மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் – அம்பலம் – சுஜாதா?
இன்னும் நாற்பது கடக்காத, வாசிப்புப் பழக்கம் உள்ள தமிழர்களுள் சுஜாதாவின் படைப்புக்களை வாசித்தறியாதவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே. தான் உச்சத்தில் இருந்த முப்பது வருட காலத்தின் அத்தனை இளம் எழுத்தாளர்களையும், வாசகர்களையும் வியந்து பார்க்கவைத்த எழுத்தாளர் சுஜாதா. அவர் இறந்து இத்தனை நாட்களின் பின்னரும் அவருக்கான வீச்சு குறையாதிருப்பது தமிழ் எழுத்துலகில் அதிசயமே. ஏனெனில், பல எழுத்தாளர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்களை மறந்துவிடுவதுதான் தமிழர்களின் ஸ்டைல். உதாரணமாக, ஜெயகாந்தன் என்கிற தமிழ் இலக்கிய உலகின்... இலக்கிய உலகின் உச்சங்களில் ஒருவர் இருக்கிறாரா, இல்லையா என்பது பலருக்கு தெரியாது, அவர்களுக்கு தேவைப்படவும் இல்லை. ஆனால் சுஜாதா? இறந்த பிறகும் இரண்டு திரைப்படங்களுக்கு வசனம் எழுதுகிறார்.

மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கை வாசிக்கலாம் என்று வந்தால் இது என்னப்பா ஆவணப்படம் மாதிரி போகிறது என்று முணுமுணுப்பது கேட்கிறது. சுஜாதா என்கிற பௌதீக மனிதரைப்பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும், அல்லது எங்கே தெரிந்துகொள்ளலாம் என்பதாவது தெரிந்திருக்கும். இந்தப் பதிவு அவர் சம்பந்தப்பட்ட இருவேறு பார்வைகள் பற்றியது. என்னதான் இருந்தாலும் அந்த ஜோக்கை சொல்லாமல் சமாளிக்க முடியாது என்பதால், அது கடைசியில்.
உண்மையில் சுஜாதா என்கிற மனிதரின்- எழுத்தாளரின் பிரபலம், அவரைப்பற்றிய அடுத்த பக்கத்தை புரட்டிப் பார்க்க விடுவதில்லை. இளைய தலைமுறையின் வாசிப்புப் பழக்கமுள்ள அனைவருமே – நான் உட்பட – சுஜாதா ரசிகனாக இருந்த, அல்லது இருக்கும் காலம் ஒன்று இருக்கிறது. திரைத்துறையில் ரஜினிகாந்தை எப்படி மறை விமர்சனம் செய்யக் கூடாது என்கிற சட்டம் உள்ளதோ, அதுபோல சுஜாதாவை விமர்சிக்கக் கூடாது என்கிற எழுதப்படாத சட்டமும் உள்ளது. அது ஓரளவுக்கு உண்மைதான். சுஜாதா அளவுக்கு தமிழ் எழுத்துலகில் பிரபலமோ, சுஜாதாவை ஒத்த வாசிப்பு வீச்சோ இல்லாத நமக்கு அவரை விமர்சிக்க என்ன தகுதி இருந்துவிடப் போகிறது? (இறந்துபோனவரை விமர்சனம் செய்யக் கூடாது என்று யாரும் பாட்டுப் பாட வேண்டாம். ஒரு படைப்பாளியின் படைப்புக்கள் உள்ளவரை விமர்சனங்களும் இருக்கும். அல்லது விஸ்வரூப பாணியில் சொல்லப்போனால், “செத்துட்டா? எல்லா பாவங்களையும் மன்னிச்சுடலாமா? )

சுஜாதாவை நான் வாசித்த காலத்தில் அந்த எழுத்தின் வசீகரத்துக்கு அடிமையாக இருந்தேன். எளிமையான, நகைச்சுவையான, அதேவேளை அடர்த்தியான நடை அவருடையது. சாதாராண நாவல்களில் உலக இலக்கியங்களை, மாற்றுக் கொள்கைகளை உறுத்தாமல், அதேவேளை அலுக்காமல் சொல்லிச் செல்லும் அவரது திறமை லாவகமானது. அவரது சிந்தனை வீச்சும் அதி அற்புதமானது. சொளிப்சிசம், ஹோலோகிராம் போன்ற சிந்தனாவாத எண்ணக்கருக்களை புரிந்துகொண்டதோடு மட்டுமல்லாது தனது படைப்புக்களிலும் பயன்படுத்தியவர்.

