தேரேரும் வண்ணை வரதராஜப் பெருமாள்


வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் 

கோயில்களால் நிறைந்த யாழ்ப்பாணத்திலே புகழ் பூத்த கோயில்களில் வண்ணார்பண்ணை பெருமாள் கோயிலும் ஒன்று. அத்தகைய சிறப்பு மிக்க கோயிலின் தேர் திருவிழா இன்று ஆகும். அதனை முன்னிட்டு அக்கோயிலின் வரலாற்றை வாசகர்களுக்கு அறியத்தருவதே இக்கட்டுரையின் நோக்கம். 

தோற்றமும் வரலாறும்

யாழ்ப்பாணத்திலே வண்ணையம்பதி எனும் பெரு நிலப்பரப்பை உள்ளடக்கிய பிரதேசத்திலே அமைந்துள்ள கோயில்களில் வண்ணார்பண்ணை சிவன் கோயிலும், வண்ணார்பண்ணை பெருமாள் கோயிலும் முக்கியமான இடத்தை பெறுகின்றன. அந்த வகையில் வண்ணார்பண்ணை பெருமாள் கோயிலின் தோற்றம் கிபி 14  ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டுள்ளது. அக்காலத்தில் இப்பிரதேசத்தில் நெசவுத்தொழிலை மேற்கொண்டுவந்த பத்மசாலி செட்டிகள் தம் வைணவ வழிபாட்டை பேணும் முகமாக தற்போது கோயில் காணப்படும் பிரதேசத்தில் சிறிதாக ஒரு ஆலயத்தை அமைத்து வழிபட்டு வந்துள்ளார். இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இப்பெருமாள் வழிபாட்டால் அவர்களது குலமும் குடும்பமும் மகிழ்வுடன் வாழத்தொடங்க அக்குலத்தினரும் மேலும் பக்தியுடன் இவ்வாலயத்தை சிறப்புற கவனித்து வரலாயினர்.

                                                 14 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டுவரை இக்கோயில் சிறிய கோயிலாகவே இருந்துள்ளது. இக்கோயிலை பராமரித்து வந்த குலத்தினரின் நெசவாலைகள் இலாபம் ஈட்டத்தொடங்க 1835 ஆம் ஆண்டு தொடங்கி பல காணிகளை இக்கோயிலுக்கு சாசனமாக வழங்கியுள்ளனர் இம்மரபினர். 1810  ஆம் ஆண்டு தொடக்கம் கோயிலில் மூன்று காலப் பூசைகள் நடைபெற்று வரத்தொடங்கியுள்ளன. இதைத் தொடர்ந்து இக்குலத்தாரில் வசதி படைத்தோர் மடப்பள்ளி, களஞ்சியஅறை போன்றன அமைத்து கோயிலை விஸ்தரிக்கலாயினர். 1820 ஆம் ஆண்டளவில் முதலாவது கும்பாவிஷேகம் இடம்பெற்றுள்ளது. 1840 – 1878   காலப்பகுதிகளிலேயே மாகலக்க்ஷுமி சந்நிதானம்,உட்பிரகாரச்சுவர், யாகசாலை,மகாமண்டபம், வசந்த மண்டபம், திருமஞ்சனக்கிணறு போன்றவற்றை பொலி கற்களால் உருவாக்கியுள்ளனர் நிர்வாகத்தினர். அதுமட்டுமல்லாது வெளிப்பிரகாரத்தையும் கவனத்தில் கொண்டு பூந்தோட்டம், சந்திர புஷ்கரணி என்ற தீர்த்தத்தையும் அமைத்துள்ளனர். 1878 ஆம் ஆண்டளவில் இக்கோவிலின்  வருடாந்த பிரமோற்சவம் ஆரம்பமாகியுள்ளது. அதுபோல் இக்கோயிலின் உரிமையாளர்களும் ஒன்று சேர்ந்து தம் சந்ததியினரில் தகுந்தோரை தேர்வு செய்ததன் மூலம்  1840 ஆம் ஆண்டளவில் அறங்காவலர் சபையை உருவாக்கியுள்ளனர். மேலும் கோயில் பூசைகளுக்கு உதவுவதற்கும், நித்திய மடப்பள்ளிச்சேவைக்கும் ஆக அந்தணர்களை நியமித்து அவர்கள் வசிப்பதற்கும் கோயில் பிரகாரங்களில் 1878 ஆம் ஆண்டளவில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கோயிலை சுற்றி குடியமர்ந்த இவர்களும் கோயில் பிரகாரங்களை பெருக்குதல் முதல் கொண்டு பல பணிகளை இன்றும் இக்கோயிலுக்கு செய்துவருவது கவனிக்கத்தக்கது. 1937 ஆண்டு தொடக்கம் தேவஸ்தான செயற்பாடுகளை கண்காணிக்கும் மாகசபை ஒன்று உருவாக்கப்பட்டதுடன் பிறப்பால் வைசிய குலத்தை சார்ந்த பத்மசாலி செட்டிகள் வாரிசில் உதித்தவர்களில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் இடம்பெறும் வகையில் இதன் நிபந்தனைகள் அமைந்தன. இவ்வாறு உருவாக்கப்பட்ட இச்சபையினரின் பெரும் பங்களிப்பினால் இன்று இக்கோயில் இராஜ கோபுரத்துடன் அழகாக காட்ச்சிதருவதுடன் காலத்திற்கு காலம் திருத்த வேலைகளும் பல கும்பாவிஷேகங்களும் இடம்பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது. இவ்வாலயத்தின் மகோற்சவம் புரட்டாதித்திங்களில் வரும் சுக்கிலபக்க்ஷத்தில் வரும் அர்த்தம் அல்லது சித்திரை நட்சத்திரத்தில் ஆரம்பமாகி பத்தாவது தினமான திருவோண நட்சத்திரத்தில் தீர்த்தம் நடைபெருமாறு அமைகிறது. 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}