கொய்யால....!!!..... செத்தவீடாயா இது.....!!!!!

நம் ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் பல நிகழ்வுகள் ஏதோ ஒரு தனிப்பட்ட காரணத்தினாலோ அல்லது சமூகத்திணிப்புகளாலோ முக்கியமானதாக அமைந்து விடுகின்றது. அந்தவகையறாக்களில் மனிதனிடம் பிறந்தநாள் நிகழ்வுகள் எவ்வளவு தூரம் மகிழ்ச்சியுடனானதாக முக்கியத்துவப்படுகிறதோ அதை விட பன்மடங்கு சாவு வீடுகளும் சோகம் நிறைந்த நிகழ்வாக  முக்கியத்துவப்படுத்தப்படுகிறது. உண்மையில் நம்முடன் தன் அன்பை பகிர்ந்து கொண்ட தன் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொண்ட ஒரு மனிதரின் இழப்பை தாங்கமுடியாத குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் முகமாகவும் இறந்தவரின் உடல் அடக்கத்தை முக்கியமாக பிரதிநிதித்துவப் படுத்துவதுமாகவே சாவு வீடுகள் அமைகின்றன. ஒரு இழப்பை தெரியப்படுத்தும் செத்த வீட்டு நிகழ்வுகள் கண்ணீரும் சோகமும் மட்டும் நிறைந்ததாக இருந்தால் ஆச்சரியம் இல்லை ஆனால் இன்றைய நிலையை பொறுத்தவரையில் செத்த வீடுகள் கண்ணீரையும் சோகத்தையும் மட்டுமல்ல கமராவையும் ,லப்டோப்பையும், கொண்டிருக்கின்றன என்பதுதான் ஆச்சரியமே...இப்படி செத்த வீடுகளில் நடக்கும் கூத்துக்கள் தான் எத்தனை எத்தனை......? அதை சற்று அலசுவதே இப்பதிவின் நோக்கம்.

                                       நம் பாரம்பரியமான அம்சங்களில் செத்த வீடுகளில் நடக்கும் கிழவிகளின் ஒப்பாரிகளும் ஒன்று. அவ்வளவு ஏன் இன்றும் யாழ்ப்பாணத்தின் பல கிராமப்புறங்களில் இவ்வாறு இறந்த வீடுகளில் அழுவது ஒரு கலையாகவே பார்க்கப்படுகிறது சும்மா அப்படி அழுவார்கள் நம்மூர் கிழவிகள். முதலில் அவையடக்கமாகத்தான் ஆரம்பிப்பார்கள் ஆனால் போகும் போக்கில் சோகமும் வேகமும் பாட்டில் அதிகரித்து செல்ல உச்சஸ்தாயியில் ஒரு பிடிபிடிப்பார்கள் பாருங்கள் அப்பா..... ஒப்பாரி வைக்கும் கிழவியையும் அவரது சகாக்களையும்தவிர ஏனையோர் சோகத்தால் மயங்கி விழும் அளவிற்கு இருக்கும் அவ்ஒப்பாரி பாடல்கள். அந்தவகையில் நம்மூரில் ஒப்பாரிவைக்கும் சில கிழவிகளின் ஒப்பாரி இராகங்கள் நானுட்பட பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும். 
                         
                   . அடடா.....நம்மூரு கிழவிகளை நிச்சயம் பாராட்டியே ஆகணும் தங்கள் சொந்த தேவைகளையும் ஆத்திரங்களையும் என்னமா செத்த வீட்டு ஒப்பாரியில கோர்த்து விட்டு கூத்துப்பார்கிறார்கள் இவர்கள். 

“கண்டியில காத்தடிக்க கைவிளக்கு நூந்தது இங்கே...... எண்ணையில்ல லாம்புமில்ல வெளிச்சம் கெட்டு போனது இங்கே..........” 
                         
