நடராஜர் - 2 - தமிழர் தலைவன்இப்பதிவின் அறிமுகப்பகுதியை வாசிப்பதற்கு இங்கே கிளிக்குங்கள்.

 2:நெடுந்தொல் வரலாறு

2.1: சிந்துவெளி நாகரிகம்

சிந்துவெளி நாகரிகம் இன்றைக்கு தென்னிந்தியாவில் வாழ்கின்ற மக்களின் மூதாதையர்களின் நாகரிகம் என்பதில் ஐயங்கள் மிகக் குறைவு. அவ்வாறாக கி மு 3700 -2000 காலப்பகுதிகளில் வாழ்ந்துவந்த சிந்து சமவெளி மக்களை பின்வந்த ஆரியர்கள், இடத்தை கைப்பற்றுவதற்காக நடத்திய தொடர் போரில் வென்று துரத்த, அவர்கள் தென்னிந்தியாவை நோக்கி ஓடிவந்து குடியேறியதால் பின்னர் திராவிடர்கள் என அழைக்கப்பட்டார்கள் என்பது வரலாறாக நம்பப்படுகிறது. (திர என்றால் ஓடு எனப் பொருள்படும்.) இந்தக் கட்டுரையாளரும் அதையே பெரும்பாலும் நம்புகிறார். எனினும், மொங்கோலியப் பக்கங்களிலிருந்து  இமயமலைப் பக்கம் வந்து குடியேறிய மக்கள், அவ்விடத்தின் குளிரைத் தாங்காதும், தென்புறத்தில் வளமிகு நிலங்கள் இருப்பதை கேள்வியுற்றதாலும், படிப்படியாக தென்னிந்தியாவை நோக்கி நகர்ந்ததாக ஒரு வரலாறு சொல்லுகிறது. அஃதோடல்லாது, லெமூரியா என்கிற கண்டமானது இப்போதைய இந்தியாவுக்கு தெற்கே இருந்ததாகவும், அங்கேதான் மானிட இனம் தோன்றியதாகவும், அவ்வாறு தோன்றிய மூத்த குடிகள் தமிழர்கள்தான் எனவும் ஒரு கதை உலவுகிறது. இந்த மூன்று கதைகளையும் முழுமையாக நம்பாமல், நம்பகத்தன்மையின் சதவீதத்தின் விகிதத்தில் மூன்றையும் கலந்தால், நமது மூதாதையர்கள் பற்றி ஒரு பருமட்டான கருதுகோள் கிடைக்கிறது. வட இந்தியாவில் விருத்தியடைந்தோ, தென்னிந்தியாவுக்கும் தென்புறமிருந்தோ ஒரு மக்கள் குழு வந்தேறிய இடம்தான் இப்போதைய தமிழ்நாடு என்பதில் ஐயங்கள் இல்லை. சரி, எனக்கு ஐயங்கள் இல்லை. அவ்வாறாக, அந்த நிலத்துக்கு அம்மக்கள் வந்தபிறகுதான் தமிழ் என இக்காலத்தில் வழங்கப்படும் மொழி உருவானது என்பதற்கு புவியியலையும், மொழியியலையும் இணைத்து ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. (அந்த ஆதாரங்களிளிருந்துதான் குமரிக்கண்டம் என்கிற எண்ணக்கருவே தோற்றம் பெறுகிறது என்பது தனிக்கதை.)

