கலிலியோ vs மதவாதிகள்-01

கலிலியோ கலிலி இத்தாலியை சேர்ந்த தலை சிறந்த விஞ்ஞானி.பௌதிகவியல் முன்னோடிகளுள் முக்கியமானவர். நியூற்றனுக்கு முற்பட்டவர்.பூமி பிரபஞ்சத்தின் மையம் எனவும் பூமியைச்சுற்றித்தான் சூரியன் ஏனைய கோள்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன  என நம்பிக்கொண்டிருந்தகாலம் அது.அக்காலத்தில் முக்கிய புள்ளிகள் யாராவது எதையாவது சிந்தித்துக்கூறினால் உடனே ஏற்றுக்கொள்வார்கள்.இக்காலத்தில் போகிற போக்கில் ஒன்றைக்கூறிவிட்டு விஞ்ஞானிகளே இதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று கூறியதும் மக்கள் நம்பவில்லையா?அதே மாதிரித்தான்.மக்களோ வேறுயாரொருவரோ  கூறியவற்றை குறைந்தபட்ச பரிசோதனைக்குக்கூட உட்படுத்த மாட்டார்கள்.அதுவும் கூறுபவற்றை மதத்திற்கூடாக எடுத்துக்கூறினால் மறுபேச்சிற்கே இடமில்லை.உடனே அதை ஏற்றுக்கொண்டுவிடுவார்கள்.(இப்போதும்தான்)

தங்களது மத நம்பிக்கை காரணமாக கலிலியோவின் விஞ்ஞானக்கருத்துக்களை கொள்கைகளை கண்டுபிடிப்புக்களை சிந்தித்துப்பார்க்கக்கூட மறுப்புத்தெரிவித்துவந்தார்கள் மதவாதிகள்.

மத நம்பிக்கையாளர்களுக்கும் கலிலியோவிற்கும் இடையில் நடைபெற்ற மோதல்தான் கலிலியோவை உலகறியச்செய்வதில் முக்கிய பங்குவகித்தன.தான் கண்டு பிடிப்பவற்றை தனது சிந்தனைகளை நேரடியாக வெளிப்படுத்தும் இயல்புடையவராக கலிலியோ இருந்தார்.இவ்வியல்பே பல சமயங்களில் இவருக்கு பிரச்சனையை தேடித்தந்தது.16 ஆம் நூற்றாண்டில் வத்திகானில் ஒரு சட்டம் இருந்தது.12 பேருக்கு ஒரு திருச்சபைக்குரு அல்லது பெண் துறவி .அத்துடன் பைபிளில் போதிக்கப்படுவதற்கு மாறுபட்ட கருத்தையோ,வேறு கருத்துக்களையோ பிரசுரித்தல்,பிரச்சாரம் செய்தல் திருச்சபையினால் தடை செய்யப்பட்டிருந்தது.இவ்வளவும் ஒழுங்காக நடைபெறுகின்றதா என்பதை கவனிக்க ஒரு ஆய்வு மன்றம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.இக்குழு மத விரோதக்கருத்துக்களை தடைசெய்தன,மத விரோதக்கருத்துக்களை வெளியிடுவோர்மீது குற்றம் சுமத்தி தண்டனைகளையும் கொடுத்தார்கள்.

இத்துடன் நிறுத்திக்கொள்ளாது Jesuits யேசு சபையினர் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது அதன் மூலம் ஆய்வுகள்  அறிவியல் தர்க்கங்களில் ஈடுபட்டனர்.ஏதாவது புதிய கருத்துக்கள் கண்டுபிடிப்புக்களுக்காகவல்ல தாங்கள் இதுவரை காலமும் நம்பிவந்த விடயங்கள் உண்மை என காட்டுவதற்கு  முயன்றார்கள் இச்சபையினர்.இப்போது பிளாக்கர்களில் மத நூல்கள்,புனித நூல்கள்,புராணங்களையும் சம்பந்தப்படுத்தி மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவார்களே அதே புண்ணியகருமத்தை அந்த சபை அன்றே செய்தது.

