முஸ்லிமை கொல்லும் முஸ்லிம்? ~ விஸ்வரூபம் விமர்சனம்.

// இந்த லிங்கில் படத்தின் தடை சம்பந்தப்பட்ட பழைய பதிவு உள்ளது. பார்க்கத் தேவையில்லை. ஆனால் பதிவுக்கு கீழே உள்ள கொமெண்டுகள்... அப்பப்பா... அப்படியே ஆன்மீக அடக்கத்தின் ஆதாரம். //


# # # 

முதலில் ஒரு அண்டாவை எடுத்துக் கொள்ளவும். துப்பாக்கி அரை கிலோவும், போக்கிரி முக்கால் கிலோவும் நன்றாக வாணலியில் விட்டுக் கலக்கவும். அத்துடன் வேட்டையாடு விளையாடு டச்சை கொடுத்து, அண்டாவில் இட்டு சூடாக்கி இறக்கும்போது தசாவதாரம் காட்சிகள் சிலவற்றை லேசாக தூவி விடவும்.
இதோ... சுடச் சுட விஸ்வரூபம் ரெடி!

(இதற்காக எதோ விஜயின் படங்களை கமல் கொப்பி அடிக்கத் தொடங்கிவிட்டார் என எண்ணற்க. அது மகாபாவம். மேற்கூறிய படங்களை ஒத்த பல படங்கள் உலகளாவிய ரீதியில் வெளிவந்துள. உலகளாவிய மசாலா கூட்டுத்தான் அது. சாம்பாரை செய்தது கமல் என்பதால் காரம் அதிகம்.) ஆக்ஷன் கதைகளை சில வகைகளில் அடக்கலாம். வெடிகுண்டு ஒன்றை வெடிப்பிலிருந்து தடுப்பது, வில்லன்களின் கோட்டைக்குள் வில்லனாக நடித்து புகுந்து வேட்டையாடுவது, நாட்டுக்கு நாடு துரத்தல். இப்படி. இது கமல் என்கிற மகா கலைஞனின் படைப்பு என்பதால் சகலமும் கலந்து வந்திருக்கிறது. சென்னையை காப்பாற்ற விஜயும், தமிழ்நாட்டை காப்பாற்ற அர்ஜுனும், இந்தியாவை காப்பாற்ற விஜயகாந்தும் போல இனி உலகத்தை காப்பாற்ற உலக நாயகன் கமல் என்று சொல்லலாம்.

படத்தின் தொடக்கத்தில் கதக் கலைஞராக அமேரிக்காவில் வாழும் இந்தியர் விஸ்வநாத்தாக கமல் வருகிறார். அவருக்கு மனைவியாக பூஜா குமார், மாணவியாக அண்ட்ரியா. தனது நிறுவன இயக்குனருடன் காதலில் விழும் பூஜா குமார், தான் செய்யும் தவற்றை நியாயப்படுத்த, கமல் ஏதாவது காதல் துரோகம் செய்கிறாரா என ஆராய மன்மதன் அம்பு பாணியில்  ஒரு டிடெக்டிவை நியமிக்க, கிணறு வெட்ட பூதம் கிளம்புகிறது. கமல் ஒரு முஸ்லிம்!

இதற்கடுத்து பலசில காட்சிகளில் சில தீவிரவாதிகள் பிடியில் கமல் பூஜா அகப்பட, அங்கே கமலின் சுயரூபம் வெளிப்படத் தொடங்குகிறது. இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதியாக, ஜிகாத் போராளியாக, ஆப்கானிஸ்தானில் பெரும் தலைகளுடன் தொடர்புள்ள தீவிரவாதியாக, பின்னர் அமெரிக்காவில் கதக் கலைஞராக மாறி மாறி ரூபம் எடுக்கும் கமலின் விஸ்வரூபம் கடைசியில் வெளிப்படுகிறது. அது விஸ்வரூபமா இல்லையா என்பதை திரையில் காணலாம்.

