ஓளவையார் ஒருவர்தானா?-03

உறையூரிற் குலோத்துங்கசோழன் ஆட்சிசெய்துகொண்டிருந்தபோது அவனது அவைக்களப்புலவராக ஒட்டக்கூத்தர் என்பவர் அமர்ந்திருந்தார்.அவர் மிகுந்த கல்விச்செருக்குடையவர் யாரையும் மதிக்கமாட்டார் ஓளவையையும் அவர் மதிக்கவில்லை.அவரது செருக்கை அடக்க சந்தர்ப்பம் ஒன்றை எதிர்பார்த்திருந்தார் ஓளவையார்.ஒருசமயம் மன்னனது அவைக்குச்சென்றிருந்தபோது அங்கிருந்த புகழேந்திப்புலவருக்கு மதிப்புக்கொடுத்துவிட்டு ஒட்டக்கூத்தரை மதியாது அமர்ந்துவிட்டார். உடனே கூத்தர் "கிழவி நீ என்னை  அவமதிக்கக்காரணம் என்ன? என்றார்.உடனே நும்மை விட அறிவிற் சிறந்தவராதலின் அவ்வாறு செய்தேன்" என்றார் உடனே கூத்தர் எம்மிருவரது அறிவின் ஏற்றதாழ்ச்சிகளை உன்னால் அளவிடமுடியுமா?என்று கேட்க.ஓளவை இப்போதே அளவிட்டுக்காட்டுகின்றேன் நற்றாய் இரங்கற்றுரையில் சோழனை முன்னிலைப்படுத்தி ஈற்றடியில் திங்களின் பெயரை மூன்று முறை அமைத்து நீ ஒரு செய்யுள் பாடுபார்க்கலாம் என்றார் ஓளவை.
உடனே கூத்தர் செய்யுளை விரைவாக எழுதிப்பாட ஆரம்பித்தார் அதில் தன்னைக்குழந்தையாகவும் ஓளவையை பேதையெனவும் வருமாறு...

வெள்ளத் தடங்காச் சினவாளை
வேலிக் கமுகின் மீதேறித்
துள்ளி முகிலைக் கிழித்துமழைத்
துளியோ டிறங்குஞ் சோணடா

கள்ளக் குறும்பர் குலமறுத்த
கண்டா அண்டர் கோபாலா
பிள்ளை மதிகண் டப்பேதை
பெரிய மதியு மிழந்தாளே

என்று பாடினார்.கூத்தர் நினைத்தார் தான் பாடி ஓளவையை அவமானப்படுத்திவிட்டதாக ஆனால் ஓளவையை இகழவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே நிறைந்திருந்ததால் தான் இழைத்ததவற்றை கூத்தர் அறிந்திருக்கவில்லை. 3 மதிகள் வரவேண்டும் அதில் ஒருமதி தவறிவிட்டது.
ஒட்டா ஒருமதி கெட்டாய் என்று தாமும் இருபொருள் அமைய புகழேந்தியைப்பாடுமாறு கேட்டார் ஓளவை.

பங்கப் பழனத் துழுமுழவர்
பலவின்  கனியைப் பறித்தொன்று
சங்கிட் டெறியக் குரங்கிளநீர்
தனைக்கொண் டறியும் தமிழ்நாடா
கொங்கார்க் கமரர் பதியளித்த
கோவே ராச குலதிலகா
வெங்கட் பிறைக்கும் கரும்பிறைக்கும்
மெலிந்த பிறைக்கும் விழிவேலே
என்று புகழேந்திபாட ஒட்டக்கூத்தர் தலைகவிழ்ந்தது செருக்கு அகன்றது.


ஓளவையார் ஒருவர்தானா?-02
சங்ககாலத்தில் இருந்த ஓளவையார் ஒருவர்.அதன் பின்னர் அடுத்த ஓளவையார் 10 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர் என்று கருதப்படுகின்றது.இந்த ஓளவையார்தான் அங்கவை,சங்கவைக்கு மணம் முடித்துவைத்தவர்.