இன்னும் எத்தனையோ உயர்ந்த மதிப்பீடுகளை எல்லாம் நான் வைத்திருந்த காலம் ஒன்று இருந்தது. இப்போது சுஜாதாவுக்கும், ரமணி சந்திரனுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை என்பதுதான் உண்மை.

நீ யாரடா சுஜாதாவை பற்றி கதைக்க? ப்ளொக்கரில் நாலு போஸ்ட் எழுதிய நீ சுஜாதாவை விமர்சிப்பதா? என்ன ***? என்று கொந்தளிக்கும் ரசிகர்கள் சுஜாதாவுக்கு இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். அவர்கள் எல்லாம் ஆரம்ப கட்ட ரசிகர்கள். கணேஷ், வசந்த் சுவாரசியத்துக்காக நாவல் வாசிப்பவர்கள். மணிரத்னத்தை பிடிக்கும் என்று சொன்னால் உயர்ந்த சினிமா ரசிகன் என்ற அங்கீகாரம் கிடைக்கும் என்கிற மாயை போல, சுஜாதா ரசிகன் என்பது இங்கே ஒரு அடையாள அட்டை மாதிரி இருக்கிறது. அத்துடன் சுஜாதா தங்களுக்கு பெண் தந்தவர் மாதிரி அவரைப்பற்றி தப்பாக பேசினால் அதற்கு கொந்தளிப்பு வேறு. ஒரு படைப்பாளன் என்பவன் விமர்சகர்கள் பந்தாடவே ஒரு படைப்பை படைக்கிறான். ஒவ்வொரு வாசகனும் விமர்சகனே. இது சுஜாதாவே ஒத்துக்கொண்ட உண்மை. (ஏற்றுக்கொண்ட உண்மை அல்ல.) ஒரு படைப்பாளியை விமர்சிக்க அவரை விட உயர்ந்த படைப்பாளியாக இருக்கவேண்டும் என்பதில்லை. அவரது வாசகனாக இருந்தால் போதும். எனவே, சுஜாதாவை விமர்சிப்பதற்கு ஒரு தேர்ந்த வாசகன் என்கிற எனது தகுதி போதுமானது. உலகத்தர இலக்கியக்காரனாகவோ, உச்சப்புகழ் பிரபலமாகவோ இருக்கத் தேவையில்லை. இவ்வளவு ஏன், அந்த சுஜாதாவே லா.ச.ர, டோல்ஸ்டோய் என்று தனது தகுதிக்கு உயர்ந்தவர்களை எல்லாம் அர்ச்சித்தவர்தான்.

எதற்கும் முதலில் சுஜாதாவின்  இனியவை நாற்பதை பார்ப்போம். வாசகர்கள் கடுப்பாகி விடக்கூடாதல்லவா?

சுஜாதாவின் மகத்தான சாதனை தமிழ் எழுத்து நடையையும், பொருளையும் உலகத்தின் போக்குக்கு வார்த்தது. சுஜாதாவை பின்தொடர்ந்த தலைமுறை வணிக நோக்கு எழுத்தாளர்கள் அனைவரதும் நடையும் பாடுபொருளும் உலகத்தின் பேரிலக்கியப் பண்பாட்டோடு ஒட்ட முயற்சிப்பதற்கான வித்தை இட்டதுதான் சுஜாதாவின் முக்கியமான இலக்கியப் பணி. சுஜாதாவுக்கு முந்திய பெரும் எழுத்தாளர்களின் நடையும் உள்ளடக்கமும் ஒருவிதமான மணிப்பிரவாள நடையாக, பிராமண அசையுடன், சிலபல சங்கடமான சொற்கள் தூவப்பட்டதாக மோடித்தனமாக இருந்துவந்தது. கதைப்பொருட்களும் நடுத்தர பிராமண பாணி சார்ந்ததாகவே பெரும்பாலும் இருந்தது. அடுத்த நாளுக்கு உத்தரவாதமில்லாத மனிதர்களின் ஒரு நாள் கழிவதே பெரும்பாலான கதைகளின் உட்பொருள்.