கமல் அடிப்படையில் நாத்திகனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். எல்லா நாத்திகர்களுக்குமே பொதுவான விஷயம் இருக்கிறது. மதங்களை பின்பற்றுபவர்களை அவர்களுக்கு பிடிக்கும். ஆனால் அடுத்த மனிதனை விட மதத்தை முக்கியம் என்று நினைக்கும் மனிதர்களை அவர்கள் கேவலமாகப் பார்ப்பார்கள். அப்படி கமல் முஸ்லிம்களையும் பிராமணர்களையும் கருதுவது அவரது எல்லாப் படங்களிலும் தெரியும். இந்தப் படத்தில் பின்னாலே யாரை கலாய்க்கிராரோ இல்லையோ, தொடக்கத்தில் தனது சுய இனமான பிராமணர்களை – பாப்பாத்திகளை நன்றாக வாருகிறார். சராசரிக்கும் கீழான எண்ணங்கள் கொண்டவராக, ஆண்களை, அவர்களின் ஆண் தன்மைக்காக விரும்புபவராக, கணவருக்கு துரோகம் செய்பவராக காட்டுகிறார் கமல். அமெரிக்காவில் படிப்பைத் தொடர தேவை என்பதால் கமலை திருமணம் செய்கிறார் பூஜா. ஆனால் சுகத்துக்கு அவரிலும் ‘உயர்வான வேறு ஆள் தேவைப்படுகிறது.  பிராமணர்கள் அனைவருமே மட்டமான எண்ணங்கள் கொண்டவர்கள், புத்தி குறைந்தவர்கள், சுயநலவாதிகள் என்பது கமலின் எல்லாப் படங்களிலும் வருவது. அது ஆயிரம்தான் உண்மையாக இருந்தாலும் நீ எப்படி சொல்லலாம்? என்று எந்தப் பிராமணரும் இதுவரை கமல் படங்களை தடை செய்யச் சொல்லி போராட்டம் செய்யவில்லை. “இந்தா பாப்பாத்தி, சிக்கன நீ டேஸ்ட் பார்த்து சொல்லு.. என்று ஒரு காட்சி வருகிறது. ஆசாரம் ஆசாரம் என்று பறக்கும் பிராமணர்கள் வெளிநாடுகளில் என்ன கிழிக்கிறார்கள் என்பதை காட்டுவது அது. முஸ்லிம்களை விட எல்லாப் படங்களிலும் கமல் இந்துக்களைத்தான் கலாய்ப்பார்.. அது பன்னிகளுக்கு புரிவதில்லை. "நாலு கை கடவுள் என்றால் எப்படி சிலுவையில் அறைவீர்கள்?" "ம்ம்... சிலுவைல அறையமாட்டோம், கடல்ல போட்டுடுவோம்."


