கூடத்தார் கோயிலும் குமுறலில் தப்பித்த கதையும்


ஏமாற்றமான எதிர்பார்ப்புக்களும்  சிதைந்து போகும் சின்னங்களும் - 03

எங்கள் ஊர்சுற்றலில் நடந்த அனுபவங்களுடன் வரலாறுகள் பற்றியும் பார்த்துக்கொண்டிருக்கிறோம் இல்லையா...??? இவ்வாறு யாழ்ப்பாணத்தின் ஊர்களையே மேய்ந்து கொண்டிருந்த நமக்கு இளவாலை எனும் ஊருக்கும் போக வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே கூடத்தார் கோயில் எனும் இந்நினைவுச்சின்னம் குறித்த கட்டுரையொன்று எங்களூர்ப் பத்திரிகைகளில் வெளியாகி இருந்ததால் அதையும்  படித்து விட்டு மிக்க ஆவலுடன் அங்கே பயணித்தோம். முன்னைய பதிவுகளில் கூறியது போல் கோப்பாய் கோட்டை ,வெடியரசன் கோட்டை என கோட்டையையே சுற்றி திரிந்து நொந்து நூலாய்ப்போன எங்களுக்கு இளவாலையில் வசந்தபுரத்திலிருந்த கூடத்தார் கோயில் எனும் சரித்திர நினைவுச் சின்னம் ஒரு முற்றிலும் புதிய அனுபவத்தை கொடுத்தது. அது எந்தளவிற்கு இருந்ததென்றால் “தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்” எனும் பழமொழியின் ஆழத்தை ஆத்மசுகத்துடன் அனுபவித்து மூச்சு கூட விட முடியாதபடி மூச்சை விட்டு தப்பி ஓடி வரும்படி செய்துவிட்டு  இருந்தது. 

கூடத்தார் கோயிலும் வரலாறும்                       இலங்கையின் தொல்குடி திராவிடர் என்பதும் அவர்கள் பின்பற்றிய மதம் இந்து சமயம் என்பதும் விஜயனே ஈழத்துள் புகும்போதும் சரி அதன் பின்னும் சரி தொடர்ந்த மதம் இந்து மதம் என்பதும் சரித்திரம் நமக்கு சுட்டி நிற்கும் தகவல்கள். காலம் காலமாக தமிழரின் வழிபாடுகளுடன் ஆரியர்களின் வழிபாட்டு முறைகளும் கலந்து உருவான ஆகம வழிபாடுகளை தமிழர்கள் காலத்தால் பின்பற்றிய போதும் தங்களின் கிராமியத் தெய்வ வழிபாடுகளையும் அவர்கள் கைவிடாது தொடர்ந்தனர். அதன் சான்றாக இன்றும் வட இலங்கையில் காணப்படும் நாச்சிமார், ஐயனார், முனி, வைரவர், காளி, அண்ணமார், போன்ற ஆகம மரபற்ற சிறு தெய்வ வழிபாட்டு ஆலயங்களை குறிப்பிடலாம். இவ்வாறான சிறு தெய்வ வழிபாடுகளின் பிறிதொரு சாரமே இளவாலையில் வசந்த புரத்தில் காணப்படும் கூடத்தார் கோயில்.
                                    
   அக்காலத்தில் அரசர்கள் தம்மோடு துணைநின்று போராடி தமக்காக உயிர்நீர்த்த சிற்றரசர்களுக்கும் படைவீரர்களுக்கும் அவர்களின் சமாதிமீது நினைவாலயங்களை எழுப்பி லிங்கங்களை ஸ்தாபித்து வழிபட்டு வந்தனர். இவ்வகையான கோயில்கள் தென்னாசியாவில் மட்டுமன்றி  ஆபிரிக்கா, இத்தோனேசியா, மாலைதீவு முதலான நாடுகளிலும் காணப்படுகின்றன. அவ்வளவு ஏன் சிங்கள மன்னர்களிடையே கூட இப்பழக்கம் இருந்திருக்கிறது. தலதாமாளிகையை பாதுகாக்கும் தடிமுண்டன் காவல் தெய்வம் இவ்வகையை சார்ந்ததே. 
                     
