நடராஜர் - 3 - சிதம்பரமும் திருனடனமும்


அறிமுகம் : ஆனந்தக் கூத்தும் அறிவியலும்

பதிவு #2 - தமிழர் தலைவன்


3: நடராஜர்அவ்வாறாக காலம் காலமாக சிவன் வழிபடப்பட்டபோது காலத்துக்குக் காலம் வணங்கியவர்களால் வடிவத்தில் மாற்றம் செய்யப்பட்டார். அந்த அந்தக் காலகட்டத்தின் கலைச் செறிவு, பாதிப்பு செலுத்திய பாணி என்பவற்றின் செல்வாக்குக்கேற்ப சிவனின் உருவம் விருத்தியடைந்தது. சிவனைப்பற்றிய அல்லது சிவன் சம்பந்தப்பட்ட  ஒவ்வொரு கதைகளும் உருவாக்கப்பட உருவாக்கப்பட, அந்தக் கதைகளுக்கு அனுசரணையாக உருவங்களும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டன. அவ்வாறாக காலந்தோறும் விருத்தியடைந்த சிவ உருவங்களின் உச்சம்தான் நடராஜர்.

காலம் காலமாக புனையப்பட்ட கதைகளின் அம்சங்களை எல்லாம் கருத்திற் கொண்டு, சிவனின் தத்துவங்கள், தொழில்கள், நாமங்கள் அனைத்தையும் பிரதிபலிக்கும் உருவமாக நடராஜர் உருவத்தை அமைத்தவர்கள் சோழர்கள்.

தில்லை சிதம்பரத்திலேயே கருவறைத் தெய்வமாக சிவன் நடராஜ வடிவத்திலே உறைந்துள்ளார்.  உலகத்தை மனித உடலோடு ஒப்பிடும் நமது சமயம், அதன் இதயமாக சிதம்பரத்தை வர்ணிக்கிறது, எனவேதான் அங்கே உலகத்தின் இயக்கத்துக்கான அடிப்படையாக சிவன் ஆனந்த நடராஜராக திருநடனம் புரிகிறார்.

3.1: ஆனந்த தாண்டவம் – புராணக்கதை

முன்னொரு காலத்தில், தாருகாவனம் என்கிற இடத்திலே பல ரிஷிகள் பன்னசாலை அமைத்து வேத, சாஸ்திரங்களை மிக ஆழமாகக் கற்றுத் தெளிந்தார்கள். அதன்படி ஒழுகியும் வந்தார்கள். வேதத்தில் முழுமை பெற்றுவிட்டதால், தங்கள் கர்மங்களே தங்கள் மேல் நிலைக்கு காரணம் என எண்ணிய அவர்கள், தங்களுக்கு மேலே ஒரு சக்தி முதல்வனாக இருப்பதை மறந்தார்கள். அவனை வழிபடுவதை கைவிட்டார்கள். எனவே, அவர்களுக்கு உய்வை வழங்கும் பொருட்டு, சிவன் மகாவிஷ்ணுவை அழைத்து, மோகினி வடிவம் கொண்டு, அந்த வனத்திலே உலவச் சொன்னார். அத்தடன், தானும் பிச்சாடன வேடம் கொண்டு அங்கே உலவினார். எனவே முனிவர்களுடன் இருந்த இளம் ரிஷிகளும், ரிஷிபத்தினிகளும், அந்த இருவருக்கும் பின்னால் காமம் மேலிடத் திரியத் தொடங்கினர். இதனால், ரிஷிகளின் யாக, பூஜைகள் தடைப்பட்டன. இதனால் கோபம் கொண்ட ரிஷிகள், அந்த இருவரையும் தண்டிக்க வேண்டி, தங்களுக்கு முக்கிய ஆயுதமாக இருந்த வேள்வித் தீயிலே, அதர்வண வேதத்திலே சொல்லியிருக்கிறபடி எதிரிகளை அழிக்கும் அபிஸார ஹோமம் செய்தார்கள்.

தாருகா வனத்தில் பிச்சாடன மூர்த்தியாக


அந்த வேள்விப்பயனாக ஒரு கொடிய புலி தோன்றியது. அதை அவர்கள் பிச்சாடன வேதத்திலிருந்த சிவன் மீது ஏவினார்கள். அந்தப் புலியை இரண்டாகக் கிழித்த சிவன், அதன் தோலை தன ஆடையாக்கினார்.

இதைக் கண்ட ரிஷிகள், மறுபடி யாகம் செய்து, விஷப்பாம்புகளை உருவாக்கி ஏவினார்கள். அவற்றை பரமன் தனக்கு ஆபரனங்களாக்கிக் கொண்டார்.

