தமிழர்களின் பெருமை... ஓவியமாகதமிழர்களிடையே ஓவியக்கலைக்கு போதிய மதிப்பு இருப்பதில்லை. இது உலகத்தின் பெரும்பாலான நவீனர்களின் வழக்கம் என்று பொதுவாக இந்தக் குறைபாட்டை புறந்தள்ளிவிட முடியாது. ஏனெனில், ஓவியக்கலையில் வரலாற்றுக்கு முற்பட்ட மற்றும் வரலாற்றுக் காலத்திலேயே உலகத்தின் முக்கியமான கலைப்பீடமாக தமிழகம் இருந்துள்ளது. தஞ்சாவூர் ஓவியங்கள் உலகத்தின் முக்கியமான பாரம்பரிய சொத்தாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அது உள்ளிட்ட ஓவியக்கலையை தமிழர்கள் புறந்தள்ளி விட்டோம். தமிழிலே ஓவியர்களுக்கு மதிப்பு பெரிதாக இல்லை. அதிலும், இலங்கையில் ஏறத்தாழ துண்டாக இல்லை. (இலங்கையில் ஓவியக்கலையின் நாட்டம் குறைந்ததற்கு, ஓவியம் என்றாலே புத்தரின் சிலைகள்தான் என்பதாக உள்ள கடினமான சிங்கள ஆதிக்க பாடசாலை சிலபசும், பிள்ளை படம் கீறுவதை ரசிக்காத பெற்றோரும் காரணமாக இருக்கலாம்.) தமிழர் தம் அருங்கலைகளுள் ஒன்றான ஓவியக்கலையை மறக்க, உள்ள பல ஓவியர்களும், காலத்தின் புரிதல் இல்லாமல் அழிகிறார்கள்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல, கால வகையினானே. இது புரியாத எந்தக்  கலையும், இனமும், மனிதரும் உலகில் நிலைக்க முடியாது. தமிழர் ஒவியத்தின் நிலையம் அதுதான். புகைப்படக்கலை வளர்ந்து உச்சத்தை எட்டிவிட்ட காலத்தில், பிரதிமைக்கலை என்கிற பார்த்து வரையும் ஓவியக்கலைக்கு தேவை இல்லாது போய்விட்டது. நான்கு மணிநேரம் உட்கார்ந்து வரைய வேண்டிய ஒரு முகத்தின் அழகை ஒரு வினாடியில் எடுக்கும் புகைப்படம் காட்டிவிடும். எனவே, அது வழக்கொழிந்து விட்டது. அடுத்தது, தெய்வீக உருவங்களை வரைவது. எளிதாக வரையலாம் என்பதற்காக பிள்ளையாரை வரைவதில் தொடங்கி, சரஸ்வதி, லக்சுமி என்று நான்கு கை உள்ள பிராணிகளை மட்டுமே வரைவது. இது எந்தக் காலத்துக்கும்பயன்படாத கலை.

அடுத்ததுதான் பெரும் கூத்து. நவீனபாணி ஓவியம் (மொடேன் ஆட்) என்பதன் உள்ளர்த்தம் புரியாமல் நமது ஓவியர்களில் பெரும்பாலானோர், ஐரோப்பிய மறுமலர்ச்சிகால, மற்றும் பின்நவீனத்துவ பாணி ஓவியங்களையே வரைந்து கொண்டிருக்கிறார்கள். சரியலிசத்தை தாண்டிய (சரியலிசம் என்பது கலைக் கொள்கை. இது மேலை நாடுகளில் உருவானது. சில பின்நவீன எழுத்தாளர்களின் கதை ஒன்றில் புரியாது, அல்லது எரிச்சலாக இருக்கும் அல்லவா? அதுபோலத்தான் இந்த ஓவியங்களை நம்மூர் ஆட்கள் வரையும்போதும்.) நவீன பாணி என்கிற கருத்தை எடுத்துக் கொள்ளலாம், ஆனால் நம் மண்ணின், இனத்தின் வாசம் ஓவியத்தில் வீச வேண்டுமல்லவா?