சுஜாதாதான் எழுத்துலகின் பல சாத்தியங்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். அதற்கு அவரது உலகளாவிய வணிக இலக்கிய வாசிப்புப் பரிச்சயமே காரணம். அவர் படித்த ஏராளமான புத்தகங்களிலிருந்து பெற்றுக்கொண்ட பல நடைகளையும், உத்திகளையும், பொருள்களையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். தனக்கேயுரித்தான ஒரு நடையை உருவாக்கி, அதற்கு தனது வாசகர் வட்டத்தை பழக்கியது மட்டுமல்லாது, அடுத்துவரும் அனைத்து முயர்சியாளர்களுக்கும் அதை விதியாக மாற்றியவர். தமிழின் நெகிழ்ச்சித் தன்மையை சாதகமாகக் கொண்டு, புதிய வார்த்தை அமைப்புக்களை உருவாக்கினார். இலக்கணத்தை விட, ஒரு சிறுகதைக்கு எளிமையே முக்கியமானது. கச்சிதமாக இருப்பதே உரைநடை இலக்கியத்தின் அடிப்படைத் தேவை என்கிற கவித்துவ அனுமதியை சாதகமாக்கி தமிழையே புதிதாக மாற்றியவர்.

அடுத்தது, உலக இலக்கியத்தின் புதிய புதிய வடிவங்களை அறிமுகப்படுத்தியதும், முயன்றதும் இவர்தான். விஞ்ஞானச் சிறுகதைகள் என்கிற பெயரிலும், அது அல்லாமலும் இவர் எழுதிய (அல்லது எழுதியதாக சொன்ன) சிறுகதைகள் தமிழுக்கு ஒரு புதிய இலக்கிய வடிவத்தை கொண்டுவந்தது. இப்போது அறிவியல் புனைகதை என்பதன் சுருக்கமாக அறிபுனை என்கிற பெயரில் நாடோறும் ஆயிரக்கணக்கான கதைகள் எழுதப்படுவதற்கு ஆரம்பம் சுஜாதாதான்.

அறிபுனை மட்டுமல்லாது, ஒரு வார்த்தை கதை, கவிதை கதை, சிறுகவிதை என்று பல வடிவங்களை தமிழில் முயன்றார். உலக இலக்கிய வடிவங்கள் மட்டுமல்லாது, தமிழின் பழைய இலக்கிய வடிவங்களையும் மீள உயிர்ப்பிக்க முயன்றார். ஆனால் உரைநடை இலக்கியத்தில் புரட்சிகள் செய்த அளவுக்கு இவரால் செய்யுள் உலகில் பிரகாசிக்க முடியவில்லை.

அடுத்தது சாதனை அல்ல, சாதிப்பு. தமிழ் இலக்கிய உலகத்தில்  சுஜாதாவுக்கு மட்டுமே உள்ள இடம். இவரைப்போல இன்னொருவர் இல்லாத இடம். தமிழ் எழுத்துலகின் பிரபலம். ஒரு திரைப்பட நட்சத்திரத்துக்கு இணையான புகழும், பிரபலமும், செல்வாக்கும் உள்ள ஒரே எழுத்தாளர் இவர்தான். முன்னமே சொன்னதுபோல, ஜெயகாந்தன் வாசகன் என்றோ, சுந்தர ராமசாமி வாசகன் என்றோ, ஏன், பிரான்ஸ் காஃப்க வாசகன் என்றோ சொல்லுவதிலும் சுஜாதா வாசகன் என்று சொல்லுவது ஒரு தேர்ச்சி பெற்ற வாசகனாக காட்டிக்கொள்ளுவதற்கான அடையாளமாக இன்றளவும் இருந்துவருகிறது.

