நமது தமிழ் சினிமா : நமது பொதுத் தலைவிதிகள்.கமல் படங்கள்


# படத்தில் கமல்ஹாசன் என்பவர் உலகத்தின் சகல விஷயங்களும், இந்தியாவின் சகல மொழிகளும் தெரிந்தவர், நாத்திகர், பாடவும், ஆடவும் நன்றாகத் தெரிந்தவர்.
# நாயகியின் உதட்டோடு உதடு வைத்து கமல் ‘இச்சாவிடில் அது கமல் படமாக முழுமை பெறாது.
# கமல்ஹாசன் நாடகக் குழு: நாசர், நாகேஷ், வையாபுரி, சந்தான பாரதி, வி எம் சி ஹனீபா, ஜெயராம். இவர்களைத்தவிர வேறு நடிகர்களை கமலுக்கு அறிமுகமில்லை. இவர்களில்லாத கமல் படம் எனக்கு அறிமுகமில்லை.
# கமலின் முதல் மனைவி கதை தொடங்கமுதலே இறந்திருப்பார். (ஒரு ப்ளாஷ் பக் பாடல் காட்சிக்கு மட்டுமே தலைகாட்ட அனுமதிக்கப்படுவார்.)அடுத்ததாக ஒரு விதவையைக்கோ, கணவனை பிரிந்தவளுக்கோ, முக்கியமாக ஒரு விபசாரத்தில் ஈடுபட்டவளுக்கோ கமல் வாழ்க்கை கொடுப்பார்.
# சேற்றுக்குள் புதைந்தவாறு ஓடுவதுபோல கமல் ஓடிவரும் காட்சி ஒரு பாடலிலாவது இடம்பெறும்.
# படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கமல்கள் இருந்தால் ஒருவர் நடனக் கலைஞர்.
# பெரும்பாலும் படத்தின் நாயகியைத் தவிர முக்கிய பாத்திரங்கள் அனைத்திலும் கமலே நடிப்பார்.
# கமல் முழுமையாக நம்பும் ஒருவர் கமலுக்கு துரோகம் செய்வார். அது கமலுக்கு தெரியும்போது துரோகி கமல் எட்டமுடியாத உயரத்தில் இருப்பார்.
# படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, உணவு உபசரிப்பு எல்லாமே கமல்தான். இயக்குனர் என்கிற இடத்தில் மட்டும் வேறு ஒருவரின் பெயர் போடப்படும். படத்தின் ஏதாவது ஒரு பாடலை கமல் எழுதி, பாடியிருப்பார். படத்தின் வசனம் மட்டும் கிரேசி மோகன்.
# ரப்பரில் செய்யப்பட்ட முகமூடியை முகத்தோடு ஒட்டியவாறு (மாறுபட்ட வேடமாம்.) குரூபியாகவோ, கிழவியாகவோ, கிழவனாகவோ கமல் வருவார். கமல் படத்தை மட்டுமே பார்க்கும் புதியவர் ஒருவர் தமிழகத்தில் வயோதிபப் பெண்களுக்கு படத்தில் நடிக்க அனுமதி இல்லை என நினைப்பார்.

அஜித் படம்


# நாயகன் ஒரு நேர்த்தியான ஆண். பார்க்கும் எல்லாப் பெண்களுக்கும் பிடிக்கக்கூடியவன்.
# அஜித் எப்போதும் கறுப்புக் கோட்டுடன்தான் இருப்பார், குளிக்கும்போதுகூட.
# நாயகி எப்போதுமே அஜீத்துக்காக வழிவாள். இரண்டு நாயகிகள் இருந்தால் இருவருமே அஜீத்துக்காக சண்டை பிடித்துக்கொள்வார்கள்.
# எப்போதும் வறுத்த சோளக் கொட்டையை கடித்துவிட்டதுபோல கடுமையாகத்தான் முகத்தை வைத்திருப்பார் அஜித். வசனங்களும் ஒவ்வொரு சொல்லாக, காலைக்கடன் கடுப்பிலுள்ளவர் போலத்தான் பேசுவார்.
# அஜித் ஹெலியிலிருந்து இறங்கும் காட்சி இருந்தே ஆகவேண்டும். காரில், அல்லது மோட்டார் சைக்கிளில் துரத்தும் காட்சி படத்தில் பதினைந்து நிமிடங்களாவது இருக்கும்.