சங்க கால ஓளவையாரும் அடுத்துவரும் ஓளவையார்களும் வேறானவர்கள் என்பதற்கு பாடல் நடைகள்வேறானவையாகக்காணப்படுகின்றன என காரணம் கூறப்படுகின்றது.ஓளவையின் தனிப்பாடல் தொகுப்பிற்கு இவ்வாறு காரணம் கூறப்படுகின்றது.ஓளவையாரின் பெயரில் காணப்படும் தனிப்பாடல்கள் 2 வகை ஒரு வகை வரலாற்றுச்சிறப்புக்களைக்கூறுபவை,மற்றயது உபதேசமொழிகளைக்கூறுபவை.வரலாற்று நிகழ்ச்சிகளைக்கூறும் பாடல்கள் யாவும் ஒரே காலத்திற்கு உரியவை அல்ல.சில பாடல்கள் சங்க கால நிகழ்ச்சிகள் பற்றிக்கூறுவன சில பாடல்கள் கம்பர் கால வரலாறுபற்றிக்கூறுவன இரண்டிற்குமிடையில் 1000 ஆண்டுகால வேறுபாடு உண்டு.

கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் மகள்கள்தான் அங்கவை,சங்கவை,பாரியின் பால்ய காலத்தில் இருந்தே நண்பராக இருந்தவர் புலவர் கபிலர்.பாரி நகர்வலம் சென்றபோது பற்ற எதுவுமில்லாது முல்லைக்கொடி வீதியில் கிடப்பது கண்டு தன் தேரையே அதற்காக கொடுத்தகதை மிகவும் பிரபலமானது.
மூவேந்தரான சேர,சோழ பாண்டியர் பாரியின் புகழினால் கோபம் கொண்டு பாரி ஆண்ட பறம்புமலையை படையெடுத்து முற்றுகையிட்டனர்(மூவேந்தர் பாரியின் புகழின் மீது கொண்ட பொறாமையால் படை எடுத்தனர் என்பதிலும் கருதுவேறுபாடுகள் உண்டு)
அப்போது உணவுத்தேவைக்காக கபிலர் பல கிளிகளை  நெற்கதிர்களை பறித்துக்கொண்டுவருவதற்குப் பயிற்றுவித்து மக்களுக்கு உணவளித்ததாகவும் கதைகள் உள்ளது.இவற்றினால் பல காலமாக முற்றுகையிட்டும் ஏதும் பலனளிக்காகதன் காரணமாக மூவேந்தர்கள் கூத்தர்கள் போல் வேடமணிந்து சென்று பாரியை கொன்றனர்.பாரி இறந்ததற்கு கபிலரும் ஒரு வகையில் காரணம் என்றும் கூறப்படுகின்றது.பாரி தொடர்பாக வவ்வால்  ஒரு பதிவை இட்டுள்ளார்.இங்கே கிளிக்

பாரி இறந்ததும் கபிலரும் இறக்கத்துணிந்தார் ஆனால் பாரி தம் மகள்களை கபிலரிடம் ஒப்படைந்து இறந்தமையாம் தமக்கு கடமை இருப்பதன் காரணமாக கபிலர் இறக்கவில்லை.கபிலர் தம் வளர்ப்பு மகள்களான அங்கவை சங்கவை இருவருக்கும் மணம் முடிக்க பலரிடம் கேட்க மூவேந்தர் மீது கொண்ட பயத்தின் காரணமாகவோ அல்லது வேறுகாரணங்களுக்காகவோ மறுத்துவிட்டனர்.

பாரிமகளிர் தாம் தந்தையுடன் இருந்த காலத்தில் நன்றாக இருந்ததாகவும்.இறந்தபின்னர் துன்பப்படுவதாகவும் பாடலொன்றைப்பாடியுள்ளனர்.

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.


    “மூவேந்தரும் முற்றுகை இட்டிருந்த அந்த நிலாக் காலத்தின் 
வெண்மையான நிலா ஒளியில் எங்கள் தந்தையை நாங்கள் 
பெற்றிருந்தோம்.     எங்களுடைய மலையையும் பிறர் 
கொள்ளவில்லை; எங்களிடமே இருந்தது. இந்த நிலாக் 
காலத்தின் வெண்மையான நிலா ஒளியில் வென்று ஒலிக்கும் 
முரசினைக் கொண்ட வேந்தர்கள் எம்முடைய மலையைக் 
கொண்டார். நாங்கள் எங்கள் தந்தையையும் இழந்தோம்”,
    மூவேந்தர் ஒன்று கூடித் தம் தந்தையை வஞ்சித்துக் 
கொன்றதை    உணர்த்த வென்றெறி முரசின் வேந்தர் என 
இகழ்ச்சியாற் குறித்தனர்.