இவ்வாறான அதீத கெடுபிடிகள் உள்ள நேரத்தில் மக்கள் மதத்தின்படி நடக்கவேண்டும் மதத்தை பின்பற்றவேண்டும் என்ற திணிப்பில் இருந்து தம்மை விடுவித்துக்கொள்ளமுயல்கின்றார்களா என்ற என்பதை தீவிரகண்காணிப்புக்கள் மூலம் உளவறிந்துகொண்டிருந்த நேரத்தில்தான் கலிலியோ தன் கருத்துக்களை  சுதந்திரமாக வெளியிட்டார்.

aristotle
அரிஸ்ரோட்டல் என்ற விஞ்ஞானிக்கும் பைபிளிற்கும் தொடர்பிருந்தது.அரிஸ்ரோட்டல் கி.மு 348 இல் பிறந்தவர்.2000 ஆண்டுகளுக்கு முன்னரேயே அறிவியல் சிந்தனைகளை,கருத்துக்களை வெளியிட்டவர்.கலிலியோ வாழ்ந்த 16 ஆம் நூற்றாண்டுவரை மாற்றுக்கருத்துக்களின்றி அரிஸ்ரோட்டலின் கருத்துக்கள் நம்பப்பட்டுவந்தன.பைபிளில் விஞ்ஞானக்கருத்துக்கள் என்று போதிக்கப்பட்ட இடங்களிலெல்லாம் அரிஸ்ரோட்டலின் கருத்துக்கள் இருந்தன.ஆனால்  பெரும்பாலான அரிஸ்ரோட்டலின்  கருத்துக்களில் தவறுகள் இருந்தன.
பூமிக்கு மட்டும் தனியான இயல்பியல் விதிகள் பூமிதவிர்ந்த ஏனையவற்றிற்கு வேறு இயல்பியல் விதிகள் என கூறினார்.
பூமியின் மேற்பரப்பிலேயே வால் நட்சத்திரங்கள் தோன்றுகின்றன.விண்வெளிக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லைஎன கருதினார்.
இப்படி பல தவறான கூற்றுக்களுள் முக்கியம்வாய்ந்த பிரபலமான ஒரு தவறான கூற்றுஒன்றிருந்தது.பிரபஞ்சத்தில் பூமியின் இருப்பைப்பற்றியகூற்றுத்தான் அது.
earth rotation aristotle

பூமி எந்தவகையிலும் சுழல்வதோ அசைவதோ இல்லை.பூமி நிலையாக இருக்கின்றது.அத்துடன் பூமிதான் பிரபஞ்சத்தின் மையப்புள்ளி நாம் அறியும் சகல் கிரகங்களுமே பூமியைப்பற்றித்தான் சுழல்கின்றன என நம்பினார் அரிஸ்ரோட்டல்.
ஆனால்  கி.பி 1543 இல் கோபர்னிக்கஸ் பூமி ஏனைய கோள்களுடன் அவற்றைப்போலவே சூரியனை சுற்றிவருகின்றது எனக்கூறிவிட்டார்.இவரது கருத்து பைபிளில் இருக்கும் அரிஸ்ரோட்டலின் கருத்துக்கு எதிராக இருந்தமையால் கோபர்னிக்கல்ஸின் கருத்தை மதத்திற்கு எதிரான கருத்தாக அறிவிக்கப்பட்டு முழுமையாக பொய் என அறிவிக்கப்பட்டது.
(மதம் என்பது நம்பிக்கைகளின் அடிப்படையில் அமையவேண்டிய ஒன்று அறிவியல் ரீதியான கேள்விகளுக்கு விடைதர முயற்சிக்கக்கூடாது.)
copernicus