                         இன்று ஏனைய பகுதிகள் சிதைந்து போய் கருவறையின் எஞ்சிய பகுதியையும் சில தூண்களையும் கொண்டு நிற்கும் இவ்வாலய ஐம்பொன்னாலான மூலவிக்கிரகத்தின் மேற்பகுதி பீடத்துடன் வெட்டி எடுக்கப்பட்டு அதன் கால்பகுதி மட்டுமே எஞ்சி இருக்கிறது. இம்மூல விக்ரகம் அலங்காரமற்ற மனித வடிவுடன் இருகைகளிலும் போர்க்கருவிகளை கொண்டமைந்திருந்ததாக அறியமுடிவதிலிருந்தும் கூடத்தார் கோயில் எனும் பெயரிலிருந்தும் இது படைவீரர்களின் நினைவாக தாபிக்கப்பட்ட கோயில் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் அமைந்த கூடத்தார் கோயிலை பல போர்களை சந்தித்த யாழ்ப்பாண அரசுடன் ஒப்பிட்டு பார்க்கவும் இடமுண்டு. 
       
                               கிபி.13 ஆம் நூற்றாண்டில் இருந்து கிபி.17 ஆம் நூற்றாண்டு வரை நல்லூரை தலைநகராக கொண்டு ஆண்ட யாழ்பாண இராசதானியின் அரசும் மன்னர்களும் சந்தித்த போர்களும் பெற்றுக்கொண்ட வெற்றிகளும் ஏராளம். யாழ்பாண மன்னரின் படைபிரிவுகளில் வேலெறியக் கொண்டைக்கார தமிழரும், பணிக்கர் எனும் யானைப்படை வீரரும்,  வடக்கர்கள் எனும் தஞ்சைக்கார மன்னனின் உதவி வீரர்களும், சிறந்த வாள் வீரர்களான வலமுனிவரிசையோரும், மன்னனையும் அவன் குடும்பத்தையும் உயிரை கொடுத்து பாதுகாக்கும் மெய்க்காப்பாளரான வேளக்காரப்படையினரும் என ஏராளமான படைப்பிரிவுகள் இருந்தன.  இப்படைப்பிரிவுகளில் பல உள்நாட்டு வீரர்கள் உட்பட வெளிநாட்டு படைவீரர்களும் கடமையின்  நிமித்தமும் நட்பின் பெயரிலும் பங்கு கொண்டு இருந்தனர்.
                                 ராஜவலிய எனும் சிங்கள நூல் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகள் பொருள் பலத்திலும் படைப்பலத்திலும் மேலோங்கியிருந்ததாக கூறுவதுடன்  தென்னிலங்கையை ஆண்ட அழகக்கோணரின்  ஆட்சியை எதிர்த்து அவர்கள் பல இலட்சம் வீரர்களை அனுப்பியதாக கூறுகிறது. கிபி.15 ஆம் நூற்றாண்டில் கோட்டை அரசன் சென்பகப்பெருமாள் எனும் ஆறாம் பராக்கிரமபாகு யாழ்பாணத்தின் மீது படை எடுத்தபோது யாழ்பாண மன்னரது படைகளில் இருந்த  கருனாடர், கேரளர், தமிழர், துளுவர், வன்னியர், சோனர், முதலான வீரர்கள் பராக்கிரமபாகுவை  எதிர்த்து போரிட்டதாகவும் அதே நூல் கூறுகிறது. மேலும் முதலாம் சங்கிலியனின் காலத்தில் நிகழ்ந்த போர்துக்கேயப் படையெடுப்பை எதிர்கொள்ள பன்னிரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை சங்கிலியன் நிறுத்தி வைத்திருந்தான் என்று குவரோஸ் சுவாமியார் கூறுகிறார். 
              
