அணு vs ஓளவையார்,ஓளவையார் ஒருவர்தானா?-01

அணு என்ற விடயத்தை முன்பே ஓளவையார் கூறிவிட்டார் என்பதை ஆராய்ச்சி செய்வதற்கு முன்பாக ஓளவையார் யார்?என்பதைப்பார்த்துவிடுவோம்.சிறியவயதில் தவ்வலாக கல்வியை ஆரம்பிக்கும்போது அ,ஆ கற்பிக்கும் அதே நேரத்தில் முதன் முதலில் எமக்கு அறிமுகமான புலவர்தான் ஒளவையார்.தமிழ்ப்பாட்டி என்றழைக்கப்படுபவர்.ஆத்தி சூடி அமர்ந்த தேவனை என்று ஆரம்பிக்கும் கடவுள்வாழ்த்துடன் ஆத்திசூடியை கீச்சிட்டு கத்தி கற்றிருக்கின்றோம்.(அப்பொழுதெல்லாம் படித்தல் அல்லது பாடமாக்கல் என்றால் கத்துதல் என்றுதான் பொருள் தன் பிள்ளை படிக்கின்றது என்பதைத்தாய் அடுத்த வீதியில் இருந்து சீரியல்பார்த்துக்கொண்டே தெரிந்துகொள்ளமுடியும்...)

உயிர் எழுத்துக்களைக்கற்றுக்கொண்டிருக்கும்போது எமக்கு அறிமுகமானதுதான் சமயம்,"கடவுள் எங்கும் இருக்கின்றார்","கடவுள் எல்லாம் வல்லவர்","கடவுள் எங்கும் நிறைந்தவர்","கடவுள் எல்லாம் அறிபவர்" குருளை மாணவர்களாக நாம் உரத்துக்கத்தியவை தொடரும் எதிரொலிகளாக எம்முள் சமய நம்பிக்கையை ஆழமாக ஊன்றின.அதில் கடவுள்  நிதானமாக அமர்ந்துகொண்டார்.ஓளவையார் பற்றிய கதைகள் எமக்கு இன்னமும் நினைவில் இருக்கும்.எதையும் மறக்கமுடியாத வயதில்  சித்திரங்களாகவோ கிறுக்கல்களாகவோ இடத்தை நிரப்புவதற்கு வெற்றுத்தாள்களாக  ஆழ்மனம் காத்திருக்கும் நேரத்தில் ஊட்டப்பட்ட கதைகளல்லவா அவை ஆகவே நிச்சயம் நினைவிருக்கும்.ஓளவையாருக்கு பல கதைகள் உண்டு.முக்கியமாக மாடுமேய்க்கும் சிறுவனாகவந்த முருகனிடம் ஓளவையார் நாவல் பழம் கேட்டகதை...
"சுட்ட பழமா?" "சுடாத பழமா?"
.......!!!!!! சுட்டபழமே போடுப்பா.....
மணல் ஊதிப்பழம் உண்கையில் "பாட்டி சுடுகின்றதா?".... கேள்வி பாட்டியை சுடத்தான் செய்தது.

கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி 
இருங்கதலித் தண்டுக்கு நாணும்- பெருங்கானில் 
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றேன்
ஈரிரவும் துஞ்சாதென் கண்...

இதன் முதலாவது பதிவை வாசிப்பதற்கு 

கடவுள் ,ஹிக்ஸ் போஸன்,குர்ஆன்,பித்தலாட்டம்,சிவன் துகள்


என்று தான் தோற்றதை ஓளவையார் பாடியதை நாம் கந்தன் கருணையில் கற்பனைச்செலவில்லாமல் பார்த்திருக்கின்றோம்.இந்த சம்பவத்திற்குப்பின்னர் முருகன் முருகனாக அருள்புரிந்து ஓளவையிடம் கொடியது எது?இனியது எது? பெரியது எது?அரியது எது? என்று கேட்க "கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்" என்றாரம்பிக்கும் தனிப பாடல்களின் மூலம் விடையளிக்கின்றார் ஓளவை.அப்படியே இனியது,பெரியது,அரியது என்பவற்றிற்கும் ஓளவை முருகனுக்கு பதிலளிக்கின்றார்.


ஓளவையார் முருகனுக்கு கூறிய பதில்களில் பெரியது எது?என்பதற்கு பதிலாக வரும் பாடல் இது..

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்!
பெரிது பெரிது புவனம் பெரிது;
புவனமோ நான்முகன் படைப்பு;
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்;
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்;
அலைகடல், குறுமுனி அங்கையில் அடக்கம்;
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்;
கலசமோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்;
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்;
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்;
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்;
தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே!