இவ்வாறே அபஸ்மாரம் என்கிற பூதத்தை ஏவ, (முயலகன்) அதை தனது காலால் மிதித்து அதன்மேல் ஏறிக்கொண்டார் சிவன். இப்படியாக தாங்கள் ஏவிய அனைத்தையும் சிவன் அடக்கியதால், தாம் அத்தனை வேள்விகளையும் செய்து ,அவிஸுகளை அர்ப்பணித்த அக்கினியையே ஏவினார்கள் ரிஷிகள். அதை சிவபெருமான் தனது இடது கையில் ஏந்திக் கொண்டார். கடைசியாக தங்களிடம் மீதமிருந்த வேத அறிவையே ஆயுதமாக அவர்கள் ஏவ, அவற்றை தனது காலில் சிலம்புகளாக சிவன் அணிந்துகொண்டார்.

இவ்வாறு தமது வேள்விப்பயன், நூற்பயன் அனைத்தையும் தன் முன்னால் தோற்று, வெட்கி நின்ற முனிவர்களுக்கு, முன், ஞானமாகவும், வேதமாகவும், வேதப் பயனாகவும், வேள்வியாகவும், வேள்விப் பயனாகவும், கருணைக் கடலாகவும் இருக்கிற சிவபெருமான், தனது சடை விரிந்தாட, குவலயமே குலுங்க, அண்ட சராசரங்கள் நடுங்க, நடனமாடினார். அதைக்கண்டு, அவரே ஈஸ்வரன், முதல்வன் என அறிந்து, தமது கர்வம் நீங்கிய முனிவர்கள் அவனை சரணடைய, அவர்களுக்கு அபயம் அளித்த ஈசன், தனது நடனத்தின் உக்கிரத்தை குறைத்து, ஆனந்தக் கூத்தாக ஆடினார்.

இதனை அம்முனிவர்களும், மோகினி வேடத்திலிருந்த மகாவிஷ்ணுவும் கண்டு களித்தனர்.

3.2 சிதம்பரம்சிவனின் ஆனந்தக்கூத்து அனுபவத்தை பின்னொருமுறை விஷ்ணு ஆதிசேஷனுக்கு சொல்ல, அவனுக்கும் ஆனந்த நடனத்தை பார்க்கும் ஆவல் உண்டாக, அவன் சிவனை குறித்து தவம் இருந்தான். அவன்முன் தோன்றிய சிவன், “பூலோகத்தில் வியாக்கிரமபாதன் என்று ஒரு பக்தன் இருக்கிறான். அவன் எனக்கு பூசைக்கு பூக் கொய்யும் பொருட்டு மரங்களில் ஏற புலிக்கால்களை கேட்டுப் பெற்றுக் கொண்டவன். அவன் எனது ஆனந்த நடனத்தை காணும்பொருட்டு தவம் செய்கிறான். அவனுடன் நீ பொய் சேர்ந்துகொள், நாம் அங்கே எமது நடனத்தை காட்டுவோம். எனக் கூறினார். பூலோகத்தில் பதஞ்சலியாக ஆதிசேஷன் பிறந்து, வியாக்கிரமபாதரை தேடித் போனான். அவர் வசித்துவந்த வியாக்கிரப்போத்தை அடைந்து அங்கே மூலநாதர் சந்நிதியை கண்டு, சிவகங்கை தீர்த்தக் கரையிலே வியாக்கிரமபாதரை சந்தித்தான். அவர்கள் இருவரும் அன்றிலிருந்து சிவனின் ஆனந்தக் கூத்தை காணும்பொருட்டு தவம் இயற்றத் தொடங்கினார்கள்.

இருவருக்கும் காட்சிதருவதாக  சிவன் சொன்ன , தை மாதமும், குரு வாரமும், பூச நட்சத்திரமும், பூரணையும் கூடிய நாளில் இருவரும் பூசைகளை முடித்து நடனத்தை காண காத்திருந்தார்கள். இந்திரன் முதலிய தேவர்கள் சூழ்ந்தனர். தேவ தந்துபிகள் வந்தன. பானுகம்பன் முதலிய தேவ வாத்தியக்காரர்கள் வந்தார்கள். திரிசகஷ்டிர முநீஸ்வரர்கள் ( பின்னாளில் தில்லை மூவாயிரர்) வந்தார்கள். கடைசியாக நந்திகேசுவரரும் வந்தார். ஞான சபையில் அஞ்ஞானம் என்கிற திரை விலக,தேவ தந்துபிகள் முழங்க, திருச்சடை எட்டுத் திக்கிலும் விரிந்தாட, வேதங்களான சிலம்புகள் கிலுங்க, காதுகளில் குழையும், குண்டலமும் குலுங்க, பேரொளியாகிய ஜோதி ரூபமாகிய, கருணையே வடிவமான சிவன், சிவகாமி அம்மனோடு, ஆனந்த வடிவமாகக் கூத்தாடினார்.