விஜய் படம்
# மொக்கையாக இருக்கும்.

ரஜினி படம் (முழு version)
# ரஜினி சொன்னால் ஆடு, மாடு, பன்றி போன்ற மிருகங்களுடன், தீ, நீர், காற்று எல்லாமே அந்த சொல்லுக்கு கட்டுப்படும்.
# நாயகி இல்லாமல்கூட ரஜினி படம் இருக்கும், ஆனால் பாம்பு இல்லாத படம் என்று ஒன்றும் இல்லை. சீன இராணுவமே வந்தாலும் அசராமல் அடிக்கக்கூடிய ரஜினி, பாம்புகளுக்கு மட்டும் பயப்படுவார்.

# ரஜினியை சண்டையில் வெல்லுவது என்பது உலகத்தின் மானிடர்களால் முடியாத காரியம். சண்டைக்காட்சிகளில் முப்பது அடியாட்களை ரஜினி அடித்தபிறகு ஒரு எட்டடி உயர முரடன் கோழிப் பொரியலை கடித்தபடி வருவான். அவனிடம் மட்டும் மூன்று அடிகளை ரஜினி வாங்கிவிட்டு, பின்னர் அவனையும் துவைப்பார்.
# மனோரமா, அல்லது வடிவுக்கரசி இருவரில் ஒருவர் ரஜினியை ஆட்டிப்படைப்பார். வயது காரணமாக ரஜினி அவர்களை மதிப்பார்.
# ரஜினி இல்லாத ரஜினி படங்களும் இருக்குமே தவிர, சரத்பாபு இல்லாத ரஜினி படங்கள் இல்லை.
# கண்ணா.. எனத் தொடக்கி, ஏதாவது பஞ்சு டயலாக் பேசாமல் ரஜினி சண்டையை தொடங்கமாட்டார். அவர் அந்த வசனத்தை பேசி முடிக்கும்வரை அடிக்க வந்தவர்கள் காத்திருப்பார்கள்.
# அம்மா, தமிழ், மக்கள் இந்த மூன்றில் ஒன்றை தான் மதிப்பதாக குறிப்பிடாத பஞ்சு டயலாக்குகளோ, அறிமுகப் பாடல்களோ ரஜினி படங்களில் இருக்காது.
# ரஜினி வாழவைத்த தங்கை, தம்பி, சித்தப்பா போன்றோர், சொத்துக்காகவோ, சுயநலத்துக்காகவோ துரோகம் செய்வார்கள். அப்போது தனது மனைவியில் சாய்ந்தபடியே ரஜினி ஒரு பாடல் பாடுவார்.

# பெண்கள் என்றால் குனிந்த தலை நிமிரக் கூடாது, கணவன் சொன்னால் தீயிலும் குதிக்கவேண்டும், பணக்காரப் பெண்கள் எல்லாருமே திமிர் பிடித்தவர்கள்,படிக்காத, ஏழைப் பெண்கள் எல்லோருமே அடக்கமானவர்கள்.
# ஏழைகள் எல்லோருமே நல்லவர்கள், பணக்காரர்கள் எல்லோருமே கேட்டவர்கள். ஒருவன் காசு வைத்திருப்பதே தவறான நடவடிக்கை தான்.

மணி ரத்னம் படம்
# ஒரு தேசிய, நீண்டகாலப் பிரச்சனையே பின்னணி. இடையே ஒரு காதல், கணவன் மனைவி, குழந்தைகள் இடையேயான சிறிய பிரச்சனை முக்கியமாகும். அந்த சின்னப் பிரச்னைக்கு தீர்வுகாட்டப்படும். அதுவே பின்னணியின் பெரிய பிரச்சனைக்கும் தீர்வாக நாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

# ஏன், யாரு?, எதுக்காக?, தேவா ஆகிய நான்கு வார்த்தைகளுமே மணி படத்தில் வசனமாகப் பயன்படுத்தப்படக் கூடியவை.
# தனது முதலாவது படத்தில் அறிமுகப்படுத்திய ஒரு நாயகனை/ நாயகியை அடுத்துவரும் பத்து படங்களில் பூக்காரி, டிரைவர், வக்கீல் போன்ற சில்லறை வேடங்களில் பயன்படுத்துவார்.