                                         இப்படி ஒப்பாரி வைக்கிற காலமெல்லாம் மலையேறிப் போய் ரொம்ப நாளாச்சு. இப்ப சாதாரணமா அழுகிற அழுகையை கொஞ்சம் மார்த்தி நல்லா இழுத்து ஒரு பாட்டு மாதிரி விட்டா அது கிராமத்து ஒப்பாரி ஆகிவிடுகிறது. ஆரம்பிக்கும் போது 

“....என்ரை ராசா நீ இல்லை என்றாஆஆஆஆஆஆஆ நாங்களெல்லாம் போவதெங்கேஏஏஏஏஏ..........””  
                                              இப்படித்தான் தொடங்குகிறார்கள் பெரும்பாலும் [செத்துப் போனவருக்காக ஒதுக்கப்பட்ட வரி இது மட்டும் தான் பெரும்பாலும்..............பாவம் ஒப்பாரி வைக்கிறதே செத்தவருக்குதான் எண்டது இந்தக் கிழவிகளுக்கு மறந்தே போச்சுது....... தாங்க நினைச்ச பாட்டுக்கு பாடி கடாசுதுகள் ] ஆனால் அடுத்தவரி அந்த செத்தவீட்டுக்குள்ள நுழையிற ஆளில அல்லது கிழவியின்ரை கண்ணிலபடுற ஆளில தான் தங்கியிருக்கு. 

                                                  
                                அந்த ஆள் கிழவிக்கு வேண்டப்படாதவரா இருந்தா கிழவியின்ரை அடுத்த பாட்டு வரி அவரை ஒருகாட்டுக் காட்டிவிடும் என்பது உறுதி.....அவ்வளவுதான் துளைஞ்சுது அவற்றை பாடு.........செத்த வீட்டில செத்தவற்றை மனுசி முதல் கொண்டு பிள்ளையளிண்டை முகம்வரை அவரால அண்டைக்கு முழிக்கேலாது.உண்மையில செத்தவருக்கும் வந்தவருக்கும் நெருக்கமான உறவுமுறை இல்லை எண்டாலும் கூட............ வந்தவரை வசை பாட வேணுமெண்டு கிழவிகள் முடிவெடுத்திட்டுதெண்டால்  செத்தவர் செத்ததுக்கு காரணம் வந்தவர்தான் எண்ட அளவில இந்த ஒப்பாரியை கொண்டுபோய் முடிச்சுடுங்கள்..........இந்த ஒப்பாரிகள் தான் பெரும்பாலும் செத்த வீட்டில் நடக்கும் கலவரங்களுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன என்பதுதான் சிறப்பு அம்சமே..... அதுவும் பணம் படைத்த வெளிநாட்டுக்காரரின் செத்த வீடுகளில் ஒப்பாரிகள் பலமாகவும் பாசமாகவும் இருக்கிறது.            
                   
                  அட இது கூட பரவாயில்லை செத்தவர் சில காலங்களுக்கு முன்பு யாருடனாவது தகராறுகளில் ஈடுபட்டிருந்தால் காணும்.... யாருடன் தகராறுகளில் ஈடுபட்டாரோ அவர்கள் தான் இவரை “செய்வினை சூனியம்” வைச்சு சாக்காட்டிப்போட்டினம் எண்டு பெரிய விஞ்ஞான ஆராச்சிகள் நடைபெறுகிற இடமாக கூட இந்த செத்த வீடுகள் இருகின்றன என்பதுவும் பெருமைக்குரியதே [ஆனால் டாக்குத்தர் குடுத்த இறப்புச்சான்றிதழில மாரடைப்பு எண்டோ இருதயநோய் எண்டோ இருக்கும்......இதென்ன கோதாரி டாக்குத்தரே சாக்காட்டினவர் அவர் சொன்ன காரணம் சரியா இருக்க.........அவர் செய்வினை சூனியத்தாலதான் செத்தவர்.....ஹ்ம்ம்.......நடத்துங்கோவன்].     .
                     