இப்படி விஞ்ஞானம் மதங்களுடன் சேர்ந்து மூட நம்பிக்கைகளாக பின்பற்றப்பட்டுவந்த காலத்தில்தான் கலிலியோ பிறந்தார்.வின்செஞ்சியோ,ஜியூலியா தம்பதியருக்கு மூத்தமகனாக 1564 பெப்ரவரி 15 இல் பிறந்தார் கலிலியோ இத்தாலியில் துஸ்கனியில் பைசாவில் வாழ்ந்துவந்தார்.
கலிலியோ பிற்காலத்தில் யாருக்கும் பயப்படாது கருத்துக்களை வெளியிடுவதற்கும் மதம் கட்டாய சட்டமாக்கப்பட்டு திணிக்கப்பட்டபோதும் அதற்குள் அகப்படாமல் இருந்ததற்கு பின்புலமாக இருந்தவர் கலிலியோவின் தந்தை.கலிலியோவின் தந்தை இசைவாணர்.இசைபற்றிய புரட்சிகரமான கருத்துகளை தோற்றுவித்தவர்,இசையில் கணிதத்தை புகுத்திய முதல் நபர் இவற்றினால் கலிலியோவின் தந்தைமிக பிரபலமானவர்.புரட்சிகரமான சிந்தனையாளர்.மற்றையவர்களது கருத்தை செவிசாய்க்காத மூடிய மனமுடையவர்களை அடியோடு வெறுத்தார்(மத"வாதிகளை"வெறுத்தார் என்றும் கூறலாம்.பல தலைமுறைகளாக தொடர்ந்து போதிக்கப்படும் அறிவை கண்மூடித்தனமாக நம்புவதை வெறுத்தார்.இவற்றினால் கலிலியோ சிறியவயதிலேயே  ஈர்க்கபப்ட்டார்.இவைதான் கலிலியோவின் எதிர்காலத்தில் கலிலியோவழியாக எதிரொலித்தன.

16 வயதுவரை தனது தந்தையிடமும் சில ஆசிரியர்களிடமும் கல்விகற்றார்.எதையும் ஊடுருவி ஆராய்ந்துபார்க்கும் சிறுவனாகவே வளர்ந்தார் கலிலியோ.கல்வியை போதிப்பதற்கு அப்போதும் பல அமைப்புக்கள் இருந்தன ஆனால் அவற்றிற்கு கலிலியோவை அனுப்புவதற்கு தந்தைக்கு எள்ளளவும் விருப்பமில்லை.காரணம் தொடர்ந்து வரும் கொள்கைகள் தன் மகன்மீதும் திணிக்கப்படுவதை அத்தந்தைவிரும்பவில்லை.பலவிடயங்களில் தந்தையுடன் ஒத்துப்போனாலும் தேர்வு செய்யவேண்டிய துறையில் தந்தையுடன் கருத்துவேறுபாடு தோன்றியது.தந்தை கலிலியோ மருத்துவத்துறையில் பயிலவேண்டும் என விரும்பியதால் சுயவிருப்பமில்லாமல் மருத்துவத்துறையில் கற்றார் கலிலியோ.ஆனால் அங்கும் ஆசிரியர்,மாணவர்களிடையே அறிவியல் ரீதியான கருத்துவேறுபாடுகள் தோன்றின.

கற்கும் நேரங்களில் கணிதவல்லுனரான ostilio ricci யின் பேச்சுக்களால் கவரப்பட்டார்.இதனால் தந்தையின் எதிர்ப்புக்களையும் மீறி துறையை மாற்றிகொண்டார்.பல்கலைக்கழக அரங்குகளில் நடைபெறும் விவாதங்களில் நண்பர்கள்,விரிவுரையாளர்களின் கருத்துக்களுக்கு கொதிப்படைந்து உரத்த குரலில் உடனடியாக மறுப்புத்தெரிவித்தமையால் சண்டைக்காரர் என்று கலிலியோ பெயர் எடுக்கவேண்டியேற்பட்டது.ஒருமுறை துறவியாக மாறமுற்பட்டு தந்தையிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார்.

