"பூமனச்சுணை" மனதைத்தொட்ட சிறுகதை...

நீண்டகாலத்திற்குப்பிறகு மீண்டும் வலையுலகத்திற்கு..... எப்படி இருக்கின்றீர்கள்? சகோக்களே?...
சிறியகால இடைவெளியின் பின்னர் மீண்டும் எழுதுவதற்கு நேரம்கிடைத்திருக்கின்றது.... சிறிய கால இடைவெளியில் மீண்டும் எழுதுவதற்கே நீங்கள் ஏன் இப்பொழுது எந்தப்போஸ்ட்டையும் போடுவதில்லை என்ற கேள்விகள் உள்ளடங்கலாக ஏதாவது ஒரு ஊக்கி ஏதாவது ஒரு விதத்தில் தேவையாக இருக்கின்றது... நம்மைப்போன்ற பதிவர்கள் எதிர்ப்பார்ப்பவை இவைதானே... நிற்க
என்னை மீண்டும் இழுத்துவந்தது ஒரு சிறுகதை,முடிவெட்ட சென்ற இடத்தில் பழைய ஆனந்தவிகடன் ஒன்று கைகளில் கிடைத்தது முடிவெட்டுவதற்கு எமது அழைப்பு வரும்வரை ஒரக்கதிரையில் அமர்ந்திருக்கவேண்டும்...அருகாமையில் செய்தித்தாள்கள் அடுக்கப்பட்டிருக்கும்...அன்றைய செய்தித்தாள் கிடைக்கவில்லையாயின் ஏன் சும்மா இருப்பானேன் என்றுவிட்டு பழையபேப்பராக இருந்தாலும் ஒன்றை கையில் தூக்கவேண்டியதுதான்.வழக்கமாக வாசிப்புப்பழக்கம் இல்லாதவர்களைக்கூட முடிவெட்டுமிடம் வாசிக்கவைத்துவிடக்கூடியது.அனைவரும் கைகளில் செய்தித்தாள்களையோ அல்லது எதையோ வைத்து வாசித்துக்கொண்டிருக்க நாம் மட்டும் பேசாமல் இருந்தால் நன்றாகவா இருக்குமென்ற எண்ணம்தான் காரணம்..சூரியன் எப்.எம் கூடவே சடக் சடக்....அவர் கொக்குவில்லதான் கலியாணம் செய்தவர் என்றகதைகளுடன் இவளவற்றையும் கவனித்தும் கவனியாது பேப்பரில் செல்லும் கவனங்கள் இதுதான் முடிதிருத்துமிடத்து எளிய சூழல்....
எனக்கு பத்திரிகைகிடைக்காததால் விகடனை தூக்கினேன் 18.07.2004 இல் வெளிவந்த ஆனந்தவிகடன்....சிறுகதைக்கு செல்வதற்கு முன்பாக ஒருவிடயம் இப்படி பழைய சஞ்சிகையையோ,பேப்பரையோ வாசிக்கும்போது ஏற்படும் அனுபவம் வித்தியாசமானது அனுபவித்திருக்கின்றீர்களா....2004 இல் இருந்த சினிமா கிசுகிசுக்கள் அப்போதைய அரசியல் நையாண்டிகள்...அவற்றை இப்போது இருக்கும் சூழ் நிலையில் இருந்து வாசிக்கும்போது பல சமயங்களில் நகைச்சுவையாக இருக்கும்..

இந்தியத்தொலைக்காட்சிகளில் இப்படி ஒரு இம்சை என்ற தலைப்பில் சில பிரபலமான நிகழ்ச்சிகளை தாளித்திருக்கின்றார்கள்...

"சன் டிவி காமெடி டைம் சிட்டி பாபுவும் அர்ச்சனாவும் மேக்கப் அப்பிக்கொண்டுவந்து நிற்கின்றார்கள் இருவரும் சேர்ந்து வணக்கம் வணக்கம் வணக்கம் என்று எல்லா ஸ்ரைல்களிலும் சொல்கின்றார்கள்

ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உங்கள் சாய்ஸ்........பெப்ஸி உமா...(இப்போது பதிலாக பாண்டியராஜன் வந்து அறுத்துக்கொட்டுகின்றார்)

விஜய் டி.வி சகலை ரகளை சின்னிஜெயந்த் சந்தானம்(இப்போ சந்தானம் உச்சத்தில்...இதை அப்போது யாரும் யோசித்திருக்கமாட்டார்கள்)

அக்ஷயை சந்தித்த ஜாக்கிஜான், ரொக்கின் வோல்கிங்க் ரோல் ரிலீஸ்,சாருக் அஜய் குடும்பத்துடன் இணைந்தார்...பிளா பிளாக்கள்

விகடனில் மிகவும் பிடித்த பகுதி "ஹாய் மதன்" அதில் ஒரு அசத்தலான கேள்வி பதில்
கேள்வி-ஒருவருக்கு முக்கியம் தருவது பிடிக்காவிட்டால்"அவருக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு? என்று கேட்கிறோமே...இதில் கொம்புக்கு என்ன சம்பந்தம்?