கமல் தீவிரவாதியாக ஆப்கானிஸ்தானில் இருக்கும் காட்சிகளில் சில இடங்களில் அளவுக்கு அதிகமாகவும் சில இடங்களில் அளவுக்கு குறைவாகவும் இருக்கிறது. ஆனால் அந்த ஆப்கானிஸ்தான் காட்சிகள் அப்படியே அங்கேயே எடுக்கப்பட்டதுபோல இருக்கிறது. கலை இயக்கம், ஒளிப்பதிவு இவை இரண்டுக்கும் மேலாக கமல் என்கிற திறமையான ஒரு இயக்குனர் அங்கெ தெரிகிறார். (கலை : லால்குடி ந இளையராஜா. ஆனால் விஷயம் புரொடக்ஷன் டிசைனர் புண்டவீ டோர் தவீபசாஸ் என்கிற வியட்னாமியரின் கைவண்ணத்தில் இருக்கிறது.) தீவிரவாதிகள் சின்ன வயதிலிருந்து எவ்வாறு உருவாக்கப்படுகிறார்கள் என்பதை காட்டுகிறார். சிறுவன் கையில் துப்பாக்கியோடு பிணமாக கிடப்பது, மருத்துவராக விரும்பும் சிறுவனே, விளையாடும்போது துப்பாக்கி சுடுவதுபோல் விளையாடுவது,இப்படி. ஓமரின் மகன் ஓமரால் தீவிரவாதியாக எப்படி வார்க்கப்படுகிறான் என்பதுவும், அது ஓமரின் தாயின் விருப்பம் இல்லாமலேயே நடப்பதுவும் காட்டப்படுகிறது. ஒருமுறை இவர்களின் இடம் அமெரிக்க வீரர்களால் தாக்கப்பட்டபின்பு ஒரு முஸ்லிம் கிழவி சொல்லுவதாக ஒரு வசனம் வருகிறது. காட்சியோடு காட்சியாக போய்விடும் அந்த வசனம் ஆணாதிக்க சமுதாயத்துக்கு கமல் செய்யும் நுனி வெட்டு. “எல்லாம் உங்களால்தானடா முன்னாள் வால் முளைத்த குரங்குகளே!”

உண்மையில் உலகத்தில் நடக்கும் பேர்கள் பெரும்பாலானவை ஆண்களுக்கிடையே நடக்கும் போர்களே. ஆனால் பாதிக்கப்படுவது எல்லோரும்தான். முக்கியமாக இந்த அல் கைதா அமேரிக்கா போரிலே ஆப்கானிஸ்தான் பெண்களின் நிலைமையை யாருமே கேட்பதில்லை. அவர்கள் சீரழிக்கப்படுகிறார்கள், தங்களுக்கு விருப்பமில்லாமலேயே அவர்கள் போரின் ஒரு அங்கமாக இருக்கிறார்கள். குண்டுவீச்சில் செத்துப்போனவர்களை காட்டுவதாக ஒரு காட்சி வரும். அதிலே கை கோர்த்தபடி ஒரு ஜோடி செத்துக் கிடக்கும். அத்துடன் ஒரு வைத்தியப் பெண், அவரது குதிரை. (அந்தப் பெண்ணை பிடிக்காமல், தீவிரவாதிகளே சாட்டோடு சாட்டாக கொன்றிருப்பதாக காட்டியிருக்கிறார். கவனிக்க. ஆனால், அமெரிக்க வீரர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லவே மாட்டார்கள் என்ற ரீதியில் பல காட்சிகள் வருகின்றன. அது ஓவர்.) தீவிரவாத மனம் படைக்காத ஆண்கள், பெண்கள், தீவிரவாதம் போதிக்கப்பட்ட அல்லது திணிக்கப்பட்ட சிறுவர்கள், சேவை செய்பவர்கள், விலங்குகள் எல்லாம் இறக்க, தீவிரவாதிகள் மட்டும் எஞ்சுகிறார்கள். அவர்கள் முடிவு எடுகிறார்கள். என்னது? பழிக்குப் பழி.

குழந்தைகள் பெரியவர்களைப்போல் பக்குவத்தோடு இருக்கிறார்கள். பெரியவர்கள்தான் குழந்தைகளைப்போல நடந்துகொள்கிறார்கள் என்பதை உருவகப்படுத்தும் ஊஞ்சல் காட்சி ஒன்று உள்ளது. பழிக்குப் பழி என்கிற சிறு உலகத்துக்குள் வாழ்பவர்களால் எப்படி இறைவனை (ஒளியை) அடைய முடியும்? எப்படி பழிக்குப் பழியை இறைவனின் பெயரால் நடத்தலாம்? இதுதான் கமல் கேட்டிருப்பது.