கிரேக்கர்கள் செய்ததுபோல் ஓர் இடத்தில் உட்கார்ந்து சிந்திப்பதால் மட்டும் அறிவியல் வளர்ந்துவிடாது என்பதுதான் கலிலியோவின் முக்கிய வாதமாக இருந்தது.பைசா நகரில் வாழ்ந்தபோது தனது முதலாவது கண்டுபிடிப்பை  நிக்ழ்த்தினார்.இதன் பின்னர்தொடர்ந்த கண்டுபிடிப்புக்கள் அவை தொடர்பான விவாதங்கள் எல்லாம் உலகப்புகழ்பெற்றவை.
1583 இல் மாதாகோவில் வழிபாட்டுக்கு கலிலியோ சென்றிருந்தார்.அன்று வழமைக்கு மாறாக வேறுஒரு பாதிரியார் வழிபாடு நடத்திக்கொண்டிருந்தார்.சலிப்பு ஏற்படவே மேற்கூரையில் தனது பார்வையை செலுத்தினார்.தலைக்குமேலே ஆடும் விளக்கு அவரது கவனத்தை ஈர்த்தது.தொடர்ந்து அதையே பார்த்துக்கொண்டிருந்தார்.திடீரென்று ஒரு  விடயத்தைக்கவனித்தார்.விளக்கு காற்றோட்டத்தால் ஒரு முறை அதிகமாகவும் மறுமுறை குறைவாகவும் அலைந்தது ஆனால் அதைமுடிகும் நேரம் ஒன்றாக இருந்தது.கலிலியோ காலத்தில் கடிகாரம் தன் சுய உருவை முழுமையாக பெறவில்லை.அக்காலத்தில் மணற்கடிகாரம் இருந்தது ஆனால் பல கோளாறுகளுடன் பலர் வேறு வேறு நேரங்களை பயன்படுத்தினார்கள்.கலிலியோ மேலே அலைந்த விளக்கு அலைந்து ஓய்வதற்கு ஒரே நேரம் எடுக்கின்றது என்பதை தன் நாடித்துடிப்பைகொண்டு உறுதிசெய்தார்.தனது ஏனைய பரிசோதனைகளுக்கும்   நாடித்துடிப்பையே நியமமாகப்பயன்படுத்தினார்.

போதனை முடிந்தவுடன் தன் வீட்டை நோக்கி ஓடினார் கலிலியோ.தனது வீட்டில்  தொங்கும் விளக்குமாதிரிகளில் எடைகளைக்கட்டி பரிசோதனைகளில் ஈடுபட்டார்.ஊசல் அலைவின் நீளம் எவளவு ஆனாலும் ஒரு அலைவை முடிக்க எடுக்கும் நேரம் எப்போதும் ஒன்றுதான் என்ற முடிவைக்கண்டுபிடித்தார் இதன்மூலம் கலிலியோபெண்டூலத்தைக்கண்டுபிடித்தார்.
(உயர்தரத்தில் பிஸிக்ஸைப்படிக்கும்போது மூச்சுக்கு 300 தடவை எதற்கெடுத்தாலும்  நியூட்டனின் சமன்பாடு நியூட்டனின் சமன்பாடு என்று சமன்பாடுகள் வந்தவண்ணம் இருக்கும்.அட நியூட்டன்தான் பௌதிகத்தையே கண்டிபிடித்தார் என்ற தோற்றப்பாடை அது ஏற்படுத்தியிருக்கலாம் ஆனால் உண்மை என்னவென்றால் நியூட்டனுக்கு முன்பே நியூட்டன் கூறியபல விடயங்களை பலர் கூறியிருக்கின்றார்கள் அறிந்திருக்கின்றார்கள்,உணர்ந்திருக்கின்றார்கள் உதாரணத்திற்கு ஊசல்,எறியம் போன்றவற்றின் பரிசோதனைகள் பலவற்றை செய்தவர்கலிலியோ. நியூட்டனின் ஊசல் அலைவுக்கான விதியை படித்துவிட்டு அது  சரியாஎன  நாம் செய்யும் அனைத்து பரிசோதனைகளையும் கலிலியோ ஏற்கனவே செய்துமுடித்திருந்திருக்கின்றார்.ஆனால் கலிலியோவால் ஊசல் அலைவு,முக்கியமானவிடயமாகிய புவியீர்ப்பு என்பவை தொடர்பில் ஒரு கணிதவடிவத்தை பெறமுடியவில்லை.கலிலியோகாலத்தில் கணிதம் அந்த அளவிற்கு வளர்ச்சியடையவில்லை அதோடு புவியீர்ப்பு விசை என்பது கலிலியோவின் காலத்திற்கு பிற்பட்டவரான நியூட்டனால் கணிதவுருப்பெற்றது.இவைகளால் ஒரு குறிப்பிட்டதூரத்திற்கப்பால் கலிலியோவால் நகரமுடியவில்லை. நியூட்டனின் சில பல சமன்பாடுகளுக்கு கலிலியோபோன்ற சில முன்னோடிகள் இருந்திருக்கின்றார்கள்)

