'World's youngest CEO' - கொஞ்சம் வளரவிடுங்கப்பா

இன்றைக்கு எனக்கு தெரிந்த ஒருவரோடு நடந்த சம்பாஷைனைதான் எனக்கு இந்த விடயத்தை ஒருதரம் அலசி பார்க்க தூண்டியது.

சுத்தி வளைக்காம விடயத்திற்கு வரலாம். எல்லாரும் ஒருதரம் கூகுள் தேடல் தளத்திற்கு போய் "World's youngest CEO" என்று தேடிப்பாருங்கள். கீழ்க்காணும் படத்தில் உள்ளவர்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
 இவர்கள் இருவரும் சகோதரர்கள், இதில் மூத்தவர்(வலது) பெயர் சரவண் குமரன்(வயது 12) இளையவர் சஞ்சய் குமரன்(வயது 10) இருவரும்தான் அந்த "world's youngest CEO". இருவரும் சேர்ந்து Java கணணி மொழியை பயன்படுத்தி apple store க்காக உருவாக்கிய apps பயனர்களால் பல்லாயிரம் தடவை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையாக வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட கம்பெனிதான் Go Dimensions. இவர்களைப்பாராட்டி முகப்புத்தகத்தில் ஏகப்பட்ட postகளும் உண்டு. இந்த கட்டுரைக்குள் மேலே செல்வதற்கு முன்னர் இவர்களுடைய வெற்றிக்கு எனது பாராட்டுக்கள். "நீயெல்லாம் பாராட்டி.." என்று உங்கள் மனக்குரல் எனக்கு கேட்கிறது.

நீங்க நினைப்பதும் சரிதான், எனக்கு தெரிந்த வரைக்கும் நான் 10 வயதில்தான சிவர்ல ஒன்னுக்கு அடிச்சு இனிசியில் எழுதிட்டு இருந்தன். இன்றை வரைக்கும் அவர்களுடைய சாதனையின் ஆழத்தை அறிந்து கொள்ளும் அறிவு கூட எனக்கு  இல்லை.


அந்த சாதனையின் ஆழம் காண நான் இந்த கட்டுரை எழுதவில்லை மாறாக என்னிடம் இவர்களிடமும், இவர்கள் போன்றவர்களை ஊக்குவிக்கும் சமூகத்திடமும் கேட்க சில கேள்விகள் உண்டு. அவர்களுடைய திறமை பற்றியோ வெற்றியை பற்றியோ நான் கேள்வி எழுப்ப வரவில்லை அது காலம் தானே கேட்டு தானே பதில் சொல்லும். நான் கேட்க வந்த கேள்விகள் இவைதான்...

கேள்வி - 01
பட்டாம்பூச்சி பிடித்து கல்லோடு கட்டிவிட்டு பறக்க விட்டு பார்கக வேண்டிய வயதில் இவர்களுக்கு இந்தப்பட்டம் எவ்வளவு சுமை...?? இவர்கள்தான் அந்தப் பட்டாம்பூச்சிகளா..?? இந்த வயதில இவ்வளவு சுமை தேவையா..?? கனவுகள் எல்லாம் வாழ்க்கையாய் தெரியும் பருவம் சிறுவராய் இருக்கும் போது மட்டும்தான்.

இந்த வயதில தீபாவளிக்கு ரோட்டு ரோட்டா அலைஞ்சு ஊர்ல படுத்துக்கிடக்கிற நாய் வெருள்றதுக்கு பட்டாசு போடாம, எப்பதான் செய்யிறது?? இந்த வயசில நிலாவில வடை சுடுற பாட்டியை பற்றி யோசிக்காம, எப்பதான் யோசிக்கிறது?? என்னைக் கேட்டா இவர்களை மாதிரி சிறுவர்கள் எங்களுடைய வகுப்பில் இருந்தால் ஒன்று பொறாமையுடன் எரிஞ்சு விழுவம் இல்லாட்டி இவனுகளை கண்டாலே "மெத்தப் படிச்சவன்" வாரான் என்று குட்டிச் சுவரெல்லாம் தாண்டி ஓடுவம்.

கேள்வி - 02
இவர்கள்தான் முதலாவதும் இல்லை, இறுதியும் இல்லை. இவர்களைப்போன்ற "boy wonder, girl wonder" என்று எத்தனையோ பேர் வந்து போய்விட்டனர்.  ஆனால் யாருமே பின்னாளில் சாதிப்பது கிடையாது.  இது ஏன்...??

நான் இப்படி எல்லாம் கேட்டா, இது தொழில்நுட்ப உலகம் இனி எல்லாம் வேகம்தான் என்று சித்தாந்தம் பேச இங்க பலர் வருவார்கள். அப்படி வருபர்களிடம் நான் உலக வரலாற்றில் தோன்றிய இரு மனிதர்களை உதாரணமாக வைக்கிறேன். அதில் ஒருவர் அதிக பிரிசித்தி பெற்றவர் மற்றையர் பெரிதும் பேசப்படாதவர்.