சுஜாதாவின் சில்லறை இனியவை நிறைய. தமிழ் எழுத்தாளர்களில் கணணி, விமான தொழில்நுட்பம் பற்றி கற்றவர் என்பதால் இவரது எழுத்துக்களில் அதன் தேர்ச்சி தெரியும். பல விடயங்களை தமிழில் எளிமையாக அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். உலகத்தின் ஓட்டத்தோடு தமிழர்கள் ஓடுவதற்கான அறிவை அறிமுகப்படுத்திய, பழைய பாட்டுக்களை கட்டிப் பிடித்துக் கொண்டிருந்த தமிழர்களை அடுத்த கலாசாரத்துக்கு நெறிப்படுத்திய முக்கியமானவர்களில் இவரும் ஒருவர்.

இன்னா நாற்பது? சுஜாதாவின் இன்னா தான் நாற்பது என்ன, நானூறே சொல்லலாம். அவரே சொல்லுவதுபோல் சொன்னால், பிரபலமாக இருப்பதன் பக்க விளைவு இதுதான். இனியவை நாற்பது கிடைத்தால் ஒரு விமர்சிப்பவருக்கு இன்னாதவை நானூறு கிடைக்கும்.

சுஜாதாவின் இன்னாதவற்றை முறைப்படி ஒழுங்குபடுத்த முதல் அவரது முக்கியமான இன்னாதது இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அவரது நிலைப்பாடு. காலத்துக்குக் காலம் மாறுபட்ட பல நிலைப்பாடுகளை எடுத்தாலும், அவரது பொதுவான கருத்து, இலங்கை மக்களின் போராட்டம், ஒரு முட்டாள்தனமான தீவிரவாதம். அவரது கொலை அரங்கம் நாவல் அந்த அடிப்படையில் எழுதப்பட்டதுதான்.

சுஜாதா மீதான என் மட்டத்தில்  முக்கியமான பிரச்சனை அவரது கொள்கை அளவிலான வக்கிரம்தான். அவரது அனைத்து படைப்புக்களிலும் சில அம்சங்களை மாறாமல் காணலாம். அவற்றில் முதன்மையானது பெண்கள் மேல் அவர் கொண்டுள்ள மட்டமான பார்வை. பெண்களை காமத்துக்கான வடிகாலாக மட்டுமே அவர் பார்த்திருப்பது எல்லா புனைகதைகளிலும் தெரியும். பெரும்பாலான கதைகளில் அறிமுகம் இல்லாத ஆண் மார்பில் கை வைத்தாலும் விபரீதம் புரியாத அப்பாவியாக, காசுக்காக என்னவும் செய்யும் சுயநலமியாக, காதலுடன் திருமணத்துக்கு முன் கூடும் காமியாக ஒரு பெண் இருப்பாள். மேலும், எந்தப் பெண்ணினதும் பெற்றோரோ, மாமனோ, ஏன், வீதியில் போபவனோ அவளது அந்தரங்கத்தை பற்றி அப்பட்டமாக பேச, அவளும் அதற்கு சாதரணமாக பதில் சொல்லுவதான காட்சிகள் இருந்தே தீரும். சிறுமிகளின் மார்பு, குளிக்கும் இளம்பெண்கள் இப்படி தனது சுய காம ஆசைகளை தனது கதை மாந்தர்களூடாக அவர் ரசித்தார் என்பதே உண்மை. அதேபோல, பெண்கள் சூழ்நிலை விபரீதம் புரிந்துகொள்ளக்கூடியளவு பக்குவம் இல்லாதவர்களாகவும், சுயமாக முடிவு எடுக்கும் அளவுக்கு சுயம் இல்லாதவர்களாகவும், ஆண்களது இழுப்புக்கெல்லாம் போவதாகவும் அவரது புனைகதைகளில் வரும். இதெல்லாம் அவரது பெரும்பாலான கதைகளில் வருவதல்ல, எல்லாக் கதைகளிலும்வருவது. இதிலும் கொடுமை என்ன என்றால், சஞ்சிகைகளில் சினிமா தொப்புள் பக்கங்களை வாசிப்பவர்கள் முட்டாள்கள் என்றும், தனது பக்கங்களை வாசிப்பவர்கள் புத்திசாலிகள் என்றும் பொருள்பட பல இடங்களில் எழுதியுள்ளார். உண்மையில் இவரே ஒரு மஜா சுஜாதாதான். தேங்காய், கொடியேற்றுவது போன்று பல மறைமுக வார்த்தைகளையும், சில வார்த்தைகளை நேரடியாகவும் இவர் பயன்படுத்தத் தயங்குவதில்லை. மெக்சிக்கோ சலவைகாரி ஜோக் போன்ற அப்பட்ட அசிங்கங்களை வைத்து கதைகளை நகர்த்தியது மட்டுமல்லாது, அந்த ஜோக்கை ரசிக்கும் அளவுக்கு தமிழ் வாசகர்களுக்கு ரசனை வளரவில்லை என்று சரடு விட்டவர். அந்த ஜோக்கை படித்த பிறகு சொல்லுங்கள், அது கேவலமா, ரசனையா என்று.  ஒட்டுமொத்தமாக பார்த்தால், எந்தக் கதையிலுமே இவர் பெண்ணை மரியாதையாக காட்டி இருக்கமாட்டார்.