                          இந்த ஒப்பாரிகளும் செய்வினை சூனியங்களும் ஒருபுறம் எண்டா இந்த ஸ்கைப்பும் கமேராவும் படுத்திர பாடு இருக்கே..........தாங்க முடியாது....... செத்தவர் கடும் சுகவீனப்பட்டு ஆஸ்பத்திரியில இருக்கும் போது கூட ஒருக்கா அவரோட கதைக்காததுகள் எல்லாம் அவற்ற செத்த வீட்டை நேரடி ஒளிபரப்பு மூலம் கண்டுகளிப்பினம்........ அதிலும் ஒரு லப்டொப் மூலம் பிரான்சில இருக்கிற குடும்பத்துக்கும், இன்னொரு லப்டொப் மூலம் அமெரிக்காவில இருக்கிற குடும்பத்துக்கும் இந்த செத்த வீட்டு நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதுதான் உச்சக்கட்ட கடுப்பே........ இதில ஒரு லப்டொப் தங்கட சொந்தக்காரரிட்ட இரவல் வாங்கினதா இருக்கும்.....அதெல்லாம் அப்படித்தான் ஆஸ்பத்திரியில இருந்து பிணத்தை கொண்டுவரும்போதே அழுதபடியே ஊரில இருக்கிற லப்டொப் சொந்தக்காரருக்கு போன் போகும்...... ”ஐயோ என்ரை ராசா மோசம் போட்டாரனை......” எண்டு சொல்லி இரண்டு புறமும் அழுகை நிலவும். கடைசிநேரத்தின் போது ”........ வரும் போது உண்டை லப்டாப்பை ஒருக்கா கொண்டானை பிள்ளை......... என்ரை ராசாண்ட செத்த வீட்டை என்ரை சொந்தங்களும் பார்க்கட்டும்......” இந்த வசனம் மட்டும் விம்மலுடன் தெளிவாக பரிமாறப்படும்.... அதாவது சவப்பெட்டிக்கு முன்னாடி ஆயத்தப்படுத்திறது லப்டோப்பைதான் எண்டா பாருங்கோவன்....... அட இது போதாது எண்டு நேரடி ஒளிபரப்பின் மூலம் பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம்...... இடையிடையே தொலைபேசியில் வேறு அழைப்பு விடுத்து இங்கு நிப்பவரின் அவசரம் புரியாது கமேராவை கொஞ்சம் அப்படிவை...... மேசையை கொஞ்சம் இப்படிவை.... எண்டு படுத்திர பாடு இருக்கே.......... பிணத்துக்கு பக்கத்தில நாங்களும் படுத்தா என்ன எண்ட மாதிரி இருக்கும்..... அதைவிட செத்தவரிண்ட மனுசி அழுது கொண்டிருப்பா இடையிலை தொலைபேசியடிக்கும்..... மனுசிக்கு தொலைபேசியில நிக்கிற பிள்ளை சொல்லும் அம்மா அழுகிற ஆக்களை ஒருக்கா காட்டம்மா.....எண்டு உடனே அழுகையை நிறுத்திப்போட்டு லப்டோப்பை திருப்பி வைச்சுப்போட்டு கூட்டத்தோட திருப்பி வந்து இணைஞ்சதும் மனுசி அழத்தொடங்கும்.......... இப்ப அழுகை பலமாவே இருக்கும் ஏனெண்டால் வெளிநாட்டு பிள்ளை பார்க்குது கண்டியளோ.......
               
                        என்னய்யா நடக்குது இங்கை...... ஒரு செத்தவீட்டு இறுதிச்சடங்கு நடக்குது......... செத்தவன் உண்டை எதிரியா என்ன.....? மாப்பிள்ளை அந்த லப்டோப்பை போடு செத்த வீட்டை ஒருக்கா பார்ப்போம்... எண்டு ஏதோ கலியாண வீட்டு வீடியோவை போடு என்றமாதிரி சொல்லுறதுக்கு.......