                                      இவ்வாறு ஏராளமான போர்களை சந்தித்த யாழ்ப்பாணத்தின் மன்னர்கள் தம்சார்பாக போரிட்டு வீர மரணமடைந்த  படைவீரர்களுக்காக எழுப்பிய கூடத்தார் கோயில்களில் ஒன்றே இன்று இளவாலையில் இருக்கும் இக்கூடத்தார் கோயிலாக இருக்கலாமென பேராசிரியர் ப.புஷ்பரட்னம் தெரிவித்துள்ளார். மேலும் யாழ்பாண அரசு போர்த்துக்கேயரிடம் விழுந்த போது போர்வீரராக இருந்தவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தின் பொருட்டு தங்கள் படைக்கல தொழிலைக் கைவிட்டு பிற தொழில்களை தேடிக்கொண்டார்கள். இதன்காரணமாகவே முதலில் படைவீரர்களாயிருந்து கோயிலை பராமரித்து வந்த குடியினர் தம் தொழிலை மாற்றிய போது கூடத்தார் கோயிலும் அத்தொழில் செய்த சமூகத்திற்குறிய கோயிலாக மாறிப்போயிரல் வேண்டும் என்கிறார் பேராசிரியர். மேலும் ஈழத்தமிழரின் வழிபாட்டு மரபாக இருந்து வரும் அண்ணமார் ,இளந்தாரி முதலான ஆலயங்கள் தொடக்க காலங்களில் போர் வீரர்களுடன் தொடர்புடையது என பேராசிரியர் பொ,.இரகுபதி கூறுவதையும் கருத்தில் கொண்டால் இளவாலையில் அமைந்த இக்கூடத்தார் கோயிலும் யாழ்பாண அரசுடன் தொடர்புடைய படைவீரர்களின் நினைவாகவே தாபிக்கப்பட்டது என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.    

                                                                     இளவாலையில் வசந்தபுரத்தில் அமைந்துள்ள கூடத்தார் கோயிலை பற்றி வரலாறு தெரிவிக்கும் தகவல்கள் இதுதான். இத்தகவல்களை அறிந்து கொண்டு இளவாலைக்கு கிளம்பிய எங்களுக்கு படிப்படியாக அதிர்ச்சிகளை மட்டுமல்ல அடிகளை கூடத் தரத் தயாராக இருந்தது அந்த ஊர்.
                 
                 உண்மையை கூறுவதாயின் பிற இடங்களில் வரலாற்று இடங்களை கண்டுபிடிப்பதற்கு முகம்கொடுத்த இக்கட்டுக்களை போல இளவாலையில்  கூடத்தார் கோயிலை கண்டுபிடிப்பது அப்படியொன்றும் சிரமமாயிருக்கவில்லை. இது ஒரு வழிபாட்டு தலமாக அறியப்பட்டதாலும் பத்திரிகைகளில் இதை பற்றிய கட்டுரைகள் வந்திருந்த படியாலும் பெரும்பாலும் இளவாலையில் அனைவரும் இக்கோயிலை பற்றி அறிந்திருந்தனர். எனவே கூடத்தார் கோயில் இருக்கும் இடத்தை  சென்றடைவது எங்களுக்கு பெரிய சிரமமாயமையவில்லை.
         
                        வசந்தபுரத்தில் அமைந்திருந்த அப்பகுதியில் இலங்கையின் போர் காரணமாக இடம்பெயர்ந்திருந்த மக்கள் தற்போது சமூக சேவை நிறுவனம் ஒன்றின் அனுசரணையுடன் ஒரே பாணியில் நெருக்கமாக அமைக்கப்பட்ட வீடுகளில் மீளக்குடியமர்த்தப்பட்டிருந்தனர். எனவே இவ்வாறு நெருக்கமாக அமைந்திருந்த வீடுகளின் மத்தியில் எங்கோ தான் கோயில் அமைந்திருக்க வேண்டும் என எங்கள் நால்வருக்கும் தெளிவாக தெரிந்திருந்தபடியால் நெருக்கிய வீடுகளின் மத்தியில் உள்நுழையும் வண்ணம் தெரிந்த ஒரு பாதையில் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். போகப்போக பாதை இக்குடியிருப்புக்களை விலத்தி எங்கோ அழைத்து செல்வதை உணர்த்து கொண்ட நாங்கள் குடியிருப்புக்களுக்கும் பாதைக்கும் எல்லையாக அமைந்த ஒரிடத்தில் இருந்த குடிசையில் எங்கள் வண்டிகளை நிறுத்தி விட்டு விசாரிப்பதற்கு இறங்கினோம்.
       
