தானம்-சிறுகதை

“உங்கட காணில ஏதாவது வேலையிருந்தா சொல்லுங்கோவன்?மனிசன் வேலையில்லாமல் ரண்டு நாளா வீட்டிலதான் இருக்கிறார்”.படிக்கட்டில் இருந்தபடி கதிரையில் இருந்த பாலரை கெஞ்சிக்கொண்டிருந்தது கனகு.
"சரி கனகு இருந்தா சொல்லமாட்டனா? சரி சரி போய்ட்டு நாளைக்குவாவெணை"
கனகு கந்தல்துணிகளை சுருட்டிக்கட்டிக்கொண்டு புறப்பட ஆயத்தமானது.கனகிற்கு நான்கு பிள்ளைகள் கடைசி மகன் ஸ்கொலர்சிப் படித்துக்கொண்டிருக்கின்றான்.மூத்தவளுக்கு கல்யாணமாகிவிட்டது.கனகின் கணவர் கூலிவேலை செய்பவர். நிவாரண அரிசியின் துணையுடனும் கனகு வேலைக்கு செல்லுமிடங்களில் கொடுக்கும் பரிசுகளுடனும்தான் கனகின் குடும்பம் வாழ்கின்றது.
பாலர் எழும்பி சென்றதும் பாலரின் மூத்தமகன் கூப்பிட்டான் "அக்கா.....இண்டைக்கு வைரவருக்கு பொங்கினது புக்கை வடையெல்லாம் இருக்கு பொறுன்கோவன் கொண்டுவாறன்".
"எடுத்துவையெணை நான் பின்னால வாறன்" என்று கூறிவிட்டு கனகு விறுவிறுவென்று பாலரின் வீட்டைச்சுற்றி குசினிக்கு வந்துசேர்ந்தாள்.
சாதிப்பிரச்சனை கனகிற்கு வீட்டுக்குள் செல்லவோ வீட்டினுள்ளே இருக்கும் தளபாடங்களை பயன்படுத்தவோ அனுமதியில்லை. வீட்டின் உள்ளே குறையுயிரில் படுத்திருக்கும் பாலரின் தாயைகவனிக்கமட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தாள் கனகு.
இஞ்ச வா கனகு....இந்தா... என்று பேரன்புடன் பாலரின் மனைவி கனகிற்கு பிரசாதம்கொடுத்தார்.கனகு வாங்கிக்கொண்டு விடைபெற்றது.கனகு பாலர் வீட்டில் நான்கு ஐந்து வருடங்களாக வேலைசெய்கின்றது.பாலரின் தாய்க்கு உடம்பு முடியாமல் படுத்திருக்கும்போது அவரைகவனிக்க பாலரால் குறைந்த செலவில் கனகு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாள்.கனகை நம்பி ஊரில் கடன் கொடுக்க யாருமில்லை.கஷ்ரமான நேரங்களில் அவளது பிரார்த்தனைக்கு ஓரளவாவது செவிசாய்க்கும் ஓரேயிடம் பாலரின்வீடுதான்.இதனால் பாலர்குடும்பத்தில் கனகிற்கு தனிபாசம்,ரியாதை இருந்தது.இதனால்தான் மகளின் கல்யாணவீட்டிற்கு பாலர் அழைத்தாலும் வரமாட்டார் என்று தெரிந்து மாப்பிள்ளையையும் மகளையும் பாலரின் வீட்டிற்கு அழைத்துவந்திருந்தாள்.வீட்டின் படலையுடன் அவர்களை அனுப்பிவிடாது வீட்டுவாசல்வரை அழைத்து காசுகொடுத்து தனது பெரும்தன்மையை பறைசாற்றியிருந்தார் பாலர்.ஏன் கனகு சுருட்டிக்கொண்டு சென்ற கந்தல்துணிகள்கூட பாலர்குடும்பத்து பழையதுணிகள்தான்.
அன்று கனது தன் கடைசிமகனை பாலர்வீட்டிற்கு அழைத்துவந்திருந்தாள்.
"என்ர கடைசிமகன்...கொலசிப்பு படிக்கிறான்"..
ஆ..அப்பிடியே...எப்புடி நல்லா படிக்கிறானோ? பாலர் இழுத்தார்.
"ம்...ஓம் நல்லா இங்கிலீசும் கதைப்பான்" வெத்திலைக்காவியாகிவிட்ட தனது 23 பற்களையும் வெளியே காட்டினாள் கனகு.
பாலருக்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.
கனகு பாலரிடம் விடைபெற்று செல்ல ஆயத்தமானாள்.
அடியே கனகு... பாலரின் மனைவி அழைத்தார். "இந்தா இதைக்கொண்டுபோ உனக்குத்தான்" என்று மூன்று அங்கர் பால்மாபெட்டிகளைக்கொடுத்தார் பாலரின் மனைவி.
கனகு அதிர்ச்சியுடன் "எணை ஒருபெட்டியே முன்னூறு நானூறுரூபாக்கிட்ட வருமேயெணை"
"பறுவாயில்லை கனகு எல்லாம் உனக்குத்தானே"
கனகு மிகுந்த மகிழ்ச்சியுடன் அவற்றை வாங்கிக்கொண்டு படலைக்கு வந்தாள்.அங்கே நின்ற கடைசி மகனை பெருமிதத்துடன் பார்க்க
என்னம்மா இது?
"அங்கர் ட்டியெடா மூண்டுமே ஆயிரத்துக்கு மேலவரும் எனக்கெண்டபடியால்தாண்டா தந்தவை"
அம்மா எரிச்சலுடன் கத்தினான் அவன்
என்ன?
நீ பேப்பரும் வாசிக்கிறேல்ல அதால உனக்கு ஒரு இழவும் தெரியுதுமில்லை
ஏண்டா?
அங்கரில டி.சி.டி எண்ட சாமானிருக்காம் குடிச்சாவருத்தம்வருமாமெணை கான்சரெல்லாம் வருமாம் அரசாங்கம் கூட தடைசெய்திருக்கு.கடையில இருக்கிறத அவனவன் விக்கேலாம அல்லாடுறானாம். முதல் நாள் பாடசாலைக்கூட்டத்தில் அதிபர் பேசியவற்றின் சாராம்சத்தை கொட்டித்தீர்த்தான் அவன்.
கனகிற்கு யாரோ பிடரியில் அறைந்ததுபோல் இருந்தது.தன் கைகளில் ஒன்று பிடுங்கப்பட்ட உணர்வு.கண்ணீரைக்கட்டுப்படுத்தவில்லை கண்ணீர் கொப்பளித்தது.
மகனைப்பார்த்து மெதுவாக சிரித்தாள்.மகனின் கையைப்பற்றிக்கொண்டு அவ்விடத்தைவிட்டு நீங்கினாள்.
அங்கர்ப்பெட்டி படலையில் அநாதையாகக்கிடந்தது.
யோ.கிருத்திகன்
வாசகர்களுக்கு ஒரு விடயம் -D.C.D எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் இரசாயனம் இருப்பதால் அங்கர் பால்மா அண்மையில்  இலங்கையில் தடை செய்யப்பட்டிருந்தது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Post Comment

Your Comments are Welcome

}