பதில்-சற்று தர்ம சங்கடமான விஞ்ஞான உண்மையை உங்களுக்கு சொல்லவேண்டியிருக்கின்றது. அநேகமாக எல்லா பாலூட்டிகளுக்கும்(mammals) ஆண் உறுப்புக்குள் ஓர் எலும்பு(penile bone) இருக்கும்.இதற்கு பாக்யூலம் என்று பெயர்.இந்த எலும்பு மனிதனுக்கு மட்டும் கிடையாது!பரிணாம வளர்ச்சியில் மனிதன் இழந்தது வால்மட்டுமல்ல இந்த எலும்பையும்தான்! இந்த எலும்பு மனிதனுக்கு இப்போது இருந்திருந்தால் விறைப்புத்தன்மை சம்பந்தமான பிரச்சனைகள் எதுவும் இருந்திருக்காது.வயாக்ரா கண்டுபிடிக்கப்பட்டிருக்காது.பின் ஏன் அந்த எலும்பை இழந்தோம்? அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.எனக்கு என்னவோ..உனக்கு மட்டும் கொம்பு முளைச்சிருக்கா? என்று கேட்பது அதைப்பற்றித்தான் என்று தோன்றுகின்றது!மாடு மாதிரி கொம்பு முளைப்பது பெருமையாகச் சொல்லிக்கொள்கின்ற விடயமாக இருக்கமுடியாது...அது பரிதாபமான விடயம்.

சரி விடயத்திற்கு வருகின்றேன்.....
தண்ணீரைத்தேடி சிறுகதைப்போட்டியில் முதல்பரிசு ரூபா 25 000 பெறும் சிறுகதை....

"பூமனச்சுணை"  

மேலாண்மை பொன்னுச்சாமி

மனதைத்தொட்ட சிறுகதை... 


தாழைச்சாமி நாடாருக்கு சோர்வும் மன அயற்சியும் ஏற்படும்போதெல்லாம் அப்துல்லாவைத் தேடித்தான் போவார்.வயதாகிவிட்டது.சதை உடைந்து கரைந்து வடிந்து
துவண்டுபோய்விட்ட உடம்பு.மெதுவாகத்தான் நடக்கமுடிகின்றது.அப்பவும் கண்ணை இருட்டிக்கொண்டு வருகின்றது.லேசாக தலை சுற்றுகின்றது.வலது உச்சி நெற்றியில் கிண்ணெங்கிறது.வலதுகால்,மனக்கட்டுப்பாட்டில் இல்லாமல் தடுமாறுகின்றது.இடது கைக்கம்பை அழுந்த ஊன்றுகின்றார்.
ஐயாப்பா....என்ன செய்யுது?கிறுகிறுன்னுவருதா?

வலது கை சுண்டுவிரலைப்பற்றிக்கொண்டு,கூடவே வருகின்றான் பேரன் அருஞ்சுனை,விரலை விட்டுவிட்டு மணிக்கட்டைப்பிடிக்கின்றான்.

சித்தே உக்காருதீகளா....ஐயாப்பா?
வேணாண்டா இன்னும் நாலுவீடு தாண்டுனா அப்துல்லா வீடு!
வேலிப்படல் கதவை நகர்த்தி வைத்துவிட்டு,தட்டுத்தடுமாறி திண்ணையில் ஏறு உட்கார்ந்தார் தாழை.நெஞ்சுக்கூட்டில் இறுகிப்பிடிக்கிற பிசைவு.புருவ ரோமங்களிடையே ஊடுருவி இறங்கிய வியர்வைக்கோடு,கண்ணுக்குள் விழுந்தது.இருண்டு வந்தது. நரைத்த இமைகளை இறுக்கிமூடினார்.படபடப்பாக வந்தது.மூச்சுத்திணறல் திணறலோடு கூப்பிடுகிற சத்தம் சிதறியது.
ஏய்...அப்....து...ல்லா....