பாரிக்கு மகள்கள் ஒருவர்தான் இருவரல்ல என்பது தொடர்பாகவும் வாதங்கள் இருக்கின்றன.
நெடுந்தேர் கொள்க எனக் கொடுத்த
பரந்து ஓங்கு சிறப்பின் பாரிமகளிர் (புறநானூறு 200)
என்ற பாடலிலும் மகளிர் என்பது காட்டப் பெற்றுள்ளது. இது தவிர மற்ற இடங்களில் எல்லாம் பாரிமகளிர் என்ற பன்மை இடம் பெறவில்லை

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் இப்பாடலில் இடம் பெற்றுள்ள யாம், எந்தை, எம், ஏம் ஆகிய சொற்கள் பன்மை நிலைப்பட்டனவாகத் தோன்றுகின்றன.பாரி மகளிர் ஒருவரா இருவரா தொடர்பாக திண்ணையில் வெளியிடப்பட்ட பதிவு இங்கே கிளிக்.


பின்னர் கபிலர் பாரிமகளிரை திருக்கோவிலூர் பார்ப்பானிடத்தே அடைக்கலமாகக்கொடுத்துவிட்டு வடக்கு நோக்கி உண்ணா நோன்பிருந்து இறந்தார்.


சங்ககாலப் புலவர் கபிலர் உயிர் துறந்த இடம்..


புதுப்பித்தலுக்குப் பிறகு எடுக்கப்பெற்ற படம்(11.02.2006)

புதுப்பித்தலுக்கு முன் எடுக்கப்பெற்ற படம்
 (படங்கள் முனைவர் மு.இளங்கோவன்)


மழையில் நனைந்து வந்த ஔவைக்கு அங்கவை சங்கவையர் நீலச் சிற்றாடை தந்து பேணினர்.அப்போது ஓளவைபாடியபாடல்


பாரி பறித்த பறியும் பழையனூர்க்
காரி கொடுத்த களைக்கொட்டும் – சேரமான்
வாராயோ என்றழைத்த வாய்மேயும் இம்மூன்றும்
நீலச்சிற் றாடைக்கு நேர். 22
பாரி ஔவையை வழிப்பறி செய்து தன் நாட்டுக்கே மீட்டுக்கொண்ட அன்பும், பழையனூர் அரசன் காரி ஔவையிடம் களைக்கட்டு தந்து தன் நாட்டிலேயே இருக்கச் செய்த அன்பும், சேரமான் ஔவையை வாராயோ என்று பணிமொழியால் அழைத்து வைத்துக்கொண்ட அன்பும், ஔவை மழையில் நனைந்து வந்தபோது மாற்றுடையாக ஏற்கும்படி பாரிமகளிர் அளித்த நீலச் சிற்றாடைக்கு நேர்.

ஔவையார் அவர்களின் கைகளுக்குக் கடகம் செறியும்படி பாடினார்.
மலையமான் மகன் தேவகன் பாரிமகளிரை விரும்பி மணம் செய்துகொண்டான்.
அவர்களின் திருமணத்துக்கு விநாயகன் ஓலை எழுதி அனுப்பினான்.
சேரன் வருக
சோழன் இன்றைக்கு18ஆம் நாள் வருக
பாண்டியன் சீர் கொண்டுவருக
திருமணத்துக்கு வந்திருந்த சேர சோழ பாண்டியர் பனம்பழம் கேட்டனர். ஔவையார் பனந்துண்டம் பழம் வரும்படிப் பாடிப் பெற்றார்.
பெண்ணை ஆற்றில் பாலும் நெய்யும் பெருகி வரப் பாடிப் பெற்று விருந்தளித்தார்.
ஔவை பாட, ஊரில் பொன்மாரி பொழிந்தது. ஔவை மணமக்களை வாழ்த்திப் பாடினார்.
இந்தச் செய்திகளைக் கூறும் தனித்தனிப் பாடல்கள் ஔவையார் பாடல் என்னும் குறிப்புடன் உள்ளன.
பிற்காலத்தில் அங்கவை சங்கவை திருமணம் பற்றிக் கூறுகின்ற அண்ணாமலையார் சதகம் திருமண ஓலை எழுதிய கணபதியின் தந்தை ‘பாரிசாலன்’ எனக் குறிப்பிடுகிறது.

