கிரானைட் மாஃபியாக்களின் மர்மஉலகம்


கடந்த சில நாட்களாகவே கலகலத்துக் கொண்டிருக்கிறது மதுரை. திருவிழாவெல்லாம் ஒன்றும் இல்லை, கிரானைட் குவாரிகள் மீதான அரசின் அதிரடி நடவடிக்கைகள் தான் காரணம். பொதுவாகவே எதிர்க் கட்சியாக இருக்கும் போது கிரானைட் மோசடிகள் பற்றிப் பேசும் கட்சிகள் (அவை தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ) ஆட்சிக்கு வந்ததுமே, கிரானைட் பற்றிய விவகாரத்தில் கண் மூடி, வாய் பொத்தி அடங்கிப் போய்விடும். அந்தளவுக்குப் பணம் கொழிக்கும், கை மாறும் தொழிலாகவே இருந்து வருகின்றது கிரானைட் தொழில்.

தமிழகத்தைப் பொறுத்த வரை மதுரையில் தான் அதிகளவில் சட்ட விரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இது பற்றி யாரும் வாய் திறந்து விடக்கூடாது என்பதற்காக குறித்த கிரானைட் கம்பனிகளால் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களுக்கு மாதா மாதம் தனிச் சம்பளமே வழங்கப்பட்டு வருகின்றது. கலெக்டருக்கு 15 லட்சத்தில் தொடங்கும் இவர்களின் சம்பளம் பியூனுக்கு 10,000 இல் முடிவடைகிறது என்றால் யூகித்துக் கொள்ளுங்கள் இந்தத் தொழிலில் எவ்வளவு பணம் புழங்கும் என்று!!

இங்கு கிரானைட் தொழிலில் மூன்று நிறுவனங்கள் பிரதானமாக ஈடுபட்டு வருகின்றன. அவற்றில் பி.ஆர்.பி. நிறுவனத்தின் மீதே அதிகளவான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
பி.ஆர்.பழனிச்சாமி
இந் நிறுவனத்தின் தலைவரான பி.ஆர்.பழனிச்சாமி, மு.க.அழகிரிக்கு மிக நெருக்கமானவராகச் சொல்லப்படும் அதே வேளையில், சசிகலா பரிவாரத்துடன் நெருக்கமாகச் செயல்ப்படும் நான்கு அமைச்சர்கள் உட்பட பலருடனும் இவருக்குத் தொடர்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் இவர் தி.மு.க. ஆட்சியிலும் சரி, அ.தி.மு.க ஆட்சியிலும் சரி அசராமல் அரசை ஏமாற்றி வருமானம் பார்த்ததாகக் கூறப்படுகின்றது.
அடுத்ததாக சிந்து கிரானைட்ஸ் நிறுவனத்தின் மீதும், அழகிரியின் மகன் துரை தயாநிதிக்குச் சொந்தமான ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தின் மீதும் குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தின் போது துரை தயாநிதி இத் துறையில் புகுந்து விளையாடியதாகக் கூறப்படுகின்றது.