துணிக்குல்லாவும் வெள்ளைஜிப்பாவுமாக வந்தார் ஒரு பெரியவர்.மாமிசம் சாப்பிட்டு வளர்ந்த தாட்டியம்.உடம்பெல்லாம் ரோமக்கட்டு.எதிர்த்திண்ணையில் உட்கார்ந்தார்.முதுமை அவரை அவளவாகத்தளர்த்திவிடவில்லை. "ஏலேய் அருஞ்சொனை ஒந் தாத்தன் என்னலே சொல்லுதான்?இப்புடிக் கிறுகிறுத்துப் போயிருக்கான்"
"உங்களைத்தேடித்தான் வந்திருக்காரு"
"பாத்திமா...காப்பித்தண்ணிக்கு ஏற்பாடு பண்ணு.தாழைக்கு தண்ணிதா மொதல்ல". தண்ணீரைக்குடித்து,முகத்தைத் துடைத்தபிறகு....மெள்ளத் தெளிச்சி வந்தது.ஆசுவாசமாக அப்துல்லாவைப்பார்த்தார்.பார்வையில் மனசின் பரிதவிப்பு.இயலாமையால் வருகின்ற ஆற்றாமை.
என்ன தாழை இப்ப சொல்லு!
"ஊர்லேயிருக்கிறவன் மனசெல்லாம் கல்லாப்போச்சு.ஊரோட உசுரே கொள்ளைபோகுது.ஒருத்தனும் எளக மாட்டேங்கான்.நெகிழமாட்டேங்கான்..."
வீட்டுக்குள் விளையாடப்போயிருந்த அருஞ்சுனை,மகப்பூவுடன் சேர்ந்து வந்தான்.மகப்பூ தாழைபக்கத்திலும் அருஞ்சுனை அப்துல்லா பக்கத்திலும் பூனைபோல பம்மி உட்கார்ந்துகொண்டனர்.
அப்துல்லா உதடுகளில் வேதனைசுமந்த மென்னகை."இதுக்கு ஏன் இம்புட்டு வருத்தப்படுதே?அல்லா நல்லவங்களைக் கைவிடமாட்டாரு நம்பு!"
எப்படி நம்பச்சொல்லுதே?நம்புறாப்புலேயா நெலைமை இருக்கு?மதுரையிலே ஆபீஸ் போட்டிருக்கிற அமெரிக்கக்கம்பனிக்காரன் நாளைக்கு நம்ம சந்ததிக உசிரை அள்ள வாரான்.எப்படித் தடுக்க?யாரு தடுக்க? நம்மகூட யாரு இருக்காக?
கொந்தளிக்கின்ற தாழையின் உணர்ச்சிகள்.முதுமையின் தள்ளாமையை மீறிக்கொண்டு விடைக்கிறகைகள்.விம்மி விம்மி தணிகின்ற நெஞ்சுக்கூட்டிற்குள் வெக்கை.

ஏன் இல்லே?குருவையா நாயக்கரு இருக்காரு....ராசதுரைத்தேவரு இருக்காரு...சக்கரைச்சாம்பன் இருக்காரு...வேலுப்பகடை இருக்காரு..நாமெல்லாம் சேர்ந்துபோனா நம்மகூட பத்துப்பேரு வரமாட்டாங்களா?
"எல்லாம் நம்மளைமாதிரி சாகமாட்டாத வங்கெழடுக.வச்சுக்கிட்டு நாக்கு வழிக்கவா?ஒடைஞ்சு வர்ற ஒரு கண்மாய் வெள்ளத்தை ஒண்ணு ரெண்டு கொம்மட்டிக்காய்களா மறிச்சு நிப்பாட்டும்?"
"நீ மொதல்ல மனசு ஒடைஞ்சு போறத நிப்பாட்டு.உளிகதான் மலையை  நொறுக்கும்!" அப்துல்லா கண்டிப்பான குரலில் அதட்டினார்.இன்னும் கூடுதலான தைரிய வார்த்தைகள் சொன்னார்.திடப்படுத்தினார்.பீதியில் பறவையாடிவந்த தாழையின் கண்கள் தன்னிலைக்குவந்தன.முகத்தில் ஓர் ஆசுவாசம்.கை நடுக்கம் குறைந்தது.பக்கத்தில் உட்கார்ந்திருந்த மகபூப் தலைரோமத்தைப் பாசத்துடன் வருடினார்.
"இதுக தலையெடுக்கிற காலத்துக்குத் தொண்டையை நனைக்கத் தண்ணிவேண்டுமேனுதான் நீயும் நானும் இம்புட்டுப் பரிதவிச்சு வாரோம்"தாழையின் தவிப்பு..

மண்ணுக்குள்ளே சமுத்திரத்தை உண்டுபண்ண முடிஞ்ச நம்மாலே அதைக்காப்பாத்த முடியாதா?அப்துல்லாவின் கணீர்க்குரலில் நம்பிக்கை"

முடியும்னு தோணமாட்டேங்குதே கலங்குகிற தாழை.உடைகிற உறைகிற அவருக்குள் நிழலாடுகிற அந்த நாள்....