                              குடிசையின் முன்னர் குவிக்கப்படிருந்த காய்ந்த விறகுகளை ஒரு மூதாட்டி கையில் காட்டுகத்தியுடன் பந்தாடிக்கொண்டிருந்தார். சரி இவரிடம் விசாரிக்கலாம் என்று கிட்டபோய் “ஆச்சி............இங்கை கூடத்தார் கோயில் எண்டுற இடம் எங்கை இருக்கு.......???” அவ்வளவுதான் கையில் இருந்த காட்டுக்கத்தியால் ஒரே போடில் விறகை பிளந்தபடி “என்ன..........தம்பியவை...... கூடத்தார் கோயிலோ.....ஹஹா....” [சிரிப்பில் ஒரு வில்லத்தனம்.......நிற்க ~ மேலேயே குறிப்பிட்டிருந்த படி இக்கோயில் முன்னர் படைவீரராயிருந்து தொழிலை மாற்றிக்கொண்ட ஒரு குலத்தவருக்கு சொந்தமாயிருக்க வேண்டும்~ என்பதற்கேற்ப இக்கோயிலை பரமாரித்து வரும் குலங்களின் குடியை சேர்ந்த இவ் மூதாட்டியிடம் அவர்களது கோயிலை அவர்களுக்கே தெரியுமா..??? என விசாரித்ததில் சிறு கோபமும் வில்லத்தனமும் ஏற்பட்டதில் ஐயமில்லை தான் இருந்தாலும் நாங்க உங்க ஊருக்கு புதுசு ஆச்சி......] இப்பொழுது கிழவியின் கை காட்டுகத்தியின் நுனிப்பிடியை பிடித்திருக்க கத்தி எங்களுக்கு முன்னே பாய்ந்து குடிசைக்கு முன் இருந்த பத்தையை சுட்டி நிற்க ஆச்சி கூறினார் “உங்க வண்டிகளை இங்கே விட்டுப்போட்டு..........இப்பிடியே நேர போங்கோ........[கடுப்புடன் கூடிய இழுவை]....... நீங்க போக வேண்டிய இடத்துக்கு அதுவே கொண்டு போய் சேர்த்திடும்......” இதென்ன பத்தைகாட்டை காட்டி அதுக்குள்ள போகச்சொல்லுது மனுஷி..... கையில காட்டுக்கத்தி வேறை..... மனுஷி சொன்ன விதத்தை பார்க்க “மவனுகளே வழியா கேட்குரிங்க......வழி காட்டுக்கத்தியாலை கழுத்தறுத்து பத்தைக்காட்டுக்குள்ளைதான் புதைப்பன்.....” எண்டது போல இருந்துது. “சரி ஆச்சி” எண்டு நான் சொல்லி திரும்பிரதுக்குள்ள நம்மட பயலுகள் பைக்கில ஏறி ஸ்டார்ட் பண்ணிட்டானுகள்.[.....நட்பாமாம்..]
                         