3 ஆவது ஓளவையார் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் இவரால்தான் ஆத்திசூடிகொன்றை வேந்தன்நல்வழி,மூதுரைஅசதிக்கோவை போன்றவை பாடப்பட்டன.
 இளம்பூரனார்,   நச்சினார்க்கினியர் ஆகிய உரையாசிரியர்கள் தத்தம் உரைகளில் கொன்றைவேந்தன் மூதுரை ஆகிய நூற்களில் உள்ள செய்யுள்களை கையாண்டுள்ளார்கள்.
(ஆனால் நல்வழியை சங்ககாலத்தில் வாழ்ந்த ஓளவையார்தான் இயற்றினார் என்ற கருத்துக்களும் உள்ளன அவற்றை மறுதலிக்கும் கருத்துக்கள்..

பாலும் தெளிதேனும் என தொடங்கும் பாடலில் சங்ககாலத்தமிழர்களிடையே இல்லாத விநாயக வழிபாட்டு முறைபற்றிக்குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தேவர் குறளும் எனத் தொடங்கும் காப்புச்செய்யுளில் 8 ஆம் நூற்றாண்டுக்குப்பிற்பட்ட சம்பந்தர்,அப்பர்,மாணிக்கவாசகர்,சுந்தரர் ஆகியோரின் திருவாசகம்,திருமந்திர நூல்களைக்குறிப்பிடுகின்றார்)

தொல்காப்பிய காப்புச்செய்யுள் உரையில் கொன்றைவேந்தன் காப்புச்செய்யுளை எடுத்துக்காட்டக காட்டியுள்ளார் இளம்பூரனார். நல்வழியை ஓளவையார் இயற்றவில்லை வேறு ஒரு பெண்புலவர் ஓளவை என்ற புனை பெயரில் எழுதினார் என்றும் கருத்துக்கள் உண்டு.


4 ஆவது ஓளவையார் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என கருதப்படுகின்றார்.இவரால்தான் ஓளவைக்குறள்பாடப்பட்டது.

திருவள்ளுவர் அறம்,பொருள்,இன்பம் ஆகிய முப்பால்களைப்பற்றி திருக்குறளில் குறிபிட்டிள்ளார்.ஆனால்  வீட்டு நெறிபற்றிக்குறிப்பிடவில்லை அதை ஓளவையார் ஓளவைக்குறளில் குறிப்பிட்டுள்ளார்.
இதில் வீட்டு நெறிப்பால்,திருவருட்பால்,தன்பால் என3 அதிகாரங்களும் 310 குறட்பாக்களும் உள்ளன.

விநாயகர் அகவலும் இவராலேயே பாடப்பட்டது.இதில் விநாயகப்பெருமானின் தோற்றம்பற்றிக்குறிப்பிடப்பட்டுள்ளது.


அஞ்சு, லயம், முதலான கொச்சைச் சொற்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மூஷிக வாகனம் என்பதை இவர் மூடிக வாகனம் எனக் குறிப்பிடுகிறார்அத்துடன் முருகப்பெருமானிடம் சுட்டபழம் வாங்கியவரும் இவர்தான்.

சுந்தரமுர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாளும்  கரியிலும் பரியிலுமெறி  கைலைக்கு செல்லப்புறப்படுவதை அறிந்த ஓளவை தாமும் அவர்களுடன் கைலை செல்வதற்கு பிள்ளையாருக்கான பூசையை அவசரமாகச்செய்ய அவசரம் வேண்டாம் நான் உன்னை கைலைக்கு அழைத்துச்செல்கின்றேன் என்று பிள்ளையார் கூறினார்.அதன் படி தனது துதிக்கையால் ஓளவையை கைலைக்கு சேர்த்தார் என்றும் ஒரு கதை உள்ளது.
அங்கு வந்த சேரமான், இவரிடம் தாங்கள் எவ்வாறு வேகமாக இங்கு வந்தீர்கள் என்று வினாவ பிள்ளையார் அருளால் வந்தேன் என்று ஓளவைபாடிய  பாடல்


மதுரமொழி நல்லுமையாள் சிறுவன் மலரடியை 

முதிர நினையவல் லார்க்கரி தோமுகில் போன்முழங்கி
அதிர வருகின்ற யானையும் தேரும் அதன்பின்வரும் 
குதிரையும் காதம் கிழவியும் காதம் குலமன்னனே! 