இதற்கான அர்த்தம்/பொழிப்புரை-

உலகில் மிகப்பெரியது எது என்று கேட்டால், இந்த உலகம்தான் பெரியது. ஆனால் இந்த உலகமோ நான்முகனால் படைக்கப்பட்டது. எனவே நான்முகன்தான் பெரியவன் என்றால் நான்முகனோ திருமாலின் உந்தியில் (தொப்புள்) தோன்றியவன். எனவே திருமால்தான் பெரியவன் என்றால் திருமாலோ அலைகடலில் தூங்குகிறவன். திருமாலைத் தாங்கும் கடல்தான் பெரியது என்றால், அந்தக் கடலும் அகத்தியனின் உள்ளங்கையில் அடங்கியது. எனவே அகத்தியர்தான் பெரியவர் என்றால், அந்த அகத்தியரும் கலயத்தில் (சிறு மண்குடம்) அடங்கி இருந்தவர். எனவே, கலயம் தான் பெரியது என்றால் அந்தக் கலயமோ இந்தப் பூமியில் உள்ள மண்ணால் செய்யப்பட்டது. எனவே, பூமிதான் பெரியது என்றால், இந்தப் பூமியை ஆதிசேடன் என்னும் பாம்பு தனது ஒரு தலையில் தாங்கியிருக்கிறது. பூமியைத் தாங்கும் ஆதிசேடன் என்னும் பாம்புதான் பெரியது என்றால் அந்தப் பாம்பை, உமையவள் தனது விரலில் மோதிரமாக அணிந்துள்ளாள். எனவே உமையவள்தான் பெரியவள் என்றால், அந்த உமையவளோ சிவனது உடலின் ஒரு பாதியில் ஒடுங்கியிருக்கிறாள். எனவே சிவன்தான் பெரியவன் என்றால், அந்தச் சிவனோ அடியவர்களின் உள்ளத்தில் ஒடுங்கியிருக்கிறான். எனவே அடியவர்களின் பெருமைதான் உலகில் பெரியது.

ஆரம்பப்பருவத்தில்  சிறுவனிடம் நாவல் பழம் கேட்ட கதையை கந்தன் கருணையின் மூலம் மேலும்   நமக்கு நெருக்கமாக அறிமுகமாயிருந்தார் ஓளவையார்.ஆனால் ஓளவையார் என்பவர் உண்மையில் யார்?வரலாற்றை ஆராய்ந்தால்   ஓளவையார் வாழ்ந்தது பற்றிய சர்ச்சைகளை கவனிக்கவேண்டியேற்படும்.

ஓளவையார் உண்மையில் யார் என்பதே சர்ச்சைதான்.ஓளவையார் என்பவர் தனி ஒரு புலவரல்ல வரலாற்றில் மொத்தம் 6 ஓளவையார்கள் வாழ்ந்ததாக ஆதாரம் காட்டப்படுகின்றது.அறுவரும் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்த பெண்புலவர்கள் ஆனால் ஓளவையார் என்றுதான் அழைக்கப்பட்டார்கள்.அவ்வாறு வாழ்ந்த 6 ஓளவையார்களின் காலம்,பாடிய பாடல்கள்,பாடல் பெற்றோர் போன்றவிடயங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ளன.சரி கொஞ்சம் டீப்பாக ஆராய்வோம்.


பெண்ணடிமைத்தனத்தைக்கண்டித்து பாரதி பல பாடல்களைப்பாடி இருக்கின்றார்.பாரதியின் காலத்தில் மட்டுமல்ல பாரதிக்கு முற்பட்ட காலத்திலும் பெண்ணடிமைத்தனம் மிக மோஸமாகத்தான் இருந்தது.பெண்களுக்கான கல்வி மறுக்கப்படல்,கைம்பெண்களை முடக்குதல்,கைம்பெண்களுக்கான சட்டங்கள்,உடன் கட்டையேறுதல் இந்து சமயத்தில் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டுவந்தது அதிலும் உடன் கட்டையேறுதல் தொடர்பில்வைத்திருந்த கடுமையான சட்டங்களுக்கு பயந்து விதவைப்பெண் தானே தன் கணவன் எரியும் சிதையில் குதித்தாள்.சமுதாய மூட சட்டங்களைவிட தீ அவளுக்கு பெரிதாக சுடவில்லை.உடன் கட்டையேறுமாறு பெண்ணை திணிப்பார்கள் பெண் எரியும் சிதை மீது ஏறியதும் சங்கை பலமாக ஒலிப்பார்களாம் மேள தாளங்களையும் ஒலிப்பார்களாம்.காரணம் என்ன தெரியுமா?காப்பாற்றுங்கள் என்று கதறும் ஓலக்குரல் வெளியே கேட்கக்கூடாது என்பதற்காக.உடன் கட்டையேறும் பெண் சொர்க்கத்தை அடைவாள் என்று ஒரு வெங்காய விளக்கம்வேறு கொடுத்திருந்தார்கள்.
தமிழ் சமூகத்தில் மட்டுமல்ல தொடரும் பல காலங்களில் பல்வேறு சமூகங்களில் இந்த அடிமைத்தனம் இருந்தது.பெண்கள் பிற ஆண்களுடன் தான் இல்லாத நேரத்தில் உறவுகொள்வாளோ என பயந்து பெண்ணின் இடுப்பில் இரும்பாலான ஒரு கருவியை அணிவித்தார்கள்.பிறப்புறுப்பிலும் மல வாயிலிலுமே துளைகள் இடப்பட்டிருக்கும்.அக்கருவியை திறந்து பூட்டுமாறு செய்திருப்பார்கள் அதற்கு ஒரு பூட்டை பூட்டி திறப்பை தாம் செல்லுமிடத்திற்கு கொண்டு செல்லும் கணவன்மார்கள் இருந்திருக்கின்றார்கள்.( இவ்வாறான விடயங்களை அறிய இங்கே கிளிக்)