சரி, என்ன தான் நடக்கின்றது இந்தத் தொழிலில் ?
புறம்போக்கில் கிரானைட் கற்களை வெட்டி எடுக்கும் உரிமத்தை 'டாமின்’ நிறுவனத்துக்குத்தான் அரசு வழங்குகிறது. ஆனால், 'டாமின்’ நிறுவனத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுப்பதற்கான நவீனத் தொழில்நுட்பங்கள் எதுவும் இல்லை என்பதனால், 'டாமின்’ நிறுவனம் தனது குவாரிகளை 'ரைசிங் செல்லிங்’ சிஸ்டத்தில் தனியாருக்குக் குத்தகைக்கு விடுகிறது. இங்கு வெட்டி எடுக்கப்படும் கிரானைட் கற்களில் கன மீட்டருக்கு இவ்வளவு என ஒரு குறிப்பிட்ட தொகையை 'டாமின்’ நிறுவனத்துக்கு தனியார் செலுத்த வேண்​டும். இதில் தான் இவர்கள் அரசை ஏமாற்றி, அரசுக்கு வருமான இழப்பை ஏற்படுத்தி அந்தத் தொகையை தம் பாக்கெட்டில் போட்டுக் கொள்வதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
தனியார் பட்டா நிலங்களை கிரானைட் குவாரிக்​காக வாங்கிப் போட்டு இருப்பவர்கள், 'டாமின்’ குவாரிகளில் பெரிய அளவில் கற்களை வெட்டி எடுத்து, அவற்றைப் பட்டா நிலங்களில் வெட்டி எடுத்ததாகக் கணக்கு காட்டுகிறார்கள். இவ்வாறாக இவர்கள் மோசடி செய்த தொகை 16,000  கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் அரசு புறம்போக்கு நிலங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கிரானைட் கற்கள் வெட்டி எடுப்பதாகவும், மேலும் குளங்கள், கண்மாய்களில் கிரானைட் கழிவுகளைக் கொட்டி, அவற்றை ஆக்கிரமித்து விவசாயத்திற்கு நீர் கிடைக்க விடாமல்ச் செய்வதாகவும், பின்னர் அவ் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கிப் போட்டு கிரானைட் கற்கள் வெட்டிக் கடத்துவதாகவும் அடுக்கடுக்காகப் பல குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
இந்தக் குற்றச்சாட்டுகள், மதுரை கலெக்டராக இருந்த சகாயத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இந்த விடயத்தைக் கையில் எடுப்பதென்று அவர் முடிவு செய்தவுடனேயே, அவருக்கு நெருக்கமானவர்கள், குறித்த கிரானைட் அதிபர்களின் தொடர்புகள் குறித்து எச்சரித்தார்கள். 
திரு.சகாயம்
அவர்களின் தொடர்புகள் குறித்து அறிந்து கொண்ட சகாயமும் தன்னிடம் புகார் தெரிவித்தவர்களிடம் "என்னை இன்னும் கன நாளைக்கு இங்க இருக்க விட மாட்டாங்கப்பா..." என்று தெரிவித்து விட்டு முழு மூச்சாக நடவடிக்கையில் இறங்கினார்.
மதுரை மேலூர் பகுதியில் அமைந்துள்ள கிரானைட் குவாரிகளில் மே- முதலாம் திகதி புகுந்து அதிரடிச் சோதனை நடத்தினார் சகாயம். வழமையான கனிம வளத் துறை அதிகாரிகளைத் தவிர்த்து விட்டு தனக்கு நெருக்கமான, நம்பிக்கையான அதிகாரிகளை வைத்து அந்தச் சோதனையை நடத்தினார் சகாயம். 
உடனே சென்னையில் இருந்து அவருக்குப் போன் வந்தது.
"என்னுடைய அனுமதியில்லாமல் ஏன் அந்த ரெய்டுக்கு சென்றீர்கள்? அந்த அதிபருக்கு யாரிடமெல்லாம் செல்வாக்கு இருக்கிறது தெரியுமா?" என்று சீறியது எதிர்முனை. "இனிமே உங்க அனுமதி வாங்கிட்டுப் போறேன் சார் " என்று சமாளித்துக் கொண்டார் சகாயம்.
ஆனாலும் அத்துடன் அமைதியாகி விடாமல், கிரானைட் கம்பனிகள் அரசுக்குக் கணக்குக் காட்டிய லோட் எண்ணிக்கை, தூத்துக்குடி துறைமுகத்துக்கு சென்று சேர்ந்த லோட் எண்ணிக்கை என்று பல தகவல்களைத் திரட்டிய சகாயம், அவையெல்லாவற்றையும் வைத்து ஒரு அறிக்கை தயாரித்தார்.