ஹரப்பா நகரம் - கற்பனை வடிவம்


எவ்வாறாயினும், சிந்துவெளி நாகரிகம் நிலவிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மண் சிற்பங்களிலுள்ள தெய்வங்களில் பெரும்பாலானவை பெண் தெய்வங்களின் உருவங்கள் என்பது நீங்கள் அறிந்ததே. யோனி வழிபாடு அங்கே நிலவியதற்கும் சான்றுகள் கிடைத்துள்ளன. அந்தப் பெண்தெய்வ வடிவங்களுடன் கொம்புக் கடவுள் என வழங்கப்படும் தியானநிலையில் வீற்றிருக்கும் இறைவனின் உருவமும் கிடைத்திருக்கிறது. சிந்துவெளி மக்கள் சிந்து நதியின் படுகையிலே விவசாயம் செய்திருக்கிறார்கள். விவசாயம் செய்வதற்கு எருது தேவைப்பட்டிருக்கிறது. காடுகளில் திரிந்த எருதுகளை அடக்கி, அவற்றை ஆண்டு, விவசாயத்துக்கு பயன்படுத்துபவனே அவர்களின் தலைவனாக இருந்திருக்கிறான். அவனே கூட்டத்தால் கொண்டாடப்பட்டிருக்கிறான். காலப்போக்கில் எருதுகளை அடக்குபவனே தலைவன் என்கிற எண்ணப்பாடு, கடவுளுக்கு அந்தப் படிமத்தை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. திமில் பெருத்த காளை, ஒற்றைக் கொம்புக் காளை (அல்லது காண்டாமிருகம்), மற்றும் கொம்புக் கடவுள் புலியை அடக்கும் காட்சி என்பன சுடுமண் சிற்பங்களாகக் கிடைத்துள்ளன.
திமில் பெருத்த காளை


 பெண்ணே முதற் தெய்வமாக வணங்கப்பட்ட அந்த நாகரிகத்திலே வணங்கப்பட்ட ஒரே ஆணாக கொம்புக் கடவுள் இருக்கிறார். வலிமை மிகுந்தவர் எனக் காட்டுவதற்காக மனித உருவிலிருந்த அவருக்கு கொம்பு வைக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில், அப்போது அம்மக்கள் அறிந்திருந்த பல வலிமைமிக்க மிருகங்களுக்கு கொம்பு இருந்தது. அந்தக் கொம்புக் கடவுளின் பின்னணியிலே புலி, யானை, எருமை, காண்டாமிருகம் ஆகிய உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சிந்துநதிக்கு இப்பாலிருந்த ஒட்டுமொத்த விருத்தியடைந்த நாகரிகங்களிலேயே ஆதி முதலான வழிபாட்டு உருவமாக  கொம்புக் கடவுள் உருவம் இருக்கிறது. பிற்காலத்தில் வணக்க வழிபாடுகளில் பிரபலமடைந்திருந்த சிவனின் உருவத்தோடு இது ஒத்துப்போவது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

முந்துசிவன் (கொம்புக் கடவுள்)


2.2 வேதகாலம்

கிமு 1500 -900 காலப்பகுதிகளிலே எழுதப்பட்டதாக கணிக்கப்படும், இந்துக்களின் முதல் வேதமான இருக்கு வேதத்தில் சிவனைப் பற்றி குறிப்புக்கள் இல்லை. இதிலிருந்து ஆரியர்கள் வடிவமைத்த இந்து சமயத்தின் ஆதிமுதற் கடவுள் சிவன் இல்லை என்கிறது தெளிவாகிறது. பின்னாளில் இந்து சமயத்தின் முக்கிய கூறாகிய சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாக வணங்கப்பட்ட இறைவனைப்பற்றி சமயத்தின் அடிப்படை வேதத்திலேயே குறிப்பு இல்லை என்கிறபோது, சிவனுக்கும் ஆரியர்களுக்கும் அடிப்படைத் தொடர்பு இல்லை என்கிறது தெளிவாகிறது.