பாபர் மசூதியை இடித்த சமயம்...வட நாட்டில் வெட்டும் குத்தும்,கொலைபாதகங்களுமாய் மானுடமே கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த தருணம்.இந்து முஸ்லீம் மத மோதல்களின் குரூர நர்த்தனம்.
அதே காலத்தில்,இந்த வட்டாரத்தில் சாதி கலவரம்.பஸ்களுக்குத் தீவைப்பு,படப்புகளை எரித்தல்,தலைகளை வெட்டி உருட்டுதல் என்று பதட்டம் பரவிப்போய் இருந்தது.பகையும் வெறுப்புமாக சகலமனங்களும் கல்லாக இறுகிக்கிடந்தன.ஜனங்கள் முறுக்கேறிப்போய் இருந்தனர்.
ஊர் மடத்துக்கு முன்னால்...ஆயிரத்துமுன்னூற்று நாற்பத்தெட்டு தலைக்கட்டு ஜனங்களும் ஜே...ஜே... என்று கூடிக்கிடந்தனர்.ஆணும் பெண்ணுமாக நிரம்பியிருந்த ஜன சமுத்திரத்தில் எள் போட்டால் சத்தம் கேட்கும்.அத்தனை கப்சிப்.
நாட்டாண்மை நாற்காலிமேல் ஏறி நிற்கிறார்.அடிவயிற்றில் இருந்து குரலெடுத்து கூப்பாடு போடுகிறார்.
"அடுத்த சாதிக்காரப்பய தலைக நாலுதான் உருண்டுருக்கு.நம்ம சாதியாளுக தலைக பதினொண்ணு சாய்ஞ்சிருக்கு."மீசைவச்ச ஆம்பிளைகளா திரியுதோம் மனசு கெடந்து கொதிக்கு"

கூட்டத்துக்குள் சலசலப்பு.உணர்வுகளின் எதிரொலிப்பு.ஆங்காரமனசுகளின் உக்கிரத்தெறிப்புக்கள்.
"அஞ்சு நாளா நம்மூரு ஆளுக ஒரு சோலிக்கும் போகல.இன்னும் இருபது நாளைக்கு போகவும்கூடாது.கையிலே ஆயுதமும் நெஞ்சுலே தைரியமுமாய் தயாராய் இருக்கனும்.எப்ப எங்கே போகணுமோ போகணும்...சாகணும்னா சாகணும்...கொல்லனும்னா கொல்லணும்..தெரிஞ்சுதா?

கோப முணுமுணுப்புக்களும்கொந்தளிப்புக்களும் பேச்சுக்களுமாக ஜனங்கள் கலைந்தனர்.
நாட்டாண்மையின் கரகரத்த குரல் அதட்டலாக எழுகிறது..
"ராவுத்தரும் தாழையும் நில்லுங்க"ரெண்டு பேருக்கும் ஐம்பது வயதிருக்கும்.உழைத்து உழைத்து உரமேறிய தாட்டியான திரேகம்.வெயிலைத்தின்று மழையைக்குடித்ஹ்டு வீர்யம் வளர்த்த கிராமத்து ஆட்கள்.

நாட்டாண்மை நரைத்த இமைகளோடு அவர்களை முறைத்தார்."மான மரியாதையைக்காப்பாத்தறதுக்கு ஊரே வரிஞ்சு கட்டிக்கிட்டு  மல்லுக்கட்ட தயாரா இருக்கு நீங்கவேற ஏதோ உள்காரியம் பண்ணுரீங்களாமே என்னலே?"
"ஊருக்கு நல்ல காரியம்தான்!"
தாழைதான் பணிவடக்கமாய் சன்னக்குரலில் சொன்னார்.
"ஊரே ஒரே திசையில் போகையிலே நீங்க மட்டும் ஊடுதிசை பாய்ஞ்சா என்னலே அருத்தம்?"

"ஊருக்கு எதிரா போகமாட்டோம் மாமா.ஊரு வரியைக் குடுத்துருதோம்.சொந்தச்சோலிக்குப்போகமாட்டோம்.நெதம் ஊரு மடத்துக்கு அருவாளோட வாரோம்.போகச்சொல்லுற எடத்துக்கு பாய்ஞ்சு போறோம்.இம்புட்டுக்கும் ஊடால நாங்க கொஞ்ச ஆளுக வேற சோலி ஒன்னும் செய்யறோம்.அதுவும் ஊர்ச்சோலிதான்!.
இணக்கமான குரலில் இங்கிதமான பவ்யத்தோடு தாழை பேசுவது நாட்டாண்மைக்குப் பிடித்தது.சூடு தணிந்த குரலில் கேட்டார்"அதாண்டா என்ன சோலி?உருப்படியான சோலியா?..
ஊரையே உருப்படியாக்கிறசோலி.
சரி சரி தாழையும்  அப்துல்லாவும் தப்புத்தண்டா வழியில போறவங்ககிடையாது.நல்ல யோக்கியங்க.நான் நம்புதேன்.நம்பிக்கையை நாசம்பண்ணாம நடந்துக்குங்க