5 ஆவது ஓளவையார் தமிழறியும் பெருமான் என்ற பெண்ணின்  கதையுடன் தொடர் புடையவர்.

அரசகுமரனும் அரசகுமரியும் காதலர்கள். ஒருவனால் இருவரும் கொல்லப்பட்டனர். அவர்கள் பேய் வடிவம் கொண்டு ஒரு சத்திரத்தில் தங்கி அங்கு வந்து தங்குவோரையெல்லாம் அச்சுறுத்தினர். ஒருநாள் ஔவையார் அந்தச் சத்திரத்தில் தங்கினார். பேய்கள் வழக்கம்போல் அச்சுறுத்தத் தொடங்கின. பெண்பேய் கல்வியில் வல்ல பேய். இந்தப் பேய் “எற்றெற்று”என்று சொல்லிக்கொண்டு, காலால் எற்றி ஔவையாரை அறைய வந்தது. ஓளவையார் இவர்களின் கதைகளை முன்பே நன்கு அறிந்தவர்.பேய் ஔவையை எற்ற வர, ஔவை பேயை எற்றப் போவதாகப் பாடினார்


வெண்பா இருகாலில் கல்லாளை, வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதாளை – பெண்பாவி
பெற்றாளே பெற்றாள், பிறர்நகைக்கப் பெற்றாள்,என்(று)
எற்றோ,மற்(று) :எற்றோ,மற்(று) எற்று.

பேய் பயந்து ஓளவையாரை வணங்க ஓளவை அவர்களின் எதிர்காலம்பற்றிக்கூறினார்.அவர் வாக்குப்படி பெண்பேய் தமிழறியும் பெருமான் எனப் போற்றப்படும் பெருமாட்டியாகப் பிறந்தது. அவளது முற்பிறவிக் காதலன் விறகுவெட்டியின் மகனாகப் பிறந்து விறகு வெட்டிக்கொண்டிருந்தவனைக் கண்டு காதல் கொண்டு திருமணம் நடந்தேறியது.

இறுதியாக வாழ்ந்த ஓளவையாரால் பாடப்பட்டதுதான் பந்தன் அந்தாதி.பந்தன் அந்தாதி ஓளவையால் பாடப்படவில்லை என்பதற்கு காரணங்கள் கூறப்படுகின்றது.
இந்த நூலில் உள்ள ஒரு பாடல் ஔவையாரையே குறிப்பிடுகிறது.

பந்தன் அந்தாதி உருவான விதம்

நாகன் காவிரிப்பூம்பட்டினத்து வணிகன்.  இவன் நாகன் பந்தன் எனவும் போற்றப்படுகிறான். இவனது தந்தை நாகந்தை  பந்தன் நாகலோகம் சென்று வாணிகம் செய்தான். அப்போது அவனுக்கு நாகராசன் பெருஞ் செல்வத்தோடு இரண்டு அரிய பொருள்களையும் அளித்தான். போர்த்திக்கொண்டால் இளமை மாறாதிருக்கும் பொன்னாடை ஒன்று. உண்டவர் நீடூழி காலம் வாழச்செய்யும் நெல்லிக்கனி மற்றொன்று. பொன்னாடையை ஔவைக்குக் கொடுத்ததுடன் நெல்லிக்கனியில் பாதியைத் தான் தின்றுவிட்டு, மீதிப் பாதியையும் ஔவைக்குக் கொடுத்தான்.
பெற்று மகிழ்ந்த ஔவை பந்தன் அந்தாதியைப்பாடினார்.

எனவே ஓளவையார் என்பவர் ஒருவர்தானா என்பது தொடர்பில் இவ்வாறு பல கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக வாழ்ந்த அனைத்து ஓளவையார்களுமே தமிழுக்கு மிகப்பயனுள்ளவற்றையே எம்வசம் விட்டுசென்றுள்ளார்கள் என்பது மட்டும்  உண்மை.ஓளவை தமிழுடன் சேர்ந்துவாழ்வாள்......------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}