உருத்திரன்


வேதங்களில் குறிப்பிடப்படும் உருத்திரனே சிவனோடு ஒத்திசைவான இயல்பினனாக காணப்படுகிறான். ஆனால் வேதத்தில் உருத்திரனுக்கு ஒரு மறையான பின்னணியே கொடுக்கப்பட்டுள்ளது. அழித்தல் தொழிலை செய்பவனாகவும், போர்க்களம், சுடுகாடு ஆகியவற்றில் வாழ்பவனாகவும், ஒழுக்க நெறிகளில் அத்தனை அக்கறை இல்லாதவனாகவும், மக்களிடையே நோயை விளைவிப்பவனாகவும், புயல் போன்ற அழிவுகளை நிகழ்த்துபவனாக்கவுமே இவன் சித்தரிக்கப்பட்டிருக்கிறான். மக்கள் இவனை வழிபட்டது பயத்தாலேயன்றி, பக்தியால் இல்லை என்பதும் தெரிகிறது. உருத்திரனானவன், தென்திசையிலே, மலைகளுக்கு அப்பால் வாழ்பவனாக வேதத்திலே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றை உற்று ஆராயும்போது, இந்தியாவின் தென்புறத்தில் வாழ்ந்த ஆதிகாலத் தமிழர்களின் தலைவனையே இவர்கள் தீமை செய்யும் உருத்திரனாக உருவகித்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. வடபுற ஆரியர்கள் தென் திசைக்கு படை எடுத்தபோதோ, அல்லது தென் திசை தமிழர்கள் ஆரியர்களை நோக்கி படை எடுத்தபோதோ, தமிழர்களின் தலைவனாக காலம் காலமாக இருந்துவந்த ஆண், அல்லது தமிழர்களின் இறைவன், ஆரியர்களின் சிம்ம சொப்பனமாக இருந்ததால், அவனை தமது நூல்களில் அழிக்கும் கடவுளாக சித்தரித்திருக்கலாம்.

ஈச உபநிடதத்திலே ஈசன், ஈஸ்வரன் என்கிற பதம் முதலாவதாக வருகிறது. அதுவே ஊழித் தலைவனைப்ப்றிய முதலாவது குறிப்பாகும்.

“யாவையும் சூழ்வான், யாக்கை இல்லாதான்,
ஒவறம் இமைக்கும் ஒளிக் கிளர் ஒருவன்,
தீயவை தீண்டாத் திருவிளன், நோயிலன்,
யாவையும் காண்பான், யாவும் அறிவான்,
தாவற யாண்டுந் தங்கியான்,
மேவித்தானா இருப்பான் ஆனா முதல்வன்,
ஊழி ஊழி உலகம் வாழ வாழ வகுத்தனன் நன்றே!
 
இது முதலிய பாடல்களிலே இப்போது சிவனாக உள்ள இறைவனின் குணங்கள் காட்டப்பட்டிருக்கின்றன, அவனே முதல்வன் என காட்டப்படுகிறது. ஈஸ்வரன் என்பவனே யோக மார்க்கத்தின் தலைவனாவான்.
ஒரிசாவில் கண்டெடுக்கப்பட்ட ஆடும் சிவன். (12 ஆம் நூற்றாண்டு)

எவ்வாறாயினும், ஆரியர்களிடையே காலத்திலே பிரதான, பிரபலமான தெய்வமாக இருந்தது விஷ்ணுவேயாகும். (போனால் போகிறதென்று சிவனை ஏற்றுக் கொண்டாலும், விஷ்ணு ஆரியர்களால் வடிவமைக்கப்பட்ட கடவுள் என்பதை ஒத்துக்கொள்ளவே முடியாது.  ஏனெனில் முற்றிலும் சமுத்திரங்களுடனேயே சம்பந்தபட்டிருக்கின்ற விஷ்ணு என்கிற படிமம், மத்திய இந்தியாவிலே சுற்றிலும் நிலம் சூழ்ந்த பகுதியில் வாழ்ந்த மக்களால் கட்டி எழுப்பப் பட்டிருக்க முடியாது. மால் என வணங்கப்பட்ட தமிழர்களின் சமுத்திரங்களின் கடவுளே பின்னாளில் விஷ்ணுவாக, அல்லது வேதங்களில் குறிப்பிடும் விஷ்ணுவின் வடிவமாக மாற்றப்பட்டிருக்கலாம். ஆழிகளின் தலைவன் என்கிற பொருள்படும் ஆழ்வார் என்கிற தமிழ்ப் பெயரையுடைய கடவுளே தமிழர்களின் சமுத்திரங்களின் கடவுள்.) ஆரியர்களின் அரசர்களில் பெரும் சாகசங்களை செய்தவர்களையோ, நல்லாட்சி நடத்தியவர்களையோ விஷ்ணுவின் அவதாரமாக அவர்கள் வணங்குவது இன்றுவரை தொடர்கிறது.

