலசமயங்களில் மன்னர்கள் தம் சகோதரர்களுக்கும் ஆட்சி அதிகாரத்தை அளித்துள்ளனர். மேலும் ஆட்சி முறையில் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க தமக்குள் பல பிரிவுகளை கொண்ட மண்டலங்களுக்கு தம் உறவு முறையினரையே தலைமை பீடத்தில் அமர்த்தியுள்ளனர்.  இவ்வாறு தம் உறவினரையே முக்கியமான பதவிகளில் அமர்த்தியதன் மூலம் நம்பிக்கைக்குரிய விதத்தில் ஆட்சி நடைபெறும் என நம்பியதுடன் ஆட்சிக்கு பக்கபலமாக நிறைய தலைவர்களையும் சம்பாதித்திருந்தனர்.

கடைச்சங்க காலத்திற்கு முற்பட்ட பாண்டியர்கள் 

கடைச்சங்க காலத்திற்கு முந்தைய பாண்டியர்களாக ஏராளமான மன்னர்களை வரலாறுகளிலும் காப்பியங்களிலும் அறியக்கூடியதாய் இருந்தாலும் அவர்களின் வராலாறுகளில் தெளிவில்லை. அந்தவகையில் தெளிவாக அறியக்கூடிய வரலாற்றை கொண்டவர்களில் வடிவலம்பநின்ற பாண்டியன், பல்யாகசாலை முதுகுடும்பி பெருவழுதி, பசும்பூண் பாண்டியன் போன்றோர் முக்கியமானவர்கள்.

வடிவலம்பநின்ற பாண்டியன் 

இவனது ஆட்சிக்காலமும் ஆட்சியமைந்த இடமும் அழிந்துபோன குமரிக்கண்டதிற்கு முன்னைய வரலாற்றை கொண்டது.  இவனது காலத்திலேயே தமிழ் மொழியின் அரிய நூலான தொல்காப்பியம் இயற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இவனே கடற்பிரளயத்தால் குமரிநாடு அழிந்து போகமுதல் பஃறுளி என்ற ஆற்றை எடுப்பித்தவன். இவனது ஆட்சி இருபத்துநாலாயிரம் ஆண்டுகள் நடந்ததாக தொல்காப்பியத்திற்கு உரை கூறிய நச்சினார்கினியர் என்பவர் கூறியுள்ளார். இவனது ஆட்சிக்காலம் குறித்த கருத்துக்கள் உண்மையில்லை என்றறியக் கூடியதாயுள்ளபோதும் இவன் கூடிய காலம் ஆட்சி செய்துள்ளான் என்பதையே இவ்வாறு மிகைப் படுத்தப்பட்டுள்ளது எனலாம். இவன் நிலத்திருவிற் பாண்டியன் என்றும் பாண்டியன் மாகீர்த்தி எனவும் சிறப்புற அழைக்கப்படுகிறான்.                                                                   ................தொடரும்.......................------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}