தயவுசெய்து இந்தப் பதிவை ஷெயார் செய்யவும். (1)


சே குவேரா...
புரட்சிக்காரர்களின் இதயத்திலும், கோமாளிகளின் பேஸ்புக் புரபைல் பிக்சரிலும்  வாழ்கிறார்...
*             *             *அபாய அறிவிப்பு..: இந்தப் பதிவை வாசித்ததும், எதோ என்னை நான் ஒரு அறிஞனாகவோ, அதிபுத்திசாலியாகவோ எண்ணிக்கொண்டிருப்பதாகவும், வாசிப்பவன் எல்லோருமே முட்டாள் என கருதுவதாகவும், எனக்கு தமிழையோ, உலகத்தையோ, மனிதர்களையோ பற்றி நல்ல அபிப்பிராயமே இல்லை போலவும் தோன்றும். நான் இந்தப் பதிவில் காய்ச்சி இருப்பது, சற்றும் சிந்தனை இல்லாது, வெறுமனே பேஸ்புக்கில் அறிஞர்களாகவும், நல்லவர்களாகவும் காட்டிக் கொள்பவர்களை மட்டும்தான். ஒரு விஷயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். நான் இங்கே முட்டாள் எனச் சொல்லி இருக்கும் யாருமே, இப்படியாக ஒரு வலைப்பூ பதிவை வைத்து வாசிக்கும் அளவுக்கு வீச்சு அற்றவர்கள்.. அதே வேளை இப்படியாக ஒரு பதிவை வாசிக்குமளவுக்கு உள்ள நீங்களோ, போலி அறிஞராக பேஸ்புக்கில் நடிப்பவர் இல்லை, அப்படி இருக்க முடியாது.
*             *             *


இந்த உலகத்தின் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருந்த நல்லவனும், மொழிப் பற்றாளனும், பெண்ணியவாதியும், புரட்சிக்காரனும் வெளியே வந்தது பேஸ்புக்கில் ஷெயார் பட்டனை மார்க் சக்கர்பெர்க் அறிமுகப்படுத்திய பிறகுதான். அதுவும் ஒரு ஷேயாரை பண்ணிவிட்டு எத்தோ இந்தப் பிரபஞ்சத்தின் மனித இனத்தையே காப்பாற்றி விட்டதைப்போல அந்த பகிரர்கள் (ஷெயார் பண்ணுபவர்களுக்கு இந்தக் கட்டுரை எங்கிலும் பகிரர்கள் என்கிற பதம் பயன்படும்.) பண்ணும் அலப்பறை தாங்க முடியவில்லை...


மனிதாபிமானம், சமத்துவம், மொழிப்பற்று, பேரறிவு.. இதெல்லாம் ஆத்மாவோடு சம்பந்தப்பட்டது. இவை சாதாரணமான வாசிப்பாலோ, பழக்கங்களாலோ, வளர்ப்பாலோ வந்துவிடுவதில்லை. பழக்கம், வளர்ப்பு, சூழல் இவை அனைத்துக்கும் மேலாக சிந்தனை என்கிற மனித இனத்தின் உயர் ஆறாம் அறிவின் வழியிலேயே இது சாத்தியப்படும்.  வெறுமணே பேஸ்புக்கில் ஷெயார் செய்துவிட்டு நாங்களும் தமிழர்கள், இரக்கமுள்ளவர்கள், மனிதர்கள், அறிஞர்கள், பெண்ணியவாதிகள் என சுய பிம்பத்தை அல்லது கற்பனையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கும், உங்களை மதிப்பவர்களுக்கும் பெரும் ஏமாற்றங்கள் காத்திருக்கின்றன. வாழ்க்கை என்பது வாழ்வது. வாழ்வதாகக் காட்டிக் கொள்வது இல்லை நண்பர்களே...

பேரறிஞர்கள்
பேரறிவு என்பது பல்லோரும் நினைப்பது போல புத்தகங்களை வசிப்பது அல்ல. அது அறிவை உயர்த்தும் ஒரு வழி, அவ்வளவுதான். வாழ்க்கை என்கிற பெரிய புத்தகத்தை வாசிக்கத் தெரியாதவன் வேறு எந்தப் புத்தகத்தை வாசித்தும் பயனில்லை. புத்தகம் வாசிப்பது என்பது உங்களது அறிவைப் பேருக்கும் என்பது உண்மைதான். ஆனால், உங்களது சொந்தமாக சிந்திக்கும் சக்தியே உங்களை பேரறிவாளனாக்கும். உதாரணமாக, தமிழ் எழுத்தாளர்களில், சுஜாதாவும், மதனும் நூற்றுக் கணக்கான புத்தகங்களை வாசித்தவர்கள். எந்தத் துறையையும் விட்டு வைக்காது வாசித்தவர்கள். ஆனால் சிந்தனை? பெண்களையும், தலித்துக்களையும், இலங்கைப் போராட்டத்தையும், பாமரர்களையும் மதிக்காத, அய்யங்காராக பிறந்தார் சுஜாதா, அப்படியே செத்தும் போனார். மதனோ, பேய்களையும், பிசாசுகளையும் ஜெயலலிதாவையும் கண்டு பயப்படுபவராகவே இருக்கிறார் இன்றுவரை. பின்னர் இவர்கள் படித்த புத்தகங்களால் என்ன பயன்? (இதனை வாசித்து சுஜாதா ரசிகர்களுக்கு கோபம் கொந்தளிப்பது இயற்கை. அவ்வாறாக கோபம் கொந்தளித்தாலே சுஜாதா தோற்கிறார்.)