கெளதம் வாசுதேவ் மேனன் படம்
# நாயகன் இராணுவ அதிகாரி, பொலிஸ், அல்லது குறைந்தபட்சம் கம்பீரமானவன்.
# வெள்ளை செட்டும், மென்நீல ஜீன்சுமே நாயகனின் சீருடை.
# படத்தில் பிச்சைக்காரன் கூட British English தான் பேசுவான். சிக்கலான ஆங்கிலம். I Love You அல்ல, I fell head over heels in Love with you.
# ஒரு தடவையாவது பிய்ந்துபோன பிணத்தை காட்டுவார்கள்.
# நாயகன் யாராயினும் நாயகி ஜோதிகாதான். அதேபோல, கணேஷ் இல்லாத படமும் இல்லை.

# ஏதாவது பழைய பிரபலமான பாடல், சங்கப்பாடல், குறைந்தபட்சம் கல்வெட்டு வரிதான் படத்தின் தலைப்பு. படத்தில் பயன்படுத்தப்படும் முதலும் கடைசியுமான தமிழ் வசனம் அதுதான்.
# நாயகனுக்கு கண்பார்வையிலேயே நாயகி மேலே காதல் வந்துவிடும்.
# படம் கிராமத்தில் நடப்பதாக இருந்தாலும்,  பிற்பாதி அமெரிக்காவிலேதான் நடக்க வேண்டும். அங்கே நாயகனும் நாயகியும் கைகோர்த்து நடக்க, பின்னணியிலே அமெரிக்க தெருவிலுள்ளவர்கள் எல்லாம் பாட்டுப் பாடி ஆடியபடி பின்தொடர்வார்கள்.
# தாமரை மட்டுமே தமிழ் தெரிந்த கவிஞர். இறைவன் ரஹ்மானே இசை அமைத்தாலும், அவர்தான் பாடல்கள் எழுதுவார்.

தமிழ் திரைப்பாடல்கள்
# எங்க மம்மிதானே உனக்கு மாமி, உங்காத்தா என் அத்தை என்கிற இரு வரிகளும் இல்லாதவை காதல் பாடல்கள் இல்லை.
#  பவ்யமான பாவாடை தாவணி கட்டியபடி நாயகியை பார்த்து, முகத்தில் காற்று அடித்தபடியால்தான் நாயகனுக்கு நாயகி மேல் காதலே வந்திருக்கும், ஆனால் பாடல் காட்சியில் மட்டும் நாயகி பாவித்து பழசாய்ப்போன பாய் போன்ற ஒன்றை கட்டியபடிதான் ஆடுவார்.
# நாயகி நமீதாவாகவே இருந்தாலும், ஒல்லி இடுப்பு என வர்ணிக்கப்பட வேண்டும்.
# படத்தில் நாயகியில் துப்பட்டாவை இழுத்த வில்லனை துவைத்து அரைமணிநேர வசனம் கதைத்த நாயகன், பின்னால் ஆடும் முப்பது பெரும் நாயகியை தூக்குவதை, தடவுவதை, இழுப்பதை எல்லாம் அனுமதிப்பார்.
# நாயகியின் உடல் பாகங்களை மோப்பநாய் போல முகருவதே காதலின் அடிப்படை.

# டைலமோ, முல்லுகுய்யானோ, மிச்சுகுரிக்கோ போன்ற மத்திய ஆப்பிரிக்க வார்த்தைகளே பாடலின் தொடக்க அடிகளில் இடம்பெற வேண்டும்.
# வட துருவத்திலேயே படப்பிடிப்பு நடந்தால் கூட நாயகன் கோட், சூட்டுடனும், நாயகி இடுப்பில் இரண்டங்குலம், மார்பில் இரண்டங்குலத்துடனேயே ஆடவேண்டும்.
# நாயகிக்கு பின்னால் ஆடும் முப்பது பெண்களும் அணியும் ஆடைகள் ஆபாசமாகத்தான் இருந்தாக வேண்டும். (படப்பிடிப்பு முடிந்தவுடன் அந்தக் குப்பைகளை என்ன செய்வார்கள்?)

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}