வீரப்பன்@03 கருணாநிதி-எஸ்.எம்.கிருஸ்ணா சந்திப்பு

வீரப்பன்@03

சென்ற பதிவில்.....
கர்நாடக மாநில காவல்துறை தலைமை அதிகாரி/இயக்குனர் சி.தினகர் கொழுத்த பல்லியொன்று சுவரில் திருட்டுத்தனமாக நகர்ந்து ஒரு பூச்சியின் மீது தாவி, அதை விழுங்குவதை வாய்பார்த்தபடி, தனது வீட்டில்-அலுவலக அறையில் இருக்கின்றார்.
இந்தியப் பொலீஸ் துறையிலேயே தான் தான் ஒரு கண்ணியமான, நேர்மையான அதிகாரி எனப் பீற்றிக் கொள்ளும் பேர்வழி இவர். தனக்குக் கர்நாடக பொலிஸ் தலைமை அதிகாரி பதவி வேண்டுமென்பதற்காக..... சென்ற பதிவைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

31 ஜூலை 2000      அதிகாலை 5 .00                                                        பெங்களூர்
தினகர் ஏனைய காவல்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அறிவுறுத்தல்களை வழங்கிவிட்டு தொலைபேசியை வைக்கின்றார். உடனே அது ஒலிக்கின்றது. எதிர் முனையில் பி.எஸ்.ராமானுஜம்.(உளவுத்துறை கூடுதல் இயக்குனர். இவருக்கும் தினகருக்கும் ஆகாது என்று முன்பு குறிப்பிட்டிருந்தேன், ஞாபகப்படுத்திக் கொள்க.)
"சார், ராஜ்குமார் பெங்களூரை விட்டு தொட்டகாஜனூர் சென்ற போது காவல்துறைக்குத் தெரிவிக்கவில்லை என்பதை அழுத்தம் கொடுத்துச் சொல்ல வேண்டும்" என்கிறார் ராமானுஜம்.
நடந்த சம்பவத்துக்குத் தன்னை யாரும் குற்றம் சொல்லி விடக்கூடாதே என்கிற கவலை அவருக்கு. உண்மையில் சில மாதங்களுக்கு முன்னமே; வீரப்பன் பணத்தேவையில் இருப்பதால், யாரையாவது கடத்தலாம் என்ற தகவலும், அப்படிக் கடத்தப்படக் கூடியவர்களின் list ஒன்றும் உளவுத்துறைக்குக் கிடைத்திருந்தது. அந்த list இல் முதலாவது ஆளாக இருந்தவரே ராஜ்குமார் தான்!!
தனக்கு வழங்கப்பட்ட போலிஸ் பாதுகாப்பை ராஜ்குமார் நிராகரித்து விட்டார். அப்படிப்பட்ட நிலையில் அவரின் நடவடிக்கைகளைக் கண்காணித்திருக்க வேண்டியவர் ராமானுஜம் தான். அதைச் செய்வதை விட்டு ‘சுதா’ பத்திரிகைக்கு கட்டுரைகள் எழுதுவதிலும், தொலைக்காட்சிக்கு நாடகங்கள் எழுதுவதிலும் நேரத்தைப் போக்கிக் கொண்டிருந்தவர் ராமானுஜம். இப்போது தினகரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.
காலை 8.00 மணியளவில் இந்தியா முழுமைக்கும் ராஜ்குமார் கடத்தப்பட்ட செய்தி தெரிந்துவிடுகிறது.
9.00 மணிக்கு எஸ்.எம்.கிருஸ்ணா பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தச் செய்தியை உறுதிப்படுத்துகிறார்.
பின்னர் காலை 11 மணியளவில் எஸ்.எம்.கிருஸ்ணா, மல்லி, பி.கே.பட்டாச்சார்யா, பர்வதம்மா, ராகவேந்திரா ராஜ்குமார், தினகர் ஆகியோர் ஹெலிகொப்டரில் சென்னைக்கான தமது பயணத்தை ஆரம்பிக்கிறார்கள்.
சென்னை அறிஞர் அண்ணா விமான நிலையத்தில் கர்நாடகக் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகின்றது. துரைமுருகன் எல்லா சௌகரியங்களையும் செய்து கொடுக்கிறார்.
செயின்ட் ஜோர்ஜ் கோட்டை தலைமைச் செயலகத் தாழ்வாரத்தில் கருணாநிதி, எஸ்.எம்.கிருஸ்ணாவுக்கு தமிழ்நாட்டு வழக்கப்படி சால்வை போர்த்தி வரவேற்கின்றார். Confirance Hall இல் எல்லோரும் ஒன்றுகூடுகிறார்கள்.
தமிழ்நாடு சார்பில் அமைச்சர்கள் ஆலடி அருணா, ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோரும் மற்றும் சிலரும் அந்தச் சந்திப்பில் பங்கு கொள்கிறார்கள்.
கருணாநிதிக்கு ஒலிநாடா போட்டுக் காண்பிக்கப்படுகிறது.
“ஆகவே, நம்மை தூதரை அனுப்பச் சொல்கிறார்” என்கிறார் எஸ்.எம்.கிருஸ்ணா
“சரணடையும் ஒப்பந்தப்படி நீங்கள் நடந்துகொள்ளாததன் விளைவு இது....” என்று தொடங்கி கர்நாடகத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் செய்யப்பட்ட சரணடையும் ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டி கர்நாடகத்தின் மீது குற்றம் சாட்டுகிறார் ஆலடி அருணா.
பி.கே.பட்டாச்சார்யா ஆலடி அருணாவின் வாதங்களை மறுத்து தமது தரப்பை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்.
“நாம் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றிப் பேசலாம்” என்று கூறி கருணாநிதி அந்தச் சண்டையை நிறுத்தி வைக்கிறார்.