                        நாங்கள் பைக்கில ஏறி கிளம்ப ஆச்சி கடுப்பாகி “தம்பி.......அடோய்..... தம்பி” எண்டு நடு வீதியிலை வந்து குரலை எழுப்பினத்தை கண்டும்கானாத மாதிரி குடிசையை விட்டு கொஞ்ச தூரம் வந்தா அதே பாதையில பாதையை மரிச்சுக்கிட்டு நின்ற கிழவன்கிட்ட மாட்டிகிட்டோம். “தம்பிமார் அதான் ஆச்சி கூப்பிடுராவல்லே.......... திரும்பி நடவுங்கோ.....”. “இல்லை ஐயா கூடத்தார் கோயிலுக்கு வழி.......” எண்டு இழுத்தோம். “ஒஹ் கூடத்தார் கோயிலோ...... முதல் ஆச்சியிட்டை நடவுங்கோ....... அவா காட்டுவா பாதை...” அதான்சரி கிழவண்ட தடியால வாங்கிகட்டுரத்தை விட  தாய்குலத்திடம் சரணடைவதே மேல் எண்டு திரும்பி குடிசைக்கே வந்தால் கூடியிருந்த கூட்டத்துக்குள் மனுஷி காட்டுக்கத்தியை சுழற்றியபடி நமட்டு சிரிப்புடன் “ அதான் பாதையை நான் காட்டினான் எல்லோ....... பிறகென்ன உங்கை அரக்க பறக்க ஒடுறியள்........” நாங்கள் ஆளையாள் பார்த்துகொண்டு ஒரு பாதை கேட்டது தப்பாய்யா.....??? எண்டு முளிச்சுகொண்டே நிண்டோம். ஏதோ எங்களில இரக்கம் வந்தது போல ஆச்சியும் ஒரு அக்காவை எங்க கூட அனுப்பி கூடத்தார் கோயிலுக்கு வழிகாட்டும் படி கூறினார் {....அதேநேரம் இன்னொரு வாட்ட சாட்டமான இளைஞனிடமும் ஏதோ காதில் இரகசியமாய் கிசுகிசுத்தார்..... அது அநேகமா இந்தப்பெடியளைப் பார்க்க சந்தேகமா இருக்கு எண்டதாத்தான் இருக்கோணும் எண்டு பின்னர் நடந்த சம்பவங்களில் இருந்து தெரிந்து கொண்டோம்....} அந்த அக்காவும் அந்த அண்ணாவும் வழிகாட்ட நாங்கள் பின் தொடர்ந்தோம்.பத்தை காட்டுக்கும் அருகிலிருந்த வீட்டுக்கும் இடையே ஒரு ஒற்றையடிப்பாதை ஓடுவது அப்பத்தான் எங்கட கண்ணுக்கு பட்டுது. கூடத்தார் கோயிலிலை எங்களை கொண்டு போய் சேர்த்துப்போட்டு கூடவந்தவை போட்டினம்.

                                                  கூடத்தார் கோயிலோ சிறு கட்டிடமாய் இருந்தாலும் ஏறத்தாழ 15 அடி நீளமும் 6 அடி அகலமும் கொண்டமைந்த இக்கருவறையையும் முன்னாள் சிறு அந்தராளத்தையும் கொண்டு கோரைக்கற்களின் மூலம் கட்டப்பட்டிருந்த கோயில் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டது. அருகே புதிதாக பறிக்கப்பட்டிருந்த கற்கள் கோயிலில் திருத்த வேலைகள் நடைபெற இருப்பதை காட்டின. சுற்றி வர இருந்த பனை மரங்களும் அரச மரமும் கோயிலுக்கு நிழல் தந்த நிலையில் ஆங்காங்கே காணப்படும் மரங்களின் கீழும் சிறு கற்களை நாட்டியும் புற்றுகளையும் வழிபடுவது தெரிந்தது.  சரி கோயிலுக்கு வந்தாயிற்று இனியென்ன படம் பிடித்து விட்டு கிளம்புவதுதானே என்று நாம் செயற்படத்தொடங்கினோம். அங்கும் இங்குமாக நடந்து பார்த்துகொண்டு இருந்தபோதுதான் இனிய தென்றல் காற்றுடன் மனிதக்கழிவு நாற்றமும் கலந்து வருவது தெரிந்தது. ஆம் கோயில் வளாகத்தில் காணப்பட்ட பனைமரங்களின் கீழே மஞ்சள் நிறத்தில் காணப்பட்ட பனம்பழங்களுடன் மனிதர்களின் ஞானப்பழங்களும் ஆங்காங்கே செறிவாக காணப்பட்டன. கொய்யால பத்தை காட்டுக்குள்ளாள நுளை பாதை வைச்சிருக்கும் போதே ஜோசித்திருக்கணும் பத்தை காட்டு விவகாரங்கள் இங்கு செறிந்து இருக்கும் என்று. {வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமென்றால் நீங்க மலம் களிப்பீங்க சரி அதுக்காக கோயிலிலுமா......உருப்பட்டுடுமியா நாடு உருப்பட்டுடும்.......உங்களையெல்லாம் ஏன்யா சுனாமி தூக்கல்லை}
                     