முஸ்லிம்கள் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்தளவுக்கு கமல் இந்தப் படத்திலே முஸ்லிம்களை கேவலப்படுத்தி ஒரு காட்சிகூட எடுக்கவில்லை. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் வாழும் தீவிரவாதிகளை காட்டும்போது முஸ்லிமாகக் காட்டாமல் ஜெகோவாவின் சாட்சிகளாகவா காட்ட முடியும்? முஸ்லிம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்று அவர் சொல்லவில்லை. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவை தாக்க நினைக்கும் தீவிரவாதிகள் முஸ்லிம்களாக இருக்கிறார்கள் என்றுதான் சொல்லுகிறார். இத்தனைக்கும் தனது உயிரையும் மதிக்காமல், தீவிரவாதத்திலிருந்து உலகத்து மக்களை காப்பாற்ற அத்தனை பாடுபடும் விசம் அகமத் கஸ்மிரி என்கிற விஸ்வநாத் ஒரு மார்க்கக் கடமை தவறாத முஸ்லிம். எப்படி மக்களை அழிக்கும் தீவிரவாதிகளில் முஸ்லிம்கள் உள்ளார்களோ, அதுபோல மக்களை காக்க உயிரை விடும் வீரர்களிலும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்பதுதான் கமல் சொல்ல வந்தது. அதை சொல்ல விடாமல் அந்தாளின் வாயை இவ்வளவு காலம் பொத்தி வைத்ததற்குப் பெயர் ,மூடத்தனம்.

படத்தின் ஆரம்பத்தில் வரும் கதக் நடனம் அத்தனை அழகு. ஷங்கர்- இஷான்- லோய் இசையில் நடனத்தில் பண்டிட் பிஜு மகாராஜ் நடன இயக்கத்தில் கமல் என்கிற உண்மையான கதக் கலைஞனின் நடன விருந்து அது. நளினமான, ஐயங்கார் மொழிபேசும் அப்பாவியாக கமலின் நடிப்பு அபாரம்.
படத்தில் கமலை வேயார்ஹவுசில் பூஜாவோடு கட்டி வைத்து சித்திரவதை செய்வார்கள். அப்போதெல்லாம் அப்பாவியாக இருப்பவர், தன பழைய நண்பர் ராகுல் போஸ் வரப்போகிறார் என்றவுடன் விஸ்வரூபம் எடுப்பார். பக்கத்திலிருந்த பூஜா குமாருக்கும், எங்களுக்கும் ஆச்சரியம். முதலில் வில்லனிடம் அடி வாங்குவது மாதிரி வாங்கிவிட்டு பிறகு வெடிப்பது விஜய் செய்வதாச்சே.. வழக்கமாக கமல் என்றால் அடி மட்டும்தான் வாங்குவார், அதுதான் வாழ்க்கை என்று இருந்தால் இப்படியாகிவிட்டதே என்று எங்களுக்கும், இந்தாளையா ஆம்பிளை இல்லை என்றோம் என்று பூஜாவுக்கும் ஆச்சரியம். ஆனால் அந்த இடத்திலே யாரென்று தெரிகிறதா? என்ற பாடலின் இடையே எனது விருப்பத்துக்குரிய கதாநாயகனாக கமல் அதிரடியாக அத்தனை போரையும் சட்னியாக்குவது பிடிக்கத்தான் செய்கிறது. அதிர்ச்சியிலிருந்து மீண்டதும் அதுக்கு ஒரு ரீபிளே வேறு போடுவார்கள்.. அற்புதம்.! அதில் விறுவிறுப்பு எடுக்கும் படம் முடியும்வரை விறுவிறுப்புதான். இதிலே இந்தியாவில் நடப்பதாக இரண்டாம் பாகம் வேறு இருக்கிறதாம்.

