காங்கிரசும்....பந்த்தும்...கருணாநிதியின் இரண்டு அமைச்சுக்களும்...திடீரெனக் கிளம்பிய நிலக்கரிச் சுரங்க ஊழல் விவகாரம் காங்கிரஸ் கட்சியையே புரட்டிப் போட்டு, கடந்த சட்டசபைக் கூட்டத்தொடரையும்   முடக்கிப் போட்டு, மன்மோகன் சிங்கின் பெயரையும் காங்கிரசின் பெயரையும் தினம் தினம் டேமேஜ் பண்ணிக்கொண்டிருந்த நிலையிலே, இவ் ஊழலை திசை திருப்பும் ஆயுதமாக டீசல் விலை உயர்வைக் கையில் எடுத்தது மத்திய அரசு. இதன் விளைவாக டீசல் விலை ஐந்து ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, ஒரு குடும்பத்துக்கு வருடத்துக்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்றும் அறிவித்து பொதுமக்களை அதிர வைத்தது மத்திய அரசு. மேலும் சூட்டோடு சூடாக சில்லறை வணிகத்தில்  51 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்ற கொள்கை முடிவையும் எடுத்தது மத்திய அரசு.
இதன் காரணமாக காங்கிரஸ் எதிர்பார்த்தபடியே மத்திய அரசின் புதிய திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராடத் தொடங்க, பொதுமக்களும் டீசல் விலை, காஸ் சிலிண்டர் பிரச்சனை குறித்து அதிருப்தியடைய, மெல்ல மெல்ல நிலக்கரிச் சுரங்க ஊழல் விவகாரம் அமுக்கப்பட்டு விடும், போபர்ஸ் ஊழல் போலவே...!
மத்திய அரசு தற்போது எடுத்துள்ள முடிவுகளில் மிகவும் அபாயகரமானது சில்லறை வணிகத்தில் 51 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவாகும். இதன் காரணமாக இந்தியச் சந்தைக்குள் பெரும் திமிங்கிலங்களான, வால்-மார்ட் போன்ற  பல் தேசிய நிறுவனங்கள் நுழைவதற்கான கதவு திறந்து விடப்படுகின்றது. இந்த நிறுவனங்களின் உள்நுழைவினால் தற்போது சில்லறை வணிகத்தில் ஈடுபட்டு வரும் பல லட்சக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பை இழந்து நடுத்தெருவுக்கு வரும் சூழ்நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.{வால்-மார்ட் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும்} ஏற்கனவே வேலையில்லாப் பிரச்சனையால் திண்டாடிவரும் ஒரு நாட்டின் பிரதமர், பல்தேசிய நிறுவனங்கள் வழங்கப் போகும் ஒரு சிறு தொகைக்காக மேலும் பல லட்சம் தொழிலாளர்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வருவது தான் அவரது பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிறார்.  இப்படிப்பட்ட ஒரு பொருளாதாரப் புலியை...சீ....பல்லியைப் பிரதமராக அடைய சோமாலியாவிற்கு அடுத்து இந்தியாவிற்கு மட்டுமே அந்தச் சிறப்புத் தகுதி உண்டு. 

மத்திய அரசு அறிவித்த டீசல் விலை உயர்வு, காஸ் சிலிண்டர்களுக்கான கட்டுப்பாடு மற்றும் சில்லறை வணிகத்தில் 51 சதவீத அந்நியத் தலையீட்டை அனுமதிப்பது என்ற திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் பாரத் பந்த்க்கு அழைப்பு விடுத்திருக்கின்றன எதிர்க்கட்சிகள்.
 இந்த முடிவுகள் காங்கிரஸ் கட்சியினால் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குக் கூடத் தெரியாமலேயே எடுக்கப்பட்டிருந்தன. வழக்கமாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஏதாவது முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதென்றால் முன் கூட்டியே கூட்டணிக் கட்சிகளுக்கு இன்னென்ன விடயங்கள் குறித்து விவாதிக்கப் போகிறோம் என்று மத்திய அரசு அறிவிப்பது வழக்கம். இந்த முறை கூட்டணிக் கட்சிகளுக்கு அவ்வாறு ஏதும் அறிவிக்கப்படவில்லை.  
உனக்காக....எல்லாம், உனக்காக.....
தி.மு.க.வைப் பொறுத்தவரை அழகிரி எப்போதுமே அனாவசியமாக அமைச்சரவைக் கூட்டப்பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை. இதனால் விடயம் தெரியாத தி.மு.க.,திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் கூட்டத்திற்கு அப்சென்ட்..!  இதன் காரணமாக முடிவுகள் எடுக்கப்பட்ட பின்பே காங்கிரஸ் கட்சி, தனது கூட்டணிக்கட்சிகளுக்கு அது பற்றி அறிவித்தது. தமக்கு முன்கூட்டியே  இது பற்றி அறிவிக்கப்படாததற்கு வருத்தம் தெரிவித்த கருணாநிதி, எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்த பாரத் பந்த்க்கு ஆதரவு வழங்குவதென்று அறிவித்தார். "இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசிலிருந்து விலகுவீர்களா...?" என செய்தியாளர்கள் கேட்டதற்கு தனக்கு மத்திய அரசை மிரட்டத் தெரியாது என்று பதிலளித்திருந்தார்.

ஆனால் அதிரடிக்குப் பெயர் போன திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவி மம்தா பானர்ஜியோ, உடனடியாக டீசல் விலை உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை வாபஸ் பெறும்படி 72 மணி நேரக் கெடுவை மத்திய அரசுக்கு விதித்தார். ஆனால் மத்திய அரசோ, மம்தாவின் கோரிக்கையைப் புறக்கணித்த நிலையில் மத்திய அரசுக்கு தாம் வழங்கி வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தார்.  
அத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) அமைச்சர் பதவிகளை ராஜினாமாச் செய்யப்போவதாகவும் அறிவித்து மத்திய அரசுக்கு கிலியூட்டினார். இதன் மூலமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 19 எம்.பி.க்களின் ஆதரவை காங்கிரஸ் கட்சி இழந்தாலும் கூட 22 எம்.பி.க்களைக் கொண்ட முலாயம் சிங் யாதவின் ஆதரவைப் பெற்றோ அல்லது 21 எம்.பி.க்களைக் கொண்ட மாயாவதியின் ஆதரவைப் பெற்றோ ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமென்பதால் இப்போதைக்கு காங்கிரஸ் நிம்மதியாகவே இருக்கின்றது.
டில்லியில் இவ்வளவு குத்து வெட்டுக்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையிலும், ஒரு பக்கமாக பாரத் பந்த்க்கு ஆதரவளித்துக் கொண்டு அதே சமயம் மத்திய அரசில் பறிபோன தமது இரு அமைச்சுப் பதவிகளுக்காகவும் தொடர்ந்து பேரம் பேசி வருகின்றார் நமது உடன்பிறப்பு. ஒரு அமைச்சர் டி.ஆர்.பாலு என்பது முடிவாகி விட்ட நிலையில், அடுத்த அமைச்சர் யாரென்பது இன்னமும் முடிவாகாத நிலையில், இவர்களுக்கு எந்தெந்த அமைச்சை ஒதுக்குவது என்ற விவகாரமே பெரும் இழுபறியில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. அநேகமாக மம்தா ஆட்சியிலிருந்து விலகினால் காலியாகும் ஆறு அமைச்சுக்களை மாற்றீடு செய்து ஏதேனும் இரு அமைச்சுகள் அறிவாலயப் பக்கமாக வீசப்படலாம் என்றும் கருதப்படுகின்றது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}