ஹரப்பா காலம் முதலே பிராமணர் அல்லாத மக்களிடையே நிலவிவந்த வழிபாட்டு முறையாகவே சிவ வழிபாடு இப்போது வரலாற்றால் அறியப்படுகிறது. அப்படியாக தென் மக்கள் வழிபட்ட சிவன் என்கிற வடிவத்தோடு வேதங்களில் உள்ள உருத்திரனின் வடிவம் ஒத்துப் போனதால், பிற்காலத்திலே சிவனையும் உருத்திரனையும் ஒரே கடவுள்தான் என்று ஆக்கினர். இவ்வாறாகவே தென் இந்தியாவில் தமிழர்கள் வணங்கி வந்த சிவன் என்கிற கடவுள் உருவம், ஆரியர்களால் கடத்தப்பட்டு, மிக வட இந்தியாவிலே – கைலாயத்திலே கொண்டுபோய் வைக்கப்பட்டது.

2.3 மானிடவியல் சிவன்

மாட்டை அடக்கிய மனிதர் தலைவன்


சிந்துவெளியை நிராகரித்தாலும், தென்னிந்தியாவிலே, மானிடச் சிறு குழுக்களாக மக்கள் உலவிவந்த காலத்திலே, தென்னிந்தியாவின் புவியியல் அந்த மானிடக் குழுக்களின் கடவுள் உருவகத்தில் செல்வாக்குச் செலுத்தியே இருக்கும் என்பது புரியக்கூடியதே. தென்னிந்திய நிலப்பகுதியிலும், விவசாயம் செய்வதற்கு எருதுகள்தான் தேவைப்படும், அவற்றை அடக்குபவனும் தேவைப்பட்டிருப்பான். அவனை வழிபாடும் நிலைமையும் உருவாகி இருக்கும். பெண்தெய்வ வழிபாடும், பெண்களால் வழிநடத்தப்பட்ட இனக் கலாசாரமும் நிலவிய தொல் தமிழினத்திலே, வீரம் நிரம்பிய ஆணானவன் அந்த மனிதர்களுக்கு இயற்கையால் ஏற்படும் ஆபத்துக்களை எதிர்கொள்ள தேவைப்பட்டிருக்கிறான். மிருகங்களோடு மிருகமாக வாழ்ந்தவரை ஏனைய மிருகங்களைப்போல, நிதானமாக முடிவெடுக்கும் பெண்களாலேயே வழிநடத்தப்பட்ட மனித இனத்துக்கு, மிருக வகைமையிலிருந்து பிரிந்து தனிப்பட்ட கூட்டமாக மாறியபோது, அதே மிருகங்களை எதிர்க்கவும், இயற்கையின் சில அழிவுகளிலிருந்து கூட்டத்தை காக்கவும், ஆக்ரோஷமாக முடிவெடுக்கும் ஆண் தேவைப்பட்டிருக்கிறான். (அந்தக் காலகட்டத்திலேதான், ஆற்றலும், நிதானம் தரக்கூடிய அறிவும் நிரம்பிய ஆண்கள் சிறந்தவர்களாகக் கருதப்படத் தொடங்கினார்கள். அப்படிப்பட்ட ஆண்களின் தேவை பெருக, அவர்களையொத்த ஆண்கள் தமக்கு குழந்தைகளாக பிறக்கவேண்டி, பெண்கள் கலவிக்கு அப்படியான ஆண்களையே தெரிவு செய்தார்கள். அந்த நிலைமையே இன்றைவரை ஆண் தெரிவின்போது பின்பற்றப்படுகிறது. அல்ஃபா ஆண்கள் எனப்படுபவர்கள் இவர்கள்தான்.)