இது குழந்தைகளுக்கான படம் இல்லை என்று கமல் ஏற்கெனவே சொல்லிவிட்டார். படத்தில் அத்தனை அரசியல் இருக்கிறதோ இல்லையோ, அத்தனை வன்முறை. கண்ணுக்குள் விரலை விட்டு நோண்டுவது, கழுத்தை வெட்டுவது, நெஞ்சுக்கு மேல்ப்பகுதி மட்டும் வெடிபட்டு விழுவது... அத்தனையும் நிஜமாக கண்முன்னே விரிகிறது. ஒரு இடத்திலே காட்டக் கூடாது என்று சமூகம் சொன்னதை தன கூலிங் கிளாசிலே கமல் காட்டுவார். கூருள்ளவர்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.

இத்தனை சிறப்பானதாக இந்தப் படம் இருப்பதற்கு எல்லாக் காரணமும் கமல்தான். அத்தனை சிறப்பான ஒருங்கிணைப்பு, இயக்கம். ஆனால் சொதப்பல் எங்கே தெரியுமா? திரைக்கதை. ஓட்டை ஓட்டையாக ஒரு வலை போல இருக்கிறது திரைக்கதை.
இந்திய ரா வீரர் கமலுக்கு ஒசாமாவுடன் என்ன வேலை? இந்தியா எப்போது ஆப்கானிஸ்தான் பிரச்சனைக்குள் தலையை விட்டது? உண்மையாக அமெரிக்காமீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப் போட்ட திட்டத்தை முறியடிக்க கமல் வருகிறார். ஒசாமாவை கொல்லுவதற்கு பாகிஸ்தானுக்கே தெரியாமல் அமெரிக்க வீரர்கள் போனதுபோல. (அதற்கான உளவியல் பழிவாங்கல்தான் இதுபோல..) அப்படி கமல் வருவது FBI க்கே தெரியாது. இந்தியப் பிரதமர் சம்பந்தப்படும் இரகசியத் திட்டமாம். இந்தியாவுக்கு ஏன் இந்த வேலை, முதல் அந்தளவுக்கு இந்தியாவுக்கு சத்து ஏது? (இந்தியா ஒரு சத்துக்கேட்ட நாடு என்று நான் சொல்லவில்லை. படத்திலேயே காட்சி வருகிறது. 'இந்திய ஜனாதிபதியே வந்தாலும் குனிய வைத்து கு**** தட்டுவேன் என்பதுபோன்ற வசனம் அமெரிக்கர்களால் பேசப்படுகிறது.')

ஒரு இராணுவ அதிகாரி, அத்தனை எளிதாக அல் கொய்தா தலைமையிடம் வரையில் போய்விட முடியுமா? அதுவும் ஒசாமாவை சந்திக்கும் அளவுக்கு? இத்தனைக்கும் தீவிரவாதிகளின் அடிப்படை கருவிகள், பழக்கங்கள், இடங்கள் பற்றிக்கூட கமலுக்கு தெரியவில்லை.

அமெரிக்க வீரர்கள் ஒசாமா இருக்குமிடத்தை கண்டுபிடிக்க Tracking Device ஐ கஞ்சா பையில் ஏன் வைக்கவேண்டும்? தானே கொண்டு போயிருக்கலாமே? அவரது கஞ்சா பையில் வைத்து, பின்னர் எடுக்கவேண்டிய அவசியம் என்ன? முதல் அமெரிக்க வீரர்கள் இவரிடம் கொடுத்து கையாளச் சொல்லுமளவுக்கு இருந்தால், அமெரிக்காவில் அவர் பிடிபட்டபோது இந்திய எம்பசியிலிருந்து ஆள் வந்துதானா இவரை பிணையெடுக்க வேண்டும்? அமெரிக்காக்கு ஆளை தெரியாதா?

பூஜா குமாரை ஏன் திருமணம் செய்தார்? குத்துகிறதே? ஒரு அப்பாவி (அவள் அப்பாவி இல்லை என்பது தெரியாததால்) பெண்ணை எப்படி கடமையிலிருக்கும்போது திருமணம் செய்யலாம்? நெறிமுறை தவறாத முஸ்லிமாக உள்ள கமல், ஏன் ஒரு பிராமணப் பெண்ணை அப்படி பொத்தாம் பொதுவாக மணந்தார்?