                         அட இந்த கூத்து ஒருபுறம் இருக்கட்டும் சமீபத்தில ஒரு செத்த வீடொன்று நடந்தது. எங்கட ஊரில செத்தவாக்கு ஒரே ஒரு பொம்புளைப் பிள்ளை தான் இருக்குது அதுவும் வெளிநாட்டில .......... ஆனால் தாயை வடிவாத்தான் கவனிச்சது பிள்ளை..... இருந்தாலும் செத்த வீட்டுக்கு வர அனுமதியில்லை என்டதாலை வரமுடியல்லை. அதால நேரடி ஒளிபரப்பின் மூலம் பிள்ளை செத்த வீட்டை பார்த்துக்கொண்டிருந்தது.... இடையிலை ஒரு வேலை செய்தான்கள் பாருங்கோ இஞ்சை இருக்கிறவங்கள்...... அட ராமா என்னை ஏன் இந்த ஊரில பிறக்க வைச்சாய் எண்ட மாதிரி இருந்திச்சு........ செத்தவாண்டை பிள்ளை அழுகிரத்தை பெரிய ஒலிபெருக்கியில வைச்சு போட்டுவிட்டான்கள் அதுவும் உச்ச சத்தத்தில........... கோயில் திருவிழாக்களின் போது நம்மூரு ஒலிபெருக்கிகள் அலறுமே அதுமாதிரி ஒரு செத்த வீட்டு அலறல் ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது....... மிகைபடுத்த எல்லாம் இல்லை உண்மை சம்பவம்..... இந்த வெளிநாட்டுக் காசுக்காக இவனுகள் செய்யிற கூத்துக்கள் இருக்கே ஐயோ நாண்டுகிட்டு சாகலாம்.....
           
                         இந்த செத்த வீட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் நம்மட ஊர் அம்மாமார் இருக்கினம் கண்டியளோ....... போகப்போக “ஹ்ம்ம் பிரமாதமான வேலை செய்து போட்டினம் நம்மடை ஆக்கள்....... பாவம் பிள்ளை அழுததை கேட்ட தாயிண்ட ஆத்மா நிச்சயம் சாந்தியடையும்......... இருந்தாலும் நல்ல ஒரு முறை என்ன..........??...???” ஏதோ தியேட்டர்ல படம் பார்த்திட்டு நம்ம பயலுவ கதைக்கிற மாதிரியே கதைப்பினம். ஆத்தாமார் நீங்க போய்ட்டு வந்தது செத்த வீட்டுக்கு.......... செத்தவரின் மகள் அழுததை நான் குறை சொல்லவில்லை பெத்த தாயின்மேல் பிள்ளைக்கு பாசமிருக்கும் என்பது உண்மைதான் அதற்காக அதை நாலுபேருக்கு சொல்லிக்காட்ட வேண்டியதில்லை.
                         
                           இவ்வாறாக நடக்கும் செத்த வீட்டு நிகழ்ச்சிகளில் சொல்லக்கூடிய [சொல்லமுடியாத] விசயங்கள் ஒண்டா..........இரண்டா......???? ஏராளம் குவிந்து போய்க்கிடக்கின்றன. அதை முழுதும் சொல்வதென்றால் ஒரு தொடர் கட்டுரை தான் எழுத வேண்டும். செத்த வீடு என்பது ஒரு இழப்பை முக்கியப்படுத்தி சோகத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி என்பதை மறந்து அதுவும் ஒரு ஆடம்பர நிகழ்ச்சி எனும் நிலைக்கு தள்ளிக்கொண்டிருக்கிறது இன்றைய வெளிநாட்டுப்பணமும் அடிமைத்தனமும்.இப்ப எல்லாம் பாசத்துக்கு அலுதகாலம் போய்  செத்த வீட்டு அழுகைகள் ஒரு விளம்பரதுக்காகவும் பணத்துக்காகவுமே என்பது போல் ஆகிவிட்டது நிலைமைகள்.


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}