முன்கூறியபடி, அந்த மானிடக் கூட்டத்துக்கு – புவியியல் ரீதியாக  தென்னிந்தியாவிலிருந்த மனிதக் கூட்டத்துக்கு வரக்கூடிய ஆபத்துக்களான – புலி, யானை, பாம்பு மற்றும் காற்று, காட்டுத்தீ ஆகியவற்றிலிருந்து அவர்களை காப்பாற்றக்கூடிய ஆண்கள் அப்போது வழிபடப்பட்டிருக்கிரார்கள். இது இரண்டு விதமாக நடந்திருக்கலாம். ஒன்றில் புலியையும் யானையையும், பாம்பையும் கொன்று அவற்றை கட்டிக்கொண்டு வந்தவன் அதே படிமத்தில் வணங்கப்பட்டிருக்கலாம், அல்லது, வணங்கப்பட்ட ஆணானவன், புலி, யானை, பாம்பு ஆகியவற்றை அடக்கியவனாக படிமங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கலாம். ஆக, எருதுகளை அடக்கியவனும், (கொல்லுபவன் அல்ல.) ஏனைய ஆபத்துக்களை அழித்தவனுமானவனாக அவர்களின் தலைவன் படிப்படியாக உருவாக்கி இருக்கிறான். ஏனைய ஆண்களிலிருந்து வேறுபடுத்தப்பட, சீற்றம் நிறைந்தவனாக காட்டப்பட அவன் நெற்றியில் ஒரு கண்ணுள்ளவனாக சித்தரிக்கப்பட்டான். அப்படி உருவாக்கப்பட்டவன்தான் தலைவன், இறைவன், நுதல்விழி முதல்வன்!
இன்றளவும் வணங்கப்படும் பெண் தெய்வம்

மூவாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே பெண் தெய்வ வழிபாடு அம்மக்களிடையே வேரூன்றியிருந்தது. கொற்றவைத் தெய்வமாக பிற்காலத்தில் வழிபடப்பட்ட அன்னை வழிபாடே தமிழர்களின் முக்கிய இறை வழிபாடாகும். சிலப்பதிகாரத்தில் கண்ணகி என்கிற பெண் அறத்தை நிலைநிறுத்தி, தெய்வமான வரலாற்றுடன் கண்ணகை அம்மன் வழிபாடாக அந்த வழிபாடு விருத்தியடைந்தது. (கஜபாகு மன்னனால் கண்ணகை அம்மன் வழிபாடு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக வரலாறு சொல்லுகிறது. அது மட்டுமல்லாது இன்றளவும், யாழ்ப்பாணத்திலும், ஏனைய இந்துக்கள் வாழும் இடங்களிலும்  அதற்கு முன்னரே நிறுவப்பட்டதாகவும், பின்னர் வந்ததாகவும் பல கண்ணகை அம்மன் கோயில்கள் நிறைந்துள்ளன. )

அப்படியாக, முருகனும், கொற்றவையுமாக இருந்த தமிழர் தெய்வ வழிபாட்டில் சிவனை ஒத்த இறைவனின் வழிபாடு இருந்திருக்கிறது என்பதற்கு பல ஆதாரங்கள் கிடைக்கின்றன.