தீவிரவாதிகள் சீசியம் குண்டை நியூ யோர்க்கில் இயக்க முன்னர் புறாக்களில் சீசியத்தை கட்டி இந்த கூத்து ஆடுவது எதற்காக? அந்தக் கூத்து ஆடும்போதே உண்மையான குண்டு தயாராகத் தானே இருக்கிறது? பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பதற்காக லொஜிக் பலியாகிறதே?

கருப்பனான முஸ்லிம் அப்பாஸி குண்டுக்கு அருகிலிருக்கும்போதே குண்டு வெடிப்பதுதான் திட்டம் என்றால், பிறகு ஏன் தொலைபேசினால் வெடிக்கும் சிஸ்டம்? அவனே செயல்படுத்தலாமே?

காசு கொடுத்தால் எந்த வேலையும், யாருக்கும் செய்யக்கூடிய ஒருவனை சந்திக்கக்கூடியளவுக்கா ஒசாமா வாழ்ந்தார்?

ஒரு கதக் நடனக் கலைஞராக கமல் இருக்கவேண்டிய அவசியம் கதையில் என்ன? கமல் என்கிற நடிகருக்கு அது தெரியும் என்பதற்காகப் புகுத்தப்பட்டதுதானே அது? பொதுவாக எல்லா கமல் படங்களிலும் நடக்கும் கூத்துக்களில் இதுவும் ஒன்று. படத்தின் நாயகன் நாத்திகம் பேசுவார், நன்றாக நடனம் ஆடுவார்.. இப்படி. ஏனெனில் அது கமல்.

பெரும்பாலான காட்சிகள் ஊகித்துவிட முடிவது திரைக்கதையின் பெரிய குறை. பின் லேடனைத் தவிரே எல்லோருமே தமிழ் கதைப்பது, கெட்டவனாக நடிக்கும் நல்லவனான நாயகன், அணு விஞ்ஞானம் தெரிந்த இருபது வயது அழகி இப்படி சில கமலா இப்படி? என்கிற சொதப்பல்களும், சில இடங்களில் கமல் தனமான சொதப்பல்களும்.  ஆனாலும் இத்தனையும் தாண்டி இது திரையரங்கில் பார்க்கப்படவேண்டிய கமல் விருந்து. ஒன்றுமே தெரியாமல் கத்திய முட்டாள்களின் மூக்குடைக்கவாவது கமல் வெற்றி பெறவேண்டாமா?* * *
பின் குறிப்பு  ...

டிவிடி கிடைத்தாலும், திரையரங்கில் பார்க்கவேண்டும் என்கிற விரதத்தொடு இருந்து பார்த்த படம். அத்தனை ஆச்சாரியம்.  ஹோலிவூட் சினிமா தரத்துக்கு படம் எடுக்கிறேன் என்று சூடுபோடும் செல்வராகவன், விஜய், அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் தூள் பண்ணுகிறேன் என்று குதிக்கும் விஷால், கார்த்தி எல்லோரும் கற்றுக் கொள்வதற்கு படத்தில் நிறையவே இருக்கிறது. இதிலே படத்தை தடை செய்யச்சொல்லி ஆர்ப்பாட்டம் நடந்தபோதும், கமலின் மகளைப்பற்றி கேவலமாக பேசியபோதும், உலகத்தையே காப்பாற்றும் தமிழ் சினிமா பொத்திக்கொண்டு கிடந்தது. இந்த ஒரு படத்தை மீறிய படத்தை எடுக்க முடியாதவரை கமலுக்கு அடிமையாக இருக்கவேண்டியது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கடமை. மதரீதியாக புண்படுத்துகிறார் என்று கூறிவிட்டு அவரை எத்தனை புண்படுத்தியது ஒரு சமூகம்? அது  திருந்தும் என்று நினைக்கும் கமல் திருந்தட்டும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}