வெள்ளையாக்கோனார்,வீரச்சாமி ஆசாரி,குருசாமி நாயக்கர்,ராசதுரைத்தேவர்,சக்கரைச்சாம்பான்,வேலுப்பக்கடை,தங்கப்பா நாயர் என நாற்பத்தெட்டு தலைக்கட்டுக்கள் சேர்ந்துவிட்டனர்  தாழைச்சாமி நாடாருக்கும் அப்துல்லாவுக்கும் ஆர்வத்துடன் ஒத்துழைத்தனர்.
லோக நாத நாடார் டிராக்டரும்,ஜெயகாந்த் ரெட்டியார் டிராக்டரும் ரொம்பவே ஒத்தாசையாக இருந்தன.வருஷக்க்கணக்காக வெட்டியதில் ஒவ்வொரு கிணறுபக்கத்திலும் மலை மலையாக சரள் கிடந்தது.ஜே...ஜே...என்ற சந்தோஸக்கூப்பாடு.திருவிழாக்கொண்டாடுகிற கும்மாளம்,குதூகலம்,ஆர்வப்பெருக்கு.
ஊரைச்சுற்றி ஓடுகின்ற மூன்று ஓடைகள்...வடக்கில் ஓடுகிற ஆறுகள்....மணல் எல்லாம் எப்போதோ கொள்ளைபோய்விட்டது.பாறைமுடிச்சுக்களும் சீமைவேலி மரக்காடுகளுமாக,புதர் மண்டிப்போய் லட்சணம் கெட்டுப்போய்க்கிடந்தன.
மனித உழைப்பு மின்சாரமாகப்பாய்ந்தது.அதிலும் கூட்டு மனித உழைப்பு.சுய நலம் மறந்த ஆனந்த உழைப்பு.சூரியத்தோரின் சுடர் பாய்ச்சல்.
பாறையில் வேட்டு போட்டு உடைத்து,அஸ்திவாரம் தோண்டி டக்கர் டக்கராக சரளையைக்கொட்டி,குறுக்குச்சுவர் எழுப்பி,மிச்சத்தண்ணீர் தத்திப்போவதற்கும் வழியமைத்து..கொட்டிய சரள்களை மனிதக்கால்களே மிதித்து அமுக்கி.
மூன்று ஓடைகளில் ஆறு தடைச்சுவர்கள்...ஆற்றில் மூன்று இடங்களில் கனமான நீளமான குறுக்குத்தடைகள்.சீமைக்கருவேல மரங்களை தூரோடு தோண்டி அப்புறப்படுத்தி அந்த இடத்தில் வேப்ப மரக்கன்றுகளை ஊன்றி...ஒவ்வொரு மழை பெய்கிறபோதும் ஓடி முடிந்த தண்ணீர்போக தடுப்புச்சுவர்களுக்குள் ஒரு மாதம் தண்ணீர் தேங்கித்திகைக்கும்.மண்மாதா நீரைக்குடித்து அடிமடியில் பொத்திப்பாதுகாத்துக்கொள்வாள்.

ஊரே சாதிகலவர மும்முரத்தில்! ஆயிரத்து முந்நூறுதலைக்கட்டுக்களும் அரிவாளும் கம்புமாக..ஆயுதத்தோடும் பகை நெருப்போடும் அலைந்தனர்.
ஊரைச்சுற்றிலும் வைக்கோல் படப்புக்கள் எரியும்.குடிசைகள் பற்றி எரியும்.மனித உயிர்கள் சரியும்.பயிர்கள் பிடுங்கி எறியப்படும்.கமலைக்கிணறுகளின் மிதிகல்லைப்புரட்டி கிணற்றுக்குள் தள்ளுவார்கள்.சாதிச்சண்டையில் இப்படி நாசக்காடு நடக்கிற சமயத்தில்,இந்த ஊரில் நாற்பத்தெட்டு தலைக்கட்டு சாதிஜனச்சங்கமிப்பில் சத்தமில்லாமல் நடந்த சாதனைகள்..விளைவு?

பூ மனசுகளின் உழைப்பு மூர்க்கம்.போர்க்குணத்தின் அன்பு வருடல்.பகையற்றபேரன்பு மனித வியர்வையின் பெருவிளைச்சல்.மண்ணின் அதிசயம் பூத்திருக்கின்றது.அற்புதம் நிகழ்ந்திருக்கின்றது

இதோ..ஓடுகிற ஓட்டத்தில் இருபது வருடம் மாயமாகிவிட்டது.2012ம் வருடம் பிறந்துவிட்டது.மண்ணின்மேல்...ஆற்றங்கரை,ஓடைச்சுவர்களிலேல்லாம் பசுமைக் கூத்தாட்டம்.காவல் தெய்வங்களின் அணிவகுப்புப்போல வேப்ப மரங்கள்,மாரித்தாயின் குளிர்க்கரங்களின் பாசவருடலாக நிழல்.