அடுத்தது இவரது குழப்பம். இவரே வெறுப்பதாக சொல்லும் விஷயத்தை இவரே செய்வார். முக்கியமாக, இவரது படைப்புக்களை யாராவது குறை சொன்னால் இவருக்கு பிடிக்காது. அவர்களை கழுவி கழுவி ஊற்றுவார். குத்தல் கதைகள் கதைப்பார். ஆனால், இவர் அறிமுகம் செய்யும், சர்வதேசப் பிரபலமோ, உள்ளூர் அரிவரியோ, ஏதாவது குறையை அவர்களது படைப்பிலே காட்டாமல் விடமாட்டார். இவர் எந்த விடயத்திலாவது குறை சொல்லாமால் விட்டவர்கள் யாருமில்லை. (இப்போது நீ சுஜாதாவை குறை சொல்லுகிறாயே, அதுபோலத்தானே? என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. அதுபோலவேதான்.) இதிலே லோதக்காசி என்னவென்றால், இவர் ஆரம்ப காலத்தில் குறை கூறிய ஆனந்த விகடன், கமல், மணி ரத்னம், ஷங்கர் போன்றவர்களே, பிற்காலத்தில் இவர் உலகப் பிரபலம் ஆகக் காரணம். சிறிய பதிப்பாளர்களை மதிப்பதில்லை, (பாக்கெட் நாவல் அசோகனை, சென்னையிலிருந்து பெங்களூர் வரை அலைக்கழித்து, பின்னர் மறுதலித்தவர். இதை அசோகனே சொல்லி அழுதிருக்கிறார்.) அன்பளிப்பவர்களை நக்கல் அடிப்பார் அப்படி இப்படி என்று சுஜாதா என்கிற தனி மனிதன்மேல் ஆயிரம் குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், எமக்குத் தேவை சுஜாதா என்கிற எழுத்தாளரின் குறைகள்.