புத்தகம் வாசிப்பதே இந்த நிலைமை என்றால் இப்போது எங்களது இளைய.... யூத்து என்ன செய்கிறது? என்ன விஷயத்தை பற்றி கதைக்க வேண்டுமென்றாலும் உடனே விக்கிபீடியாவை வாசிக்கிறது, பிறகு பிரசங்கம் செய்கிறது. முதல் சறுக்கல், விக்கியில் உள்ளது எல்லாமே உண்மை என்று இல்லை. அப்படியே இருந்தாலும், விக்கியால் கிடைக்கும் அறிவு என்பது பாஸ்ட் புட் போடறது. அது தகவலை மட்டுமே தரும். அறிவை இல்லை. எல்லோருக்குமே வாசிப்புப் பழக்கம் இருக்கும் என்றில்லை, எல்லோராலும் சிந்திக்க முடியும் என்று இல்லை.. ஆனால் எதற்கு இந்த போலி அறிஞர் வேஷம்? நீங்கள் கணனியில் பேஸ்புக்கில் உங்கள் அறிவை காட்டும்போது விக்கியின் உதவியோடு எத்தனை பெரிய அறிஞனாகவும் உங்களை காட்டிக் கொள்ளலாம், ஆனால் நேரே சந்திக்கும்போது உங்கள் சாயம் வெளுத்து விடுமே? பப்பி ஷேமல்லவா அது?

சிலவேளைகளில், நீங்கள் உங்களை அறிஞன் எனக் காட்டிக் கொள்வதற்கு இடும் பதிவுகளே உங்களை முட்டாளாக காட்டிவிடும் ஆபத்து உள்ளது. அண்மையில் ஓரினச் சேர்க்கை சம்பந்தமாக கொழும்பில் நடந்த கொலை சம்பந்தமாக ஒருவர்  இட்ட பதிவுக்கு, கீழே பல பேரறிஞர்கள் கொமேண்டுகளை இட்டார்கள். ஓரினச் சேர்க்கையை ஆதரிப்பதுவும், ஆதரிக்காததும் அவரவர் விருப்பம். ஆனால் அதை ஆதரித்துப் பேசியவர்கள் எல்லோருமே கதையோடு கதையாக ‘அதுக்காக என்னையும் அந்த மாதிரி ஆள் என்று நினைக்க வேண்டாம் எனத் தெரிவித்தார்கள். என்ன கருத்து? நீங்கள் அதை ஆதரித்தால், பிறகு உங்களை கே என்று நினைப்பது உங்களுக்கு ஏன் அவமானமாக இருக்கிறது? ஆதரிப்பது என்பது அறிஞனாக காட்டிக்கொள்வது. கே என்று நினைக்கப் படுவதைப் பற்றி வெட்கப்படாதது பேரறிவு.

இந்த ஒரு ஸ்டேட்டஸ் போட்டு, அதற்கு கீழே கொமேண்டுகளில் கருத்து யுத்தம் செய்யும் உத்தியை யார்தான் கண்டு பிடித்திருக்க முடியும் என்று ஒரு கருத்து யுத்தம் யாராவது வையுங்களேன்...? ஆயிரம், இரண்டாயிரம் கொமேண்டுகளில் என்னய்யா நடக்கிறது? நான் வாசித்த இவை எவற்றிலுமே சரியான புரிதலுடன் யுத்தம் நடக்காது. ஒவ்வொருவரும் தன் தன் பக்கத்துக்கு கத்துவதுவும், மற்றவரை தனிப்பட்ட முறையில் தாக்குவதுவும் தான்.

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து பேரறிஞர்களாக உங்களை காட்டிக் கொள்ள முயலாதீர்கள். நேரடிச் சந்திப்பில் சாயம் வெளுப்பதை விட ஆபத்து என்ன தெரியுமா? திருமணத்தின்போது சீதனம் வாங்க முடியாது. அப்புறம் உங்கள் இஷ்டம்.
லைக் ஆசையில் எதையெல்லாம் ஷெயார் செய்கிறார்கள், பாருங்கள்...

இன்னும் எத்தனையோ கூத்துக்கள் உள்ளன. அம்மாவை அன்புவது, பெண்கள் கற்பழிக்கப்படும் செய்திகளின்போது கொந்தளிப்பது (எதோ உலகத்தின் அனைத்து பெண்களையும் சகோதரியாக பார்க்கும் ஆண் போல..), ஏழை மக்களுக்காக அழுவது... எத்தனையோ கூத்துக்கள் செய்து, நட்பை வளர்க்கவும், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை போக்கவும், உண்மையான அக்கறையுடன் முடிந்தால் சில புரட்சிகள் செய்யவும் என உள்ள சமூக வலைத்தளங்களை தங்களது போலி விளம்பரத்துக்கு பயன்படுத்தி சகிக்காத அளவுக்கு பண்ணி வைத்துள்ளார்கள்...அதையெல்லாம்... முக்கியமாக தமிழ் பெருமை பதிவர்கள் மொக்கைத்தனமாக போட்ட தமிழ்ப் பிழைகள் நிறைந்த பதிவுகள்... எல்லாம் பார்ப்போம், அடுத்த பதிவிலே.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}