அமெரிக்க உள்நாட்டு யுத்தமும் அடிமைகள் பிரச்சனையும்


வெள்ளை மாளிகையின் கருப்பு அடிமைகள்-06

அடிமைமுறையை ஒழிப்போம் என அணிதிரண்ட வட மாநிலங்கள் ஒருபுறம், பண்ணைகளுக்கும் விளைநிலங்களுக்கும் தீயிட்டுவிட்டு தப்பி வந்த அடிமைகள் ஒருபுறம், அடிமை முறையை ஆதரித்த அடிமைகளால் பாதிப்படைந்த தென் மாநிலங்கள் ஒருபுறம் என பல சிக்கலான சூழ்நிலைகள் நிலவின அன்றைய அமெரிக்காவில் என்பது பற்றி போன பதிப்பில் பார்த்தோம். அப்பதிவை வாசித்துவிட்டு தொடர இங்கே கிளிக். 
                           
                          இவ்வாறு பல சிக்கல்களான சூழலின் மத்தியில் அமெரிக்க அதிபரின் பணி முக்கியமானதாக அமையப்போகும் கட்டத்தில்தான் “அடிமைமுறையை ஒழிப்பேன்” எனும் வாக்குறுதியை முன்வைத்து போட்டியிட்ட ஆபிரகாம் லிங்கன் 1860 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியிருந்தார்.
                     
                             அவ்வளவுதான் அடிமைமுறையை ஒழிக்கிறேன் பேர்வழி என அடிமைகளை ஆதரித்தவர் ஒருவர் தமக்கெல்லாம் அதிபராக இருந்தால் தங்கள் எல்லோருக்கும் மிகப்பெரும் அவமானம் என கிளர்ந்தெழுந்துவிட்டனர் தென்மாநிலத்தார். முதலில் தன் எதிர்ப்பை கச்சிதமாக தெற்கு கரோலினா வெளியிட அதை அடிபற்றி கெண்டகி, மேரிலாந்து, மிசெளரி, டெல்வர் போன்ற இடங்களும் தங்கள் எதிர்ப்பை பலமாக காட்டத்தொடங்கின. இவ்வாறு தென்மாநிலத்தில் எதிர்ப்புகள் கிளம்பியதா...?? உடனே பத்து மாநிலங்கள் ஒன்று சேர்ந்து ஐக்கிய அமெரிக்காவிலிருந்து தாம் விலகி விட்டதாக அறிவித்ததுடன் பிரிந்த மாநிலங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து “CONFEDERATE STATES OF AMERICA”  எனும் பெயரில் தனிநாடாக தம்மை உருவகப்படுத்திக்கொண்டன. அத்தொடு மட்டுமல்லாது ஜெப்பர்சன் டேவிஸ் என்பவரை தங்களுக்கு அதிபராகவும் அறிவித்துவிட்டன. அடிமைகள் பிரச்சினையின் காரணமாக இன்று உலகத்தையே தன் கையில் வைத்திருக்கும் அமெரிக்கா பிளவுபட்டு நின்றதென்றால் நம்பமுடிகிறதா..?? நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அடிமைகள் மூலம் அவர்கள் பெற்ற இலாபம் கொஞ்ச நஞ்சம் அல்ல.
                                         தென்மாநிலங்களின் எதிர்ப்பு எல்லோரும் எதிர்பார்த்ததுதான் ஆனால் அது தேசத்தையே பிளவுபடுத்தும் அளவுக்கு இவ்வளவுதூரம் போகும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. லிங்கன் ஜனாதிபதியானபின் தேசம் பிளவுபடுகிறதென்றால் பழியெல்லாம் யார்பெயரில் லிங்கன் பெயரில்தானே எனவேதான் “அடிமைகள் விடுதலை முக்கியமானதுதான் ஆனால் அதைவிட முக்கியமானது  தேசம் பிளவுபடாதிருப்பதே. பேசித்தீர்ப்பதானால் பேசித் தீர்க்கலாம் பலிகள் தான் தீர்வு என்றால் போராடவும் நான் தயார். அடிமைகள் பிரச்சினையை சில தினங்கள் தள்ளிப் போட்டாலும் போடலாமே தவிர தேசம் இரண்டாவதை ஒருநாளும் அனுமதிக்கமுடியாது” எனும் சாரலில் அன்று லிங்கனின் பேச்சு காரசாரமாக இருந்தது. 
               