இவரது ஏறத்தாழ எல்லா நாவல்களும் சராசரி மாதநாவல் வகை என்பதை உணர்ந்திருக்கலாம். (ஆனால் இவரே மாத நாவல்களை நக்கல் அடிப்பார்.) அதுவும் கணேஷ் வசந்த் வரும் நாவல்கள்.. அவை தமிழின் ஏனைய எந்த நாவல்களை விடவும் அதி சுவாரசியமானவை என்கிறபோதும், ஒரேமாதிரியானவை. ஒரு நடுத்தர வயது ஓய்வூதியர், அவருக்கு ஒரு அழகிய மகள், அவள் வசந்துடன் கட்டிப்பிடிக்குமளவு பரோபகாரமாயிருப்பாள், ஆனால் அப்பாவி. எந்தப் பெண்ணுக்கும் சித்தப்பாவோ, வளர்ப்புத் தந்தையோ இருந்தால், அவர் அவளுடன் மார்பை தடவும் அளவுக்கு பழகுவார். கதை எவ்வளவு எதார்த்தமாக நடந்தாலும், கிளைமாக்சில் அது சர்வதேச ஆயுத ஊழலுடன் சம்பந்தப்படும். கதையில் நடுப்பாகத்தின் இறுதியில் யாராவது ஒருவர் இதெல்லாம் மாயையா என்கிற ரீதியில் சொளிப்சிச தத்துவார்த்த ரீதியில் குழம்புவார். எல்லாவற்றிலும் கெட்டவர்களுக்கு நன்மை, அப்பாவிகளுக்கு நீதி கிடைக்காது என்கிற சுஜாதா என்கிற தனிமனிதரின் நிஜ வாழ்க்கை இயலாமை தென்படும். இப்படி ஆயிரம் ஒற்றுமைகளை நீங்கள் காணலாம். சுஜாதா வெளிநாட்டு கதைகளை திருடினார் என்பது பொதுவானகுற்றச்சாட்டு. கமல், சுஜாதா என்ற அந்தக்கால நவீன படைப்பாளிகள் அனைவரதும் தோல்வி இதுதான். வாசகர்களுக்கு உலகப் படைப்பின் பரிச்சயம் இல்லாத காலத்திலே தங்கள் படைப்புக்களாக சுட்டு சுட்டு பரிமாறினார்கள். இப்போது குட்டு வெளிப்படுகிறது.

சுஜாதாவின் கதை, கட்டுரைகளில் அவரது ஜாதிய வக்கிரம் தென்பட்டிருக்கலாம். ஐயங்கார்கள் எல்லோரும் புத்திசாலிகள், வன்முறை அறியாத அப்பாவிகள், தர்மவான்கள் என்பதாக அள்ளி விடுவார். அத்துடன் அந்தக் காலத்தில் பரபரப்பாக இருந்த திராவிடக் கட்சிகளின் போராட்டங்களை நையாண்டுவதையும் தனது கடமையாக கருதினார். //ஐயங்கார்களில் வலங்கலை, இடங்கலை என்று இரண்டு பிரிவு உள்ளது. திராவிடக் கட்சிகளில் சேர்ந்த எச்சக்கலை என்பது மூன்றாவது பிரிவாக....//


கேள்வி பதிலில் தனது மேதாவித்தனத்தை காட்டுவதற்கு வலிந்து திணிப்பார், தமிழை கொச்சைத்தனமாக பயன்படுத்துவார், ஹைக்கு கவிதை வடிவத்தை தானே சரியாகப் புரிந்து கொள்ளாமல், எழுதும் அனைவரையுமே விமர்சிப்பார்... இப்படி சுஜாதாவில் சொல்லுவதற்கு ஆயிரம் குற்றச்சாட்டுக்கள். ஆனால் எத்தனை சொன்னாலும் அழியாத புகழ் அவருடையது. இது கட்டுரையை யாருக்கும் பாதகமில்லாமல் முடிக்கும் உத்தி என்று புன்னகைக்க வேண்டாம். நான் எப்போதுமே சுஜாதா ஒரு ஜனரஞ்சக போலி எழுத்தாளர் என்கிற எனது நிலைப்பாட்டை மாற்றுவதற்கில்லை. ஆனால் எழுத்து உத்தி என்கிற அரிய திறமை அற்புதமாக வாய்த்த ஒரு தமிழ் எழுத்தாளர் அவர்தான். அவரது ரசிகன் என்கிற நிலை கடந்த பின்னரும், ஒரு கதையை தொடங்கினால் முடிக்காமல் வைக்க முடியாதளவுக்கு என்போன்றோரை இன்றளவும் கட்டி வைத்திருப்பதுதான் சுஜாதா. இன்று அவரது நினைவு நாள். என்று அவரை நினையாத நாள்?

(ஜோக் எங்கே என்றா கேட்கிறீர்கள்? உஷார் இல்லாத ஆளையா நீங்கள்...)


neethujan bala
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}