ஒரு ஓவியன் என்பவன் ஒரு படைப்பாளியாக இருந்தால் மட்டுமே மேற்சொன்ன குறைகள் தாண்டிய உயிர்களை ஓவியத்தில் அவனால் தரமுடியும். இப்படியாக, மரபு உடைத்து, நவீன பாணியில், எங்கள் இனத்திற்குரிய கையாளலில் ஓவியங்களை படைக்கும் படைப்பாளிதான் ட்ராட்ஸ்கி மருது.

மருது, மதுரையில் 12,08,1953 இல் பிறந்தார். ஓவியக்கலை டிப்லோமாவில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார் என்கிற தகவல் இப்போது நமக்கு ஆச்சரியம் தராதுதான். பின்னர் சென்னை, டில்லி போன்ற இடங்களில் மேலும் சில கற்கை நெறிகளை முடித்தார். சினிமாவில் கலை இயக்குனராக இவர் அறிமுகமான படம் தேவதை. (நாசர்) அதிலே வழக்கமான வரலாற்றுப் படங்களது போலல்லாது, யதார்த்தமாகவும் கலாபூர்வமாகவும் வடிவமைத்து பலரது கவனங்களை ஈர்த்தவர். ஓவியங்களிலும், சினிமாவிலும் கணணி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதிலும் இவர் முன்னோடியாக இருக்கிறார். கலப்பு ஊடகம் என்கிற முறையில் இவர் பாதி கணினிப் பதிப்பு, மீதி தூரிகை என பல அற்புதமான ஓவியங்களை படைத்துள்ளார்.

ஏற்கெனவே எனது ஆதர்ச தமிழ் ஓவிய ஆளுமையாக இவர் இருந்தாலும், இவரை ட்ராட்ஸ்கி என்கிற பெயர் அடைக்கு ஏற்ப (ட்ராட்ஸ்கி என்பது லியோன் ட்ரொட்ஸ்கியுடைய பெயர். ட்ரோட்ஸ்கிசம் என்பது இவரது கொம்மியூநிசக் கொள்கை. ) தமிழ் அரசர்களுடைய ஓவியத்திலே மரபை உடைத்து புதுமை செய்ததுதான் இவரை ஒரு சிந்தனையாளனாக காட்டியது.


வழக்கமாக வரையும் கிரீடம், ஆபரணம் என்ற பகட்டு இல்லாமல், யதார்த்தமாக நமது தமிழ் மன்னர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்கிற கருத்தில் இவர் வரைந்து வெளியிட்ட வாளோர் ஆடும் அமலை புத்தகத்தின் ஓவியங்கள் அற்புதமானவை. இதுபற்றி அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில்...

இந்தியாவைப் பொறுத்தவரை இங்கு பண்டைய வரலாறு முறையாக ஆவணப்படுத்தப்படவே இல்லை. வெள்ளைக்காரர்கள் ஆட்சி புரிந்த 200 வருட காலனி வரலாற்றின் தொடக்கத்தில், பார்சி வியாபாரிகள் வெள்ளையர்களை மகிழ்விக்க நாடகங்கள் நடத்தினார்கள். அதுவரை சுமார் 200 ஆண்டு காலமாக வெள்ளையர்கள் சேகரித்த ஆவணங்களின் மூலமாகவே அந்த பார்சி நாடகங்கள் வடிவமைக்கப்பட்டன. அந்த நாடகங்களில் ஈர்க்கப்பட்ட ஓவியர் ரவிவர்மா, அதில் பயன்படுத்தப்பட்ட உடைகள் போன்றவற்றை வாங்கி, மாடல்களுக்கு அணிவித்து ஓவியங்கள் வரைந்தார். பிறகு, இந்தியத் திரையுலகின் முதல் இயக்குநரான தாதா சாகேப் பால்கே சினிமா எடுக்க வந்தபோது, ரவிவர்மாவின் ஓவியங்களையும் முக்கியமான ரெஃபரென்ஸாக எடுத்துக்கொண்டு, 'ஹரிச்சந்திராவை எடுத்தார். அப்போது அரசர் கால சினிமாக்கள்தான் அதிகம் எடுக்கப்பட்டன என்பதால், இது சுமார் 30 வருடங்களுக்குத் திரும்பத் திரும்ப நடந்தது. பம்பாயில் சினிமா கற்றுக்கொண்ட தென்னிந்தியர்கள், கிட்டத்தட்ட அதே மராட்டியத்தன்மைகொண்ட உடைகளை யும் பொருட்களையும் கொண்டுவந்து, தமிழக சினிமா பாத்திரங்களை உருவகப்படுத்தினார்கள். அதன் பிறகு, அதில் நாம் எந்த மாற்றத்தையும் செய்ய வில்லை. கடைசி வரை என்.டி.ராமராவ் கழற்றி வைத்த கிரீடத்தை நாமும் விடவில்லை.