                             இது இவ்வாரிருக்க அமெரிக்க உள்நாட்டுப்போரின் முதல் அறிவிப்பாக 1861 ஆம் ஆண்டு சித்திரை மாதம் பிளவுபட்ட கூட்டமைப்பு நாடுகள் ஒன்று சேர்ந்து தென்கரோலினாவிலிருந்த சம்டர் கோட்டையை தாக்கி சித்திரை மாதம் 12  ஆம் திகதி தம் வசப்படுத்திக்கொண்டன. இதுதான் உள்நாட்டுபோருக்கு விதைக்கப்பட்ட முதல் விதை. முற்றிலும் எதிர்பார்க்காத இத்தாக்குதலில் இருந்து கோட்டையை மீண்டும் மீட்க லிங்கன் விடுத்த உத்தரவு லிங்கன் போருக்கு அறிவித்து விட்டார் என்றே பரவலாக மாறிப்போனது.
                   
                  வேறுவழியே இல்லை தேசத்தை ஒன்றாக்க வேண்டுமென்றால் தமக்கு எதிராக தாமே போரிட்டுத்தான் ஆகவேண்டும். பிளவுபட்ட ஐக்கிய அமெரிக்காவை மீளக்கட்டமைக்க வேண்டுமென்றால் போர் அவசியம் என எல்லோருக்குமே பரவலாக விளங்கியிருந்தது. ஆனால் இந்த உள்நாட்டுப்போரில் பிற நாடுகள் தலையிட்டு விட்டால் அமெரிக்கா இரண்டாகிவிடும் என்பதும் வெளிப்படை உண்மையாக இருந்தது. நல்ல விதமாக தென்னமெரிக்கா பிற நாடுகளின் ஆதரவை எதிர்பார்த்திருந்த போதும் வட அமெரிக்காவின் நியாயத்தன்மை கருதி பிற நாடுகள் இங்கு தம் தலையீட்டை தவிர்த்துக்கொண்டன. அன்று மட்டும் பிற நாடுகள் இப்போரில் தலையிட்டு இருந்தால் இன்று ஐக்கிய அமெரிக்கா எனும் தேசமே எம்முன் இருந்திருக்காது.
                         
                         இவ்வாறு போரின் முடிவில்தான் அடிமைகளின் விடுதலையும், ஐக்கிய அமெரிக்காவின் எதிர்காலமும் தங்கியிருந்தது. அடிமைகளை முன்னிறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போரிது போரே அவர்களுக்காக தான் எனும் போது போரில் அவர்கள் பங்கு பெறாதுவிட்டு விடுவார்களா என்ன..? தென் மாநிலங்களின் மீது அவர்களுக்கு இருந்த ஆத்திரமும் தம் விடுதலையின் தீவிரமும் அவர்களை முக்கியத்துவப்படுத்தி முன்தள்ள தாங்களும் இராணுவத்தில் இணைந்து போராடப்போவதாக இராணுவத்துடன் இணைந்து கொண்டனர். 
                 
                 இவ்வாறு தம்மைத்தாமே எதிர்த்து நடைபெற்ற போர் ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் கழிந்த நிலையிலும் பல உயிர்களை காவுகொண்ட நிலையிலும் போர் முடியுமா..?? முடியாதா..?? என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. இதை உணர்ந்து கொண்ட லிங்கன் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி  1862 ஆம் ஆண்டு ராஜதந்திரமாக ஒரு அறிவித்தல் விடுத்தார். “.....சரியாக இன்னும் மூன்று மாதங்கள் அவகாசம் தருகிறேன் பிரிந்த மாநிலங்கள் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்து கொள்ள வேண்டும் இல்லையெனில் அந்த மாநிலங்களில் உள்ள அடிமைகள் அனைவரும் விடுதலையடைந்தவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.........“ என்ன தான் நீ பிரிந்து சென்றாலும் உன் ஜனாதிபதி நான் தான் என்று சொல்லாமல் சொல்லி நின்றது இந்த அறிவிப்பு. எந்த அடிமைகளை விடுதலை செய்யக்கூடாது என்று போரை ஆரம்பித்தனரோ அப்போரே அடிமைகளின் விடுதலைக்கு காரணமாகிப்போனது. போர் நடந்தாலும் அடிமைகளுக்கு  விடுதலை நடக்காவிட்டாலும் அடிமைகளுக்கு விடுதலை எனும் நிலையில் தம்மைத்தாமே நொந்து கொண்டன தென்மாநிலங்கள். 
தென் மாநிலங்களின் கொடி இதுதான் 
                 