இவ்வாறு பல பிற்போக்கானவிடயங்கள் வரலாற்றில் நிறைந்திருக்கின்றன.ஆனால் சங்க காலத்தில் கி.மு 500-கி.பி 200 ஆண்டு காலப்பகுதியில் 30 பெண் புலவர்களை நம் தமிழ் சமூகம் கொண்டிருந்தது.சங்ககாலத்திலேயே பெண்ணுக்கு பெண்ணுரிமை கொடுத்தோம்.பிற்காலத்தில் பிடுங்கிக்கொண்டோம் என்பது வேறுகதை.இப்பெண்புலவர்களில் முக்கியமானவர்தான் ஓளவையார்.பிற்காலத்தின் பெண் அடிமைத்தனத்தை ஏசிய பாரதி முற்காலத்தில் வாழ்ந்த ஓளவையை துணைக்கழைத்துப்பாடினான்.

"உண்டாக்கி பாலூட்டி வளர்த்த தாயை
உமையவளேன் றறியீரோ? உணர்ச்சி கெட்டீர்
பண்டாச்சி ஓளவை அன்னையும் பிதாவும்
பாரிடைமுன் னறிதெய்வம் என்றான் அன்றோ என்றார்.

சாதி பேதமையை சாடி பாரதி பாடும்போது அதற்கும் ஓளவையை துணைக்கழைத்தான்.

சாதி இரண்டொழியவேறில்லை யென்றே
"தமிழ்மகள்" சொல்லிய சொல் அமிழ்தமென்போம்

இன்றளவும் சாதியம் பெண்ணடிமைத்தனம் என்பவை பிரச்சனைக்குரிய விடயங்களாக உள்ளபோது.சங்ககாலத்திலேயே இவற்றை ஓளவை கூறியிருப்பது ஆச்சரியம்தான்.
தமிழ் நாட்டின் மற்ற செல்வங்களை இழந்துவிடப்பிரியமா?அல்லது ஓளவையின்  நூல்களை இழந்துவிடப்பிரியமா? என கேட்பார்களாயின் ஓளவைப்பிராட்டியின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதியோம்.மற்ற செல்வங்களை எல்லாம் பறிகொடுத்தாலும்.தமிழ் நாடு சமைத்துக்கொள்ளும் ஆனால் மீண்டும் சமைத்துக்கொள்ளமுடியாத தனிப்பெரும் செல்வம் ஓளவையினுடையது.இவற்றைக்கூறியவர் பாரதியார்.

இதனால் கம்பர்,இளங்கோ,வள்ளுவர் போன்றவர்களை 2 ஆம் தரத்திற்கு கொண்டுசென்றுவிட்டாரே பாரதி என்று நினைக்கவேண்டாம்.2000 வருட காலத்தில் பிரமாண்ட பெண்புலவராக ஓளவையார் மட்டுமே ஓளிரமுடிந்தது.ஆனால் ஆண்புலவர்கள் பலர் பிரமாண்ட புகழ் ஒளியுடன் தோன்றி மறைந்திருக்கின்றார்கள்.இதுதான் ஓளவையின் தனித்துவம் 2000:1 விகிதம் சற்று அதிகமில்லையா?

கி.மு 6ஆம் நூற்றாண்டளவில் கிரேக்கத்தில் ஸாப்போ என்ற பெண்கவிஞர் இருந்திருக்கின்றார்.அவரும் பிரபலமான பெண்கவிதான்.ஆனால் அவரது பாடல்கள் காதல்,திருமணங்கள் பற்றியவை.எனவே ஓளவையை தனிச்சிறப்புவாய்ந்தவராகவும் அப்போதைய தமிழ் சமூகத்தின் விழிப்புணர்வுக்கு உதாரணமாகவும் கொள்ளலாம்.சங்க இலக்கியங்கள் பத்துப் பாட்டுஎட்டுத் தொகை என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.பாடல்களின் மொத்த எண்ணிக்கை 2381,பாடிய புலவர்கள்-473 பெண்புலவர்கள்-30 பெண்புலவர்கள் பாடிய பாடல்களின் எண்ணிக்கை-156 அதில் ஓளவையார் பாடிய பாடல்களின் எண்ணிக்கை   59.

தொடரும்.....
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}