மேலும் பரிசோதனைகளைவிரிவுபடுத்தி ஊசலில் வேறுவேறுஎடைகளைமாற்றுவதன் மூலம் எடை ஊசலின் அலைவில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்பதைக்கண்டுபிடித்தார். நீளத்தை மாற்றி நீளம் முக்கியமானது என்பதைக்கண்டுபிடித்தார்.அலைவிற்கான நேரத்திற்கும் தொங்கும் கம்பியின் நீளத்தின் வர்க்கமூலத்திற்கும் தொடர்புகள் இருப்பதைக்கண்டுபிடித்தார் கலிலியோ.ஆனால் ஏன் இந்த விதி பின்பற்றப்படவேண்டும் என்பதை கலிலியோவால் விளக்கமுடியவில்லை.காரணம் நியூற்றனுக்குப்பின்னர்தான் புயீர்ப்புவிசைபற்றிய புரட்சிகள் தோன்றின.(ஊசல் தொடர்பான சமன்பாடை நிறைவுசெய்தவர் நியூற்றன்தான் ஆனால் நியூற்றனிற்கு முன்பே கலிலியோ அதை அண்மித்திருந்தார்)

16 ஆம் நூற்றாண்டில் ஊசலின் இயக்கத்தை முழுமையாக விளக்க கணித அறிவுபோதியதாக இருக்கவில்லை.ஆனால் தனது கண்டுபிடிப்பிற்கு பயன் உண்டு என  கலிலியோ நம்பினார்.அக்காலத்தில் குறைவான நேரங்களை கணக்கிடுவது சிரமமாக இருந்தது.இதற்கு ஊசலை பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.கலிலியோ இறப்பதற்குமுன்பாகவே சுவர்க்கடிகாரங்களில் ஊசலைப்பயன்படுத்தலாம்  என்றகருத்து ஏற்கப்பட்டது.
Pendulum clock conceived by Galileo Galilei around 1637. The earliest known pendulum clock design, it was never completed.

மறுபுறத்தில் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறாமலெயே பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேறிவிட்டார் கலிலியோ.பின்னர் தனது சொந்த ஊரிற்குத்திரும்பினார்.செல்வந்தர்களுடன் நட்புவைத்துக்கொண்டார்.செல்வந்தர்கள் பலர் இவரது அறிவியல் கற்பித்தலுக்கு ஊதியம்வழங்கினார்கள்.இன் நிலையில்தான் கலிலியோ தன் முதல் இயல்பியல்  நூலான La Bilancettaஐ வெளியிட்டார்.இதில் தான் அதுவரை நிகழ்த்திய அனைத்துபரிசோதனைகளையும் தொகுத்து வெளியிட்டிருந்தார்.இன் நூலில்கலிலியோ ஆக்கிமிடிஸ்ஸின் புகழ்பெற்றகதையையும் விரிவாக வெளியிட்டிருந்தார்.


ஹெய்ரான் மன்னனின் ஆணைப்படி பொற்கொல்லன் ஒரு கிரீடத்தை செய்திருந்தான்.ஆனால் அது சுத்த தங்கத்தால் செய்யப்பட்டிருக்குமா என் மன்னன் சந்தேகித்தான்.ஆர்க்கிமிடிஸ்ஸை அழைத்து அதை நிரூபிக்கும்படி கேட்டிருந்தான் மன்னன்.

தொடரும்....
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}