“நாம் முடிவு செய்து தூதரை அனுப்பவேண்டியது தான்”-எஸ்.எம்.கிருஸ்ணா
“கோபாலை ஏன் அனுப்பக்கூடாது?”-கருணாநிதி
சரி, யார் இந்தக் கோபால் என்று கொஞ்சம் பார்ப்போமா ?
சந்தர்ப்பவசத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுழைந்து 1988 இல் ‘நக்கீரன்’ புலனாய்வுப் பத்திரிகையை ஆரம்பித்தவர். ஆரம்பத்தில் லே-அவுட் கலைஞராகப் பணிபுரிந்து, பின்னர் ஆசிரியராக உயர்ந்தவர். M.G.R மறைவுக்குப் பின் பிரிந்த அ.தி.மு.க.வின் இரு குழுவினரிடையேயான மோதலின் அரிய புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்புக்குள்ளானவர். 
பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த சமயத்தில் (1991-1996) ஜெவின் நெருங்கிய தோழியான(சமீபத்தில் பிரிந்து, சொத்துக் குவிப்பு வழக்குக்காக இணைந்த உடன்பிறவா சகோதரி) சசிகலாவை ‘நிழல் முதலமைச்சர்’ என்று அட்டைப் படத்தில் வர்ணித்து தமிழக அரசின் கோபத்துக்குள்ளானவர். இதனையடுத்து நக்கீரன் பத்திரிக்கை மீது போலிஸும், ரவுடிகளும் ஏவிவிடப்பட்டனர். இந்தக் களேபரத்தில் பத்திரிக்கை அச்சடிப்பவரான கணேசன் காவல்துறைக் காவலில் வைத்துக் கொல்லப்பட்டார். ஒரு கட்டத்தில் ஜெ அரசு நக்கீரனை வெளியிடுவதற்குத் தடைவிதித்தது. ஆனாலும் கோபால் உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கை வென்று நக்கீரனைத் தொடர்ந்து வெளியிட்டார். இந்தப் பிரச்சனை சமீபத்தில் வெளியிடப்பட்ட “மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்” கட்டுரை வரை தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றது.
1993 முதல் நக்கீரனுக்காக வீரப்பனிடமிருந்து பல பிரத்தியேக பேட்டிகள், புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டு தென் மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. எனவே கோபாலை வீரப்பனிடம் தூதனுப்பும் யோசனை தோன்றியது இயல்பான ஒன்றுதான்.
கருணாநிதி எழுந்து கூட்டம் நடைபெற்ற Hall இலிருந்து வெளியே நடக்கிறார். எஸ்.எம்.கிருஸ்ணா, மல்லிகார்ஜுன் கார்கே, ஆற்காடு வீராசாமி ஆகியோர் பின்தொடர்கிறார்கள். தினகர் உள்ளிட்ட ஏனையோர் பரிமாறப்படும் சிற்றுண்டியை ஒரு பிடி பிடித்தவாறு கூட்டம் நடைபெற்ற ஹாலிலேயே இருக்கிறார்கள்.
**********************
கடத்தல் தொழிலில் ஈடுபடுவது அதிக சிரமமான ஒரு வேலையாக இருந்த போதிலும் அதில் அதிக வருவாயை ஈட்டிக்கொள்ள முடியும் என்று உணர்ந்த வீரப்பன், சால்வைக் கவுண்டரிடம் வேலைக்குச் சேர்ந்து கொண்டான். அவர் 25 வருடங்களுக்கு மேலாக காட்டுப் பகுதியில் அந்தத் தொழிலைத் தான் செய்து வந்தார். 1980 களில் தந்தம் ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்ட பிறகு, சால்வைக் கவுண்டர் சந்தன மரங்களைக் கடத்துவதில் ஈடுபட்டார்.
**********************
முப்பது நிமிடங்கள் கழிந்த நிலையில் வெளியே சென்ற நால்வரும் மீண்டும் ஹாலுக்குத் திரும்புகின்றனர். நால்வரும் நால்வகை ரியாக்க்ஷனை தமது முகத்தில் வெளிப்படுத்துகிறார்கள்.கருணாநிதியின் முகத்தில் திருப்தி தெரிகிறது....கிருஷ்ணாவின் முகத்தில் அதிருப்தி தெரிகிறது...

வேட்டை தொரும்.....

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}