அந்தக் கால தமிழ் மன்னர்களின் உண்மையான  தோற்றம் எந்த ஓவியத்திலும் சினிமாவிலும் முழுமையாகப் பதிவாகவில்லை. வீரபாண்டி யக் கட்டபொம்மன் உள்பட அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட அலங்கார உருவங்கள் தான். அரசர் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது, இரண்டு பக்கமும் சோபாவைப் போட்டு மந்திரிகள் அமர்ந்துஇருப்பது, பெண்கள் பின்புறம் நின்று சாமரம் வீசுவது எல்லாமே மிகை அலங்காரம்தான். உண்மையில் தமிழ் மன்னர்கள், வெற்று உடம்புடன் குறைந்த ஆபரணங்களுடன்தான் இருந்திருக்க முடியும்.
இந்த அலங்காரத்தன்மை கவிதையில் மட்டுமல்ல... நம் ஊர் சிற்பம், ஓவியம் உள்ளிட்ட கலைகளிலும் உண்டு. நமது கலை வெளிப் பாடுகளின் தோற்றத்தில்... இலக்கணத்தன்மையுடன் யதார்த்தமும் இணையும் போதுதான் நாயக்கர் காலச் சிற்பங்களில் தொந்தியே வருகிறது. அதற்கு முன்பு ஆண்களுக்குத் தொந்தி இல்லையா என்ன?! இருந்தது. ஆனால், வெளிப்படுத்தப்படவில்லை. பிற்பாடு, சினிமா எடுக்க வந்தவர்கள், இந்தச் சிற்பங்களையும் ஓவியங்களையும் ரெஃபரென்ஸாகப் பயன்படுத்தியபோது, இதே அலங்காரத்தன்மை சினிமாவுக்குள்ளும் வந்தது. விளைவு, மக்கள் மனங்களில் அரண்மனை, அரசன், ராணி, மந்திரி எல்லோரையும்பற்றி ஒரு மிகைச் சித்திரம் தோன்றிவிட்டது. இவற்றின் காரணமாக ராஜராஜ சோழன் பற்றியும், கட்டபொம்மன் பற்றியும் சொல்லும்போதே மக்களின் மனம், ஏற்கெனவே பழக்கப்படுத்தப்பட்ட பிம்பங்களை நினைத்துக்கொள்கிறது. முதலில் இதை உடைக்க வேண்டும். தமிழின் வீரம்மிக்க மன்னர்களுக்கு எனத் தனித்துவமான தோற்றமும், கம்பீரமும் இருந்திருக்கிறது. அதை உருவகப்படுத்த வேண்டும் என்பதே என் எண்ணம்.

இந்த அருமையான ஓவியர் இப்போது தான் வரைந்துள்ள ஆயிரக்கணக்கான குதிரை ஓவியங்களை வெளியிட்டுள்ளார். அத்தனை அருமையாக உள்ள அந்த ஓவியங்களை வரைந்த இவருக்கு ஒரு ஆசை இருக்கிறதாம். தமிழின் மூவேந்தர்களும் குதிரைமேல் கம்பீரமாக இருக்கும் சிலை ஒன்றை செய்ய வேண்டும் என்பது. அது சாத்தியப்பட்டால் நாம் தமிழராக இருந்ததற்கும், இருப்பதற்கும், பெருமைப்படலாம். 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}