மேலும் மே-17 ந் தேதி மீண்டும் அந்தக் குவாரிகளில் ஒரு அதிரடிச் சோதனையை நடத்திய சகாயம் அதில் கிடைத்த விபரங்களையும் சேர்த்து அந்த அறிக்கையை முழுமை செய்து மே-19 ந் தேதி அதனை தொழில்த் துறைச் செயலாளருக்கு அனுப்பி வைத்தார். அந்த அறிக்கை தான் பதினாறாயிரம் கோடி ரூபா வருமான இழப்பை அம்பலப்படுத்தியது. அடுத்த ஐந்தாவது நாளே- மே-23 ந் தேதி, சகாயம் எதிர்பார்த்தது போலவே மதுரையில் இருந்து தூக்கியடிக்கப்பட்டார்!!
சகாயத்திற்கு அடுத்ததாக மதுரைக்குக் கலக்டராக வந்தார் அன்சுல் மிஸ்ரா. சிறிது காலம் அமைதியாக
"தற்போதைய" மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா
இருந்தவர் பின்னர் சகாயம் தயாரித்த அறிக்கையைக் கையில் எடுத்தார். அந்த அறிக்கையை தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதாவின் கவத்துக்குக் கொண்டு சென்றவர், ஜெவிடமிருந்து குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நேரடி உத்தரவையும் பெற்றார். இதனையடுத்துத் தான் தற்போதைய அதிரடிகள் ஆரம்பமாகின. இந்த முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு 18 குழுக்களை அமைத்தார் அன்சுல் மிஸ்ரா. அந்தக் குழுக்கள் தான் கிரானைட் குவாரிகளை நொங்கெடுத்துக் கொண்டிருக்கின்றன. தமது அரசியல் செல்வாக்குகளை உடனையாகப் பிரயோகிக்க முடியாத நிலையில் விசாரணை உறுதி என்று தெரிந்த நிலையில் கிரானைட் நிறுவனங்கள் பதுங்க ஆரம்பித்தன. தாம் வெட்டிய கிடங்குகளையெல்லாம் கழிவுகளைக் கொண்டு மூடி அந்த இடத்தில் குவாரியே இருக்கவில்லை எனக் காண்பிக்க முனைந்தனர். முன்னர் சகாயத்துடன் ரெய்டுக்குச் சென்ற அதிகாரிகள் இந்த மோசடியைக் கண்டு பிடித்ததைத் தொடர்ந்து கடந்த ஆறாம் திகதி முதல் GPS கருவியின் உதவியுடன் மூடப்பட்ட குழிகளின் உண்மையான விஸ்தீரணத்தைக் கண்டு பிடிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஒரு சில இடங்களில் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கண்மாய்களைக் காணாமல் அதிகாரிகள் முழி பிதுங்கிய சம்பவங்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
எது எப்படியோ தற்போது இந்த நடவடிக்கை அதிரடியாகச் செயல்ப்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் பிரபல கிரானைட் நிறுவனமான பி.ஆர்.பி. நிறுவனம் மோசடிகளில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தால் இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் இதே வேகத்தில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா? அல்லது விடயத்தின் சூடு ஆறிய பின்னர் மீண்டும் கிரானைட் கம்பனிகளின் அட்டகாசம் ஆரம்பமாகுமா? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்....சகாயத்தின் அறிக்கையில் குறிப்பிட்டதன் படி இந்தக் குவாரிகளை அரசே எடுத்து நடத்துமாக இருந்தால் (அதற்கு முதலில் டாமின் நிறுவனத்தை நவீனப்படுத்த வேண்டும்) ஜெயலலிதாவின் சமீபத்திய கனவாகக் கூறப்படும் டாஸ்மார்க் இல்லாத தமிழகத்துக்கு ஏற்படும் வரி இழப்பை நிச்சயமாக அரசினால் இந்தக் குவாரிகள் மூலமாக ஈடுகட்ட முடியும். ஜெயலலிதா அதைச் சாதிப்பாரா? சாதிக்க விடுவார்களா? என்பதும் சந்தேகம் தான்....ஏனென்றால் மீண்டும் உடன்பிறவாத சகோதரி ஒரு சில கோடிகளைப் பெற்றுக் கொண்டு விடயத்தைத் திசை திருப்பி விடுவார்....ஏனென்றால்....அந்த நிறுவனத் தலைவர்களின் தொடர்புகள் அப்படிப்பட்டவை!!!
என்ன நடக்கிறதென்று தொடர்ந்து பார்ப்போம்......
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}