              ஆனால் லிங்கனின் இவ்வறிவிப்பு வெளியான கையுடனேயே தங்களின் உண்மையான ஜனாதிபதி வடமாநிலத்தில் அல்லவா இருக்கிறார் என அடிமைகளுக்கு உறைக்க தொடங்க பண்ணைகளில் இருந்து பெருமளவில் தப்பிச்சென்று தம் விடுதலைக்கான இப்போரில் தம்மையும் இணைத்துக்கொண்டனர் அடிமைகள். அத்துடன் கருப்பினப் பெண்களின் பங்கும் இப்போரில் மேலோங்கியிருந்தது. இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பது, வைத்திய உதவிகளில் ஈடுபடுவது, யுத்த தளபாடம் சம்பந்தப்பட்ட உதவிகள் என அனைத்திலும் நீக்குரோ பெண்களின் பங்கு பாரிய அளவிலிருந்தது. அவ்வளவு ஏன் 15 பேரை கொண்ட கருப்பு பெண்களின் குழுதான் 1500 பேரை கொண்ட அடிமைகளை ஜார்ஜியாவிலிருந்து விடுவித்து கூட்டிவந்தனர் என்றால் விளங்கிக்கொள்ளலாம் கருப்பினப்பெண்கள் தம் விடுதலைக்கு எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்று. 
                           
                              மேலும் பிரிந்து சென்ற மாநிலங்களின் கூட்டமைப்பு படைக்கு ராபர்ட் ஈ லீ என்பவரும் லிங்கனின் இராணுவத்திற்கு ஜெனரல் யுலிசிஸ் கிராண்ட் என்பவரும் தலைமை தாங்கி போரை தீவிரமாக நடத்திக்கொண்டிருந்தனர். இக்கட்டத்தில் லிங்கனின் படைகளுக்கு மேற்கு கண்டகியிலும் ,ஷிலோ பகுதியிலும் கிடைத்த வெற்றிகள் தென்மாநிலங்கள் போரில் தொல்வியடையப்போகின்றன என்பதை முன்னறிவித்தன. இவ்வாறு போர் தொடர்ந்து நான்கு வருடங்கள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் மீண்டும் லிங்கன் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகத் தெரியப்பட்டார்.
                   
                   தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த இவ்யுத்தம் லிங்கனின் இரண்டாம் பதவிக்காலத்தில் சித்திரை மாதம் 9 ஆம் திகதி  1865 ஆம் ஆண்டு விர்ஜீனியாவில் ஒரு சிறு கிராமத்தில்   APPOMATTOX  COURT HOUSE  எனும் இடத்தில் ஜெனரல் கிராண்டின் படை லீயை சுற்றி வளைத்ததன் மூலம் முடிவிற்கு வந்தது. சில வருடங்கள் தொடர்ந்து நடைபெற்ற இப்போரால் அமெரிக்கா பல உயிரிழப்புக்களுடன் பொருளாதார ரீதியிலும் பெரும் இழப்புக்களை சந்தித்திருந்தது. இப்பொருளாதார வீழ்ச்சியிலிருந்து அமேரிக்கா மீண்டு எழுந்தது ஒரு தனிக்கதை.
                         
                  ஒரு வழியாக போரின் முடிவால் அடிமைகளுக்கும் சுதந்திரம் கிடைத்தாயிற்று. ஆனால் அடிமைகளின் விடுதலைக்கு காரணமாயிருந்த ஆபிரகாம் லிங்கன் அதே காரணத்திற்காக சித்திரை மாதம் 14 ஆம் திகதி 1865 ஆம் ஆண்டு ஜான் வில்க்ஸ் பூத் எனும் நாடக நடிகனால் ஓர் நாடக அரங்கில் சுட்டுக்கொல்லப்பட்டார். 
         
               எத்தனையோ நூன்றாண்டுகளாக நடைபெற்ற அடிமைகள் பிரச்சனை பல மக்களின் உயிருடன் ஒரு உண்மையான ஜனாதிபதியின் உயிரையும் குடித்ததன் மூலம் முடிவுக்கு வந்தது. ஆனால் சட்டரீதியாக சுதந்திரம் பெற்ற அடிமைகள் சமூக ரீதியாக சுதந்திரம் பெறுவதற்கு இன்னொரு உத்தமரான மார்ட்டின் லூதர்கிங் என்பவரின் உயிர் தேவைப்பட்டது. அச்சோகக் கதைகளை நாம் பிறிதொரு தொடர் கட்டுரையில் பார்க்கலாம்.
                           
                                                                                                                              ~~முற்றும்~~

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}