மண்ணுக்குள் வற்றாத சமுத்திரமாக நீர்ச்சுனை.நிலத்தடி நீர் குறுக்குச்சுவர்களால் தடுக்கப்பட்ட தண்ணீரை சிந்தாமல் சிதறாமல் உறுஞ்சி உள்மடியில் பாதுகாக்கும் பூமித்தாய்.பேரதிசயமாக இங்குமட்டும் வளமான நிலத்தடி நீர்வளம்.போர்வெல்போட்டால் நூற்றிருபது அடியிலே ஊற்றெடுக்கின்ற நல்ல தண்ணீர்,தேங்காய்ப்பால் மாதிரியான தண்ணீர்.

ஒரு பத்திரிகையில்கூட பொடிச்செய்தியாக வந்துவிட்டது." நதியோரத்துக் கிராமங்களின் நிலத்தடி  நீரெல்லாம் வற்றி உலர்ந்து மாயமாகிப்போக கந்தக பூமியான மாவட்டத்தில் மறையூர் கிராமத்தில் மட்டும் தோண்டுகிற இடமெல்லாம் பொங்குகிற தண்ணீர்.பூ மனசு மனிதர்களின் புண்ணியத்தின் விளைவு!"

இந்தச்செய்தி யார்கண்ண்ணில் பட்டதோ,படவில்லையோ...மதுரையில் ஆபீஸ் போட்டிருக்கிற அமெரிக்கக்காரன் கண்ணில் பட்டுவிட்டது.தண்ணீரை பாட்டலில் அடைத்து,டி.வி யில் விளம்பரம் பண்ணி,உலகமெல்லாம் விற்கிற தண்ணி யாவாரி.

அலறிய செல்போன்கள்...பறந்த பேக்ஸ்கள்.சின்னச் சின்ன அதிகாரிகள்,ஊராட்சியாளர்களை வளைத்து கைக்குள் போட்டு....
இதோ நாளைக்கு அந்தப் பிசாசுகள் வேனில் வருகின்றன.
இருபது வருட சேமிப்பை ஒரே மாதத்தில் ராட்சஸக் குழாய்கள் மாட்டிக் கொள்ளையடித்துப்போய்விடுவாங்கள்.நம்ம ஊர் நம்ம மண், நம்ம தண்ணீர், நம்ம உழைப்பு...வெள்ளைக்காரன் கொள்ளையடிச்சிட்டுப்போகவா? நாம உசிர் வச்சிருக்கணுமா?இந்தக்கொள்ளையைத்தடுக்கவேண்டாமா?
தடுக்க ஜனம் வரணுமே!

அப்துல்லாவுக்கு ரத்தம் கொதிக்கின்றது கல்லாகிப்போன மனசுகளோடு ஊர்க்காரர்கள்."வாங்கடா....தடுப்போம்"நு கூப்புட்டா ஒரு பயல் வரமாட்டேங்கிறான்.எகத்தாளமும் எகடாசியுமாக பேசிச் சிரிக்காங்கள்.
"தண்ணி கடவுள் மாதிரி...எல்லாருக்கும் பொது.மத்த ஊர் ஜனங்களும் தண்ணி குடிக்கனும்ல? என்று இடக்குமடக்காகப் பேசி இளிக்கிறாங்கள்.

"பெத்த பிள்ளைக்கே வயித்தை நனைக்க வழியில்லாம அல்லாடிப்போய்க் கிடக்கேன்.இந்தக் கெழடுக ஊரைக்காப்பாத்தக் கூப்புடுதாக நல்ல கூத்துத்தான்!. நக்கலும் வேதனையுமாக நையாண்டி பண்ணுகிறாங்கள்.
உபகாரம் பண்ணாமல் உபத்திரவம் பண்ணுகிற ஜென்மங்கள்.சுய நலத்தால் மனசைக் கல்லாக்கிக் கொண்டவர்கள்.
"சாதிச்சண்டையிலே சாகுறதுக்கு வாங்கடான்னா...படைபடையா தெரண்டு வர்றாங்க.ஊரைக்காப்பாத்த ஓடியாங்கடான்னா ஒரு பயலும் வரமாட்டேங்கானே?