                       இவர்கள் கோயில் மீது காட்டும் அக்கறைக்கும் கோயிலைப்பராமரிக்கும் விதத்துக்கும் துளியும் சம்பந்தமில்லாது இருந்தமை எங்களிடம் வியப்பையும் கோபத்தையும் கிளப்ப சிறிது சத்தமாகவே நமக்குள் சிரித்து கதைத்துக்கொண்டோம் கோயிலின் நிலை பற்றி. அவ்வளவுதான் எரியிற நெருப்பிலை எண்ணையை ஊத்திறமாதிரி ஏற்கனவே எங்களை சந்தேகக்கண்ணோடை பார்த்தவங்கள் இப்ப சும்மா இருப்பாங்களா....??? ஆம் எங்களுக்கு நேர் எதிரே மூன்று கட்டுமஸ்தான அண்ணைமார் இருவரின் கைகளில் கட்டைகள் வேறு சரத்தை மடித்துக்கட்டிய சண்டிக்கட்டுடன் பாட்ஷா பாணியில் நடந்து வந்தார்கள். அவர்களில் ஒருவர் எமக்கு வழிகாட்டியவர் என்பது வெளிப்படையாக தெரிந்தது. {ஆஹா எங்களை இங்கை கொண்டுவந்து சேர்த்துப்போட்டு போய்ட்டான் எண்டல்லோ நினைச்சம். ரைட்டு..... சைத்தான் சகாக்களை சேர்க்கப்போயிருக்கு......} மண்டைகள் பிளக்கும் போது தொண்டையால் கதறத் தயாராக நாங்கள் நின்ற நிலையில் எங்கள் நண்பர் சகாக்களில் ஒருவனான நீது “அண்ணை வாங்கண்ணை வாங்க உங்களிட்டத்தான் சில கேள்விகள் கேட்கணும் எண்டு நினைச்சனாங்கள்......இப்ப என்ன கோயில் திருத்த வேலை நடக்குது போல....??” எண்டு கேட்டு ஒருவழியாக சமாளித்தான். நீதுவின் வழியைப் பின்பற்றி நானும் “போனமுறை தினக்குரலில வந்த செய்தி இதைபற்றித்தானே.......???” எண்டு கேட்டு முடியிறதுக்குள்ள பின்னால் இருந்த படியே கிருத்தி “அடே அந்த சிலையின்றை எஞ்சிய காலைப்பற்றி கேளுங்கடா......” எண்டு சொன்னதுக்கு எங்களில் ஒருவனான தேனியே “ஒஹ் அது அந்த தகரக்கொட்டிலுக்க இருக்கு அதையும் ஒருக்கா படம் பிடியுங்கோ...” எண்டு நாங்கள் கேட்ட கேள்விக்கு நாங்களே பதில் சொல்லி அவர்களை பார்த்து சிரித்தபடி சமாளிச்சோம். { எத்தனை ஊரை பார்த்திருக்கோம் இங்கயா சிக்குவோம் சும்மா சிதறுவோமில்ல.......} கட்டையோட வந்தவங்கள் கதைக்க தொடங்கும் முன்னமே “சரியண்ணை....நாங்கள் வெளிக்கிடுறோம் ரொம்ப சந்தோசம்....” எண்டபடியே அவங்கட பதிலுக்கு காத்திராம “இப்படி வரலாறு சார்ந்த இடங்கள் இருப்பதும் அதை கவனிக்க இப்படி மக்கள் இருப்பதும் பெரிய கோடை.....” எண்டு ஆரம்பித்து சம்பந்தமில்லாது நாலு இங்கிலீஷ் ப்ரோபஷர் மாறிண்ட பெயரையும் நாலு தமிழ் புதகத்திண்டை பெயரையும் பற்றி பலமாக கதைச்சபடி வெளியேறினோம். ஒற்றையடிப்பாதையின் இருமருங்கும் சொர்ணாக்கா தரத்துக்கு பொம்பளைங்களும் மடித்துக்கட்டிய சண்டிக்கட்டுடன் ஆம்பளைங்களும் நின்றிருந்ததை கண்டும் காணாதது போல நாக்குளர ஏதோ கதைத்தபடி தலை தப்பினா காணும் எண்டு நாங்க வந்த விதமிருக்கே அப்பா அதை அனுபவிச்சுத்தான் பார்க்கணும்.
                 