2.4 தொல்  தமிழரின் சிவன்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்களின் முதற் தெய்வமாக சிவனே இருந்துள்ளான். சிவனின் திருவிளையாடல்களில் இறைவனின் திருவிளையாடல்களில் பெரும்பாலானவற்றை  மதுரையிலேயே நிகழ்த்தினான் என்பதும், கிமு. நான்கு முதல் இரண்டாம் நூற்றாண்டு வரை நிலவிய முதல் தமிழ்ச் சங்கத்தில் ஒரு புலவர்களாகவே சிவனும் முருகனும் இருந்ததாக வரலாறு. முதிய வெண் நாரை அல்லது கொக்கு என இப்போது விளங்கப்படும், சங்கத்தமிழ் பாடல்களில் வரும் முது குருகு  என்கிற பதம், தென்கடலில் மிதந்துவந்த ஒரு ஞானியின் பெயர் எனவும், முது குருகு என்பதுதான் மருவி முருகு ஆனதாகவும் கதைகள் உள்ளன. எனினும், முதுநாரை, முதுகுருகு என்பதாக இரண்டு நூல்களும் முதற்சங்கத்தில் எழுதப்பட்டதாக வரலாறு சொல்லுகிறது. “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ.. என ஆரம்பிக்கிற சங்கப் பாடலானது இறைவனாலேயே பாடப்பட்டதாக நம்பப்படுகிறது. (இறையனாரால் பாடப்பட்டதாக இந்தப் பாடல் இடம்பெற்ற குறுந்தொகையின் குறிப்புக்களில் உள்ளது. ஆனால் வேறு எந்தப் பாடலுமே இறையனாரால் பாடப்பட்டதாக அகப்படவில்லை. தருமி – இறைவன் (சிவன்) சம்பந்தப்பட்டதான இந்தப் பாடல் சம்பந்தப்பட்ட காட்சியை திருவிளையாடல் என்னும் திரைப்படத்தில் கண்டிருப்பீர்கள். அந்தக் கதை திருவிளையாடற் புராணத்தில் வருகிறது.)

எது எவ்வாறாயினும், வரலாற்றில் கிடைக்கிற தகவல்களை வைத்துப் பார்க்கும்போது சிவபெருமான் அல்லது அவரை ஒத்த உருவம் தென் தமிழர்களால் வணங்கப்பட்டிருக்கிறது. வட இந்தியாவில் கங்கை சமவெளியில் உருவாகி, சிவன் என்கிற உருவம் அங்கிருந்துதான் இங்கே வந்தது என்கிற கருத்து ஏற்கக்கூடிய அளவுக்கு வலிமையானதாக இல்லை. அதற்கு வரலாற்றிலே ஆதாரங்களும் இல்லை.


இவ்வாறாக காலம் காலமாக சிவன் என்கிற உருவம் தமிழர்களால் வணங்கப்பட்டிருக்கிறது. பெருமான் என்கிற சொல்லானது சிவனைக் குறிக்கும் சொல்லாக வழக்கத்தில் இருந்திருக்கிறது. தெய்வம் முதலிய அஃறிணை வடசொற்களைத் தவிர்த்து, தமிழ்ச்சொற்கள் எல்லாமே தலைவன் என்கிற கருத்தைத் தரக்கூடிய உயர்திணைச் சொற்களாகவே உள்ளன. (முதல்வன், இறைவன், பெருமான்) அவ்வாறாக தமிழர் கூட்டங்களின் தலைவனாக இருந்து, மனிதர்களுக்கு அப்பாற்பட்ட வலிமையாக வணங்கப்பட்ட அந்த சிவன் என்கிற படிமத்தை முழுமுதல் இறைவனாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சமயமே சைவ சமயமாகும். அந்த சிவனை இன்றுவரை முதல்வனாக வணங்கிவருகிறார்கள் தமிழர்கள். இன்றளவும் தமிழர்கள் வாழும் இடங்களிலெல்லாம் பெரும் கோயில்களாக எழுந்து நிற்பவை எல்லாமே சிவனின் கோயில்களே. இந்து சமயத்தில் சைவம் என்கிற பிரிவை இத்தனை செழுமையுறச் செய்தவர்கள் தென் இந்திய மக்களே என்பது தற்போது ஆரியர்கள், மற்றும் பிராமணர்கள் தவிர்த்த பெரும்பாலானோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.ஆனந்த தாண்டவம் எப்போது ஆடப்பட்டது, அதன் புராணக்கதை என்ன?  தாண்டவக்கோனின் பொற்சபை நடனம், சிதம்பர ரகசியம் என்றால் என்ன, சிதம்பரத்தின் பிரபஞ்ச முக்கியத்துவம் என்ன...


எல்லாமே 
...பார்ப்போம்.


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}