"அதாண்டா நம்ம ஊரு"

தாழையின் சலிப்பு நொந்துபோன மனசின் சிணுங்கல்.கிழடுகளின் முகத்தையே அண்ணாந்து பார்க்கிற சிறுவன்கள்.அருஞ்சுனையின் சிறிய கண்களில் பெரிய வியப்பு
"இந்தக்கிழடுகள் இவளவு சாதிச்சிருக்கா?"என்கிற பிரமிப்பு மகபூப் மனதில்.
சித்திரை மாசத்து வெயிலின் வெக்கை வீட்டு முற்றத்திலிருக்கிற வேப்பமரம்.பச்சை முகத்தில் பவுடர் அப்பின மாதிரி கொத்துக் கொத்தாக பூக்கள்.மரத்தையே வெறிக்கிற அப்துல்லா.அவரையே நோக்குகிற தாழை இறுகிப்பிசைகிற வலது மார்பை நீவிவிட்டுக் கொள்கிற தாழை.திணறுகிற மூச்சை இழுத்துவிடுகிறார்.

அப்துல்லாவுக்குள் தீவிர யோசிப்பு. நாளைய தினத்தை எப்படி எதிர்கொள்ள?எப்படி சமாளிக்க?என்னத்தையாச்சும் பண்ணி அந்தப் பிசாசுகளை விரட்டணுமே?
தலையைக்கொடுத்தாவது ஊரைக்காப்பாத்தணுமே..

அப்துல்லாவின் கண்களில் ஒரு பிரகாசிப்பு மனத்தீவிரம்.ஆர்வப் பரபரப்பு.நரைத் தாடியில் ஒரு சிலிர்ப்பு.
ஏண்டா தாழை இப்படிச்செஞ்சா என்ன?
எப்படி?
"வர்ர ஆளுகளை வெச்சு வேனை மறிப்போம்.வம்புக்கு சண்டை இழுப்போம்..தள்ளுமுள்ளு நடக்குறப்ப வேனுக்கு அடியிலே விழுந்து செத்துருவோம்!"
மகிழ்ச்சிக் கூவலாக குரல்.வழி கண்டுபிடித்துவிட்ட குதூகலம்.
"சாகப்போகிற கெழடுகதானே நாம.சாகப்போறதைப்பத்தி ஒண்ணுமில்லே.இப்ப சாகிறதால என்ன நடக்கும்?அதச் சொல்லு?
தாழையின் ஆவல் பறப்பு.குரலில் உற்சாகம் துள்ளல்.
" நம்ம சாவையும் ரத்தத்தையும் பாத்தா கல்லா இறுகிக்கிடக்கிற ஆயிரத்து முன்னூற்று நாற்பத்தெட்டு தலைக்கட்டு ஜனத்துக்கும் மனசு எளகும்.பூ மனசு கொதிக்கும்.தண்ணி யாவாரிகளை கஞ்சி ஆக்கிருவாங்க!

அப்துல்லாவின் ஆனந்தக் கூப்பாட்டில் ஓர் உணர்ச்சித்தீவிரம்.தாழை முகத்திலும் ஒளிப்பரவல்.ஒரு சந்தோஷக் கும்மாளம்.மனத் திருப்தியின் வெளிச்சம் கண்ணில் மின்னியது.
"நீ சொல்லுறது ரைட்டுதான்! அப்ப ஊரைக் காப்பாத்திரலாம்டா! சாகிற சாவும் ஊருக்காகும். நல்ல சாவுதான் நமக்கு!

அருஞ்சுனையும் மகபூப்பும் கண்ணில் மிரட்சி மண்ட திகைத்து நிற்கின்றனர்.
மறு நாள்
பஸ் வந்து திரும்புகிற ஊர் மைதானத்தில் ராசதுரைத் தேவர்,குருசாமி நாயக்கர் என பத்துப் பதினைந்துபேர் காத்திருந்தனர்.சாய்ங்காலம்தான் வேன் வந்தது.பெரிய வெள்ளைவேன்.சீமை வேன்.

வேனையே வெறித்துப் பார்த்த அருஞ்சுனையும் மகபூப்பும் பிரமிக்கிற கண்களோடு விரலால் கோடு போட்டனர்.வேனில் தங்கள் பெயரை கோணல் மாணலாக எழுதினர்.வேனின் பின்பக்கம் போய் சிவப்பு விளக்குகளுக்கு முத்தம் கொடுத்தனர்.அங்கேயே நின்றுகொண்டனர்.
வேனை மறித்துக்கொண்டு அப்துல்லாவும் தாழையும் மற்ற பெரிசுகள் நாலைந்து இளவட்டங்கள்..
வேனிலிருந்து தடபுடாவென்று இறங்கிய அதிகாரிகள் டையும் பூட்சுமாக தடபுடலாகயிருந்தனர்.தாட் பூட்டென்று இங்கிலீஸில் பேசினார்கள்.எல்லாம் நம்ம தமிழ்ப்பயல்கள்தாம்!

என்னையா விஸயம்?

" நாங்கள் தண்ணியெடுக்க வுடமாட்டோம்.எங்க ஊரு எல்லைக்குள்ளே எந்த எடத்திலயும் தண்ணி எடுக்கக்கூடாது.நாங்க வேர்வை சிந்தி கொண்ணாந்த தண்ணி!"