பின்னர், இரு முனிவர்களிடமும், “எமது நடனத்தை கண்டதால் நீங்கள் இருவரும் புனிதரநீர்கள். என்னவரம் வேண்டும், கேளுங்கள் எனக் கேட்க, உலகத்து உயிர்களுக்கெல்லாம் உயவை வழங்கும் பொருட்டு, அப்படியே ஆனந்தக் கூத்தனாகவே அவ்விடத்தில் இறைவன் உறையவேண்டும் என அவர்கள் வேண்டினார்கள். அப்படியே அருள் வழங்கிய இறைவன் ஆனந்த நடராஜராக உறைந்த தலம்தான் தில்லை சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரம்.

உலகத்தின் வரலாற்று, பாரம்பரிய, சமயரீதியான முக்கிய இடங்களில் ஒன்றான சிதம்பரத்தில் ஐந்து சபைகள் உள்ளன. அவற்றை சித் சபையிலே நடராஜர் சிவகாமியுடன் எழுந்தருளியிருக்கிறார். இந்த சபையிலே படிகள் ஐந்து (பஞ்சாட்சரங்கள்), தங்கத் தூண்கள் பத்து (வேதங்கள் நான்கு, சாஸ்திரங்கள் ஆறு), வெள்ளித் தூண்கள் ஐந்து (பூதங்கள்), வெள்ளிப் பலகணிகள் தொண்ணூற்றாறு (தத்துவங்கள் தொண்ணூற்றாறு), ஸ்தம்பங்கள் பதினெட்டு (புராணங்கள்), கைமரங்கள் அறுபத்து நான்கு (கலைகள்) என முற்றிலுமே பிரபஞ்ச கூறுகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. (கூரையில் வேயப்பட்டுள்ள ஓடுகள் 21,600 (மனித ஆயுளில் சுவாசத்தின் எண்ணிக்கை)) இந்த சித் சபையிலேயே நடராஜருக்கு வலப்புறத்தில் சிதம்பர ரகசியம் உள்ளது.


சிதம்பர ரகசியம்
இறைவன் அருவம், உருவம், அருவுருவம் என மூன்று வடிவங்களில் காட்சி தருவான். இதிலே அருவ ரூபத்தை பார்க்க முடியாது. ஆனால், நடராஜ மூர்த்தியின் வலது பக்கத்தில், ஆகாய லிங்கமாக, மந்திர ரூபத்திலே, யந்திர சக்கரமாக சிவன் காட்சி தருகிறார். இதற்கு திருவாசியுடன், தங்க வில்வ மாலையும் போடப்பட்டுள்ளது. (சிதம்பர சக்கரத்தை சும்மா பார்த்தால் ஒன்றுமே புரியாது. இதுதான் சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்தது போல என்கிற தொடரானது.) திருமந்திரத்தில். திருவைந்தெழுத்தை வைத்து யந்திரம் அமைக்கும் பல முறைகள் சொல்லப்பட்டுள்ளன.

இதுவரை சொல்லப்பட்டதும், இன்னும் சொல்லப்படாததுமான பல அற்புதங்கள் நிறைந்ததுதான் சிதம்பரம். முதன் முதலில் நடராஜர் உருவம் அமைக்கப்பட்ட ஆலயம். கோயில்.

பக்திப்பூர்வாமாக பார்ப்பதை விடுத்து, வரலாற்று ரீதியாக பார்த்தால், இந்தக் கோயில் யாரால் கட்டப்பட்டது என்பது தெரியவில்லை. சிறு கோயிலாக இருந்து படிப்படியாக வளர்ச்சி அடைந்தது என எண்ணக்க்கூடியளவு எளிமையாக அதன் மூர்த்தியோ, அமைப்போ இல்லை. எவ்வாறாயினும், நடராஜர் என்கிற சிற்ப அமைப்பை அறிமுகப்படுத்திய கோயில் இதுதான்.

3.3: ஏனைய நடராஜர் பிரசன்னங்கள்

கால்மாறி ஆடினார்


சிதம்பரத்திலே ஆடுவதற்கு முன்னர் சிவன் சிவகாமி காண்பதற்காக உத்தர கோசமங்கை என்கிற தளத்திலே ஆடியதாக வரலாறு தெரிவிக்கிறது. மேலும், சிவனானவர் எப்போதும் வலது காலை ஊன்றி ஆடுவதால் கால் வலிக்குமே என பாண்டிய மன்னனொருவன் வருந்த, அவன் பொருட்டு கால்மாறி ஆடினார் என புராணம் சொல்லுகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலே கால்மாறி ஆடினார் சந்நிதி உள்ளது. (வெள்ளியம்பலம்) ஈழத்து சிதம்பரத்திலே கால்மாறி ஆடினார் சிற்பமானது உள்ளது.
ஈழத்து சிதம்பரத்தின் கால்மாறி ஆடினார்இந்துசமயத்தின் வேதங்களில் சொல்லப்பட்ட தத்துவங்கள் என்ன, பிரபஞ்ச இயக்கம் எவ்வாறு நடராஜத் திருவுருவத்தால் விளக்கப்படுகிறது?

....பார்ப்போம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}