                        சரி பைக்கை அடைஞ்சாச்சு இனி கிளம்ப வேண்டியதுதான் எண்டு நிமிர்ந்தா அதே மூன்று பேரும் முன்னால நின்டபடி “தம்பி நீங்க எங்கயிருந்து வாறியள்.......???” அஹா நாங்க சொல்லுற பதிலில தான் எங்கடை தலை தப்பும் எண்டு எங்க நாலு பேருக்கும் நல்லா தெரிஞ்சிருந்துது. “இல்லை அண்ணை நாங்க கம்பஸ் அதான் ஒரு ப்ராஜெக்ட்...” எண்டு முளிங்கி முடிக்காத வசனத்துடன் கிளம்பினோம். எங்களோட சேர்ந்து இன்னும் ஒரு பைக்கும் கிளம்பிய போதுதான் அட சனியண்ட கிருபை சாகும் வரை இருக்கு எண்டது விளங்கிச்சுது. முன்னால நீதுவும் கிருத்தியும் போன பைக்கோட போய் “தம்பி நீங்க எந்த கம்பஸ் ??”” எண்டு கேட்டவர்கள் “மொரட்டுவ கம்பஸ்” என்று பதிலை கேட்டுவிட்டு நானும் தேனியும் வந்த பைக்கை மறிச்சு “நீங்க எந்தக்கம்பஸ்...?” எண்டு கேட்டாங்க. நல்ல காலம் ஏதோ ஜோசித்து “மொரட்டுவ கம்பஸ்”  எண்டு சொல்லி விட்டு கிளம்பிவிட்டோம். உண்மையில் எங்களில் நீது மட்டுமே மொறட்டுவ பல்கலைகழகம். நாங்கள் தப்பித்தவறி ஏதாவது மாற்றி உளரியிருந்தோம் எண்டால் முடிவு உங்களுக்கு தெரிந்ததுதான்.
           
                   ஆம் உண்மையில் நடந்த சம்பவங்கள் தான் இவை. ஒரு கோயிலை விசாரிக்கபோனதில் ஏற்பட்ட சங்கடங்களை பார்த்தீர்களா....?? எங்களின் கோயிலையா விசாரிக்கிறீர்கள்  எனும் அந்த உணர்ச்சியும் சண்டித்தனத்திற்கு காட்டும் அந்த வீரமும் கோயிலையும் அதன் சுற்றத்தையும் பராமரிப்பதில் இவர்கள் காட்டவில்லை. ஈழத் தமிழரின் வரலாறு சார்ந்த இடங்கள் என்றாலே மனித மலங்களும் அங்கு இருக்கும் என்பதை எங்கள் அனுபவத்தின் மூலம்  தெரிந்து கொண்ட நாங்கள் எங்கள் மக்களை நொந்தவாறே பயணத்தை தொடர்ந்தோம்.
                                       .
                                                                             ....................தொடரும்.......................


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}