இளைஞனாக Einstien
உலகில 1900 களில்  பிரபஞ்சத்தின் விடை  கண்டு பிடிக்கப்படாத கேள்விகளுக்கு விடைகாணும் முகமாக போராடிக்கொண்டிருந்தார்கள். இவ்வாறு முயற்சி செய்தவர்களுள் பலருக்கு பெயரிற்கு பின்னால் போடப்படும் பட்டங்களே ஒரு மெனு காரட் சைசுக்கு இருக்கும். இப்படி வாழ்க்கை முழுக்க முயற்சித்தும் கிடைக்காத விடை, இரவு நேரத்தில் படுப்பதற்கு முன் பொழுதுபோக்காக பெளதீகவியல் படித்த ஒரு சாதாரண அரசாங்க கிளார்க்கிற்கு கிடைத்தது. அவர்தான் இன்று உலகமே மேதையாக கொண்டாடும் Albert Einstein. இவரைத்தான் சிறுவயதில் கணக்கு ரீச்சரால் மக்கு என்றும், பல்கைலைக்கழகத்தில் ஆய்வுகூட உதவியாளராக விண்ணப்ப்பித்த போது, 'தகுதியில்லை' என்றும் நிராகரிக்கப்பட்டவர்.

மற்றையவர் Ted Kaczynski, இவரைப்பற்றி அதிகம் தெரிந்திருக்க முடியாது. ஆனால் இவருக்கு பின்னால் ஒரு பெரிய வரலாறு உண்டு. அமெரிக்காவில் பிறந்து, சிறு வயதில் மிகப்பெரிய சாதனைகளைப் புரிந்து "boy wonder" என்று புகழப்பட்டவர். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான Harvard பல்கலைக்கழகத்திற்கு மிக்குறைந்த வயதிலேயே உள்வாங்கப்பட்டவர் என்ற பெருமையையும் மிகச்சிறிய வயதிலேயே புரோபசர் ஆனவர் என்ற பெருமையையும் தன்னகத்தே கொண்டவர்.  இவ்வளவு சாதனைனையும் 25 வயதுக்குள் செய்துவிட்டு திடீரென்று எல்லா பதவிகளையும் துறந்துவிட்டு கலிபோர்னியா காட்டுக்குள் மின்சார வசதி கூட இல்லாத ஒரு மரத்தால் செய்ப்பட்ட வீட்டில் தனது வாழப்போவதாக கூறி ஒதுங்கிக் கொண்டார். அங்கிருந்து தன் தபால் வழியாக குண்டுகளை அனுப்பி 3 பேரைக் கொன்றும் மேலும் பலரைக் காயப்படுத்தியும் உள்ளார்.
உலகின் இளைய புரெபசர் பட்டத்தை பெற்ற போது Ted Kaczynski (பின்னால ஒரு ஒளிவட்டம் தெரியும் பாருங்க)
மிகுதி சாதனைகளை சாதித்த பின் கைது செய்யப்ட்ட போது Ted Kaczynski


இந்த இரண்டு உதாரணங்களுமே நான் இவ்வளவு நேரமாக சொல்ல முயற்சித்த கருத்தை இலகுவாக சொல்லிவிட்டது. 


வளர்ச்சி என்பது படிப்படியாக இருக்க வேண்டும். ஒரு 25 வயதுடைய ஒருவரிற்கு 5 வயதுடைய ஒருவரின் மனவயதுதான் இருக்கின்றது என்பது எவ்வாறு குறைபாடோ அவ்வாறுதான் மேல் கண்டவர்களும். இதுவரை சிகரம் தொட்டவர்கள் எல்லாம் சிறுவயதில் சிறுவர்களாய் வாழ்ந்தவர்கள்தான். ஒரு வரைபு சீராக இருக்க வேண்டும் அதுதான் சாதாரணம்(normal), வரைபு ஆரம்பிக்முன்னரே முடிவிலியை தொட்டுவிட்டால் அது அசாதாரணம்(abnormal). ஒரு உறுப்பில அளவிஞ்சிய செல் வளர்ச்சி இருந்தால் அது வியாதி, அதற்கு மருத்துவ உலகில் cancer என்று கூறுவார்கள்.

இவர்கள் இந்த விடயத்தை சொல்ல நான் கொண்ட எடுத்துக்காட்டு மட்டுமே. இந்த நவீன உலகில் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இரண்டு வயதில் முதலாம் தரம் படிக்க வைக்கவும், ஐந்து வயதில் பிரஞ்சு படிக்கவும் பேரூந்துகளில் கால்கடுக்க கூட்டிக்கொண்டு  திரிகிறார்கள். போகிற போக்கில் கைக்குழந்தைகளை எல்லாம் abcd ரைம் சொல்ல சொல்லி பெற்றோர் அடம் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த பிஞ்சு வயதில் அவன் செய்யவேண்டிய குறும்புகளை செய்ய விடுங்கள். கொண்டிருக்க வேண்டிய அறியாமைகளையும் கொள்ளவிடுங்கள். ஆகமொத்ததில் பிள்ளைகளை வளர விடுங்கள்.
இனி.. முடிவுகளை வாசகர்களுக்கே விட்டுவிடுகிறேன்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}