"சட்டப்படி செய்யறோம்.டாக்குமெண்ட்ஸெல்லாம் பக்காவா இருக்கு.கவர்மெண்ட் பேர்மிஸன் வாங்கியாச்சு.நீங்க தடுக்கிறது சட்டப்படி குத்தம்!.

"நாங்க தடுக்காம யாரு தடுப்பாக?இது கவர்மெண்டு கொடுத்த தண்ணியில்ல.எங்க தண்ணி.எங்கவேர்வை,எங்க உசுரு.எங்க உசுரைக்கொடுத்தாலும் கொடுப்போம்..எங்க சந்ததிக்கான தண்ணியைத்தரமாட்டோம்!"

வாக்குவாதம் முற்றியது.ஆள் ஆளுக்கு கூவல்காடு போட்டனர்.ஒரே கூப்பாடாகக்கிடந்தது.
தாழையும் அப்துல்லாவும் வேனின் முகப்பில் இரண்டு கைகளையும் ஊன்றி முன்பக்கமாக சாய்ந்து நின்றனர்.

"எங்களை அடிச்சு நசுக்கிட்டு வண்டு முன்பக்கம் போகட்டும்!"தீர்மானத்துக்கான வைரக்குரல்.ஊரைக்காப்பாற்ற உயிரைத்துறக்கத்துணிந்த உறுதிக்குரல். நிலவரம் கலவரமாயிற்று.விபரீத ரூபமெடுத்தது.
அதிகாரிகள் இருவரும் சங்கடமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
"நம்மக்கிட்ட சட்ட நியாயம் இருக்கு எதுக்குப் பயப்படனும்?" "இன்னிக்கு வேண்டாம்!"
"அப்புறம்?"
"நெக்ஸ்ட் வீக் வருவோம்.புல் போலீஸ் பாதுகாப்போட வருவோம்.போலீஸைக்கண்டா வீராதிவீரனுங்க எல்லாம் பிச்சிக்கிட்டு ஓடிருவானுங்க.நம்ம ஸ்மூத்தா வேலையை முடிச்சுக்கலாம்.ஓகே?

"ஓகே சார்...குட் ஐடியா!"
"வண்டிக்குள்ள ஏறுங்க.டிரைவர் வண்டியை எடப்பா!
"ஆள்களெல்லாம் ஒதுங்கிக்குங்க!"
டிரைவர் வேனை ஸ்டார்ட் பண்ணினார்.ஸ்ரார்ட் செய்து முதல் கியரிலேயே முழுவேகத்தில் ரிவர்ஸ் எடுக்க...
"டடக்"
வண்டி எதிலோ ஏறி இறங்கினமாதிரி இருந்தது.

"ஐயய்யோ....ஐயய்யோ...சின்னப்புள்ளைகளை கொன்னுட்டாங்களே...பாவிப் பயக!
சுற்றிலும் எழுந்த கூட்டுக் கதறல்,பதறிப் பதைத்த மனித வீறிடல்கள்.வேனைச்சூழ்ந்துகொண்டன மனிதக்கைகள்.

பின் சக்கரங்களுக்கு அடியில் ரத்தப் பரவலும் சதைக்கூழுமாக அருஞ்சுனையும் மகபூப்பும்!

பார்த்தவர்களெல்லாம் பதைபதைத்தனர் அலறினர் அப்துல்லாவும் தாழையும் அதிர்ச்சி தாளாமல் கிறங்கி விழுந்துவிட்டனர்.
அவளவுதான்...ஊரே தீப்பிடித்துக் கொண்ட மாதிரி ஆனது.ஆயிரத்து முன்னூற்று நாற்பத்தெட்டு தலைக்கட்டு ஜனமும் ஆவேசமும் ரௌத்திரமுமாய் நாலாதிசைகளிலுமிருந்தும் பெருக்கெடுத்து ஓடிவர...ஊரே அலறல் மயமாக.... கதறல் மயமாக....

கல்லாகிக்கிடந்த மனசெல்லாம் மனித நேயத்தில் கரைந்தது,பூ மனசுகளாகி...போர் மனசுகளாகி....

பதற்றமும் பதைப்பும் சோகப்புலம்பலுமாக ஊர்ப்பெண்கள்
சீமைவேனுக்கு அடியில் நம்ம ஊர் அரும்புகள் நசுங்கிக் கூழாகி....
சக்கரங்களுக்கு அடியில் பரவி ஊர் மண்ணை நனைத்துக் கிடந்தது.குழந்தைச் சதைகளா?ரத்தமா?
ஊர்ச் சுனையைக் காக்க உயிர் தந்த பூ மனச்சுனை.------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}